Saturday, June 6, 2020

காத்திருத்தல்


ஜி.ராமனாதன் இசைக்கே உரிய தபலா தாளத்துடன் பாடல் தொடங்குகிறது. பி. லீலாவின் கணீர் குரலில் உத்தமபுத்திரனில்(1958) இடம்பெற்ற இப்பாடல் அனைவரையும் காத்திருப்பவனின் காத்திருப்பு பற்றியது.



பத்மினியின் நளினமான அசைவுகளுடன் நடனம் துவங்குகிறது. பின்னர் கண்ணனாக லலிதா வந்திணைந்து கொள்கிறார். சுந்தரம் வாத்தியார் எழுதிய பாடல் வரிகள்.

கண்ணன் காத்திருக்கிறான், குழலிசைக்கிறான், குறும்பு செய்கிறான், இசை கேட்கிறான், தாவி வந்து ஆவியைப் பற்றுகிறான். அவள் வீணையாகிறாள், அவன் பற்றும் தயிர்க்குடம் ஆகிறாள், அவனே ஆகிறாள்.

"கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக்
கடைக்கணித்து ஆங்கே ஒருத்திதன்பால்
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு
உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப்
புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை" என்பது பெரியாழ்வார் திருமொழி.

கோபியர் கொஞ்சும் சல்லாபன் - பலர் அவனுக்காகக் காத்திருக்க அவன் தனக்காகவென்றே காத்திருக்கிறான் என்ற பெண்மையின் பேதைமையில் திளைக்கிறாள். கனிந்து உருகிக் கண்ணுறங்காமல் காத்திருக்கும் தன்னுடைய நோயையும் அவன் மேலேற்றி அவனுக்காக உருகுகிறாள்.

காற்று தொட்டுவிட ஆடும் மலர்க்கிளையென கண்ணன் நினைவு தொட்டுவிட ஆடுகிறாள். அவள் ஆடும் அரங்கம் அரசனுடையதல்ல, அவளுடன் அவன் மட்டுமே உள்ள அந்தரங்கம்.

"காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென்மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் - காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்

தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்

வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணைஇசைக்கச் சொல்லி வேண்டுவான் - சிலநேரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்

பாடுவான்... அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் - வந்து

காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன் !"

‐------

விழிகள் காணும் இவ்வாடலுக்குப் பின் இருக்கும் விழியறியாப் பேராடலைக் காண ஜி.ராமநாதனின் இசை கைபிடித்து அழைத்துச் செல்கிறது. "கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து" என்ற வரியை இரண்டாவது முறை பாடிய பிறகு "காத்திருப்பான்" என்ற பதம் வேறொரு சங்கதியில் அமைய மனம் மேலெழும்பி விடுகிறது. "வேய்..ங்குழலிசை" அமுதூட்டும் என்ற நெளிவில் அந்தக் காற்றாகிக் குழலை நிறைக்கிறது. இருவரும் இயைந்து ஒன்றை ஒன்று நிரப்பும் நடன அசைவுகளின் ஒன்றிணைவின் போது அதில் இல்லாமலாகிறது தன்னுணர்வு. தாவிப் பிடிப்பான் என்ற தாவலில், வீணை இசைக்கச் சொல்லி என்ற நடனஅசைவில், கண்ணன் கழுத்தணிந்த மாலையாகி துள்ளுகிறது மனம்.
பூத்தவிழ் மலர், முங்கியெழும் ஆறு, வீணைத் தந்திகளில் உறையும் நாதம் அனைத்திலும் அவன் ஆடல்.

இருத்தல் இன்மை என்ற இருமை அற்ற ஓரிடத்தில் காத்திருப்பான் கமலக்கண்ணன் - கருநீலக்கடல்வண்ணன். ஆறுகள் அனைத்தும் அங்கு சென்று சேர்வதற்காகவே மலை விட்டிறங்குகின்றன, வழி தேடி அலைகின்றன, பல மலைகள் கடந்து பெரு வழி நடந்து அவனைக் கண்டடைகின்றன. வழியில்தான் அத்தனை வேகமும், சுளிவும், சுழலும், பொழிதலும், விரிந்து பரவி, ஒடுங்கி அடங்குதலும். அதுவே நடனம் அதுவே இசை. பயணமே இலக்கின் பயனாகிவரும் இப்பெருவாழ்வு.

அவன் ஆடும் தீராப் பேராடல் ஒன்றில் ஆட்படுவதே எல்லா ஆடலும் என்ற அறிதல் தரும் இன்பம் பாடல் முடிந்து வெகுநேரம் மனதில் எஞ்சுகின்றது.

இப்பாடல் ஒரு அழகான ராகமாலிகை - சாரமதியில் தொடங்கி, ஜோன்புரி , திலங் என்று பயணித்து 'வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்' என்ற வரியில் மோகனம் ஆகிறது. இப்பாடலின் பாவத்துக்குரிய ராகத் தேர்வு, பொருத்தமான இசைக் கருவிகளின் பயன்பாடு, பத்மினி-லலிதாவின் நடனம் (பி.எஸ். கோபாலகிருஷ்ணன் நடன அமைப்பு) பி.லீலாவின் குரல், அனைத்தையும் ஒன்றினைக்கும் ஜி.ராமனாதனின் இசை எல்லாம் சேர்ந்து தன்னிலை மறக்கச் செய்கிறது. வெறும் பாடலாகக் கேட்கும் அனுபவத்தை விட நடனத்தோடு இப்பாடல் தரும் காட்சியனுபவமே கூடுதல் சிறப்பு.

கண்ணனைப் பற்றித்தான் எத்தனையெத்தனை காவியங்கள், பாடல்கள். ஆழ்வார்கள் தொடங்கி பாரதி, கண்ணதாசன், வாலி வரை தமிழிலேயே கண்ணனைப் பாடிய கவிஞர்களின் நிரை. இந்திய மனம் தனது மகத்தான கற்பனைகள் அனைத்தையும் கண்ணன் மேல் சூடி அழகு பார்த்திருக்கிறது.
எங்கும் நிறைந்த ஒன்று குழந்தையென வருகிறது, குறும்பு செய்கிறது, கன்னியரின் கனவுகளை நிறைக்கிறது, அன்னையரின் அமுதம் சுரக்கச் செய்கிறது, களம் நின்று அறம் காண்கிறது, ஆழி மீது அறிதுயில் கொள்கிறது, ஆட்டுவிக்கிறது, ஆட்கொள்கிறது. என்றுமெனக் காத்து நிற்கிறது.

எனக்குப் பிடித்த கண்ணன் பாடல்கள் பல இருக்கின்றன. அக்கடலின் ஒரு துளி இன்றைய தேர்வு.

https://youtu.be/aXM8E7zud8E

No comments:

Post a Comment