Saturday, February 13, 2021

சிங்கை குறிப்புகள் - 6 - சிங்கையின் பாரசீகம்

நாம் அடிக்கடி சென்று வரும் பகுதிகளிலேயே கூட நாம் அதுவரை கண்டிராத அழகுகள் எங்கோ பார்வையும் சித்தமும் சென்று தொடக் காத்திருக்கும். அது போன்ற ஒரு இடம் தான்  "கம்போங்க் க்ளாம்" (Kampong Glam). ஒவ்வொரு முறையும் நான் வசிக்கும் கிழக்குப் பகுதியில் இருந்து நகர மையத்துக்கும், லிட்டில் இந்தியாவுக்கும், மைய நூலகத்துக்கும் செல்ல பூகிஸ் (Bugis) பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும். நூற்றுக்கணக்கான முறை அந்த சாலைகளில் பயணம் செய்திருக்கிறேன். இதற்கு அண்டை வீதிகளிலேயே ஒரு உணவகத்திற்கும் நண்பர்களோடு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த அழகிய கம்போங் க்ளாமுக்கு சென்றதேயில்லை.

கம்போங்க் க்ளாம்


விக்டோரியா சாலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் ஒரு மிகப் பெரிய புகைப்படக் கருவி வரவேற்கிறது. உலகிலேயே மிகப் பெரிய காமிரா வடிவக் கட்டிடம் என்றது அறிவிப்பு. அது பழமையான புகைப்படக் கருவிகளின் அருங்காட்சியகம், சோலையப்பன் ராமநாதன் மற்றும் அவரது உறவினர் ஸ்ரீதர் ஆகியோர் நடத்தும் மிகப்பெரிய புகைப்படக்கருவிகளின் தொகுப்பு உள்ளே இருக்கிறது என இணையம் சொன்னது. அந்த ரோலே கேமிராவின் லென்ஸ் வழியாக உள்ளே நுழையும் வழி இருக்கிறது, ஆனால் பூட்டியிருந்தது. ஒரு நபர் உள்ளே எட்டிப்பார்க்க முயன்று கொண்டிருந்தார். அவர் நகரும் வழியாகத் தெரியவில்லை, எனவே அவர் காமிரா லென்ஸில் தூசி போல ஒட்டிக் கொண்டிருக்கவே படம் எடுத்துக் கொண்டு அரபு தேசத்துக்குள் நுழைந்தேன்.

பழமை வாய்ந்த புகைப்படக் கருவிகள் அருங்காட்சியகம்


2006-ல் இங்கு அருகில் ஒரு பெரிய புல்வெளியில் தரையில் கட்டப்பட்ட ஹீலியம் பலூனில் ஏறி மேலே மிதந்தபடி சிங்கப்பூரை பார்க்கும் வசதி இருந்தது. அப்போது சுற்றிலும் மாமலைச் சிகரங்களுக்கு இடையே பள்ளத்தாக்கில் உள்ள சிற்றூர்களைப் போல இந்த கம்போங் க்ளாம் பகுதியை விண்ணிலிருந்து நோக்கியிருக்கிறேன். மண்ணை விட்டு மெல்ல மெல்ல அசைந்து அந்த மாபெரும் காற்றுக்கொப்புளத்தோடு இணைந்த கூடை போன்ற பகுதியில் நின்றபடி மேலே ஏறுவது நல்ல அனுபவம். பறவைகளைப்போல உணர்வதற்கு மானுடனுக்குக் கிடைக்கும் மிகச் சில தருணங்களில் ஒன்று. 2008-ல் பூகிஸ் ரயில் நிலையத்திட்டம் துவங்கியதும் இந்த பலூன் பறப்பது நின்று போனது.



பலூனில் இருந்து கம்போங் க்ளாம்


2006



இது இஸ்லாமிய மக்களுக்கு என அமைக்கப்பட்ட பகுதி. மலேய பண்பாட்டு மையம் இங்குதான் இருக்கிறது. இன்றும் மலேய, அராபிய அடையாளங்களைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் இப்பகுதி தனித்த பண்பாடு கொண்டதாகவே இருக்கிறது. 
ஆங்காங்கே தலையில் ஹிஜாப் அணிந்த அழகிய இளம் பெண்களின் வாயிலிருந்து தமிழ் ஒலிப்பது இனிமையான ஆச்சரியம். இப்பகுதியில் பல மலேய தமிழர்கள் வாழ்வதால் இது ஒரு இனிய இன-மொழி-மத-தேசக் கலவை - சிங்கப்பூர் நாட்டின் மலேய பூர்விகம் கொண்ட தமிழ் முஸ்லிம்கள்.


மலேயத் தமிழ் முஸ்லீம் சிங்கப்பூரர்கள்


கம்போங் என்றால் மலேய மொழியில் கிராமம். கெளாம் என்பது காயாப்புடை(cajeput) மரத்தின் மலேயப் பெயர். எளிதில் நொறுங்கிவிடக்கூடிய பட்டையைக் கொண்ட இம்மரம் இப்பகுதியில் அதிகம் நிறைந்திருந்தால் இப்பகுதிக்கு இப்பெயர் வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் வெண் குஞ்சம் கொண்ட மரம்(White Bottle Brush Tree) இது. காஜூ புட்டி என்றால் இந்தோனேசிய மொழியில் வெள்ளை மரம் என்று பொருளாம், அதிலிருந்தே காஜிபுட் பெயர் வந்திருக்கிறது.  இம்மரத்தில் இருந்து ஒரு வாசனை எண்ணையும் தயாரிக்கிறார்கள்.

வடக்கே ரோச்சார் கால்வாயும் (லிட்டில் இந்தியா அருகே தேக்காவுக்கு பெயர் தந்த அதே கால்வாயின் கிழக்குப்பகுதி), மேற்கே ஓபிர் சாலையும், தெற்கே நிகால் சாலையும்(சன்டெக் சிட்டியின் பின்புறம் வரும் முக்கிய சாலை), கிழக்கே கிராஃபோர்ட் வீதியும் அடங்கிய சிறிய பகுதி. ஹாஜி தெரு, அரபு வீதி, பஸோரா வீதி, பாக்தாத் தெரு, பினாங் தெரு, பஹாங் தெரு, மஸ்கட் தெரு, கந்தஹார் வீதி என மத்தியதரைக்கடல் முதலாக தொடங்கி அரேபிய, பாரசீக நாடுகளில் இருந்து மலேசியா வரை அனைத்து நாடுகளின் நகரங்களையும் நினைவு படுத்தும் தெருக்கள்.
பச்சைக் கோடுகளுள் இருப்பது கம்போங் கிளாம்


இன்று அரபு சாலை மைய சாலையாக இருக்க, அதன் இணை சாலைகளாக உள்ள பிற அனைத்து சாலைகளும் வந்து சந்திக்கும் மையப் புள்ளியில் சுவர்ண மகுடம் போல மின்னுகிறது மஸ்ஜித் சுல்தான். இது 1824-ல் தெமாஸக்கின்(Temasek) சுல்தானாக இருந்த ஹுசைன் ஷா சுல்தானால் கட்டப்பட்டது. இன்று காணப்படும் பள்ளிவாசல் அதே இடத்தில் 1932-ல் எழுப்பப்பட்டது. ஒரே நேரத்தில் 5000 பேர் தொழக்கூடிய பிரார்த்தனை வளாகம் கொண்டது.

சுல்தான் பள்ளிவாசல் 


பஸோரா என்பது தென் கிழக்கு ஈராக்கில் இருக்கும் துறைமுக நகரின் பெயர், சிந்துபாதின் நகரம். பஸோரா வீதி முழுவதும் மத்தியதரைக்கடல் உணவு வகைகள் - லெபனான், துருக்கி, சிரியா, மொராக்கோ உணவுகள் கிடைக்கும் உயர்தர உணவகங்கள், வரிசையாக இருக்கின்றன. கொத்திவிடும் கூர்மூக்கு கொண்ட  அழகிகளையும், பச்சைக் கண்களும் செதுக்கிய முகவெட்டும் கொண்ட ஆண்களையும் இந்த உணவகங்களில் காண முடிகிறது. ஒவ்வொரு உணவகத்திலிருந்தும் பாலை நில இசை வகுளாபரணமும், மாயாமாளவ கௌளையும் கசிந்து தெருவில் நடப்பவர்களை நனைக்கிறது.  இரு புறமும் பாக்கு மற்றும் ஈச்சை மரங்களோடு சிவப்பு நிறக் கற்கள் பாவிய வீதி மசூதியின் பின்புறமாக நீண்டு கிடக்கிறது.





பஸோரா வீதி

உணவக மேஜைகள் அனைத்திலும் வண்ண வண்ண கண்ணாடி வேலைப்பாடுகள். பாரசீக நறுமணங்கள் காற்றில் கலக்க உணவுண்ண அழைக்கிறார்கள். ஆடம்பரக் கார்களை அரபு வீதிக்கு அருகே நிறுத்திவிட்டு குதிரை போன்ற காலடித் தாளத்தோடு நடைபயின்று நவீன உணவகங்களுக்குள் இரு நவீன யுவதிகள் நுழைய அழகான காட்சி. இவர்களோடு இடையிடையே பூசிய உடல் கொண்ட மலேய மக்களும், ஒடிந்து விடும் உடல் கொண்ட சீனப் பெண்களும் கலந்து ஒரு வண்ணமயமான கலவை இப்பகுதி. இப்பகுதியில் தாங்கள் எடுக்கும் தற்படங்களை காபியிலும்(Selfie coffee) கேக்கிலும் அச்சடித்துத் தரும் ஒரு புதுமையான காபிக் கடையும் இருக்கிறது.




அரபுசாலைப் பகுதி முழுவதும் அந்தக் காலத்தில் ஒரு அராபிய வணிகரின் உடைமையாக  இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இப்பகுதியில் சாவக மக்கள் (இந்தோனேசியா ஜாவாவைச் சேர்ந்தவர்கள்) வாழ்ந்ததால் சீன மொழியில் ஜாவானீஸ் சாலை என்ற பெயர் வந்ததாகவும், அங்கேயே மலர்ந்த பலவண்ணப் பூக்களை விற்கும் இடமாக இருந்ததால் தமிழ் மக்களால் பூக்கடை சாலை என்று அழைக்கப்படடதாகவும் குறிப்புகள் இருக்கின்றன. இன்று அரபு சாலை முழுக்கவே கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் பட்டுத் துணிகளும், கம்பளங்களும், பத்தீக் துணிகளும், பாராசீக நறுமணங்களும், துருக்கிய பல வண்ணக் கண்ணாடிக் கைவினைப் பொருட்களும் விற்கும் கடைகள். பறக்கும் கம்பளம் கூடக் கிடைக்கும் போல இருந்தது. வேலைப்பாடுகள் கொண்ட கம்பளங்களில் இருந்து கண்ணை விலக்குவது கடினம்.



 பட்டின் ஆயிரமாயிரம் வண்ணங்களும், வகைகளும், ஒரு பட்டுக் கைக்குட்டையாவது வாங்கிக் கொள்ள வேண்டும். இவை சீனதேசத்திலிருந்து மேற்கே பயணித்த பெருவர்த்தகப் பாதையின் கதைகள் மிகுந்த சுவாரசியம் மிக்கவை. பட்டுவழிச்சாலை குறித்து வேறொரு முறை பேசலாம். இக்கடைகள் தலைமுறைகளாக சில குடும்பத்தினரால் நடத்தப்படுகின்றன. சாதாரணமாக வணிக வளாகங்களில், கடைகளில் கிடைக்காத அரிய வகை பட்டாடைகள் பல இங்கு விற்கப்படுகின்றன.

 கொரோனாவால் கடைகளும் தொழில்களும் மூடப்படுவதையே இதுவரை பார்த்த கண்களுக்கு ஆறுதலாக கொரோனாவால் முளைத்த ஒரு வியாபாரம் கண்ணில் பட்டது. பத்தீக் முகக்கவசங்கள், ஒரு கடை முழுவதும் நிறைந்திருக்க அதுவும் அழகாய்த்தான் இருந்தது. 

பத்தீக் முகக்கவசம் 



இவை இரண்டுமே பலரும் காணும் வழக்கமான தெருக்கள். இவற்றுக்கு அப்பால் உள்ள ஹாஜி லேன் தவறவிடக்கூடாத அழகும் தவறவிடக்கூடிய சிறிய அமைப்பும் கொண்ட நீண்ட தெரு. 
ஹாஜி தெரு

இருபுறமும் லிட்டில் இந்தியாவில் பார்த்தது போன்ற இடைவெளியே இல்லாது நெருங்கி நிற்கும் கடைவீடுகள்.



வித்தியாசமான கடைப்பெயர்கள். 






ஆனால் இத்தெருவின், இப்பகுதியின் சிறப்பு சுவரோவியங்கள். மொத்த சுவரையும் மஞ்சளும், பச்சையும், சிவப்பும், நீலமும் கொண்டு விதவிதமாகப் கலைப் படைப்பாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.





 அவற்றின் கீழே நின்று தற்படமெடுத்துக் கொள்ள பெருங்கூட்டம். சிங்கப்பூரா க்ளப் சுவற்றில் முகமெல்லாம் சுருக்கங்கள் நிரம்பிய பல முகங்களின் உயிர்சித்திரங்கள். 

சிங்கப்பூரா கிளப்

 இத்தெருவின் இறுதியில் உயர்தர மது விடுதிகளும் இருக்கின்றன. ஜாஸ் இசை இசைக்கப்படும் ப்ளூஜாஸ் க்ளப் நான் சென்ற போது அழகாகப் பூட்டப்பட்டருந்தது!!




மலேசிய பண்பாட்டு மையம் இருக்கும் சுல்தான் கேட் சாலை, சுல்தான் மசூதிக்கு கிழக்கே ஒரு பாரம்பரிய மலேசியக் கட்டிடத்தில் இருக்கிறது. மலேசிய சுல்தான்கள் வாழ்ந்த வீடு பண்பாட்டு அருங்காட்சியகமாகி இருக்கிறது. ரம்ஜான் மாதத்தில் மாலை வேளைகளில் விரதம் முடிக்கும் நேரத்தில் பல வகையான மலேசிய உணவு வகைகள் இங்கே விற்கப்படும். கெடுபட் எனப்படும் தென்னை ஓலைகளில் பின்னப்பட்ட சிறுகூடுகளில் வைத்து நீராவியில் வேக வைக்கப்படும் அரிசி மாவில் செய்த நம்மூர் இலைக் கொழுக்கட்டை போன்ற உணவுகள் சுவையானவை. கம்போங்க் உணவு வகைகளில் மீ சியாம் எனப்படும் இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த குழம்பில் அரிசி இடியாப்பம் சேர்த்த கலவையும், மீ பந்துங் எனப்படும் காரமான நூடுல்ஸ் சூப்பும்  புகழ்பெற்றவை. அவ்வளவு காரம் தாங்கும் நா எனக்கில்லை. எனவே அரேபிய காபி குடித்து அந்தப் பகுதியை சுவைத்துக் கொண்டேன்.

கண்கூசும் வெயிலொளியில் சென்றிறங்கி நடக்கத் துவங்கி அரைமணி நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இளமாலையை இளமழை ஒன்று நனைத்தது. பஸோரா சாலை கழுவி விடப்பட்டது போல் பளபளத்தது. 

மழையில் பஸோரா வீதி

மழையில் நனைந்த ஹாஜி தெருவில் ஆள்நடமாட்டமே இல்லாது ஓவியங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. 





யாருமற்ற சாலையின் ஓவியங்கள் தன்னிருப்பில் கம்பீரமாகத் தெரிந்தன. மனிதன் வழியாக வெளிப்பட்டாலும் கலை மனிதனை விட மிகப் பெரிய ஒன்று. படைத்தவனை விட்டு வெளியேறி அவற்றுக்கென தனி இருப்பு அமைந்து அவனுக்குப் பிறகும் எதையோ சொல்லிக் கொண்டே இருக்கின்றன. தூசும் காலமும் அம்மழையில் கரைந்துவிட துலங்கி வந்த அந்த அரபு வீதிகளில் ஏதோ ஒரு காலத்தில் நடந்து கொண்டிருக்கும் உணர்வு வந்தது.




வீடு செல்லபேருந்தில் ஏறியதும் மீண்டும் ஒரு முறை மத்தியதரைக்கடல் பகுதி உணவுகளை சுவைப்பதற்கும், பட்டுக் கைக்குட்டையும், பத்தீக் முகக்கவசமும் வாங்குவதற்கும் இங்கு வரவேண்டும் என்றெண்ணிக்கொண்டேன்.


Friday, February 12, 2021

சிங்கை குறிப்புகள் - 5 - அழகு ஆயிரம்

சீனப் புத்தாண்டு விடுமுறை கிடைத்ததால் 'மில்லேனியா டவர்' (Millenia Tower - ஆயிரமாண்டுகளின் கோபுரம், அருகிலேயே Centennial Tower - நூற்றாண்டு கோபுரமும் இருக்கிறது) வரை சென்று வரலாம் என்று ஒரு ஆசை வந்தது.  நான் முதன்முதலில் சிங்கை வந்திறங்கியதும் பார்த்து வியந்த அதே 41 மாடிக் கட்டிடம், எனது முதல் சிங்கை அலுவலகம் அமைந்திருந்த வளாகம்.


நான் சிங்கப்பூர்  வந்து சேர்ந்தது ஒரு சனிக்கிழமை. அது ஒரு வருட  ஒப்பந்த வேலை, பணியிடம் சிட்டிவங்கி என்றாலும் என்னை பணிக்கமர்த்திய நிறுவனம் வேறு.  அந்த நிறுவன மேலாளரை சந்தித்து பல நூறு பக்கங்கள் கையெழுத்திடும் வேலை இருந்தது. வேலையில் சேர்வதற்கு முன் கையொப்பமிட வேண்டிய வேலை ஒப்பந்தம், தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம், பிற நிறுவனங்களில் மேலாண்மை இயக்குனர் அறிவிப்பு பத்திரம் எனப் பலவிதமான படிவங்கள். ஞாயிறு காலை எனது விடுதிக்கே வருவதாக சொல்லி இருந்தவர், முடிந்தால் அவரை அவர் வீட்டில் வந்து சந்திக்கும்படி கூறினார். சிங்கப்பூர் உள்ளூர் போக்குவரத்துத் தடங்கள், பேருந்துகள் குறித்த ஒரு  அறிமுகம் கிடைக்குமேயான நானும் ஒப்புக் கொண்டு அவர் வீடிருந்த தோ பாயோ (Toa Payoh) சென்றேன்.

தங்கியிருந்த ஓட்டல் வாசலிலேயே பேருந்து. கைபேசி இணைப்பு இல்லாததால் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்வதெனக் கேட்டதற்கு, "அதுவே கடைசி பேருந்து நிலையம், வந்திறங்குங்கள், ஆறு வயது மகனோடு, நெற்றியில் திருமண் இட்டிருப்பேன்" என்று தெளிவான அடையாளம் கூறினார். தவற இயலாத அடையாளம் ஆதலாலும் நான் மண் மணம் மாறாத தமிழ் முகத்தோடு முதல் முறையாய் தயக்கத்தோடு அணிந்த ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டோடு, காதில் தங்கக் கம்மலும், நெற்றியில் பெரிய பொட்டுமாக சென்று இறங்கினேன். அவர் என் அடையாளங்களைக் கேட்டுக் கொள்ளவே இல்லை. எத்தனை பேரைப் பார்த்திருப்பார்!! நேராக என்னிடம் வந்தார். நூற்றுக்கணக்கான அடுக்கங்களுக்கு நடுவே பசுமையின் சுவடுகளுடன் அழகான குடியிருப்பு வாரிய வீடுகள்.

அதன் பிறகு அவர் வீட்டுக்கு நான் சென்றதும் அவர் தாய் தந்தை மனைவி அனைவரையும் சந்தித்ததும் குறிப்பிடும்படியாக ஏதும் நடைபெறாது இனிதே முடிந்தது.

மறுநாள் காலை எட்டரை மணிக்கு மில்லேனியா டவர் வாசலுக்கு வந்துவிடும்படி சொன்னார். சிறுவயதில் பார்த்த ஒரு  பிஸ்கட் டப்பாவின் மிகப் பெரிய மாதிரி வடிவை நிமிர்த்தி வைத்தது போல உயரமான அடுக்குமாடிகளின் தலையில் ஒரு நாற்பட்டைக் கூம்பு வடிவக் கூரை.   அக்கட்டிடத்தை அணுகும் போதே தலை மெல்ல சுழற்றியது. யானைக் கால்களைப் போல நான்கு மிகப் பருத்த தூண்கள் (அதுவே ஐந்து மாடி உயரம்) மேலே கூம்பு முடி காண இயலாது நின்றது மில்லேனியா டவர். 

Millenia Tower

அந்த இளங்காலை நேரத்தில் கருப்பும், வெள்ளையும், பல வண்ண நீலமுமாக சீரான உடைகளில் ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று அடையாள அட்டையை அனுமதிப்பானில் காட்டிவிட்டு உள்ளே சென்று கொண்டிருந்தனர். மின்தூக்கியும் அனுமதி அட்டையைக் காட்டி செல்லவேண்டிய தளத்து எண்ணை அழுத்திய பின்னரே கதவு திறக்கும் என்பதெல்லாம் அப்போது வியப்பான விஷயங்கள். கட்டிட வாயில் இருந்த கண்ணாடிக் கதவு தானாகத் திறந்த போதெல்லாம் மென்குளிர் வந்து தாக்கிய வண்ணம் இருந்தது. அருகிலேயே அதே போல மற்றுமொரு அலுவலகக் கட்டிடம் செண்டினியல் டவர். 

Centennial Tower (Left) & Millenia Tower(right) - behind Millenia Walk

அந்த இரு பன்னாட்டு நிறுவன வாசனை கொண்ட கட்டிடங்களைத் தவிர்த்துவிட்டு சூழலைப் பார்த்தால் அது ஒரு  சுற்றுலாத் தலம்.

ஒரு புறம் சரிவாக அமைக்கப்பட்ட கண்ணாடி சுவற்றில் நீர் மெல்ல சரிந்து விழுந்து கொண்டிருந்தது. 
Ganesh-Mathangi with Kids near Millenia Tower


நான் நின்றுகொண்டிருந்த இடத்துக்குப் பின்புறம் பளபளவென மின்னிக் கொண்டு, நான் இன்று வரை உள்ளே நுழைந்து எதையுமே வாங்க முற்படாத, வாங்க இயலாத விலையில் வைன் முதல் வைரங்கள் வரை, உள்ளாடை முதல்  உலகின் விலை உயர்ந்த கார்கள் வரை எதையெதையோ விற்கும் கடைகள் நிரம்பிய 'மில்லேனியா வாக்' (Millenia Walk) கட்டிடம், நிரை வகுத்த 15 கூம்புக் கூரைகளோடு நின்றது.300,000 சதுர அடி வணிகத் தளங்கள் கொண்டது.
மில்லேனியா நடை 
விண்ணொளி உட்புகும் வகையிலான கூம்புக் கூரையின் உட்புறத் தோற்றம்


அதன் கார் நிறுத்த வளாகத்தில் லம்போகினி, போர்ஷே, ஆஸ்டன் மார்ட்டின் போல ஏதாவது அதிவிலை அற்புத கார்கள் எப்போதும் நின்று கொண்டிருக்கும். நமது இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் விருப்ப வணிக வளாகம் என்றும் பெயர் பெற்றிருந்தது இந்த மில்லேனியா வாக்.

Millenia Walk & Tower Behind

Millenia Walk - 2016



Millenia Walk - 2021



மில்லேனியா டவர் 218மீட்டர் உயர கோபுரம் (~715அடி). சிங்கையின் மரீனா சென்டர் பகுதியின் மேகங்களைத் தொடும் உயர் கட்டிட நிரைகளோடு 1996-ல் இக்கட்டிடம் சேர்ந்து கொண்டது. இன்று இது உயர அளவில் 22ஆவது இடத்திலேயே இருக்கிறது.

ஒரு வழியாக மேலாளர் வந்து வாய்பிளந்து நின்ற என்னை அழைத்து உள்ளே சென்றார். அடுத்ததாக அலுவலக முறைமைகள் முடித்து ஒரு சீனப் பெண்மணியை எனது வங்கி மேலாளர் என அறிமுகப் படுத்தி வைத்தார். அழகான இருக்கைகள், சொகுசான நாற்காலிகள். அவர் இருந்த எட்டாவது தளத்தில் இருந்து ஏழாவது தளம் சென்று எனக்கு வழங்கப்பட்ட இடத்தைத் தேடினேன். மிகப் பரந்த தளம்.  ஆனால் அப்போது முதல் பார்வைக்கு அந்தத் தளம் முழுவதும் ஒரு பெரிய மீன் சந்தை போலவே இருந்தது. அனைவரும் ஒரே நேரத்தில் யார் யாருடனோ தொலைபேசிகளில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்து இருக்கைகளுக்கு இடமே இல்லாது வரிசையாக கணிப்பொறிகள். ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு இருக்கைகள் என நான் எதிர்பாராத காட்சி. வெளியே நேர்த்தியாக பளபளத்த சாக்லேட் காகிதம் உறை பிரிக்கப்பட்டதும் பிசுபிசுத்து கைகளில் ஒட்டியது போலாகிவிட்டது. அதுவரை இந்தியாவில் பணிபுரிந்த எந்த நிறுவனத்தையும் விட நெருக்கடியான இடப்பகுப்பு முறை. எனது இருக்கை எண் சுவற்றில் இருந்தது. தளத்தில் ஆனால் ஏற்கனவே இருவர் அமரக்கூடிய இடத்தில் மூவர் அமர்ந்திருந்தனர். நான் புதிதாக அங்கு வந்திருப்பதாகக் கூறியதும் சிரிப்பையே முகம் எனக் கொண்ட ஒரு பிலிப்பினோ பெண் எழுந்து எனக்கு மற்றொரு இருக்கை இழுத்து வந்தாள். யாருடையோ குளிராடையையோ அணிந்திருந்த அந்த இருக்கையில் அமர்ந்து எந்த மென்பொருளுமே இல்லாத ஒரு கணிப்பொறியை துருவிக் கொண்டிருந்தேன். மறுபுற இருக்கையில் இருந்த ஒரு இந்தியப் பெண் என்னைப் பார்த்துவிட்டுத் தமிழா என்றாள். அவர் மராத்தி பேசுபவர், கணவர் தமிழ். அவரோடு சேர்ந்து அந்தத் தளத்தை சுற்றி வந்தேன். தேசிய பானமாகிய மைலோ கிடைக்கும் தானியங்கி இயந்திரம், பிரிண்டர், ஓய்வறை போன்றவற்றைப் பார்த்துவிட்டு இடத்துக்கு வந்தோம். 

"எட்டாவது மாடி சொகுசாக இருக்க இது ஏன் இப்படி?" என நான் கேட்க நாங்கள் அமர்ந்திருந்தது ஒப்பந்தப் பணியாளர்களுக்கான தளம் எனத் தெரிய வந்தது. நாட்கள் செல்லச் செல்ல நட்புகள் உருவாகி அந்தத் தளமும் சூழ்ந்திருந்த மலேய, பிலிப்பினோ, இந்திய, சீன முகங்களும் பழகிவிட்ட இனிமையோடு நன்றாகவே இருந்தது. பேச்சுவாக்கில் பக்கத்து கணிப்பொறியில் டைப் செய்துவிடும் அபாயம் மட்டுமிருந்தது. அன்றே பின்மதியத்தில் ஒரு முறை மேலாளரை தேடிச் சென்று தட்டுத்தடுமாறி அவர் இருக்கையைக் கண்டுபிடித்து, அனைத்தும் நன்றாக இருப்பதாக சொன்னேன். அவர் மேலாளர் & எனக்கு முதல்நாள் ஆயிற்றே!

மறுநாள் காலை அலுவலகம் வந்த சிறிது நேரத்தில் அந்தப் பெண் மேலாளர் தொலைபேசியில் எனை அழைத்துத் தன் இருக்கைக்கு வரச் சொன்னார். எட்டாவது தளத்துக்கு சென்று முந்தைய நாள் வெளிர்நீல சட்டை அணிந்திருந்த, குதிரைவால் பின்னலும், உயர்ந்த குதிகால் செருப்பும் அணிந்திருந்த, இடுங்கிய கண்களும் பீதர் நிறமும் கொண்ட அவரைத் தேடினால், ஏழெட்டுப் பேர் அதே அடையாளங்களோடு இருந்தார்கள். மூன்று முறை சுற்றிச் சுற்றி வந்து கண்ணைப் பார்த்த ஓரிருவரைப் பார்த்து சிரிக்க முயன்று தோற்று, என் இருக்கைக்கு மீண்டேன். மீண்டும் அவரௌ அழைத்து சிக்கலைச் சொல்ல, சிரித்தபடி வந்து அழைத்துச் சென்றவர் அன்று இளஞ்செந்நிற கவுன் அணிந்திருந்தார்!

அதன் பிறகு அங்கு நான் பணி செய்த ஒரு வருடமும் பதினான்கு முதல் பதினெட்டு மணிநேர பணிச்சுமை. சிங்கையின் அதிகாலையில் பணி துவங்கிவிடும் ஆஸ்திரேலிய நேரத்தில் பணி துவங்கி இந்திய நள்ளிரவு வரை வேலைகள் இருக்கும்,  தினமும். நடுநடுவே டீம் மொத்தத்துக்கும் வரவழைக்கப்படும் பீட்சாவும் பர்கரும் என ஏதேதோ உணவுகளுக்கு இங்கேதான் பழகினேன். அருகில் இருந்த சன்டெக்கில் கேரஃபோர் பல்பொருள் அங்காடியில் ஒரு கோமள விலாஸ் உணவகம் இருந்தது. அன்றைய சமபளத்துக்கு சற்று விலை அதிகம், தினமும் அங்கு சாப்பிட இயலாது.  எனவே மில்லேனியா வாக் உணவு வளாகத்துள்(food court) இருந்த ஒரு இந்தியக் கடையிலேயே பெரும்பாலும் மதிய உணவு.

மில்லேனியா டவரில் தீவிபத்து ஆயத்தப் பயிற்சியென மணியடித்து அனைவரையும் படி வழியே இறங்கச் செய்வார்கள். ஏழும் ஐந்தும்(தூண்களின் உயரம்) பன்னிரு மாடிக்கே கால்கள் துவளும். இன்னும் மேலே இருந்தவர்கள் முன்கூட்டியே அறிவிப்பு வந்த நேரத்துக்கு சற்று முன்னதாகவே மின்தூக்கி வழியாக இறங்கிவிட வேண்டும். இதுவாவது திட்டமிட்ட நடவடிக்கை, போதாக்குறைக்கு 2007-ல் பலமுறை நிலநடுக்கம் வேறு வந்தது. அப்போதும் கட்டாய வெளியேற்றம், அதுவும் படிகள் வழியாக. நிலநடுக்கத்தால் போகாத உயிரும் 46 மாடி படிகளில் இறங்கினால் போய்விடாதோ!

அவ்வளவு பணிச்சுமைக்கும் ஒரே வடிகால் அருகிருந்த சன்டெக் சிட்டி(Suntec City) எனப்படும் நான்கு உயர் கோபுரங்களும், மாநாட்டு மையமும்(Convention Centre) அதன் நடுவே இருந்த மாபெரும் செயற்கை நீரூற்றும் அங்கு வரும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளும், அவர்தம் உடைகளும், கண்ணாடிச் சதுரங்கள் வழியே கண்ணாலேயே நாங்கள்  மானசீகமாக அவற்றை வாங்கிப் பார்த்துக் கொள்வதும்.  

சன்டெக் நகரம் விண்ணிலிருந்து பார்த்தால் விரித்த இடக்கரம் ஒன்றில் ஒரு மோதிரத்தை ஏந்தியிருப்பது போலத் தெரியுமாம். 



சன்டெக் நகர் - விண்நோக்கு

சீன ஃபெங் சூயி முறைப்படி கட்டப்பட்ட செல்வங்களின் நீரூற்று(Fountain of Wealth). மாபெரும் வட்டத்தின் உட்புறமாகப் பொழியும் நீர், இரவில் பல வண்ண விளக்குகளோடு மின்னும். இரவில் அங்கே இசை நிகழ்ச்சியும் உண்டு. அந்த நீரூற்றை அணுகி சுற்றிவர இயலும். மையத்திலும் பல சிறிய நீரூற்றுக்கள் உண்டு. அந்த நீரைத் தொட்டபடி  நமது வேண்டுதலை மனதில் எண்ணிக் கொண்டே மூன்று முறை சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பிக்கை. கொரோனா தொல்லை சீக்கிரம் முடிந்து பயணங்கள் தொடங்க வேண்டுமென வேண்டிக் கொள்ளலாமென்றால் அங்கு செல்வதற்கே நோய்த் தொற்று முன்னிட்டு அனுமதியில்லை. 


Fountain of Wishes!


Fountain of wealth by night


அதைச் சுற்றிலும் உலகின் பலதரப்பட்ட உணவு வகைகள் கிடைக்கும்  அங்காடிகள். மலிவு விலையில் உணவு கிடைக்கும் சிங்கையின் தனிச்சிறப்பு மிக்க உணவு வளாகங்களுள்(food court) ஒன்றும் அங்கிருந்தது. நம்மூர்க் கடை ஒன்றில் வழக்கமாக தோசை சாப்பிடுவோம். அது புளிக்காமலோ ஏதோ ஒரு தினுசாய்ப் புளித்த படியோ இருக்கும். அது அரைத்த மாவல்ல, ஏற்கனவே தயாராயிருக்கும் உலர் பொடியைக் கரைத்த மாவு என்பதே  அந்த அறு-சுவையின் காரணம். என்றாலும் சாம்பாரில் கரைந்து விட்டபிறகு அந்த தோசை பரமாத்மாவில் ஐக்கியமான ஜீவாத்மாகவே அடையாளம் இன்றி உள்ளே செல்லும். இன்று சரவண பவன் முதல் அஞ்சப்பர் வரை எல்லாம் வந்துவிட்டது. சுவைக்கும் குறைவில்லை.

நீரூற்றுக்குக் கீழே செல்லும் படிகள்


அந்த மாநாட்டு மையம் மிகச் சிறப்பான வசதிகள் கொண்ட ஒரு கட்டுமானம். அலுவலகத்தில் ஒரு  சிறப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கான பயிற்சிகள் அங்கே நடந்தது. அதிநவீன டிஜிடல் திரைகளும், தொழில்நுட்ப வசதிகளும், ஒளி ஒலியமைப்புகளும் கொண்ட மாநாட்டு அறைகள். பல தளங்களிலாக மொத்தம் 100,000 சதுர அடி மாநாட்டுக்கென இடவசதி கொண்டது.


மாநாட்டு மையம் (Convention Centre) மின் திரைகளில் சீனப்புத்தாண்டு வாழ்த்து 


அதனோடு இணைந்த சன்டெக் சிட்டி மாபெரும் வணிக, வர்த்தக வளாகம். நான்கு கோபுரங்களும், ஒவ்வொன்றும் 45 தளங்கள் கொண்டவை. 
சன்டெக் கோபுரங்கள்


வர்த்தக நிறுவனங்கள் தவிர கண்கட்டு காட்சியகம்(Trick eye museum),  மாபெரும் கேளிக்கை அமைப்புகள், ஆடம்பர விற்பனைக் கடைகள், திரையரங்குகள், உணவகங்கள்  என அனைத்தும் நிறைந்த மயன் அமைத்த மாயாலோகம்.சிங்கப்பூர் சுற்றுலாப் பேருந்துகள் பலவும் இங்கிருந்து கிளம்புவதால் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்த்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கண்கட்டு காட்சியகம் (Trick Eye Museum)

ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது முறை சிங்கை வந்த போது சிட்டிபாங்க் சாங்கி வணிக வளாகத்துக்கு இடம்மாறிவிட்டது. ஆனால் இன்றும் இந்த இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்ப்பதும் பழைய நினைவுகளில் திளைப்பதும் இனிது இனிது.
அதே இடம், அதே நபர், நடுவே 15 வருடங்கள்!!


Thursday, February 11, 2021

சிங்கை குறிப்புகள் - 4 - கோங் க்ஸி ஃபா ட்ஸாய்

கோங் க்ஸி ஃபா ட்ஸாய்  

வளம் பெருக வாழ்த்துக்கள்!!

இன்று(12/02/21) சீனப் புத்தாண்டு. நிலவை அடிப்படையாகக் கொண்ட சீன வருட அமைப்பு. வருடத்துக்கு ஒரு விலங்கு என பன்னிரு விலங்குகள் சுழற்சி முறையில் வரும். வழக்கமாக இந்த சமயத்தில் சில நாட்களுக்கு முன்னரே அங் பாவ்(Ang Pao/Hongbao) எனப்படும் செந்நிற உறைக்குள் புத்தம் புதிய பணத்தாளை வைத்து அதனுடன் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் இரண்டும் ஒரு சிறிய செந்நிறப் பையில் இட்டு அனைவருக்கும் மேலாளர் கொடுப்பார். அவ்விதம் கொடுத்த பழங்கள் வளத்தின் அடையாளமாகக் கருதப்படுவதால் வேலை பார்க்கும் இடத்திலேயே அப்பழங்களை வைத்திருப்பார்கள், உண்ணும் வழக்கம் கிடையாது, பத்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு அவை வற்றி சுருங்கிய பிறகு அப்புறப்படுத்தி விடுவது வழக்கம். 




முதல் முறை சிங்கை வந்திருந்த வங்காளத்தை சேர்ந்த அலுவலக நண்பர், மேலாளர் ஆரஞ்சுப் பழம் கொடுத்து அப்புறம் நகர்ந்த உடனேயே பழத்தைப் பிரித்து சுளைகளை வாயிலிட்டு விழுங்கினார்.  யாரும் அவரிடம் அது குறித்து ஒன்றும் சொல்லவில்லை போலும். அப்போதெல்லாம் நள்ளிரவு தாண்டி இரண்டு அல்லது மூன்று மணிவரை வேலை பார்த்து விட்டே வீட்டுக்கு செல்ல நேரும். வெகு நேரம் வேலை பார்த்த களைப்பில் எழுந்து பசிக்கு அந்த வரிசையில் வைத்திருந்த இரண்டு மூன்று பேருடைய ஆரஞ்சுப் பழங்களையும் உண்டு பசிதீர்த்துக் கொண்டார் அவர். அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்தவர்கள் தங்கள் இருக்கைகளில் பழத்தைக் காணாமல் அங்கும் இங்கும் தேடியிருக்கிறார்கள். நான் முந்தைய நாள் விடுப்பில் இருந்ததால், அன்று அலுவலகம் வந்ததும் எனக்கு அங் பாவ் கொடுத்தார் மேலாளர்.  அருகே வந்து " ஏன் ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடாமல் வைத்திருக்கீங்க, வெகு சுவையாக இருக்கிறது நேற்று மட்டும் ஏழெட்டுப் பழங்கள் உண்டேன்" என அவர் சொன்னதும், நான் அந்த வழக்கத்தை விளக்க முற்படுவதற்குள் அனைவரும் அவரை சூழ்ந்து அரைமணிநேரம் கேலி செய்தார்கள். ஒருவர் அப்பழத்தை உண்டால் சீன ஆவிகள் உட்புகுந்து விடும் என்றெல்லாம் சொல்லி, 'உனது வீட்டருகே பார்க்கவில்லையா பல இடங்களில் கேக் எல்லாம் படைத்திருப்பார்களே, அதுவும் மண்மறைந்த முன்னோருக்குதான்' என்று வலு கூட்டினார். உண்மையிலேயே சற்று பயந்துவிட்டார் புதியவர். பிறகு அந்தப் பழங்களை சாப்பிடுவதில் தவறேதுமில்லை என்றாலும் அது வழக்கமில்லை, அவ்வளவே என வெகு நேரம் சமாதானம் செய்ய வேண்டியதாகி விட்டது. இந்த நோய்த்தொற்று காலத்தின் காரணமாக அனைவரும் இயன்ற வரையில் வீட்டிலேயே இருந்து வேலை பார்ப்பதால் இது போன்ற இனிய விழாக்கால வழக்கங்கள் இன்று இல்லை. பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்துப் பார்ப்பது போல சீனர்கள் புத்தாண்டுப் பரிசுகளில் இந்தப் பொன்னிற ஆரஞ்சுப் பழங்களை வைத்துப் பார்த்திருக்கிறார்கள். சோங் காம் (Song Gam) என்று அழைக்கப்படும் இவ்வழக்கத்திற்கு காண்டனீஸ்(தென் சீனப் பகுதியில் வழங்கிவரும் சீன மொழி) மொழியில் பொன் வழங்குதல் என்றே பொருள். 

இதற்கு பல்வேறு வகையான ஆரஞ்சுகளும் வழங்கப்படும். லூகான்(Lukan) எனப்படும் உள்ளங்கைக்குள் அடங்கி விடக்கூடிய சற்றே மெல்லிய சுருங்கிய தோல் கொண்ட சாறு நிறைந்த பழங்கள்,  பொன்காண் (Ponkan) எனப்படும் பழத்தில் ஒட்டாமல் விலகி எளிதாக உரிக்க வரும் தோல் கொண்ட பழங்கள், ஸ்வாடௌ(swatow) எனப்படும் இனிப்பு சற்றுக் குறைவாகவும், உரிக்க சற்று சிரமமேற்படுத்தும் பழங்கள் (இவை இரண்டு வாரங்களுக்கும் மேல் சுருங்காமல் இருப்பதால் அலங்காரத்துக்குப் பயன்படும்), கின்னொ (kinno) எனப்படும் டாஞ்சரின் (tangerine) வகைப் பழங்கள், டெக்கோபோன் (dekopon) எனப்படும் ஜப்பானிய மாண்டரின் ஆரஞ்சுகள் என பல வகைப்படும்.   

சிங்கை சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

3500 வருடங்களுக்கு மேலாக  கொண்டாடப் பட்டுவரும் சீனப் புத்தாண்டு, சந்திரப் புத்தாண்டு எனவும், வசந்தப் புத்தாண்டு என்றும் அழைக்கப் படுகிறது. ஷாங் மன்னர்கள்(Shang ட்யன்ஸ்ட்டி - கிமு 1600 - 1046) காலத்தில் முன்னோருக்கும் கடவுளருக்கும் பலிகளும் காணிக்கைகளும் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டிருந்தாலும் ஜோவ் மன்னர்கள் (Zhou dynasty - கிமு 1046 - 256) காலத்திலேயே அதற்கான ஆண்டு சுழற்சி முறை வழக்கத்திற்கு வந்திருக்கிறது. அப்போதும் மண்மறைந்தோர் வழிபாடே சமூகத்தில் பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஹான் மன்னர்கள் (Han dynasty - கிமு 202 - கிபி 220) காலத்தில் அதற்கென தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இன்று நவீனமாகிவிட்ட கொண்டாட்டங்களில்  வாட்சப் போன்ற வீசாட்(WeChat) வழியாக செந்நிற பரிசு உறைகள் கொடுப்பது வரை வழக்கங்கள் மாறிவருகின்றன. 


சிங்கப்பூரில் நாடு தழுவிய விழாவாகிய இந்நாள் இரண்டு தினங்கள் கொண்டாடப்படும் (இரு தினங்கள் விடுமுறை என்பதே நமக்கெல்லாம் கொண்டாட்டம்) . நூலகம், முக்கிய கடைகள், வங்கிகள் அனைத்துக்கும் முழு விடுமுறை. பல விதமான பழங்களும், உணவு வகைகளும், உடைகளும் ஊரெங்கும் சிறுகடைகளில் எல்லாம் விற்பனைக்கு வரும். ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20க்குள் ஏதேனும் ஒரு தேதியில் அமையும். உண்மையில் இது பலநாள் கொண்டாட்டம். சீனாவில் இது 23 நாட்கள் கொணடாட்டம். இரு வாரங்களுக்கு அலுவலக விடுமுறையும் அங்கு உண்டு. அதற்காகவே இந்த மாதம் மட்டும் சீனாவில் வேலை பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும்.


ஆண்டிறுதியின் பன்னிரண்டாவது மாதத்தின் இருபத்து நாலாவது நாளிலேயே புத்தாண்டின் முறைமைகள் தொடங்கிவிடும். வீட்டை நிர்வகிக்கும் தெய்வங்கள் யூ ஹுவாங்(Yu Huang) எனப்படும் விண்ணையும் மண்ணையும் ஆளும் ஜேட் மாமன்னருக்கு கீழ்ப்படிபவை.  இனிப்பு கேக்குகள், பழங்கள், மதுரமாக்கப்பட்ட அரிசி உணவுகள் இவையெல்லாம் சமையலறை தெய்வமாகிய சாவ்வாங்-குக்கு (zaowang) படைக்கப்பட்டும். அவருக்கு தேனும் கல் உப்பும் படைக்கப்படுவதுண்டு.  அவர் ஜேட் மன்னரிடம் நல்லபடியாகப் பரிந்துரைத்து நல்லது அருள்வார் என நம்பிக்கை. இங்கே மாலை நடை செல்லும் போது ஆங்காங்கே தெரு முனைகளில் இவ்வாறு படைக்கப்பட்ட பல வண்ண கேக்குகளை காண நேரும். மேலும் இறுதியாக புத்தாண்டு தினத்தில் வெடிகள் மற்றும் வாணவேடிக்கைகள் மூலம் தெய்வங்களை விண்ணுக்கு அனுப்பி வைத்து வசந்தம் துவங்கியதை கொண்டாடுவார்கள்.



இதற்கு முன்னர் சிங்கையில் அனைத்து வீடுகளிலும் வசந்த கால துப்புரவு செய்யத்தொடங்குவார்கள். மூங்கில் இலைகளைக் கொண்டு சுத்தம் செய்வது கெடுநோக்கம் கொண்ட ஆவிகளை  விரட்டுவதாக நம்புகிறார்கள். வாயிலில் நன்மொழிகள் எழுதப்பட்ட சிவப்பு நிற அலங்கார அட்டைகள் ஒட்டப்படும்.


நான் குடியிருக்கும் வீட்டில் இருப்பவை.


 சிறிய செடிகளில் பலநூறு மாண்டரின் ஆரஞ்சுகள் காய்த்திருக்கும் செடிகள் வீட்டு வாயிலில் இடம்பெறும். 



புது வருடம் துவங்கியதும் முடிவெட்டிக் கொண்டால் வளம் குறைந்து விடும் எனக்கருதி புத்தாண்டுக்கு முந்தைய வாரத்தில் அனேகர் முடி வெட்டிக் கொள்வதால் முடி திருத்தகங்களில் விலை அதிகரிக்கும். வீடுறை காலமாதலால் பல மாதங்களாக முடிவெட்டிக் கொள்ளாமல் திருவள்ளுவருக்குப் போட்டியாக தாடியும் முடியும் வளர்த்திருந்த பல அலுவலக நண்பர்கள் சென்ற வார வாராந்திர இணைய வழி கூடுகையில் முடிதிருத்தி பள்ளி செல்லும் மாணவர்கள் போல காணப்பட்டார்கள். 

புத்தாண்டுக்கு முந்தைய தினம் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அவர்களது பாரம்பரிய வீடு அல்லது பெற்றோர் வீட்டில் இணைந்து இரவுணவும் மூதாதையர் வழிபாடும் செய்வது  இவ்விழாவின் மிக முக்கியமான அம்சங்கள். இந்த வருடம் ஒரு வீட்டில் எட்டு பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை இங்கே விதிக்கப்பட்டிருக்கிறது.  குழந்தைகளும் நள்ளிரவு வரை விழித்திருந்து செல்லும் வருடத்தை வழியனுப்பி வரும் புதிய ஆண்டை வரவேற்பார்கள். அதன் பிறகு புத்தாண்டு அன்று காலையில் சீனர்களின் குபேரனை நறுமண ஊதுவத்திகள் ஏற்றி வைத்து வரவேற்பார்கள்.  தொடர்ந்து வரும் பதினைந்து நாட்களிலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்புண்டு.  ஒவ்வொரு சீன ஆண்டுக்கும் ஒரு விலங்கு அடையாளம் உண்டு. பிறந்திருக்கும் புது வருடம் எருது ஆண்டு. அதை அடிப்படையாகக் கொண்டு சீன ஆரூடம் கணிக்கப்படுகிறது. 

இதை ஒட்டி வழக்கமாக F1 அரங்கில் நடைபெறும் சிங்கே பரேட் (Chingay Parade) எனப்படும் வண்ணமயமான அணிவகுப்பு இவ்வருடம் இணைய வழி கலந்துகொள்ளும் நிகழ்வாகிறது.  நண்பர் கணேஷ்-மாதங்கியின் மகன் கந்தர்வ் இந்த வண்ணங்களின் அணிவகுப்பில் சிவப்பாடை அணிந்து கலந்து கொண்டிருக்கிறான். ஆனால் அதன் பிறகு அந்த ஆடையை வேறெங்கும் அணிந்தால் சற்று போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் உண்டு.




சிங்கப்பூர் ஆற்றில் ஹாங் பாவ் கொண்டாட்டம் 1987-ல் இருந்து நடைபெறுகிறது.  உலோக, காகித, அல்லது கண்ணாடி விளக்குகள் (lantern) ஏற்றி கொண்டாடப்படும். 



வழக்கமாக அலுவலகத்தில் இச்சமயத்தில் விதவிதமான போட்டிகளோடு இது மிக உற்சாகமாக அணைத்துத் துறைகளின் முக்கிய தலைவர்களும், மேலாளர்களும் கலந்து கொள்ளும் விழாவாக இருக்கும். சிங்கை அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எந்த இனத்தவராக இருந்தாலும் சீனப் பாரம்பரிய உடையில் வந்து தலைமை ஏற்றுக் கலந்து கொள்வார். அனைவரும் அன்று சிவப்பு வண்ண உடையிலோ சீனப் பாராம்பரிய உடையிலோ கலந்து கொள்வோம். லோ ஹெய் (lo hei -கலத்தல்) எனப்படும் சடங்கு சிங்கப்பூருக்கே உரிய தனித்த பண்பாடு என்கிறார்கள். இதில் சைவ அசைவ லோ ஹெய்களை அனைவரும் சேர்ந்து கலந்து தயாரிப்பது வழக்கம். அதற்கென குறிக்கப்பட்ட நாளில் நீண்ட மேஜைகளில் இதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் தயாராக இருக்கும். அதற்கான படிப்படியான ஆணைகள் உதவிக் குறிப்புகளை ஒருவர் உரக்க சொல்லுவார். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒவ்வொரு பொருளையும் எடுத்து சேர்க்க வேண்டும், ஒவ்வொரு பொருளௌ சேர்க்கும்போதும் சொல்ல வேண்டிய சீன வார்த்தைகளையும் உரக்க உச்சரிக்க வேண்டும். வளத்தை சேர்க்கும் சால்மன் அல்லது சாஷிமி மீன் (Sashimi) துண்டுகள், அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் பப்ளிமாஸ் பழத்துண்டுகள் (Pomelo), பொக்கிஷங்களை அருளும்  மிளகு மற்றும் ஐந்து வகை மசாலா பொருட்கள், எண்ணை, இளமையை சேர்க்கும் நீளமாக மெலிதாக நூல் போல துருவப்பட்ட கேரட், வெள்ளை மற்றும் பச்சை முள்ளங்கி துருவல்கள், பொன்னையும் வெள்ளியையும் குறிக்கும் வெள்ளெள்ளும் நிலக்கடலையும், தங்கத்தை சேர்க்க பொன் வறுவல் என்றழைக்கப்படும் கோதுமையால் செய்யப்பட்ட மென் தட்டைகள்,  உறவுகளில் குன்றா அன்பை நிறைக்கும் ப்ளம் சாஸ் அனைத்தையும் ஒவ்வொன்றுக்கும் உரிய நீண்ட சீனமொழி வாக்கியங்களைக் உரக்க கூறியபடி குழுமி இருக்கும் அனைவரும் உணவுக்குப் பயன்படும் சாப்ஸ்டிக்-களைக் கொண்டு உயர சுண்டி எரிந்து கலக்க வேண்டும். அதிக உயரம் அதிக வளம் என்று கருதப்படும். அதன் பிறகு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அனைவரும் சிறிய தட்டுகளில் அவற்றை எடுத்து உண்பார்கள். மிக சுவையாக சாட் உணவு வகை போல இருக்கும். இந்த நிகழ்வு முடிந்த அறை, சுத்தம் செய்வதற்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கும். தரையெங்கும் முன்னதாகவே நெகிழி விரிப்புகளும் காகிதங்களும் விரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு யுத்தகளம் போல காட்சியளிக்கும் உணவுக்களம்.        



அலுவலகத்தில் சைவ லோ ஹேய்


இது தவிர அனைவரும் சீனப் பாரம்பரிய உடையணிந்து செல்வது,  ஒவ்வொரு துறையும் பல குழுக்களாகப் பிரிந்து  காய்ஷென் (சீனக் குபேரன்) போல வேடமணிந்து சிறந்த வேடத்துக்குப் பரிசு என்பன போல பல போட்டிகள். அலுவலகத்தில் நான் இத்தனை வருடங்களில் கண்டது குறித்து மட்டும்  மேலும் சில வார்த்தைகள்.


சீனப் புத்தாண்டின் மிக வண்ணமயமான தாளமயமான மற்றொரு விஷயம் சிங்க நடனம் (Lion dance). துணியால் செய்யப்பட வண்ணமயமான ஒரு அலங்கரிக்கப்பட்ட சிங்க உடையை இருவர் சுமந்து ஒவ்வொரு வணிக வளாகத்திலும், அதிலும் ஒவ்வொரு முக்கிய மேலாளரின் அறையிலும் வந்து மேளங்கள் ஒலிக்க, மெல்லத் துவங்கி துரிதமாகும் தாளகதிக்கு ஏற்ப நடனமாடி துள்ளிக்குதித்து அவர்களுக்கு முன் மேஜையில் அல்லது தரையில் குவிக்கப்பட்டிருக்கும் பழங்களை உண்பது போல நடமிடுவர். அனைத்து திசைகளிலும் ஆரஞ்சுப் பழங்களை வீசி எறியும் சிங்கம். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளுக்குள் நம்மூர் பொய்க்கால் குதிரை போல (ஆனால் இவர்களது தலையும் தெரியாது) தாளங்கள் அதிர இவர்கள் ஆடும் அந்நேரம், அரைமணிநேரத்துக்கு காதில் எச்சொல்லும் கேட்க இயலாது. அத்தனை அலுவல் தொடர்பான தொலைபேசி அழைப்புகளும் துண்டிக்கப்பட்டு அனைவரும் எழுந்து கூட்டமாக இதை வேடிக்கை பார்ப்பது வழக்கம். அதுவும் இம்முறை காண இயலாது போகிறது. 





இந்த ஆண்டில் இவை அனைத்தையும் நினைவு கூட்டி இவற்றை எழுதி முடிக்கையில் எலி வெளியேறி எருது  உள்ளே வரும் நேரம் ஆகிவிட்டது.

மீண்டும் நண்பர்கள் அனைவருக்கும் "Gong Xi Fa Cai" 


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 3 - சிராங்கூன் சாலை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 5 - அழகு ஆயிரம்