Sunday, May 10, 2015

சற்குரு - தாத்தா

இது ஒரு personal பதிவு.  உன்னைப் பற்றிய கதை, உன்னை பாதித்த கதை  ஊருக்கு எதற்கு எனக் கேட்போருக்கு - இதிகாசம் முதல் புராணம் வரை ஊராரைப் பற்றிய கதைகள் தானே.. அதுதானே ஆவலைத் தூண்டுகிறது.
அதனால் சற்றே என் சுயம் பொறுத்துப் படிக்க முயலுங்கள். என் கதையல்ல இது. ஒரு வகையில் என் கதை தான் - நான் நானாக இருக்க விதை விழுந்த கதை, என் வேர்கள் நிலம் பழகிய நினைவுகள், நிலம் கீறி முகம் தூக்கிய தளிர், ஓங்கி உயர்ந்த ஆலமரம் நோக்கி அண்ணாந்து வியந்த நினைவுகள். நானும் ஒருநாள் நிழல் தருவேன் என விழுது நன்றியால் நினைவு கூறும் கதை.

என்னை கரம் பற்றி நடை பழக்கிய ஆசானின் நினைவுகள், ஒரு நாளின் ஒவ்வொரு மணித்துளியும் நிறைந்திருக்கும் உணர்வு குறித்தும். தாத்தா அய்யாதுரை பிள்ளை - அவரது 99ஆவது பிறந்த நாளில்.

"பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப்
பிரிவுஇலா அடியார்க்குயென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னை"

போற்றாதே ஒரு நாளும் போவதில்லையே...

இருள் பிரியாத அதிகாலை.
வாசல் புதிய நாளை வரவேற்க அணிகொள்ளும் நேரம். வாசல் என்பது நான்கு tiles  சதுரம் அல்ல அப்போது. வேப்பமர இலைகள் நிரம்பிய வாசல், தெரு தாண்டி எதிர் மனை வரை, நிலத்தடி நீர் வழங்கும் குழாயடி வரை தாத்தாவின் மனது போலவே விசாலமான வாசல். விடிகாலை 5.30 மணிக்கே எழுந்து என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டால் 3 மணிக்கு எழுந்தேன் என பதில் வரும். 

கதிரவனின் முதற்கதிர் முத்தமிடும் காலை.
ஐம்புலனையும் குளிர்விக்கும் தாத்தாவின் கிணற்று நீர் குளியல். விபூதி மணமும் சந்தன மணமும் கலந்த பூஜை அறையில், அப்பத்தா கையால் மெருகேறி பொன்னென சுடர் எரியும் விளக்கொளியில் "தீப மங்கள ஜோதீ நமோ நமோ" உடன் மணி அடிக்க வரும் ஆவல். (இன்றைய "நமோ" எல்லாம் அப்போது தெரியாது) 

வேப்பமரத்துக் காகமும் அணிலும் குரல் எழுப்பும் காலை. மனம் மயக்கும் மணம் கமழும் filter coffee  - அதற்கு உரிய முதல் மரியாதையோடு பலகை போட்டு அருந்தும் நேரம். Coffee முடித்தவுடன்  வரப்போகும்  காலை நடைக்காக எதிர்பார்ப்புடன் அருகில் அமர்ந்திருக்கும் நேரம். நடை இல்லாத நாட்களில் ஒரு மணி நேரம் யோகாசனம் கட்டாயம். காலை நடை குறைந்த பட்சம் 1 மணி நேரம். உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் விடிவதை பார்த்துக் கொண்டும் ஆகாயத்தின் அடியில் இருக்கும் அனைத்து விஷயங்கள்  குறித்து விவாதித்துக் கொண்டும் - சிறு பிள்ளையென சிறு பிள்ளைக்கதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் என்னென்னவோ  பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு களம் அந்த நடை நேரம். விபூதி மணக்கும் நீண்ட சுட்டு விரல் பற்றி நடந்த பொழுதுகளும் உரையாடல்களும் இன்று வரை வாழ்வை விரல் பற்றி அழைத்துச் செல்கிறது.

வேப்ப இலைகளோ, வேப்பம்பூக்களோ, பழங்களோ மாதத்திற்கு ஏற்றார் போல் சிமெண்ட் வாசல் முழுக்க இரைந்து கிடக்கும் நண்பகல். 7 குருவிகள் கூட்டமாக வரும் "தவிட்டுக் குருவி" , கத்தும் போது "சுப்ரீ சுப்ரீ" என்று  உன்னை கூப்பிடுகிறது என தாத்தா சொன்னதால்  அந்தக் குருவிகள் மேல் ஒரு தனிப் பிரியம். வீடு முழுக்க ஒரு மௌனம். சமையல் அறையில் அப்பத்தா சமைக்கும் மணம்.  தாத்தாவிடம் மாலை எந்த பக்கம் walking போகலாம்? நாளை எங்கு போகலாம்? அல்லது INA வில் நீங்கள் இருந்த கதை சொல்லுங்கள் (100வது முறையாக இருக்கும்), என்ன புத்தகம் படிக்கிறீர்கள்? "பேராயிரம் பரவி" என்றால் அந்த 1000 பெயர்கள் என்னென்ன? என்று வண்டு போல துளைத்து எடுக்கும் நேரம்.

சிலசமயம் தாத்தா, "எங்கே வாசலில் ஒரு இலை (பூ/பழம்) கூட இல்லாமல் சுத்தம் செய் பார்க்கலாம்" என நாய் வாலை நிமிர்த்தும் வேலை கொடுப்பதுண்டு.  பல நாட்கள் Hindu paper தலைப்பு செய்திகள் அனைத்தும், அல்லது எதாவது ஒரு முக்கியமான article படிக்கச் சொல்வார்கள். மூலாதாரம், சுவாதிஷ்டானம் தொடங்கி அனைத்துச் சக்கரங்கள் குறித்தும் சில நாட்கள் பாடம் நடக்கும். இப்போதும் முதுகு வளைந்து உட்கார்ந்தால் அசரீரியாய் கேட்கும்  நிமிர்ந்து உட்காரச் சொல்லும் தாத்தாவின் குரல்.அல்லது 27 நட்சத்திரங்களும் அதன் ராசிகளும் என்னென்ன என astrology குறித்து சிறு உரையாடல். "Mao tse tung", "Zhou  en lai" எல்லாம் சரித்திர பாடம் படிக்கும் முன்னரே பரிச்சயமானது இந்த நேரத்தில்தான்.

ஊர் முழுதும் அடங்கிக்  கிடக்கும் பிற்பகல். ஒரு மணி நேர ஓய்வு. மீண்டும் மாலை வருவதற்குள் ஒரு முறை வீடு முழுக்க பெருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறை வீடு பெருக்கப்படும் அப்போது. முன் மாலை நேரம் வேப்பமரக் காற்றோடு சுகமாகத் தாலாட்டும். முகத்தில்  வெண்ணீறு துலங்க தாத்தா திண்ணைக்கு வந்து அமரும் நேரம்.அவ்வப்போது தெருவில் செல்வோர் தாத்தாவிடம் முகமன் கூறியோ, பிள்ளைகள்  குறித்தோ சில நிமிடங்கள் நின்று பேசி விட்டு போவார்கள். அவர் யார் எங்கிருக்கிறார் என்பது குறித்தோ அவர் பிள்ளைகள் வாங்கிய நல்ல marks அல்லது பரிசுகள் குறித்தோ சில வார்த்தைகள். தாத்தாவின் நண்பர்கள் முக்கியமாக தாடித் தாத்தா(hindi pandit ) சில நாட்கள் வந்து பேசிக் கொண்டிருப்பார்.

மனதின் பல அடுக்குகளில் ஒளிஏற்றிய காரணத்தாலோ என்னவோ தாத்தா என்றால் காலைப் பொழுது தான் மனதுள் விரிகிறது.

தாத்தாவுடனான இரவுகள் 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு முடிந்து விடும். திருவாசகம் மெல்ல முணுமுணுத்துக் கொண்டு, விசிறியால் விசிறிக்கொண்டு, வேண்டா வெறுப்பாய் நாட்டு வாழைப் பழம் சாப்பிடுவதோடு முடியும் இரவுகள். பின்னர் பழமும் பிடித்துப் போனது வேறு கதை.

எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி
                               இருந்தாய், நீயே;
நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர்
                   விளக்கு ஆய் நின்றாய், நீயே;
பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச்
               சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!





1 comment:

  1. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது சுபா. தாத்தாவைப்பற்றிய இவ்வளவு நினைவலைகள் உன் நெஞ்சை நனைக்கிறதென்றால் உடன் நடை பயின்ற போது உனக்கு எவ்வளவு வயதிருக்கும்? இணைப்பிலுள்ள புகைப்படம் உன்னை 10 வயதிற்குள் காட்டுகிறது.

    ReplyDelete