Thursday, August 20, 2015

சற்குரு - தாத்தா - 15

சற்குரு - தாத்தா - 15

"பேருந்தில் தனியாகப் பயணம் செய்யப் பழகிக் கொள்" என ஒருமுறை தாத்தா என்னிடம் கூற நான் , - "நீங்கள் தனியாகப்  பேருந்துப் பயணம் செய்தது எப்போது தாத்தா?" எனக் கேட்டதற்கு, "19 வயதில் தனியாகக் கப்பல் பிரயாணம் செய்திருக்கிறேன்" என்றார்கள் தாத்தா. முதல்முறை தனது மாமாவுடன் சென்றார்கள்; இரண்டாவது முறை சென்றபோது தனியாகக் கப்பலில் பிரயாணம்.

முதல் முறை 1935 ஜூன் மாதம் ரங்கூன் சென்ற தாத்தா, தாயகம் திரும்பிய போது தாங்கொணாத பல இடிகளை சந்தித்திருந்தது வீடு.

அன்புத் தங்கையை மணம் புரிந்த தாய் மாமா, உடன் வளர்ந்து தோழமையும் பாசமுமாகத் திகழ்ந்த மாமா இளம் வயதில் (22 வயது) மறைந்தார். மலர்ந்து மணம் வீச இதழ் விரித்த இள மொட்டு கருகினாற் போன்ற பேரிழப்பு. பதினாறு வயதுத் தங்கை, 40 நாட்கள் நிரம்பிய கைக்குழந்தையுடன் கைம்பெண்ணாக, கண்ணீராக...

மரணம் தரும் இழப்பு - வலி; உற்ற உறவின் மரணம் - ஆறாத ரணம்; உறவுகளைப் பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் காலங்களில் வரும் துயரச் செய்தி, தனிமை எனும் பூதக்கண்ணாடி வழி நூறாயிரமென உருவெடுக்கும். மூச்சென உள்ளே வியாபிக்கும். அந்த வலியை மனதில் சுமந்து கொண்டு தனிமையில் இருக்கும் காலமும், மேற்கொள்ளும் பயணமும்  சிலுவை சுமந்து முள்முடி தாங்கிய  பயணமாகத்தான் இருக்கும், இருந்திருக்கும்.

இந்தத் தகவல் மட்டுமே ரங்கூன் வரை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து 21 நாட்களுக்குள் மறைந்த அருமைத் தம்பி ஆறுமுகம் குறித்தும், அன்புத் தங்கை சொர்ணவல்லி குறித்தும் யாரும் செய்தி சொல்லவில்லை.  புது மணம் முடித்த தம்பதியராய்ப்  பார்த்த தங்கை சௌந்தரத்தை எவ்விதம் இக்கோலத்தில் பார்ப்பது, என்ன ஆறுதல் சொல்வது எனத் தவித்து வீடு சேர்ந்தால், மேலும் இரு மறைவுகளும் சேர்த்து சூறையாடி இருந்தது வீட்டின் மகிழ்ச்சியை. மூத்த மருமகனையும், ஒரு மகளையும் ஒரு மகனையும் இழந்திருந்த வீடு வேறு எப்படி இருக்க முடியும். அடி மேல் அடி வாங்கி கலங்கி நின்றது குடி .

எத்தனை சோதனை வரினும் தளராத இறை நம்பிக்கையும், மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் காட்டிய அன்பும் ஆறுதலுமே ஆணி வேராய்த் தாங்கி இருந்து தழைக்கச் செய்திருக்கிறது முருகன் இல்லத்தை.

முதல் பயணம்; முதல் வேலை;  முதல் சம்பளம்; தம்பி தங்கையருக்காய் ஆசையாய் வாங்கிய ஆடைகள் அர்த்தமற்றுக் கிடந்தன.  விடுதலைப்  போராட்ட வீரர் சத்தியமூர்த்தி போல வெடிப்புடன் பேசும் இளம் தம்பி ஆறுமுகமும், ஆறு வயதே நிரம்பியிருந்த தங்கை சொர்ணவல்லியும் மீண்டும் காணக் கிடைப்பதில்லை - இந்த நாட்களைக் குறித்துப் பேசும் போதெல்லாம் பேச்சு இடையில் நின்று கண்ணீர் வடிய ஒரு மௌனம் கவிந்து விடும் தாத்தா மேல்.

எதுவரினும் வாழ்க்கை நின்று விடுவதில்லை; அடுத்த வேளையே  பசிக்கத்தான்  செய்கிறது. எனவே தானும் தளராது, சோர்ந்த சுற்றங்களையும் அரவணைத்து முன் செல்ல வேண்டும் என்பதை சொல்வதற்காகப்  பலமுறை இந்த நிகழ்வுகள் குறித்து வலியோடும் வேதனையோடும் சொல்லி இருக்கிறார்கள் தாத்தா.

சற்றே நீள் மூச்சுடன் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது - வாழ்க்கையைப் போல...

ரங்கூன் வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை பற்றி பெரிய அளவில் தகவல்கள் இல்லை. இவற்றில் ஒருமுறை கப்பல் பயணத்தின் போது, ஏதோ ஒருவிதமான விஷக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக, கப்பலை ஒரு சிறு தீவில் நிறுத்தி, அனைவரையும் மருத்துவ சோதனை செய்து இரண்டு நாட்கள் தாமதாக ஏற்றிச் சென்றார்களாம். நோய்வாய்ப்பட்டவர்களை குவாரன்டைன் (quarantine) செய்தார்கள் எனத் தாத்தா கூறிய அன்றுதான் இந்த வார்த்தை அறிமுகம்.  இன்று வைரஸ் பாதித்த filesஐ கணிணியில் quarantined எனப் பார்க்கும் போதெல்லாம், அந்தப் பெயர் தெரியாத தீவு நினைவுக்கு வரும்.

தாத்தாவுக்கு கோலாலம்பூர் அம்பாங் தெரு AMM firm-ல் வேலை. செட்டியார் தெரு என்றும் அழைக்கப்பட்ட இந்த வீதியில் முக்கியமான வணிக நிறுவனங்களும், வட்டிக்கடைகளும் இருந்திருக்கின்றன. இந்த அம்பாங் வீதி இன்றும் இருக்கிறது. - Leboh Ampang என. மலேயாவிலிருந்து ரப்பர், ஈயம்( tin ) போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. சார்ட்டர்ட் வங்கி (Chartered bank) என்றழைக்கப்பட்ட (standard chartered ன் மூல வங்கி) வங்கி கோலாலம்பூரிலும், ப்ளாங்கிலும்(சிலாங்கூர்) இருந்திருக்கிறது. ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த பெரும்பாலானோர் தமிழர்கள் - குறிப்பாக இராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து மிக அதிக அளவில் சென்றிருக்கிறார்கள்.

அம்பாங் தெரு - அன்று

அம்பாங் தெரு - இன்று

தாத்தா குறிப்பிடும் மற்றொரு வீதி - பெட்டாலிங் வீதி - அன்று 

பெட்டாலிங் வீதி - இன்று



மலேயாவில் கோலாலம்பூரில் தலைமைக் கிளையும், பினாங்கில்(Penang) இன்னொரு கிளையும் இருந்திருக்கிறது தாத்தா வேலை பார்த்த AMM firm-ற்கு . (AM Murugappa Chettiar - Cholamandalam, TI cycles, Carborundum groups குழுமத்தின் 1900களின் தொடக்க வணிகம் இந்த மலேய வட்டிக்கடைகள்)

பினாங் நாட்களைப் பற்றிய பகிர்வுகளே அதிகம்.

மனைவி கருவுற்ற செய்தி, முதல் மகன் (சிவசுந்தரவேலன்) பிறந்த செய்தி, அனைத்தும் கடிதங்கள் வாயிலாகத்தான் தாத்தாவை அடைந்திருக்கிறது. 24 வயது நிரம்பிய இளைஞன் முதல் மனைவியின் இழப்புக்குப் பின், இரண்டாவது திருமணம் முடித்து இரண்டரை மாதங்களில், உறவினர் அனைவரையும் பிரிந்து தனிமையில். அந்த தருணத்தில் சொந்தங்கள் அனைவரின் அன்பையும், ஆசாபாசங்களையும், ஏக்கங்களையும் சிற்சில வரிகளில் பொதித்து சுமந்து வரும் கடிதங்கள் தேவதூதர்களாகவே  இருந்திருக்கின்றன.

மகன் பிறந்த மகிழ்ச்சியான செய்தியையும் பிஞ்சு விரல்கள் மஞ்சளில் தோய்த்துப் பதித்த கைத்தடத்தையும் தாங்கி வந்தது ஒரு கடிதம். அதுவே இறுதிக் கடிதம் -தகவல் தொடர்பு அறுந்து போனது.

- தொடரும் -  (தொடரும், தொடர்பும்)

முந்தைய பதிவு (14)

அடுத்த பதிவு (16)

No comments:

Post a Comment