'மின்னல் மலர்த்திடும் தாழை' என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் இம்மாதம் (பிப்ரவரி 2018) வெளிவந்த லா.ச.ரா படைப்புகள் குறித்த எனது வாசிப்பனுபவக் கட்டுரை.
எல்லோருக்குமென சுழலும் உலகில் அவரவருக்கான உலகங்கள் தனித்த
அச்சில் சுழல்கின்றன. காட்சிகள் ஒன்றே எனினும் தரிசனங்கள் வேறு - லா.ச.ரா
வார்த்தைகளில் சொல்வதெனில் ‘அவரவர் பூத்ததற்கு தக்கபடி’. புரியாத நடைக்குச் சொந்தக்காரர் என்று பரவலாகப் பெயர் பெற்ற லா.ச.ராமாமிருதம்
எனும் லா.ச.ராவின் எழுத்துக்கள் அந்த வகைமைதான். அவரவர்
பூத்ததற்கு தக்கபடி மணம் கொள்பவை.
இது அவரது நடை மற்றும் எழுத்து குறித்த ஆய்வுக் கட்டுரையோ விமர்சனமோ அல்ல. அவ்வெழுத்து என்னுள் நிகழ்த்திய அலைத் தளும்பல்களை, அதிர்வுகளைப் பதிவு செய்யும் முயற்சியே.
கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகக்தின் அட்டையில் நரைத்த புருவங்களோடு இருந்த இந்தத் தாத்தா ஒரு மந்திரவாதி என்பது அறியாமல் இவரது 'அபிதா'வுடன் அறிமுகமானேன். என் அப்பா அந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு லா.ச.ரா, தான் பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் பணிபுரிந்தார் என்று கூறிவிட்டு மேலதிகமாக 'லா.ச.ரா பார்ப்பதற்கு மகாபாரதத்தில் வரும் பகதத்தன் போலிருப்பார். பகதத்தன் எனும் மன்னனுக்கு வயோதிகம் காரணமாக புருவங்கள் நரைத்து இமை இரப்பைகள் தொங்கி விழிகளை மூடியிருக்கும், எனவே விழித்து நோக்கவென பட்டுத்துணியால் இமைகளை நெற்றியோடு சேர்த்துக் கட்டியிருப்பான். கௌரவ சேனையில் போரிட்ட அவனை வெல்ல அவன் பட்டுத்துணியில் சரம் தொடுக்குமாறு அர்ச்சுனனிடம் கூறினார் கிருஷ்ணர்' என்று ஒரு சிறு காலாட்சேபம் செய்தார்.
வங்கி அலுவலர், பகதத்தன், தாத்தா என ஒரு கலவையான மன உருவகங்களோடு லா.ச.ராவை வாசிக்கத் தொடங்கினேன். கொதிக்கும் வெந்நீர்ப் பானையை சூடறியாது வெறுங்கையில் தூக்கிவிட்டது போல இருந்தது என்று கூறலாம். இன்றளவும் சூடும் குன்றவில்லை, இறக்கிவைக்கவும் மனமில்லை.
அபிதா - தான் சிறுவயதில் காதலித்த பெண்ணின் நினைவுகளோடு தான் வளர்ந்த கிராமத்துக்கு தன் மனைவியோடு வரும் நடுவயது கடந்த நாயகன், தன் காதலியின் பெண்ணைக் காண நேரும்போது, அவன் விட்டுச் சென்ற காலம் அப்போதே உறைந்து இக்கணத்தில் இருந்து தொடர்கிறதெனக் கொண்டு தன் மனதை அவளிடம் இழக்கிறான். அதில் நினைவுகளைக் குறித்து வரும் பத்தி:
'ஆயினும் ஒரு எண்ணம் - ஒரே எண்ணம் - நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்த ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக்கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே'.
இந்த வரிகள் உடனேயே மனதுள் தன்னைச் செதுக்கிக் கொண்டது. எதுவுமே எனக்கும் மறப்பதில்லை; மிக நுண்ணியதாக சில தருணங்களில் மனதுள் ஓடிய வரிகள், மனம் நுகர்ந்த வாசனைகள், ஒலிகள், சிறு வயதில் என் வீட்டில் தலைக்கு மேல் ஓங்கிய ஜன்னல் வழியே, சூரியன் மலைக்குப் பின்னால் மறைவதைப் பார்க்க நின்றிருந்த போது ஒரு காகிதப்பூ பூங்கொத்து அதை மறைக்க முயன்று, அதன் மெல்லிய இதழ்கள் ஒளி பெற்று ஒளிர்ந்து ,மெல்ல மெல்ல சூரியனோடு அவிந்தது - இதுபோல ஆயிரமாயிரம் நினைவுத் துணுக்குகள்; எனக்கு இரண்டு வயதுவாக்கில் இருந்த வாடகை வீட்டின் முழு வடிவமும் ஒளியும் நிழலும், அங்கு நிகழ்ந்தவற்றின் நினைவுத் துணுக்குகளும், அங்கு முதன்முறையாகக் கேட்ட பாடலும் நினைவிருக்கிறது. அனைத்தும் நினைவில் இருப்பது ஒருவிதமான போதையாகவும் ஒருவிதமான துயரமாகவும் இருக்கிறது ஒரே நேரத்தில்.
நினைவுகளில் இருந்து விடுதலை உண்டா என்ன? எனவே ஒவ்வொரு முறை முற்றிலும் கடந்து விட்ட ஒன்றை ஏதோ ஒரு நோக்கோ, இசையோ, மணமோ தொட்டு மேலெழுப்புகையில் இந்த வரிகளும் உடன் மேலெழும் - 'எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே'
புரிந்தும் புரிந்துவிட்ட பாவனையிலுமாக மகுடி முன் மயங்கி அதைத் தொடர்ந்து சென்றடைந்த மற்றொரு சிறுகதைத் தொகுதி லா.ச.ராவுடையது, 'பச்சைக்கனவு' என நினைக்கிறேன்.
அந்தத் தொகுதியில் ஒரு சிறுகதை – ‘தரிசனம்’. 'எனக்கு வயது பன்னிரண்டிலேயே கன்யாகுமரி மேல் காணாமலே காதல் கொண்டு விட்டேன். நான் குமரன். அவள் குமரி' எனத் தொடங்கும் கதை, கதையென்றே சொல்ல இயலாத நடை. குமரனாய்க் காதலித்த கன்யாகுமரியைக் காண மனைவி சகிதம் தலை நரைத்த காலத்தில் செல்கிறான். (அபிதாவும் இதுதானே! - மானுட வாழ்வே இதுதானே. அவளில் தொடங்கி அவளைத் தேடி அலைந்து அவள் மடியில் மடிவதுதானே. 'அவள்' மீண்டும் மீண்டும் வருகிறாள் லா.ச.ராவின் தேடலில்.). காத்திருந்த வயதுகளின் கணக்குளின்றி குமரியைக் காண நெருங்குகையில் படபடப்பு. கன்யாகுமரியின் அழகை இப்படி எழுதுகிறார்: 'சிற்பியின் செதுக்கல் முடிந்து முழுமை கண்டதும் அவனையே காலால் உதைத்துத் தள்ளிக் கொக்கரிக்கும் சௌந்தர்யம்'. கலை கலைஞனை மீறி பேருருக் கொண்டெழும் தருணம். உமையைப் பிரிந்த சிவம் வடக்கே உறைபனியில் தவமிருக்க, தென்கோடியில் இவள் அவனுக்கென தவமிருக்க, காத்திருத்தலின் வியர்த்தம் குறித்த ஏன் என்ற கேள்வியோடு கதை முடிகிறது. 'வீம்புத் தவம், வீண் தவத்தில் ஒருவருக்கொருவர் ஏன் அரண் கட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? ஏன்? அர்ச்சகர் அலங்காரம் செய்யத் திரையை இழுத்து விட்டார். ஏனாகவே அவள் அதன் பின் மறைந்து போனாள்.' என்னுள் இருந்த கன்யாகுமரிக்கு அக்கதை மிகவும் பிடித்துப்போனது. கண்ணறியாது மலர்ந்த தாழை மணம் மனதைப் பித்தாக்குவது போல அறியாத மன இடுக்குகளில் வேர் பிடிக்கும் இவர் எழுத்து.
சமீபத்தில் இணையத்தில் மதுரையின் வாடிக்கைக் காட்சிகளை அரிதான புகைப்பட தருணங்களாகப் படம்பிடித்து கட்புலன்களில் நாம் காணத் தவறியவற்றை அடிக்கோடிட்ட ஒரு வெளிநாட்டுப் பயணியின் புகைப்படத் தொகுப்பைக் கண்டேன். அன்றாடத் தூசு படியாத வெளிப்பார்வையில் ஸ்படிகம் போல மின்னுகிறார்கள் மனிதர்கள்.
அதுபோல நாம் அனுதினமும் காணும் மனிதர்கள்தான் இவரது கதைகளிலும் வருகிறாரகள். எனில் அவர்களது சலிப்புமிக்க அன்றாட வாழ்வைத் தவிர்த்து, உச்ச தருணங்களேயே படம் பிடிக்கிறார் லா.ச.ரா. தீவிர ஸ்வரங்கள் மீட்டி எழுப்பும் உணர்வெழுச்சியே இவரது எழுத்தின் ஆதார ஸ்ருதி எனலாம்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் தவம் செய்கிறேன் என்று சொல்லும் இவரது நடை, கட்டற்று சிதறிப் பரவும் சொற்பிரவாகம் என்று உருக் கொள்கிறது. அது நம்முள் உறைந்திருக்கும் அனுபவங்களெனும் பாறைகளில் மோதி கரை ஒதுக்கும் சிற்சில அலைகளில் நம்மைக் கண்டுகொள்ள முடிந்ததெனில், நம் உணர்ச்சிகளுக்கு எழுத்துருவம் கொடுத்தவரென லா.ச.ரா நமக்கு அணுக்கமாகிறார். அப்படிக் கரையேறியது கசடெனினும் அமுதெனினும் அது நதியின் பிழையன்று.
இவரது மொழி எண்ணத்தின் மொழி, சிந்திக்கும் வேகத்தில் தெறித்து விழுபவை எனத் தோன்றுபவை. எனில் நாள்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருந்து அணிகோர்க்கப்படவை என்பது ஒரு முரண்.
தன் வம்சம் விளங்காது போக தன் மகனுக்கே சாபமிட்ட ஓர் அன்னையின் முதல் சொல்லிலிருந்து "அடே" எனத் தொடங்குகிறார் 'புத்ர' எனும் நாவலை. அந்தச் சொல் அருவமாய் ஒரு பாத்திரமாய் பிரசவிக்கும் தருணத்தை இப்படி எழுதிச் செல்கிறார்:
"...ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபிவேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில்,
சப்தத்தின் சத்தியத்தில்,
நா நறுக்கிய வடிவில்,
ஸர்வத்தின் நிரூபத்தினின்று,
வாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய்,
அதன் கதியே என் ப்ரக்ஞையாய்,
நான்
பிதுங்கினேன்."
இதில் 'நான்' அச்சொல். பிறந்துவிட்ட சொல்லின் பிறப்பு அனுபவம் அது. 'உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பதுபோல்.. வார்த்தைகளுக்கே உயிர் உண்டோண்ணோ'(கணுக்கள்)
சபித்த பொழுதில் தவவல்லமை அனைத்தையும் இழக்கும் முனிவர்கள் குறித்துக் கதைகளில் கேட்டிருக்கிறோம். அந்த சாபச் சொல் பிறக்கும் தருணத்தில் அதன் ஊற்று முகத்தில் நாடி நரம்பெங்கும் ஊடுருவும் நடுக்கம் உட்பட சபிக்கப்பட்டவரினும் சபித்தவரே எரிந்து போகும் கனலை எழுத்தில் கொண்டு வருகிறார்.
அச்சொல் தன்னைக் குறித்து இப்படிச் சொல்கிறது:
"நான் விருப்பு வெறுப்பற்ற வாக்கு
என் ஜனிப்பே என் பொருள்
சொல் செயலாவதன்றி ஏன்? எதற்கு? என்று? எனும் கலகங்கள் எனக்கில்லை". சொல் பிரம்மமாகும் தருணம்.
உருவமின்றி, சொற்களென உருத்திரளாமல் வாசகனுள் கடந்து சென்று விட்ட உணர்வுகளை எழுத்தில் கடத்திவிட அவரால் முடிகிறது. கதையுள் பாத்திரங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை அவை தோன்றிய கணமே அதன் நிர்வாணத்தோடு வாசகனுள் மடைமாற்றுகிறார். அதற்கு அவர் கையாளும் உவமைகளும் படிமங்களும் அடர்த்தியானவை:
'மௌனம் தன் சிறகுகளை விரித்து, உங்கள் மேல் இறங்கியிருக்கிறது' (குரு-ஷேத்ரம்)
'வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் அளிப்பது போல, அவள் என் வாழ்ககையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள்' (அபூர்வ ராகம்)
இன்னும் பல.
சலனம் குறித்தும் இரைச்சல் குறித்தும் ஏகப்பட்ட வார்த்தைகளை இரைத்து எழுதிவிடலாம். தனிமை குறித்தும் மௌனம் குறித்தும் வாசகனிடத்து அவற்றைக் கடத்துமாறு எழுதுவது அரிது.
த்வனியில் தனிமை குறித்து இப்படி எழுதுகிறார்:
"தனியாயிருந்தால் மட்டும் தனிமை கிட்டி விடுமோ? அதுவே முதலில் இருக்கிறதோ?
ஏனெனில் நான் எங்கு போனாலும், யாரை விட்டுத் தப்பி வந்தாலும், எப்பவும் என்னோடு இருக்கிறேனே!
துறந்து விட்டதால் மட்டும் தனிமை வருமோ? ஒன்றைத் துறந்தால் மற்றொன்று அதனினும் பெரிது இட்டு நிரப்ப வந்து விடுகின்றது.
சகலமும் துறந்தவனுக்கு உலகமே உடைமை. ஆகையால் சின்ன உடைமை, பெரிய உடைமை எனும் தாரதம்மியங்கள் தவிர உண்மையான தனிமையுமில்லை.
உண்மையான துறவுமில்லை"
இவரது எழுத்துக்கள் முதற் பார்வைக்கு பாற்கடலில் அவரே சொல்வது போல, குடும்பம் என்னும் பாற்கடலைக் கடைந்து உள்ளுறையும் அமுதையும் உடன்பிறந்த நஞ்சையும் வெளிக்கொணர்பவை; எனில் அதன் வழியாக பிரபஞ்ச தரிசனம் வரை மேலெழுபவை. குடும்ப வலைகளுக்குள்ளேயே புழங்கி அம்மாக்களும் அத்தைகளும் மாமிகளுமான கதைமாந்தர்களில் நூற்றாண்டு பழைய வாழ்க்கை முறைகளையும் மரபுகளையும் விவரித்த இவரது எழுத்தில் இன்றும் பசுமை இருக்கிறது. மின்னல்கள் தெரிக்கின்றன. இவரது எழுத்தில் வெளிப்படும் பெண்கள் பேராளுமைகள். அனைவரும் அம்மாக்களே. அவரே சொல்வது போல அவரது அம்மா அவர் எழுதித் தீராத நதி. தாய்மையின் எழுதித் தேய்ந்த முகங்களை மட்டுமன்றி தடுமாற்றங்களையும், குரூரங்களையும் எழுதியிருக்கிறார்.
கொல்வேல் கொற்றவையும் அருளும் அன்னையுமென நிற்கும், லா.ச.ரா மீள மீள எழுதும் "அவள்" அவரது குலதெய்வமான பெருந்திருவின் உருவகம். இலக்கியம் வாயிலான அவரது தேடல் பெண்மையின் அழகை, பன்முகங்களை, உள்ளொளியை அவர் எழுதும் படிமங்களாக, உவமைகளாக மாற்றி நிறைக்கிறது.
இவரது எழுத்தை அணுக முடியவில்லை எனக் குறை கூறுபவர்கள் இருக்கலாம், ஒரே கதையைத் தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் உண்டு. அனைத்தையும் ஒரு புன்னகையோடு கடந்து நிற்கிறார் லா.ச.ரா. அவரது வாக்குமூலம்:
"நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு. இல்லையேல் அப்பவும் சந்தேகம் உங்களுடையது. உண்மை என்னுடையது அவ்வளவுதான்" - இந்த அறுதியான கூர்மையோடு அவரது சொற்கள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன.

Very poetic heading to narrate a very poetic writer. Awesome suba.
ReplyDeleteநன்றாக எழுதியுள்ளீர்கள். லாசரா எழுத்தின் வாசிப்பு ருசியே மஞ்சள் செடியை உருவி விட்ட பின் கையில் எஞ்சும் மஞ்சளின் பச்சை வாசனை போலத்தான். உங்கள் வாசிப்பு அனுபவத்தை அழகாக அடுக்கியுள்ளீர்கள். அபிதா முழுதுமே லயிப்புதான். வேறில்லை. மாயமான் கதையில் பல வருடங்களுக்குப் பின் ஊருக்கு திரும்பும் அவன் சிறு வயதில் பார்த்த வீட்டு உதவியால் பெண்ணின் மக்களை காணும் ஆவலில் சுழல் படிக்கட்டு மேல் உள்ள மாடியில் அமர்ந்திருப்பான். குமரியாக மாறி இருக்கும் அவள் காபி எடுத்துக்கொண்டு படியேறி வருவாள். கொஞ்சம் கொஞ்சமாக தலையில் இருந்து தோன்றி வெளிப்படுவாள். அதை மாடி வளைவில் இருந்து அவள் படிக்குப்படியாய் அவள் உருவம் உயருகையில் மூழ்கிய கோபுர வெள்ளம் வடிந்து கலச தரிசனம் ஆவது போல் வெளிப்படுகிறாள்" என்று எழுதுகிறார். எழுத்தில் ஒரு கிராபிக்ஸ் இது. கேரளத்தில் எங்கோ வில் நான் எங்கு ஓடினாலும் ஓட்டத்தின் முடிவில் எனக்கு முன்னால் நான் எனக்காக காத்திருக்கிறேன் என்று ஒரு. இதை எப்படியெல்லாமோ புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஒரு இடத்தில் "நீங்கள் ஏற்றுக்கொண்டால் சரி. இல்லாவிட்டால் சந்தேகம் உங்களுடையது. உண்மை என்னுடையது அவ்வளவுதான்" யதார்த்தமான ஒரு விஷயம் அவர் கைபட்டு எப்படி மிளிர்கிறது. அதுவே லாசரா. அவர் மந்திரச் சொற்கொல்லன். (உங்களுடைய மின்னல் மலர்ந்திடும் தாழையை லாசராவின் மகன் நண்பர் சப்தரிஷி அவர்களின் கைகளில் அழைத்து செருகி வைக்கிறேன்)
ReplyDelete- ரமேஷ் கல்யாண்
சூக்குமரின் எழுத்து சூத்திரத்தை கையில் நூலை வைத்து பட்டத்தை உயரே உயரே பறக்க விடும் வித்தையை நுணுக்கி நுணுக்கி செய்யும் நகாசுத்தனத்தை ஆம் உண்மையில் அவர் ஒரு சொற்கொல்லன் தான்.சொற்களால் உறைய வைக்கும் சொற்கொல்லன் தான். மனசார வாழ்த்துகிறேன். நல்லன சேர,அல்லன விலக.
ReplyDeleteசூக்குமரின் எழுத்து சூத்திரத்தை கையில் நூலை வைத்து பட்டத்தை உயரே உயரே பறக்க விடும் வித்தையை நுணுக்கி நுணுக்கி செய்யும் நகாசுத்தனத்தை ஆம் உண்மையில் அவர் ஒரு சொற்கொல்லன் தான்.சொற்களால் உறைய வைக்கும் சொற்கொல்லன் தான். மனசார வாழ்த்துகிறேன். நல்லன சேர,அல்லன விலக.
ReplyDeleteஎனக்கு அதிர்ச்சி தந்த சிறு கதை ஐமதக்னி. தாஷாயணி மிக நல்ல கதை.மேலும் பல. சமஸ்கிருதம் கலந்த செறிவான இவர் தமிழை நனவோடை உத்தியை குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் பாங்கை எட்டி என்னைப்பிடியேன் என்று செல்லமாக சீண்டும் வசீகரத்தை யாரும் இதுவரை தொடவில்லை என்பது பேருண்மை. என் எழுத்தில் இன்று மிளிரும் மேன்மை எல்லாம் அவரின் ஆசி. நான் பாக்யவான்.
ReplyDeleteகானப்ரியன்