Monday, June 8, 2020

கதை விரியும் காலம்

மனம் கவர்ந்த இசை வரிசையில் இன்று வரும் பாடல், இந்த ஒரு பாடலுக்காக மட்டுமன்றி அந்தப் பாடகருக்காக, அந்த முன்னோடி கலைஞருக்கான சமர்ப்பணமாக என்னுடைய தேர்வு.

அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகரான புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா (P. U. Chinnappa). அவரது பல பாடல்கள் - பார்த்தால் பசி தீரும் (மங்கையர்க்கரசி), காதல் கனிரசமே (மங்கையர்க்கரசி), சாரசம் (கிருஷ்ண பக்தி), நடையலங்காரம் (குபேர குசேலா), நமக்கினி பயமேது (ஜகதலப்பிராதபன்), எல்லோரும் நல்லவரே (கிருஷ்ணபக்தி) போன்ற பாடல்கள் அனைத்தும் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எம்.கே.டியுடைய பாடல்களும் அப்பாவுக்கு பிடிக்குமென்றாலும் பி.யூ.சின்னப்பாவின் பல்துறை திறமையை அப்பா மிகவும் விரும்பி ரசிப்பார்கள். பி.யூ.சி நடித்த உத்தம புத்திரன் தமிழிலேயே முதல் முறையாக இரட்டையர் வேடம் கொண்ட படம். பின்னர் ஜகதலப்பிரதாபனில் ஐவராக ஒரு பாடல் காட்சியில் சின்னப்பா தோன்றுவார். இதுவே திருவிளையாடல் படத்தில் வரும் 'பாட்டும் நானே' பாடலுக்கு முன்னோடி.

"சாரசம் வசீகர கண்கள் சீர்தரும்" பாடல் ஒரு முறை வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்க, 'இது என்ன மொழிப் பாடல் அப்பா?' என்று விடுமுறைக்கு வந்திருந்த அண்ணன் கேட்டார். அன்றிருந்த மொழியும், இசை முறையும் இன்று பலரும் புரிந்து கொள்ளவியலாது விலகி வெகுதூரம் சென்றிருக்கிறோம். எனில் அவற்றை அறிந்து கொள்வது நமது திரையிசைப் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மிக முக்கியமானது. அந்தக் காலகட்டத்தின் முக்கியமான பதிவு இப்பாடல்கள்.

மேலே சொன்ன அனைத்துப் பாடல்களுமே ராகங்களின் அடிப்படையில் அமைந்தவை. அதிலும் மங்கையர்க்கரசி படத்தில் வரும் 'காதல் கனிரசமே' பாடல் மதுரை மணி ஐயர் பாடி மிகவும் புகழ்பெற்ற 'நாத தனுமனிஷம்' என்ற தியாகையர் கிருதியின் அதே மெட்டில் அமைந்தது. சித்தரஞ்சனி என்னும் நிஷாதாந்தி(நிஷாதம்+அந்தி) ராகத்தை எடுத்துக் கொண்டு விரிவான கற்பனா ஸ்வரங்களோடு ஒரு இசைக் கச்சேரியே புரிந்திருக்கிறார் சின்னப்பா. இந்த ராகத்தில் நிஷாதத்துக்கு மேல் பாடக்கூடாது. எனவே மந்த்ர ஸ்தாயியும் தார ஸ்தாயியும் கிடையாது. மத்திய ஸ்தாயி நிஷாதத்துக்குள்ளேயே அனைத்து கற்பனா ஸ்வரங்களும் பாடப்பட வேண்டும். மதுரை மணி ஐயரின் பல கச்சேரிகளின் நாததனுமனிஷம் கேட்டிருக்கிறேன். வேறு பலர் பாடியும் கேட்டதுண்டு. எனில் இந்த ராகத்தில் சாத்தியமான மிக விரிவான ஒரு இசைக்கோர்வையை இந்தத் திரைப்பாடலில் சின்னப்பா பாடியிருக்கிறார்.

1949-ல் வெளிவந்த கிருஷ்ணபக்தி படத்திலிருந்து ஒரு பாடல் இன்றைய தேர்வு.

பாடல்:

https://youtu.be/pl0SXSfceoo

இது கதாகாலட்சேபம் [கதை+காலம்+ஷேபம் (செலவிடுதல் சமஸ்கிருதச் சொல்) = கதை விரியும் காலம் ] என்ற கலையை திரையிசையில் ஆவணப்படுத்திய மிக முக்கியமான பாடல்.கோவில்களிலும், கச்சேரி மேடைகளிலும் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த பல ராகங்களை வீடுகளுக்கு கொண்டுவந்து, கட்டற்ற மதயானையை பழக்கி வீட்டு முற்றத்தில் நிறுத்திய முன்னோடி இசைக் கலைஞர்களுக்கு ஒரு வணக்கமாக இந்தப் பாடல் இன்றைய தெரிவு. கதாகாலட்சேபம் என்பது ஹரிகதை, காலட்சேபம் என்றும் குறிப்பிடப் படுகிறது. காவியங்களையும் புராணங்களையும் இசை மற்றும் உரைநடையாகக் கதை சொல்லும் முறை. கதைகளிடையே பல துணைக்கதைகளைக் கூறுதல், கர்னாடக சங்கீத ராகங்களில் அமைந்த புகழ்பெற்ற கீர்த்தனை வரிகளையோ அல்லது அந்த ராகத்தில் வேறு பதங்களையோ அமைத்துப் பாடுதல், பல வகைப்பட்ட இசை வடிவங்களைக் கையாளுதல், தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளின் பாடல்களைப் பாடுவது, சுவாரஸ்யமாக நிகழ்வினைக் கொண்டு செல்லும் குரல் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உடல்மொழி என ஒரு நிகழ்த்துகலையாகவே கதாகாலட்சேபம் இருந்திருக்கிறது. இவற்றிலேயே கதாபிரசங்கம், பிரவசனம் போன்ற மேலும் சில வகைகளும் இருக்கின்றன.

அப்பாவின் இளமைப் பருவத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலை அடுத்த வீதியிலேயே வீடு. அங்கு நடைபெற்ற பல காலட்சேப நிகழ்ச்சிகள் வழியாகவே மகாபாரதம் முழுவதும் அறிந்ததாக அப்பா சொல்வார்கள். மராட்டிய மண்ணில் ராமாயண மகாபாரதக் கதைகள் இவ்வண்ணம் கூறப்பட்டு தஞ்சை மராட்டிய மன்னர்கள் வழியே இங்கு தமிழகத்துக்கு வந்ததாக பேராசிரியர் அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.hindutamil.in/news/literature/95192--3.html

மேலும் விரிவான சில கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன

http://www.carnatica.net/harikatha1.htm

கிருஷ்ண பக்தியில் இடம்பெற்ற கதாகாலட்சேபப் பாடலை நண்பர் கணேஷுடைய தந்தை ஒரு முறை வரிகளை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டார்.  இன்று இணையத்தில் கிடைப்பது அப்பாடலின் முழு வடிவமன்று. அவரிடம் முழுமையான வடிவத்தின் ஒலித்தட்டு இருந்தது. மூன்று ட்ராக்குகள் நீளமுள்ள பாடல் அது. அதைக் கேட்டு எழுத முற்பட்ட போதுதான் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு இதன் சுவையும் செறிவும் தெரிந்தது. இணையத்தில் உள்ள படமாக்கப்பட்ட பாடலுக்கும் ஒலித்தட்டு வடிவத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் ஒலித்தட்டைக் கேட்டு எழுதியதையே இணைத்திருக்கிறேன். அதன் காணொளி வடிவத்தையே இணைத்திருக்கிறேன்.



பாடல் 'ஸர்வத்ர கிருஷ்ண நாம சங்கீர்த்தனம்' என்று மோகனத்தில் தொடங்குகிறது. 'பூவையர் கற்பின் பெருமை' எனத் தொடங்கும் பகுதி கமாஸ் ராகத்தில் அமைந்தது. அதன் சொற்கட்டும், பாடல் சங்கதிகளும் வெவ்வேறு நடையும், மிக செறிவான, அதே நேரம் துள்ளலான பகுதி.



இதில் கதையின் நாயகன் பக்திமான் வேடம் பூண்ட வேடதாரி பாகவதர். கதை கேட்க வரும் ஒரு அழகிய தேவதாசியைப் பார்த்து அவள் அழகில் மயங்கி அவளுக்கு வலை விரிக்கிறார். அதற்கான அனைத்து சொல் விளையாட்டுக்களையும் இப்பாடலில் நிகழ்த்துவார். அதற்கென்றே கேள்விகளைக் கேட்க சொல்லித் தன் சீடனை தயார்படுத்துகிறார். பகவான் நாம சங்கீர்த்தனையில் பக்த கோடிகள் மெய்மறந்திருக்க தனியாவர்த்தனத்தின் போது அங்கவஸ்திரத்தால் திரையிட்டு குடம் நிறைய பால் குடிக்கிறார். மிகவும் சீண்டக்கூடிய ஒரு பகுதியை அனாயாசமாகப் படமாக்கியிருக்கிறார்கள். இப்பாடல் முழுமையாக ஒரே முறையில்(single take) அவர் பாடி நடித்து படமாக்கப்பட்டதாக ஒரு செய்தியும் இருக்கிறது.



கேதாரம் ராகத்தில் அமைந்த 'மறுமுறை நீ இந்த' சரணம் தொடங்குகிறது. மரா மரா என்று சொல்லச் சொல்ல ராமா என்றாவது போல தாசீ தாசீ என்ற சொல்ல சீதா சீதா என்றாகுமென்று அடுத்த சரணம் கல்யாணியில் தொடங்குகிறார். பிறகு காபி (செங்கமலம் என்ற), சிந்து பைரவி (சீரமைத்த தமிழ்ப்பாட்டின்), ஜோன்புரி (கலையிலும் அழகிலும்) என்று வேறு வேறு ராகங்களில் உலவி சுருட்டி ராகத்தில் சுபமங்களம் பாடி முடிக்கிறார். இதில் 'சீரமைத்த தமிழ்ப்பாட்டின்' அதிவேகமான சொற்பிரயோகங்கள், எழுதுவதற்கு பல முறை கேட்க வேண்டியிருந்தது.

இதே படத்தில் இடம் பெற்ற 'சாரசம் வசீகரக் கண்கள்', 'பேச வெட்கம் ஏனோ', கலைமகள் தேவகுமாரி - பாடல்களும் ராகமாலிகையில் அமைந்தவைதான்.

இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் உடுமலை நாராயண கவியின் இவ்வரிகளை ஒருமுறையேனும் முழுமையாகக் கேட்டுப் பாருங்கள்.

இப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற பாடல்கள்:

1. காதல் கனிரசமே (மங்கையர்க்கரசி)
https://youtu.be/NcZagAqgx9k

2. சாரசம் (கிருஷ்ண பக்தி)
https://youtu.be/4EM0z0T8GAI

3. நமக்கினி பயமேது (ஜகதலப்பிராதபன்)
https://youtu.be/nb7R5X95Snc

4. நடையலங்காரம் (குபேர குசேலா)
https://youtu.be/PCUfzYXoYMY

5. எல்லோரும் நல்லவரே (கிருஷ்ணபக்தி)
https://youtu.be/pLcSeAnZD3M

6. பார்த்தால் பசி தீரும்(மங்கையர்க்கரசி)
https://youtu.be/Uyr_uzdVy0c



No comments:

Post a Comment