Tuesday, April 14, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர்

மன்மத ஆண்டின் முதல் பதிவு.

இன்றைய ஹைவே பயண வாழ்கையின் அவசரங்களுக்கு இடையே இதற்கு அவகாசம் தந்து வாசிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இதைப் படித்துவிட்டு, வாழ்த்தில் என்ன கஞ்சத்தனம், இதை வாசிக்காதவருக்கு வாழ்த்தில்லையா என யாரும் வழக்கு தொடுக்க இயலாது. (வழக்கு எதற்கெல்லாமோ போடப்படுகிறது, தெளிவுபடுத்தி விடுதல் நலம்). இதுவரை வாசித்தாலே வாழ்த்து உங்களுக்கும் உரியது.

முதல் வணக்கம் முன் நின்று காக்கும் முத்தமிழ் முதல்வனுக்கு சொல்லி தமிழ்க்களம் புகுகிறது இந்தத் தொடர் பதிவு. அம்மா என்ற சொல்லோடு அவன் பெயரும் சேர்த்துப் பயின்ற தமிழிது.

அமிழ்து-அமிழ்து என இடைவிடாது சொல்லிப்பார் தமிழ் தமிழ் என ஒலிக்குமென சிறு வயதில் தமிழாசிரியர் விதைத்த தமிழ்காதல் விதை - இந்த பயிருக்கு வேராய், விளைவுக்கு நீராய், உயிருக்கு நேராய் உயிருடன் கலந்தது.

மொழி எனப்படுவது ஒருவர் கருத்தை மற்றொருவருக்கு ஐயமற உணர்த்தும் கருவி என்ற அடிப்படை பயன்பாட்டைத்தாண்டி,  தமிழ், கலையாய் காவியமாய் கனியத் தொடங்கியே பல்லாயிரம் ஆண்டுகள்!! எத்தனை எத்தனை மாமனிதர்களின் அறிவையும், சிந்தனைகளின் உச்சங்களையும், கற்பனைகளின் விஸ்தீரணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது இம்மொழி!!

பல நாடுகள் வேட்டையாடி குகை வாழ்ந்த காலத்தில் பண்புகளின், வாழ்வியல் தத்துவங்களின், நாகரிகத்தின் சிகரம் தொட்ட தேசமிது. 'Globalization'  நம் வீட்டின் உள்ளே அனுமதியின்றி நுழைந்து தன் காலையும் வாலையும் ஆட்டுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என ஓங்கிச் சொன்னது தமிழ். அடுத்த வரியிலேயே 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என ஒற்றை வரி கீதை சொன்ன கணியன் பேசிய மொழி இது.

இதன் பெருமையை, மொழியின் ஆளுமையை உணரச்செய்தவர்கள் எனக்கு அமைந்த நற்றமிழாசிரியர்கள். வசந்த காலத்தில் மலர்கள் பெறும் பாராட்டை வேர்கள் பெறுவதில்லை. இலையுதிர்காலத்திலும் மரத்தைத் தாங்கும் வேர்களுக்குப் பெயரில்லை. நம் ஒவ்வொருவரையும் உளி கொண்டு செதுக்கிய ஆசிரியர்கள் அத்தகைய பேர் தெரியாத வேர்களாய் இருக்கிறார்கள். தமிழ் ஆர்வத்தைப் பற்றாக்கியதில் சில ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.ஏழாம் வகுப்பில் கமலாவதியில் தமிழறிவித்த சுந்தர்ராமன் ஸார்-எங்கிருக்கிறீர்கள். Facebook தொடமுடியாத தொலைவிலா!! நீங்கள் சொல்லிக்கொடுத்த எந்தப்பாடலும் மறக்கவேயில்லை. "இளமை கழியும் பிணி மூப்பு இயையும்' இன்னும் காதில் ஒலிக்கிறது.

தமிழ்ப்பற்றைப் தமிழ்பித்தாக்கியதில் பல எழுத்தாளர்கள் தங்கள் பங்கை செவ்வனே செய்தார்கள். புத்தகங்களின் மாயா உலகின் கதவைத் திறந்தது - ஒரு சிறு நூலகத்தையே வீட்டில் சேகரித்து வைத்த என் அம்மா. அப்பாவின் அலுவல் மாற்றல் பந்தாட்டங்களுக்கு இடையே 50+ வீடுகள் மாற்றி அத்தனைக்கும் இடையில் புதையலாய், பொக்கிஷங்களாய் புத்தகங்கள் சேகரித்தது நிச்சயமாய் வாழ்நாள் சாதனை விருதுக்குரிய விஷயம். தன் எழுத்தாளர் தந்தையிடமிருந்து கொண்ட தமிழார்வத்தை எனக்குள்ளும் வேரூன்றினார்.

உங்கள் பிள்ளைகள் தமிழில் ஆர்வம் கொள்ள எளிய வழி. ஐந்து வயதிலேயே தமிழ் கதைப் புத்தகம் கொடுங்கள். உணவோடு தமிழ் உள்ளே செல்லட்டும். ஒருவரைத் தமிழ் பித்தனாக்க, கையில் கல்கியின் 'பொன்னியின் செல்வனை' சிறுவயதிலேயே கொடுத்தால் போதுமானது. ஆறாம் வகுப்பு பள்ளி விடுமுறையில் மூன்றே நாளில் ஊணுறக்கம் இன்றி வாசித்த முதல் முறை தொடங்கி, பல நூறு முறை தனித்தனி அத்தியாயங்களாகவும், 30 முறையேனும் அனைத்து பாகங்களும் படித்து, பல முறை பலருடனும் விவாதித்து, கதை சொல்லி மகிழ்ந்த அமரர் கல்கியின் அமர காவியம் அது. (எனக்கு ஒரு நல்ல நட்பையும் கொடுத்த கதை இது ) இளமையிலேயே வல்லவரையன் வந்தியத்தேவனும், பழுவேட்டரையரும், அன்பில் அநிருத்த பிரம்மராயரும் வாயில் சடுகுடு ஆடிவிட்டால், விரைவிலேயே T.M.S போல 'முத்தைத்தரு பத்தித்திருநகை அத்திக்கிறை சக்திச்சரவண' வரை பல்லுடைய தமிழ் படித்துவிடலாம்.( TMS  தான் பாடினார் -அருணகிரிநாதரா அவர் யார் - விரைவில் பேசுவோம்)

எழுத்தறிவித்த இறைவர்கள் வரிசையில் கம்பன், சைவ சமயக் குரவர்கள் நால்வர், பாரதி தொடங்கி கண்ணதாசன், கல்கி வரை பலரும் இருக்க, எந்த விதமான சந்தேகத்துக்கும் இடமில்லாமல் சீர்காழி,  T.M.S,  சிவாஜி போன்றோர் மூலம் வெகுஜன ஊடகத்தின் வழி அனைவரையும் நல்ல தமிழ் சென்று சேர்ந்தது.

இன்றைய டமிலும் ஊடகத்தின் பாதிப்பே!! 'ழ' கூட எப்படியோ சொல்லி விடுகிறார்கள். 'ள'கரம் மனநிலை பாதிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டது.

நல்ல புத்தகங்கள், நல்ல பாடல்கள், நல்ல தமிழ் பேசும் திரைப்படங்கள், நமது பேச்சு வழக்கில் நல்ல தமிழ் - அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்க்கும்.

இந்த வருடம் இதனை முயற்சிப்போம். யாரேனும் ஒருவருக்கேனும் நல்ல தமிழை அறிமுகம் செய்வோம். நாமும் தொடர்ந்து வாசிப்போம்-வளர்வோம்.

முந்தைய பதிவுகளையும்  part1 ஆக எழுதி பிற பகுதிகளை வெளிவராத விஸ்வரூபம்2வாய் வைத்திருக்கிறேன். எனின் இதன் தொடர்ச்சி தொடர்ந்து எழுதிவிடுவேன் என நம்புகிறேன். 

3 comments:

  1. அருமை,,,,, நிஜமாகவே உங்கள் எழுத்துநடை, தமிழ் ஆளுமை என்னை வெகுவாக கவர்ந்து விட்டது... எனினும் என் ஐயம் என்னவெனில் உலகப்பொது மொழி பரவிக்கிடக்கும் இக்காலத்தில் இத்தகைய தமிழ் பேச்சு வழக்கு மேடைப்பேச்சுக்கு மட்டும்தான் எடுபடுமோ!!!!!!! என்பதுதான்.......

    ReplyDelete
  2. நன்றி. உலகப் பொது மொழி மிகவும் அவசியம்தான் இன்றைய உலகளாவிய பரிமாறல்களுக்கு. நம் வீட்டுக்குள்ளும், நம் மொழி தெரிந்தவர்களோடும் பேசும் போது தமிழில் பேசத் தயங்கும் நிலைதான் மாற வேண்டும். அங்கே முடிந்த அளவு நல்ல தமிழ் பேசினாலே போதும். வெள்ளைக்கார துரைமாருடன் அவர்கள் மொழியிலேயே பேச முடிவது பெருங்கௌரவமாகக் கருதப்பட்ட நிலை இன்று வரை தொடர்வதே வருத்தமான நிலை.

    ReplyDelete
  3. தமிழுக்கும் சுபாவென்று பேர்.

    நல்ல தமிழைப் படிக்க வைத்ததற்கு முதற்கண் நன்றி. எனது காலத்தில் கம்பராமாயண குகப் படலத்தில் பரதன் வரவால் வெகுண்ட குகன் பேசும் "அஞ்சன வண்ணன்....." போன்ற செய்யுட்களை 'கடகட கடபுட ' என்று வீர சப்தம் முழங்க கற்றுக்கொடுத்த தமிழாசான் பெயர் தெரியாது. ஏனெனில் அந்தக்காலத்தில் பெயர் குறிப்பிடாமல் 'தமிழ் வாத்தியார்' என்று சொல்வது தான் வழக்கம். ஆனால் அவர் முழங்கியவை இன்னும் நினைவில் உள்ளன.
    அதேபோல் ஒரு வாத்தியார் மகாபாரதக் கதை முழுவதையும் வாரத்துக்கு இரண்டு நாட்கள் கடைசி period ஆன Moral period -ல் சொல்லி முடித்தார். பள்ளிக்கு விடுப்பெடுத்தாலும் இந்த வகுப்புக்கு மட்டும் சென்று வந்தவை நினைவில் ததும்புகிறது. இன்றளவும் பள்ளிநாட்களில் படித்த தமிழ் தான் வேரூன்றி நிற்கிறது. அந்தக் காலம் தமிழின் பொற்காலம்.

    இன்றைய தமிழின் நிலை கண்டு வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். வானொலியில் தமிழ்க்கொலை செய்யப்படுவதைக் கேட்கமாட்டாமல் அணைத்துவிடுகிறேன். தமிழை வளர்ப்பதாகப் பறைசாற்றிக்கொண்டு தமிழை சித்ரவதை செய்யும் தொலைக்காட்சிகளை 'தொலைந்து போ' என்று சொல்லி மூடிவிடுகிறேன். சுவரொட்டிகளில், பெரிய பெரிய Banner-களில் பெரிய அளவில் பிழைகள். வல்லின 'ற்' -ன் பக்கத்தில் தவறாமல் மெய்யெழுத்து, 'அதற்க்கு' என்று. 'கறுப்பு' நாளடைவில் 'கருப்பு' ஆகிவிட்டது. இவைகளை சுட்டிக்காட்டுபவன் முட்டாளாகக் காணப்படுகிறான்.
    நான் கற்ற என் இனிய தமிழே, உன்னிலை தாழக் காண்பதுவோ நான் செய்த தீவினைப்பயன்?

    ReplyDelete