Sunday, June 7, 2020

நினைவுகளின் இசை

சில திரைப்பாடல்கள் அதன் சொற்களால் சாகாவரம் பெறுவதுண்டு. இசையமைப்பால், பாடகரின் குரலால், நடிகரின் நடிப்பால், படமாக்கப்பட்ட விதத்தால் என்று ஒரு பாடலை நாம் விரும்புவதற்கு எத்தனையோ காரணிகள். எனில் என்றும் இனியவை என உள்ள பல பாடல்கள் அவற்றோடு இணைந்த பழைய நினைவுகளால் இனிப்பவையே. அப்பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் முன்னெப்போதோ கேட்ட பொழுது நிகழ்ந்தவை, உடன் இருந்த நபர், அன்றிருந்த மனநிலை அல்லது அப்போது கண்ணில் பட்ட காட்சியோ, நுகர்ந்த வாசனையோ கூட நினைவில் வரும்.


சிறுவயதில் வீட்டில் வானொலி அதிகாலை முதலே தொடங்கி விடும். அதிகாலை மங்கல இசை தொடங்கி, முதல் செய்தி வாசிப்பு, கர்நாடக இசை நிகழ்ச்சிகள், பக்திப் பாடல்கள், இடையிடையே பல நிலையங்களில் செய்திகள், செய்திச் சுருக்கங்கள் நடுநடுவே நான்கைந்து திரைப்படப்பாடல்கள், என காலை நேரத்தில் பள்ளி கிளம்புவது வரை ரேடியோ ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.அப்பா அலுவலகம் கிளம்பும் போது அமைதியாகிவிடும். அந்த ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ அப்பா மட்டுமே கையாளும் ஒன்றாகவே இருந்தது. அம்மா கூட அதைத் தொட்டு நினைவில்லை. தொலைக்காட்சி வந்த பிறகும் கூட வானொலியில் பாடல் கேட்பதற்கான ஆசை அப்படியேதான் இருந்தது. பல நேரங்களில் புதிய பாடல் பாடத் தொடங்கியதுமே அப்பா அதை மாற்றி விடுவதோ அல்லது வானொலியை நிறுத்தி விடுவதோ நடக்கும். ஆனால் அப்பா விரும்பிக் கேட்கும் அனைத்துப் பாடல்களும் என்னுடைய ரசனைத் தேர்விலும் இடம்பெற்றுவிட்டதால் எந்தப் பாடல் வைத்தாலும் மகிழ்ச்சிதான்.

விவ்த்பாரதியின் தொடக்க இசை, 'ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய் வானிலை மோசமாக இருக்கும் நாட்களில் கரகரவென வரும் நிக்ழ்ச்சிகள் என வானொலி நிகழ்ச்சிகளோடு கலந்ததே பள்ளி நாட்களின் நினைவுகள்

அப்பா பல நேரம் ரயில், பேருந்து பயணங்களிலும் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவோடுதான் பயணம் செய்வார்கள். வேலை மாற்றலாகி அசாமில் சிலகாலம் இருந்த போது சென்னை வானொலியின் தென்கிழக்காசிய சேவை மட்டுமே அங்கு தமிழ் கேட்க ஒரே வழி என்று அப்பா சொன்னது நினைவிருக்கிறது. புதிய இடத்தின் வசதிக் குறைவுகளில் வானொலி கேட்க இயலாததும் சேர்ந்திருந்தது.

எட்டாவது படிக்கும் போது முதல் முறையாக நானாக ட்யூன் செய்து சிலோன் ரேடியோவுக்கு மாற்றி வைத்த போது அப்பா ஒன்றும் சொல்லவில்லை எனக் கண்டு கொண்டேன். செய்தி நேரமாக அல்லாதிருந்தால் தடையில்லை என்பது புரிந்ததும் வானொலியை இறுகப் பற்றிக் கொண்டேன். அன்று முதல், பள்ளி நேரம், படித்த நேரம் போக கிடைத்த நேரமெல்லாம் வானொலிக்காயிற்று. அவற்றுள் அதிகமும் விரும்பிக் கேட்டது இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் என்ற அறிவிப்போடு வரும் சிலோன் ரேடியோ. திரையிசைப் பாடல்களை அத்தனை விதமாக வழங்க முடியுமென்பதே பெருவியப்புதான். பழைய பாடல்கள், ஒரே ராகத்திலான பாடல்கள், ஒவ்வொரு பாடலோடும் தொடர்புடைய அரிய தகவல்களை சொல்லி அதன் பிறகு பாடல்கள் என விதம்விதமாக தொகுப்புகள். வானொலியில் பாடல்களை அடிக்கடி விரும்பிக் கேட்கும் பல நேயர்களின் பெயர்கள் - ராஜதானிக்கோட்டை சித்தன், மலர்க்கொடி, யாழ்ப்பாணம் தணிகை வேலன், மட்டக்களப்பு சுபாஷிணி, அம்மம்மா, அப்பப்பா என்ற உறவுகளின் வரிசை கூட இன்றும் மனதிலிருக்கிறது. சில சமயம் நாற்பது ஐம்பது நொடிகள் கூட பெயர்ப் பட்டியல் நீளும். இசைப்பூங்கொத்து,
பொங்கும் பூம்புனல், நெஞ்சில் நிறைந்தவை, இசையும் கதையும், இரவின் மடியில் என நினைவில் நிற்கும் பல நிகழ்ச்சிகள்.



வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே (பிரேம பாசம்), எங்குமே ஆனந்தம் (பலே ராமன்), மானும் மயிலும் ஆடும் சோலை (அபூர்வ சகோதரர்கள்), ஜாலி லைஃப் ஜாலி லைஃப் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி), சின்னப் பெண்ணான போதிலே (ஆரவல்லி) போன்ற
பல அரிய பழைய பாடல்கள் இலங்கை வானொலி நிலையத்தில் மட்டுமே கேட்டவை.

அப்படி வானொலியின் நினைவுகளால் இனிக்கும் ஒரு பாடல் 1982-ல் வெளிவந்த தணியாத தாகம் என்ற படத்தில் ஏ.ஏ.ராஜ் என்ற இசையமைப்பாளர் இசையில் வந்த "பூவே நீ யார் சொல்லி" என்ற பாடல்.

அதிகம் கவனம் பெறாது போன இந்த ஏ.ஏ.ராஜ் என்ற இசையமைப்பாளர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சில காலம் முன்னர் எழுதிய பதிவு.
https://m.jeyamohan.in/42900/#.Xty3b1PmidM

ஜானகியும் மலேசியா வாசுதேவனும் மாற்றி மாற்றி பூ....வே நீ என்ற வார்த்தைகளில் நிற்கும் போது பூவில் நின்றாடும் காற்றென ஒரு முறையும், பூவில் சிக்கிய சிறுவண்டின் சிறகடிப்பென ஒரு முறையும், அந்தரத்தில் நின்று தேன் அருந்தும் தேன்சிட்டின் சிறகடிப்பென ஒரு முறையும், மலர்மீது தெளித்த சிறுதூறலென ஒரு முறையும் ஒலிக்கிறது. பாடல் அமைப்பு, இடையே ஒலிக்கும் சிதார் இசை, அனைத்துமே இன்றும் மிகப் புதிதாக இருக்கிறது. அனுதினம் பூத்தாலும் புதியதெனவே தோன்றும் மலர்போல.

யார் சொல்லி யாருக்காக மலர்கின்றன இசையும் கவியும் மலர்களும்!!


https://youtu.be/rcFVgGJL0qg

No comments:

Post a Comment