நாம் அடிக்கடி சென்று வரும் பகுதிகளிலேயே கூட நாம் அதுவரை கண்டிராத அழகுகள் எங்கோ பார்வையும் சித்தமும் சென்று தொடக் காத்திருக்கும். அது போன்ற ஒரு இடம் தான் "கம்போங்க் க்ளாம்" (Kampong Glam). ஒவ்வொரு முறையும் நான் வசிக்கும் கிழக்குப் பகுதியில் இருந்து நகர மையத்துக்கும், லிட்டில் இந்தியாவுக்கும், மைய நூலகத்துக்கும் செல்ல பூகிஸ் (Bugis) பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும். நூற்றுக்கணக்கான முறை அந்த சாலைகளில் பயணம் செய்திருக்கிறேன். இதற்கு அண்டை வீதிகளிலேயே ஒரு உணவகத்திற்கும் நண்பர்களோடு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த அழகிய கம்போங் க்ளாமுக்கு சென்றதேயில்லை.
விக்டோரியா சாலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் ஒரு மிகப் பெரிய புகைப்படக் கருவி வரவேற்கிறது. உலகிலேயே மிகப் பெரிய காமிரா வடிவக் கட்டிடம் என்றது அறிவிப்பு. அது பழமையான புகைப்படக் கருவிகளின் அருங்காட்சியகம், சோலையப்பன் ராமநாதன் மற்றும் அவரது உறவினர் ஸ்ரீதர் ஆகியோர் நடத்தும் மிகப்பெரிய புகைப்படக்கருவிகளின் தொகுப்பு உள்ளே இருக்கிறது என இணையம் சொன்னது. அந்த ரோலே கேமிராவின் லென்ஸ் வழியாக உள்ளே நுழையும் வழி இருக்கிறது, ஆனால் பூட்டியிருந்தது. ஒரு நபர் உள்ளே எட்டிப்பார்க்க முயன்று கொண்டிருந்தார். அவர் நகரும் வழியாகத் தெரியவில்லை, எனவே அவர் காமிரா லென்ஸில் தூசி போல ஒட்டிக் கொண்டிருக்கவே படம் எடுத்துக் கொண்டு அரபு தேசத்துக்குள் நுழைந்தேன்.
2006-ல் இங்கு அருகில் ஒரு பெரிய புல்வெளியில் தரையில் கட்டப்பட்ட ஹீலியம் பலூனில் ஏறி மேலே மிதந்தபடி சிங்கப்பூரை பார்க்கும் வசதி இருந்தது. அப்போது சுற்றிலும் மாமலைச் சிகரங்களுக்கு இடையே பள்ளத்தாக்கில் உள்ள சிற்றூர்களைப் போல இந்த கம்போங் க்ளாம் பகுதியை விண்ணிலிருந்து நோக்கியிருக்கிறேன். மண்ணை விட்டு மெல்ல மெல்ல அசைந்து அந்த மாபெரும் காற்றுக்கொப்புளத்தோடு இணைந்த கூடை போன்ற பகுதியில் நின்றபடி மேலே ஏறுவது நல்ல அனுபவம். பறவைகளைப்போல உணர்வதற்கு மானுடனுக்குக் கிடைக்கும் மிகச் சில தருணங்களில் ஒன்று. 2008-ல் பூகிஸ் ரயில் நிலையத்திட்டம் துவங்கியதும் இந்த பலூன் பறப்பது நின்று போனது.
இது இஸ்லாமிய மக்களுக்கு என அமைக்கப்பட்ட பகுதி. மலேய பண்பாட்டு மையம் இங்குதான் இருக்கிறது. இன்றும் மலேய, அராபிய அடையாளங்களைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் இப்பகுதி தனித்த பண்பாடு கொண்டதாகவே இருக்கிறது.
ஆங்காங்கே தலையில் ஹிஜாப் அணிந்த அழகிய இளம் பெண்களின் வாயிலிருந்து தமிழ் ஒலிப்பது இனிமையான ஆச்சரியம். இப்பகுதியில் பல மலேய தமிழர்கள் வாழ்வதால் இது ஒரு இனிய இன-மொழி-மத-தேசக் கலவை - சிங்கப்பூர் நாட்டின் மலேய பூர்விகம் கொண்ட தமிழ் முஸ்லிம்கள்.
கம்போங் என்றால் மலேய மொழியில் கிராமம். கெளாம் என்பது காயாப்புடை(cajeput) மரத்தின் மலேயப் பெயர். எளிதில் நொறுங்கிவிடக்கூடிய பட்டையைக் கொண்ட இம்மரம் இப்பகுதியில் அதிகம் நிறைந்திருந்தால் இப்பகுதிக்கு இப்பெயர் வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் வெண் குஞ்சம் கொண்ட மரம்(White Bottle Brush Tree) இது. காஜூ புட்டி என்றால் இந்தோனேசிய மொழியில் வெள்ளை மரம் என்று பொருளாம், அதிலிருந்தே காஜிபுட் பெயர் வந்திருக்கிறது. இம்மரத்தில் இருந்து ஒரு வாசனை எண்ணையும் தயாரிக்கிறார்கள்.
வடக்கே ரோச்சார் கால்வாயும் (லிட்டில் இந்தியா அருகே தேக்காவுக்கு பெயர் தந்த அதே கால்வாயின் கிழக்குப்பகுதி), மேற்கே ஓபிர் சாலையும், தெற்கே நிகால் சாலையும்(சன்டெக் சிட்டியின் பின்புறம் வரும் முக்கிய சாலை), கிழக்கே கிராஃபோர்ட் வீதியும் அடங்கிய சிறிய பகுதி. ஹாஜி தெரு, அரபு வீதி, பஸோரா வீதி, பாக்தாத் தெரு, பினாங் தெரு, பஹாங் தெரு, மஸ்கட் தெரு, கந்தஹார் வீதி என மத்தியதரைக்கடல் முதலாக தொடங்கி அரேபிய, பாரசீக நாடுகளில் இருந்து மலேசியா வரை அனைத்து நாடுகளின் நகரங்களையும் நினைவு படுத்தும் தெருக்கள்.
இன்று அரபு சாலை மைய சாலையாக இருக்க, அதன் இணை சாலைகளாக உள்ள பிற அனைத்து சாலைகளும் வந்து சந்திக்கும் மையப் புள்ளியில் சுவர்ண மகுடம் போல மின்னுகிறது மஸ்ஜித் சுல்தான். இது 1824-ல் தெமாஸக்கின்(Temasek) சுல்தானாக இருந்த ஹுசைன் ஷா சுல்தானால் கட்டப்பட்டது. இன்று காணப்படும் பள்ளிவாசல் அதே இடத்தில் 1932-ல் எழுப்பப்பட்டது. ஒரே நேரத்தில் 5000 பேர் தொழக்கூடிய பிரார்த்தனை வளாகம் கொண்டது.
பஸோரா என்பது தென் கிழக்கு ஈராக்கில் இருக்கும் துறைமுக நகரின் பெயர், சிந்துபாதின் நகரம். பஸோரா வீதி முழுவதும் மத்தியதரைக்கடல் உணவு வகைகள் - லெபனான், துருக்கி, சிரியா, மொராக்கோ உணவுகள் கிடைக்கும் உயர்தர உணவகங்கள், வரிசையாக இருக்கின்றன. கொத்திவிடும் கூர்மூக்கு கொண்ட அழகிகளையும், பச்சைக் கண்களும் செதுக்கிய முகவெட்டும் கொண்ட ஆண்களையும் இந்த உணவகங்களில் காண முடிகிறது. ஒவ்வொரு உணவகத்திலிருந்தும் பாலை நில இசை வகுளாபரணமும், மாயாமாளவ கௌளையும் கசிந்து தெருவில் நடப்பவர்களை நனைக்கிறது. இரு புறமும் பாக்கு மற்றும் ஈச்சை மரங்களோடு சிவப்பு நிறக் கற்கள் பாவிய வீதி மசூதியின் பின்புறமாக நீண்டு கிடக்கிறது.
அரபுசாலைப் பகுதி முழுவதும் அந்தக் காலத்தில் ஒரு அராபிய வணிகரின் உடைமையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இப்பகுதியில் சாவக மக்கள் (இந்தோனேசியா ஜாவாவைச் சேர்ந்தவர்கள்) வாழ்ந்ததால் சீன மொழியில் ஜாவானீஸ் சாலை என்ற பெயர் வந்ததாகவும், அங்கேயே மலர்ந்த பலவண்ணப் பூக்களை விற்கும் இடமாக இருந்ததால் தமிழ் மக்களால் பூக்கடை சாலை என்று அழைக்கப்படடதாகவும் குறிப்புகள் இருக்கின்றன. இன்று அரபு சாலை முழுக்கவே கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் பட்டுத் துணிகளும், கம்பளங்களும், பத்தீக் துணிகளும், பாராசீக நறுமணங்களும், துருக்கிய பல வண்ணக் கண்ணாடிக் கைவினைப் பொருட்களும் விற்கும் கடைகள். பறக்கும் கம்பளம் கூடக் கிடைக்கும் போல இருந்தது. வேலைப்பாடுகள் கொண்ட கம்பளங்களில் இருந்து கண்ணை விலக்குவது கடினம்.
இவை இரண்டுமே பலரும் காணும் வழக்கமான தெருக்கள். இவற்றுக்கு அப்பால் உள்ள ஹாஜி லேன் தவறவிடக்கூடாத அழகும் தவறவிடக்கூடிய சிறிய அமைப்பும் கொண்ட நீண்ட தெரு.
இருபுறமும் லிட்டில் இந்தியாவில் பார்த்தது போன்ற இடைவெளியே இல்லாது நெருங்கி நிற்கும் கடைவீடுகள்.
வித்தியாசமான கடைப்பெயர்கள்.
ஆனால் இத்தெருவின், இப்பகுதியின் சிறப்பு சுவரோவியங்கள். மொத்த சுவரையும் மஞ்சளும், பச்சையும், சிவப்பும், நீலமும் கொண்டு விதவிதமாகப் கலைப் படைப்பாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.
அவற்றின் கீழே நின்று தற்படமெடுத்துக் கொள்ள பெருங்கூட்டம். சிங்கப்பூரா க்ளப் சுவற்றில் முகமெல்லாம் சுருக்கங்கள் நிரம்பிய பல முகங்களின் உயிர்சித்திரங்கள்.
இத்தெருவின் இறுதியில் உயர்தர மது விடுதிகளும் இருக்கின்றன. ஜாஸ் இசை இசைக்கப்படும் ப்ளூஜாஸ் க்ளப் நான் சென்ற போது அழகாகப் பூட்டப்பட்டருந்தது!!
மலேசிய பண்பாட்டு மையம் இருக்கும் சுல்தான் கேட் சாலை, சுல்தான் மசூதிக்கு கிழக்கே ஒரு பாரம்பரிய மலேசியக் கட்டிடத்தில் இருக்கிறது. மலேசிய சுல்தான்கள் வாழ்ந்த வீடு பண்பாட்டு அருங்காட்சியகமாகி இருக்கிறது. ரம்ஜான் மாதத்தில் மாலை வேளைகளில் விரதம் முடிக்கும் நேரத்தில் பல வகையான மலேசிய உணவு வகைகள் இங்கே விற்கப்படும். கெடுபட் எனப்படும் தென்னை ஓலைகளில் பின்னப்பட்ட சிறுகூடுகளில் வைத்து நீராவியில் வேக வைக்கப்படும் அரிசி மாவில் செய்த நம்மூர் இலைக் கொழுக்கட்டை போன்ற உணவுகள் சுவையானவை. கம்போங்க் உணவு வகைகளில் மீ சியாம் எனப்படும் இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த குழம்பில் அரிசி இடியாப்பம் சேர்த்த கலவையும், மீ பந்துங் எனப்படும் காரமான நூடுல்ஸ் சூப்பும் புகழ்பெற்றவை. அவ்வளவு காரம் தாங்கும் நா எனக்கில்லை. எனவே அரேபிய காபி குடித்து அந்தப் பகுதியை சுவைத்துக் கொண்டேன்.
கண்கூசும் வெயிலொளியில் சென்றிறங்கி நடக்கத் துவங்கி அரைமணி நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இளமாலையை இளமழை ஒன்று நனைத்தது. பஸோரா சாலை கழுவி விடப்பட்டது போல் பளபளத்தது.
மழையில் நனைந்த ஹாஜி தெருவில் ஆள்நடமாட்டமே இல்லாது ஓவியங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன.
யாருமற்ற சாலையின் ஓவியங்கள் தன்னிருப்பில் கம்பீரமாகத் தெரிந்தன. மனிதன் வழியாக வெளிப்பட்டாலும் கலை மனிதனை விட மிகப் பெரிய ஒன்று. படைத்தவனை விட்டு வெளியேறி அவற்றுக்கென தனி இருப்பு அமைந்து அவனுக்குப் பிறகும் எதையோ சொல்லிக் கொண்டே இருக்கின்றன. தூசும் காலமும் அம்மழையில் கரைந்துவிட துலங்கி வந்த அந்த அரபு வீதிகளில் ஏதோ ஒரு காலத்தில் நடந்து கொண்டிருக்கும் உணர்வு வந்தது.
வீடு செல்லபேருந்தில் ஏறியதும் மீண்டும் ஒரு முறை மத்தியதரைக்கடல் பகுதி உணவுகளை சுவைப்பதற்கும், பட்டுக் கைக்குட்டையும், பத்தீக் முகக்கவசமும் வாங்குவதற்கும் இங்கு வரவேண்டும் என்றெண்ணிக்கொண்டேன்.
I do not miss seeing this place now.
ReplyDeleteமுன்னிரவு நடைப்பயணம் இந்த வீதிகளில்தான் என்றாலும் சுபா உங்க எழுத்தில் காணும்போது இன்னும் புதுமையாகத் தெரிகிறது
ReplyDeleteநன்றி கணேஷ்.
Deleteமுன்னிரவு நடைப்பயணம் இந்த வீதிகளில்தான் என்றாலும் சுபா உங்க எழுத்தில் காணும்போது இன்னும் புதுமையாகத் தெரிகிறது
ReplyDeleteThanks for pushing me for this trip😊. Engine is little old so takes time to start!! Great place, will visit again for more relaxed and detailed day trip...
ReplyDelete