Thursday, April 30, 2015

ஜனனீ ஜ்வாலாமுகீ

தாதையர் பெயர் மருவிய
கோதையர் இருவரும்
ஜனகன் புகழ் ஜானகி
துருபத மகள் திரௌபதி

புவியன்ன பொறை உடையாள்
புவியில் தோற்றம்..
எரியனைய திறன் உடையாள்
எரியில் ஜனனம்..

மானுட மனத்தின் கறையைக்  கழுவ
வான்வரை வையக நெருப்பு தழுவ
இழிசொல் நீக்க
இருமுறை தீபுகென
மன்னவன் சொல் விதைத்தது தணல்
அவள் மாட்சி கூறி எழுந்தது கனல்

இவளோ தழலென தோன்றிய கமலி
கனலில் தோன்றியமா பாரதக் கனலி,
காளி..கிருஷ்ணை..பாஞ்சாலி..திரௌபதி
கண்ணீர் தாகம் தணிக்க அருந்தினள் குருதி

அவள் எரியை எரித்த புவிமகள்
இவள் புவியை எரித்த எரிமகள்
முன்னவள் கண்ணீரில் கனன்ற அக்னி
பின்னவளைப் பெற்றெடுத்ததோ?

அன்றோர் பொறுமை தீ குளித்தது
அவள் பொறை கண்டு தீ குளிர்ந்தது
யுகங்கள் தாண்டி செந்தழல் விளைந்தது
தீயிலே பிறந்த தீ தீமையைக் களைந்தது

நிலத்தடி அழுத்தம் ஆண்டுகள் தாங்கக்
கரியும் ஆகும் ஒளிமிகு வைரம்.
எத்துணை வலியும் நேரெதிர் நோக்க
வலிமையாய் மாறும் வல்லமை சேரும். 

2 comments:

  1. இதிகாசம் படைத்த கோதையர். என்றும் அராஜகம் செய்யும் அரக்கர்களுக்கு நினைவில் நின்று சவால் விடுப்பவர்கள்.பெண் எனும் சக்தியின் சக்தியை உலகிற்கு காட்டியவர்கள் .தர்மம் தலை பட அதர்மம் அழிய தானே சோதனைக்கு உள்ளாகி சாதனை கண்டவர்கள். வலிமை கொண்டது பெண்ணினம். ஆடவன் பெண்ணின் மானபங்கம் செய்ய அவள் உடலை கருவியாகினாலும் அவள் மனதின் வலிமையை குலைக்க இயலாது என்று நிருபித்தவர்கள்.சிந்தையில் இவர்களை கொண்டு நம் வாழ்விலும் நிலை நிறுத்துவோம்.

    கவிதை வடிவில் உன் தமிழ் இன்னும் மிளிர்கிறது தொடரட்டும் இந்த பாணி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
      பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!

      வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
      மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
      கலிய ழிப்பது பெண்க ளறமடா!
      கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்

      Delete