Thursday, July 2, 2015

சற்குரு - தாத்தா - 12

சற்குரு - தாத்தா - 12


ஒரே அச்சில் எத்தனை உலகங்கள் சுழல்கின்றன. சிலருக்கு மிக மெதுவாகவும், சிலருக்கு தலை கிறுகிறுத்துப் போகும் வேகத்துடனும்! பெற்றோருக்கு வாழ்வின் சிகரப் புள்ளிதொடும் பகுதியில், கடமைகளும் கட்டாயங்களுமாய் நிர்தாட்சண்யமாய் சுழலும் உலகம்; அப்போது காலடி நிலம் போல நிச்சயத்தன்மையுடன், தாத்தா பாட்டி என முந்தைய தலைமுறை உடன் இருப்பது பிள்ளைகளுக்குப் பெரும் சுகம்.


உறக்கமின்றி, ஓய்வின்றி, விடுமுறைகளின்றி, தனிமனித இயந்திரமாய் ஒரு வங்கிக் கிளையைத் தன் அதீதத் திறமையாலும், அயராத உழைப்பாலும் அப்பா ஒருபுறம் ஓட்டிக்கொண்டிருக்க, தாத்தா அப்பத்தாவுடன் எனக்கு வேறு ஒரு உலகம். மேலும் அம்மா சேகரித்திருந்த வீட்டு நூலகத்தில் மூழ்கியதும் இந்த காலகட்டத்தில்தான்.


பெரியவர்களின் மன உளைச்சலும், இறுக்கங்களும், அதன் வெளிப்பாடுகள் வீட்டுச் சூழலில் சிதறும் தருணங்களில், ஏதோ அவர்கள் கோபமாய் நம் மீது பாய்ந்து விட்டதாய், சற்றும் கருணையின்றி தண்டித்துவிட்டதாய் எத்தனையோ குற்றச்சாட்டுகள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் மீது. எனக்கும் இருந்திருக்கிறது. அதிலும் சில பிணக்குகள் - திருப்பாவையில் ஆண்டாள் பாடியது போல் 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்- ஒருத்தி மகனாய்..' வளர்ந்த கண்ணனைப் போல் இருதாய்க்கும் தந்தையர்க்கும் இடையே, அவர்கள் வாரி வழங்கும் அன்புக்குப் பாத்திரமாய் இருக்கவும், அதில் ஏற்படும் சிறு சலசலப்புகளுக்கும் அஞ்சவோ மனம் சுளிக்கவோ கூடாது, அன்பு இருமடங்காய் கிடைப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும், இன்னும் எத்தனை எத்தனையோ விதங்களில் யார் பக்கமும் நூலிழை பிசகிவிடாது தாத்தா துலாக்கோல் ஏந்தி நடத்திச் சென்ற நாட்கள். Salute him for the patience and perseverance.


அந்த சூழ்நிலையை மிக இதமாய் விளக்கி, பல நேரத்துக் கோபங்கள் அளவுகடந்த நேசத்தின் வெளிப்பாடே, அன்பைக் குறித்தெழும் ஆற்றாமையே என்பதை விவரித்தது - பொய்யோ புனைவோ அல்ல; 11-12 வயது பேத்தியிடம் சக மனிதராய் மதித்து, இவை புரியும், மயக்கும் பிணக்கும் அகலும் என நம்பிக்கை வைத்து, பேசிட ஒரு மிகச் சிறந்த பக்குவம் வேண்டும். அன்றே சிறு மனதுக்கு அனைத்தும் விளங்கிவிடாது என்பது தாத்தாவுக்குத் தெரிந்தே இருக்கும். பின்னாளில் என்று தேவையோ அன்று இந்த விதை வேரூன்றி இருக்குமென நம்பி விதைத்த நடவு அது. தழைத்துமிருக்கிறது. ஆண்டிறுதித் தேர்வுக்குத் ஆயத்தம் செய்வதன்று குருவின் பணி; ஆயுள் காப்பீடு போல் மறைவுக்குப் பின்னும் காத்து நிற்கும் ஈடு.


இதை எழுதக் காரணம் - அன்பின் அடிப்படையிலையே சில சமயங்களில் நாம் பல வார்த்தைகளையும், பிறர் கூற்றில் நாம் ஏற்றும் தற்குறிப்பேற்ற அணியாய் - பிறர் கருத்தாய் நாம் நினைக்கும் கருத்துக்களையும் சுமத்தி, உறவென்னும் நூலிழையை சிக்கலாக்கி விடுவதுண்டு. அது போன்ற தருணங்களில் அன்பெனும் மாயக்கயிற்றால்தான் அனைத்தும் கட்டி இழுக்கப் படுகிறதென உணர்ந்து, இறுதியில் காண விழையும் நோக்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, அனைவரையும் அனைத்துச் செல்லும் பெருநோக்கு - தவறெனில் சுட்டிக் காட்டும் கடமை, எதுவரினும் ஒதுங்கிக்கொள்ளாமல், ஒத்திப்போடாமல் நேர் எதிர் நின்று ஏற்றுக்கொள்ளும் தீரம். இவற்றையும் பகிர்ந்து கொள்ளவே.


-ஆறுமுகநேரி தொடரும்-

முந்தைய பதிவு (11)


அடுத்த பதிவு (13)

No comments:

Post a Comment