Saturday, July 4, 2015

சற்குரு - தாத்தா - 13

சற்குரு - தாத்தா - 13


ஆறுமுகநேரி - ரகசியம் பேசத் தெரியாத பனைமரக் காடுகள். அதன் இடையே நடக்கும் போது திகில் பட இசையமைப்பாளராய் காற்று வேலை பார்க்கும். கால்கள் நடந்து உருவாக்கிய பாதைகள் வழியாக நடைபோட புதிய திசைகள் தினந்தோறும் உருவாகும். காக்கா முள் நிறைந்த தடத்தில், ஓணான் , நத்தை உடன் வரும் பாதைகளில் explorers ஆக நடைபயணம். இந்த V வடிவ கருவேலம் முள் alias காக்கா முள் மிகவும் கடினமானது, ஒருநாள் பனை ஓலை காத்தாடி செய்து அதைக் குத்திக் கொடுத்தார்கள் தாத்தா. பலநாள் என் நிலவறை பொக்கிஷங்களில் இருந்தது அது. ஆனால் அந்த முள் குத்தினால் மிகவும் கடுக்கும்-காலணி தாண்டி தாத்தாவின் கால் பதம் பார்த்தது ஒருநாள் - பின்னர் என் காலைப் பதம் பார்த்த அன்றே கடுக்கும் என்ற வார்த்தைக்குப் பொருள் புரிந்தது.


அப்படிப்பட்ட ஒருநாள்(நினைவுக் கோப்பில் எத்தனையோ ஒருநாள்-கள், ஒருநாள் போதுமா!!) காலை நடையில் மரங்களுக்கு ஊடே ஒரு குடிசை இருப்பதைப் பார்த்து அருகில் சென்று பார்க்க கரடுமரடாய் ஒரு மனிதர். இன்று அவ்விதம் நடக்க முடியுமா, அப்போது இன்றிருப்பது போன்ற பாதுகாப்பு குறித்த அச்சங்கள் இல்லையா எனத் தெரியவில்லை. தாத்தா உடனிருக்க நமக்குதான் அச்சமென்பதில்லையே. நாய்களுக்கு மட்டும்தான் எனக்கு பயம் - தாத்தா உடனிருந்தாலும்.. பயமென்றால் 'சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்' என்று பாரதியின் பா சொல்லி தைரியமாக நடைபோடச் சொல்வார்கள் தாத்தா. பின்னர் எத்தனையோ நாய்கள் - அச்சம் தரும் வேளைகளிலெல்லாம் இந்த வேலே துணை.


பதநீர் கள்ளாவதற்குள் அங்கே செல்வோம். அந்த பதநீர் இறக்குபவருடன் பேசி - அவர் தன் பெயர் 'சுதந்திரம்' என்றதும், 1947-ல் பிறந்தாயா எனத் தாத்தா கேட்க, சுதந்திரம் கிடைத்த அன்று பிறந்தேன் என்று கூற, தொடர்ந்து அவர் குடும்பம் குறித்தும் பேசி, அவர் சிலநாட்களில் தாத்தாவுக்கு மிக நெருக்கமாகிப் போனார்.

அந்த ஆறுமுகநேரியிலிருந்து 10 கிமீ தொலைவில் திருச்செந்தூர். வழியில் 64 வீதிகளில் 64 பள்ளிவாசல்கள் கொண்ட காயல்பட்டணம்; மிகப் பெரிய தேவாலயம் அமைந்த வீரபாண்டியபட்டணம், படித்த பள்ளியோ ஜைனப் பள்ளி - மினி இந்தியா - வடஇந்திய மாணவர்களும், 8ஆம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப்போட வேண்டிய காயல்பட்டிணத் தோழிகளும், வேறெங்கும் கிடைக்காத கலவையாய், ஒரு பள்ளி. 

பயம் வேண்டாம் - மீண்டும் பாடங்களுக்குள் செல்லவில்லை. ஒரு மிக முக்கியமான அத்தியாயத்திற்கு நுழைவதால் சிறு முகவுரை..


அங்கே வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய பாடம் எடுத்த தமிழாசிரியை, மிக உணர்ச்சிவயமாய் உலகப் போரை விவரித்ததை தாத்தாவிடம் நான் கூற, 'அவர்களிடம் கேட்டுப்பார் யாரேனும் அவர் வீட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம்' என்றார்கள் தாத்தா.

மிகவும் கண்டிப்பான அந்த ஆசிரியையிடம் அதைக் கேட்க பயந்து நான் நாட்களை ஒத்திப் போட்டுக்கொண்டே போக, தாத்தா 'நான் வந்து பேசுகிறேன்' என்று சொல்ல, அதற்கு பயந்து அடுத்தநாளே பேசினேன். அந்த ஆசிரியையின் தந்தை 1940களில் மலேயாவில் (இன்றைய மலேசியா) இருந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் தாத்தாவுக்கு அரை மைல் தொலைவில் இருந்திருக்கிறார் - இறந்திருக்கிறார்.


-ஆறுமுகநேரி தொடரும்/மலேயா தொடங்கும்-

முந்தைய பதிவு (12)


அடுத்த பதிவு (14)




No comments:

Post a Comment