Thursday, February 11, 2021

சிங்கை குறிப்புகள் - 4 - கோங் க்ஸி ஃபா ட்ஸாய்

கோங் க்ஸி ஃபா ட்ஸாய்  

வளம் பெருக வாழ்த்துக்கள்!!

இன்று(12/02/21) சீனப் புத்தாண்டு. நிலவை அடிப்படையாகக் கொண்ட சீன வருட அமைப்பு. வருடத்துக்கு ஒரு விலங்கு என பன்னிரு விலங்குகள் சுழற்சி முறையில் வரும். வழக்கமாக இந்த சமயத்தில் சில நாட்களுக்கு முன்னரே அங் பாவ்(Ang Pao/Hongbao) எனப்படும் செந்நிற உறைக்குள் புத்தம் புதிய பணத்தாளை வைத்து அதனுடன் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் இரண்டும் ஒரு சிறிய செந்நிறப் பையில் இட்டு அனைவருக்கும் மேலாளர் கொடுப்பார். அவ்விதம் கொடுத்த பழங்கள் வளத்தின் அடையாளமாகக் கருதப்படுவதால் வேலை பார்க்கும் இடத்திலேயே அப்பழங்களை வைத்திருப்பார்கள், உண்ணும் வழக்கம் கிடையாது, பத்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு அவை வற்றி சுருங்கிய பிறகு அப்புறப்படுத்தி விடுவது வழக்கம். 




முதல் முறை சிங்கை வந்திருந்த வங்காளத்தை சேர்ந்த அலுவலக நண்பர், மேலாளர் ஆரஞ்சுப் பழம் கொடுத்து அப்புறம் நகர்ந்த உடனேயே பழத்தைப் பிரித்து சுளைகளை வாயிலிட்டு விழுங்கினார்.  யாரும் அவரிடம் அது குறித்து ஒன்றும் சொல்லவில்லை போலும். அப்போதெல்லாம் நள்ளிரவு தாண்டி இரண்டு அல்லது மூன்று மணிவரை வேலை பார்த்து விட்டே வீட்டுக்கு செல்ல நேரும். வெகு நேரம் வேலை பார்த்த களைப்பில் எழுந்து பசிக்கு அந்த வரிசையில் வைத்திருந்த இரண்டு மூன்று பேருடைய ஆரஞ்சுப் பழங்களையும் உண்டு பசிதீர்த்துக் கொண்டார் அவர். அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்தவர்கள் தங்கள் இருக்கைகளில் பழத்தைக் காணாமல் அங்கும் இங்கும் தேடியிருக்கிறார்கள். நான் முந்தைய நாள் விடுப்பில் இருந்ததால், அன்று அலுவலகம் வந்ததும் எனக்கு அங் பாவ் கொடுத்தார் மேலாளர்.  அருகே வந்து " ஏன் ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடாமல் வைத்திருக்கீங்க, வெகு சுவையாக இருக்கிறது நேற்று மட்டும் ஏழெட்டுப் பழங்கள் உண்டேன்" என அவர் சொன்னதும், நான் அந்த வழக்கத்தை விளக்க முற்படுவதற்குள் அனைவரும் அவரை சூழ்ந்து அரைமணிநேரம் கேலி செய்தார்கள். ஒருவர் அப்பழத்தை உண்டால் சீன ஆவிகள் உட்புகுந்து விடும் என்றெல்லாம் சொல்லி, 'உனது வீட்டருகே பார்க்கவில்லையா பல இடங்களில் கேக் எல்லாம் படைத்திருப்பார்களே, அதுவும் மண்மறைந்த முன்னோருக்குதான்' என்று வலு கூட்டினார். உண்மையிலேயே சற்று பயந்துவிட்டார் புதியவர். பிறகு அந்தப் பழங்களை சாப்பிடுவதில் தவறேதுமில்லை என்றாலும் அது வழக்கமில்லை, அவ்வளவே என வெகு நேரம் சமாதானம் செய்ய வேண்டியதாகி விட்டது. இந்த நோய்த்தொற்று காலத்தின் காரணமாக அனைவரும் இயன்ற வரையில் வீட்டிலேயே இருந்து வேலை பார்ப்பதால் இது போன்ற இனிய விழாக்கால வழக்கங்கள் இன்று இல்லை. பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்துப் பார்ப்பது போல சீனர்கள் புத்தாண்டுப் பரிசுகளில் இந்தப் பொன்னிற ஆரஞ்சுப் பழங்களை வைத்துப் பார்த்திருக்கிறார்கள். சோங் காம் (Song Gam) என்று அழைக்கப்படும் இவ்வழக்கத்திற்கு காண்டனீஸ்(தென் சீனப் பகுதியில் வழங்கிவரும் சீன மொழி) மொழியில் பொன் வழங்குதல் என்றே பொருள். 

இதற்கு பல்வேறு வகையான ஆரஞ்சுகளும் வழங்கப்படும். லூகான்(Lukan) எனப்படும் உள்ளங்கைக்குள் அடங்கி விடக்கூடிய சற்றே மெல்லிய சுருங்கிய தோல் கொண்ட சாறு நிறைந்த பழங்கள்,  பொன்காண் (Ponkan) எனப்படும் பழத்தில் ஒட்டாமல் விலகி எளிதாக உரிக்க வரும் தோல் கொண்ட பழங்கள், ஸ்வாடௌ(swatow) எனப்படும் இனிப்பு சற்றுக் குறைவாகவும், உரிக்க சற்று சிரமமேற்படுத்தும் பழங்கள் (இவை இரண்டு வாரங்களுக்கும் மேல் சுருங்காமல் இருப்பதால் அலங்காரத்துக்குப் பயன்படும்), கின்னொ (kinno) எனப்படும் டாஞ்சரின் (tangerine) வகைப் பழங்கள், டெக்கோபோன் (dekopon) எனப்படும் ஜப்பானிய மாண்டரின் ஆரஞ்சுகள் என பல வகைப்படும்.   

சிங்கை சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

3500 வருடங்களுக்கு மேலாக  கொண்டாடப் பட்டுவரும் சீனப் புத்தாண்டு, சந்திரப் புத்தாண்டு எனவும், வசந்தப் புத்தாண்டு என்றும் அழைக்கப் படுகிறது. ஷாங் மன்னர்கள்(Shang ட்யன்ஸ்ட்டி - கிமு 1600 - 1046) காலத்தில் முன்னோருக்கும் கடவுளருக்கும் பலிகளும் காணிக்கைகளும் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டிருந்தாலும் ஜோவ் மன்னர்கள் (Zhou dynasty - கிமு 1046 - 256) காலத்திலேயே அதற்கான ஆண்டு சுழற்சி முறை வழக்கத்திற்கு வந்திருக்கிறது. அப்போதும் மண்மறைந்தோர் வழிபாடே சமூகத்தில் பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஹான் மன்னர்கள் (Han dynasty - கிமு 202 - கிபி 220) காலத்தில் அதற்கென தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இன்று நவீனமாகிவிட்ட கொண்டாட்டங்களில்  வாட்சப் போன்ற வீசாட்(WeChat) வழியாக செந்நிற பரிசு உறைகள் கொடுப்பது வரை வழக்கங்கள் மாறிவருகின்றன. 


சிங்கப்பூரில் நாடு தழுவிய விழாவாகிய இந்நாள் இரண்டு தினங்கள் கொண்டாடப்படும் (இரு தினங்கள் விடுமுறை என்பதே நமக்கெல்லாம் கொண்டாட்டம்) . நூலகம், முக்கிய கடைகள், வங்கிகள் அனைத்துக்கும் முழு விடுமுறை. பல விதமான பழங்களும், உணவு வகைகளும், உடைகளும் ஊரெங்கும் சிறுகடைகளில் எல்லாம் விற்பனைக்கு வரும். ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20க்குள் ஏதேனும் ஒரு தேதியில் அமையும். உண்மையில் இது பலநாள் கொண்டாட்டம். சீனாவில் இது 23 நாட்கள் கொணடாட்டம். இரு வாரங்களுக்கு அலுவலக விடுமுறையும் அங்கு உண்டு. அதற்காகவே இந்த மாதம் மட்டும் சீனாவில் வேலை பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும்.


ஆண்டிறுதியின் பன்னிரண்டாவது மாதத்தின் இருபத்து நாலாவது நாளிலேயே புத்தாண்டின் முறைமைகள் தொடங்கிவிடும். வீட்டை நிர்வகிக்கும் தெய்வங்கள் யூ ஹுவாங்(Yu Huang) எனப்படும் விண்ணையும் மண்ணையும் ஆளும் ஜேட் மாமன்னருக்கு கீழ்ப்படிபவை.  இனிப்பு கேக்குகள், பழங்கள், மதுரமாக்கப்பட்ட அரிசி உணவுகள் இவையெல்லாம் சமையலறை தெய்வமாகிய சாவ்வாங்-குக்கு (zaowang) படைக்கப்பட்டும். அவருக்கு தேனும் கல் உப்பும் படைக்கப்படுவதுண்டு.  அவர் ஜேட் மன்னரிடம் நல்லபடியாகப் பரிந்துரைத்து நல்லது அருள்வார் என நம்பிக்கை. இங்கே மாலை நடை செல்லும் போது ஆங்காங்கே தெரு முனைகளில் இவ்வாறு படைக்கப்பட்ட பல வண்ண கேக்குகளை காண நேரும். மேலும் இறுதியாக புத்தாண்டு தினத்தில் வெடிகள் மற்றும் வாணவேடிக்கைகள் மூலம் தெய்வங்களை விண்ணுக்கு அனுப்பி வைத்து வசந்தம் துவங்கியதை கொண்டாடுவார்கள்.



இதற்கு முன்னர் சிங்கையில் அனைத்து வீடுகளிலும் வசந்த கால துப்புரவு செய்யத்தொடங்குவார்கள். மூங்கில் இலைகளைக் கொண்டு சுத்தம் செய்வது கெடுநோக்கம் கொண்ட ஆவிகளை  விரட்டுவதாக நம்புகிறார்கள். வாயிலில் நன்மொழிகள் எழுதப்பட்ட சிவப்பு நிற அலங்கார அட்டைகள் ஒட்டப்படும்.


நான் குடியிருக்கும் வீட்டில் இருப்பவை.


 சிறிய செடிகளில் பலநூறு மாண்டரின் ஆரஞ்சுகள் காய்த்திருக்கும் செடிகள் வீட்டு வாயிலில் இடம்பெறும். 



புது வருடம் துவங்கியதும் முடிவெட்டிக் கொண்டால் வளம் குறைந்து விடும் எனக்கருதி புத்தாண்டுக்கு முந்தைய வாரத்தில் அனேகர் முடி வெட்டிக் கொள்வதால் முடி திருத்தகங்களில் விலை அதிகரிக்கும். வீடுறை காலமாதலால் பல மாதங்களாக முடிவெட்டிக் கொள்ளாமல் திருவள்ளுவருக்குப் போட்டியாக தாடியும் முடியும் வளர்த்திருந்த பல அலுவலக நண்பர்கள் சென்ற வார வாராந்திர இணைய வழி கூடுகையில் முடிதிருத்தி பள்ளி செல்லும் மாணவர்கள் போல காணப்பட்டார்கள். 

புத்தாண்டுக்கு முந்தைய தினம் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அவர்களது பாரம்பரிய வீடு அல்லது பெற்றோர் வீட்டில் இணைந்து இரவுணவும் மூதாதையர் வழிபாடும் செய்வது  இவ்விழாவின் மிக முக்கியமான அம்சங்கள். இந்த வருடம் ஒரு வீட்டில் எட்டு பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை இங்கே விதிக்கப்பட்டிருக்கிறது.  குழந்தைகளும் நள்ளிரவு வரை விழித்திருந்து செல்லும் வருடத்தை வழியனுப்பி வரும் புதிய ஆண்டை வரவேற்பார்கள். அதன் பிறகு புத்தாண்டு அன்று காலையில் சீனர்களின் குபேரனை நறுமண ஊதுவத்திகள் ஏற்றி வைத்து வரவேற்பார்கள்.  தொடர்ந்து வரும் பதினைந்து நாட்களிலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்புண்டு.  ஒவ்வொரு சீன ஆண்டுக்கும் ஒரு விலங்கு அடையாளம் உண்டு. பிறந்திருக்கும் புது வருடம் எருது ஆண்டு. அதை அடிப்படையாகக் கொண்டு சீன ஆரூடம் கணிக்கப்படுகிறது. 

இதை ஒட்டி வழக்கமாக F1 அரங்கில் நடைபெறும் சிங்கே பரேட் (Chingay Parade) எனப்படும் வண்ணமயமான அணிவகுப்பு இவ்வருடம் இணைய வழி கலந்துகொள்ளும் நிகழ்வாகிறது.  நண்பர் கணேஷ்-மாதங்கியின் மகன் கந்தர்வ் இந்த வண்ணங்களின் அணிவகுப்பில் சிவப்பாடை அணிந்து கலந்து கொண்டிருக்கிறான். ஆனால் அதன் பிறகு அந்த ஆடையை வேறெங்கும் அணிந்தால் சற்று போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் உண்டு.




சிங்கப்பூர் ஆற்றில் ஹாங் பாவ் கொண்டாட்டம் 1987-ல் இருந்து நடைபெறுகிறது.  உலோக, காகித, அல்லது கண்ணாடி விளக்குகள் (lantern) ஏற்றி கொண்டாடப்படும். 



வழக்கமாக அலுவலகத்தில் இச்சமயத்தில் விதவிதமான போட்டிகளோடு இது மிக உற்சாகமாக அணைத்துத் துறைகளின் முக்கிய தலைவர்களும், மேலாளர்களும் கலந்து கொள்ளும் விழாவாக இருக்கும். சிங்கை அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எந்த இனத்தவராக இருந்தாலும் சீனப் பாரம்பரிய உடையில் வந்து தலைமை ஏற்றுக் கலந்து கொள்வார். அனைவரும் அன்று சிவப்பு வண்ண உடையிலோ சீனப் பாராம்பரிய உடையிலோ கலந்து கொள்வோம். லோ ஹெய் (lo hei -கலத்தல்) எனப்படும் சடங்கு சிங்கப்பூருக்கே உரிய தனித்த பண்பாடு என்கிறார்கள். இதில் சைவ அசைவ லோ ஹெய்களை அனைவரும் சேர்ந்து கலந்து தயாரிப்பது வழக்கம். அதற்கென குறிக்கப்பட்ட நாளில் நீண்ட மேஜைகளில் இதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் தயாராக இருக்கும். அதற்கான படிப்படியான ஆணைகள் உதவிக் குறிப்புகளை ஒருவர் உரக்க சொல்லுவார். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒவ்வொரு பொருளையும் எடுத்து சேர்க்க வேண்டும், ஒவ்வொரு பொருளௌ சேர்க்கும்போதும் சொல்ல வேண்டிய சீன வார்த்தைகளையும் உரக்க உச்சரிக்க வேண்டும். வளத்தை சேர்க்கும் சால்மன் அல்லது சாஷிமி மீன் (Sashimi) துண்டுகள், அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் பப்ளிமாஸ் பழத்துண்டுகள் (Pomelo), பொக்கிஷங்களை அருளும்  மிளகு மற்றும் ஐந்து வகை மசாலா பொருட்கள், எண்ணை, இளமையை சேர்க்கும் நீளமாக மெலிதாக நூல் போல துருவப்பட்ட கேரட், வெள்ளை மற்றும் பச்சை முள்ளங்கி துருவல்கள், பொன்னையும் வெள்ளியையும் குறிக்கும் வெள்ளெள்ளும் நிலக்கடலையும், தங்கத்தை சேர்க்க பொன் வறுவல் என்றழைக்கப்படும் கோதுமையால் செய்யப்பட்ட மென் தட்டைகள்,  உறவுகளில் குன்றா அன்பை நிறைக்கும் ப்ளம் சாஸ் அனைத்தையும் ஒவ்வொன்றுக்கும் உரிய நீண்ட சீனமொழி வாக்கியங்களைக் உரக்க கூறியபடி குழுமி இருக்கும் அனைவரும் உணவுக்குப் பயன்படும் சாப்ஸ்டிக்-களைக் கொண்டு உயர சுண்டி எரிந்து கலக்க வேண்டும். அதிக உயரம் அதிக வளம் என்று கருதப்படும். அதன் பிறகு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அனைவரும் சிறிய தட்டுகளில் அவற்றை எடுத்து உண்பார்கள். மிக சுவையாக சாட் உணவு வகை போல இருக்கும். இந்த நிகழ்வு முடிந்த அறை, சுத்தம் செய்வதற்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கும். தரையெங்கும் முன்னதாகவே நெகிழி விரிப்புகளும் காகிதங்களும் விரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு யுத்தகளம் போல காட்சியளிக்கும் உணவுக்களம்.        



அலுவலகத்தில் சைவ லோ ஹேய்


இது தவிர அனைவரும் சீனப் பாரம்பரிய உடையணிந்து செல்வது,  ஒவ்வொரு துறையும் பல குழுக்களாகப் பிரிந்து  காய்ஷென் (சீனக் குபேரன்) போல வேடமணிந்து சிறந்த வேடத்துக்குப் பரிசு என்பன போல பல போட்டிகள். அலுவலகத்தில் நான் இத்தனை வருடங்களில் கண்டது குறித்து மட்டும்  மேலும் சில வார்த்தைகள்.


சீனப் புத்தாண்டின் மிக வண்ணமயமான தாளமயமான மற்றொரு விஷயம் சிங்க நடனம் (Lion dance). துணியால் செய்யப்பட வண்ணமயமான ஒரு அலங்கரிக்கப்பட்ட சிங்க உடையை இருவர் சுமந்து ஒவ்வொரு வணிக வளாகத்திலும், அதிலும் ஒவ்வொரு முக்கிய மேலாளரின் அறையிலும் வந்து மேளங்கள் ஒலிக்க, மெல்லத் துவங்கி துரிதமாகும் தாளகதிக்கு ஏற்ப நடனமாடி துள்ளிக்குதித்து அவர்களுக்கு முன் மேஜையில் அல்லது தரையில் குவிக்கப்பட்டிருக்கும் பழங்களை உண்பது போல நடமிடுவர். அனைத்து திசைகளிலும் ஆரஞ்சுப் பழங்களை வீசி எறியும் சிங்கம். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளுக்குள் நம்மூர் பொய்க்கால் குதிரை போல (ஆனால் இவர்களது தலையும் தெரியாது) தாளங்கள் அதிர இவர்கள் ஆடும் அந்நேரம், அரைமணிநேரத்துக்கு காதில் எச்சொல்லும் கேட்க இயலாது. அத்தனை அலுவல் தொடர்பான தொலைபேசி அழைப்புகளும் துண்டிக்கப்பட்டு அனைவரும் எழுந்து கூட்டமாக இதை வேடிக்கை பார்ப்பது வழக்கம். அதுவும் இம்முறை காண இயலாது போகிறது. 





இந்த ஆண்டில் இவை அனைத்தையும் நினைவு கூட்டி இவற்றை எழுதி முடிக்கையில் எலி வெளியேறி எருது  உள்ளே வரும் நேரம் ஆகிவிட்டது.

மீண்டும் நண்பர்கள் அனைவருக்கும் "Gong Xi Fa Cai" 


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 3 - சிராங்கூன் சாலை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 5 - அழகு ஆயிரம்


2 comments: