Thursday, April 30, 2015

ஜனனீ ஜ்வாலாமுகீ

தாதையர் பெயர் மருவிய
கோதையர் இருவரும்
ஜனகன் புகழ் ஜானகி
துருபத மகள் திரௌபதி

புவியன்ன பொறை உடையாள்
புவியில் தோற்றம்..
எரியனைய திறன் உடையாள்
எரியில் ஜனனம்..

மானுட மனத்தின் கறையைக்  கழுவ
வான்வரை வையக நெருப்பு தழுவ
இழிசொல் நீக்க
இருமுறை தீபுகென
மன்னவன் சொல் விதைத்தது தணல்
அவள் மாட்சி கூறி எழுந்தது கனல்

இவளோ தழலென தோன்றிய கமலி
கனலில் தோன்றியமா பாரதக் கனலி,
காளி..கிருஷ்ணை..பாஞ்சாலி..திரௌபதி
கண்ணீர் தாகம் தணிக்க அருந்தினள் குருதி

அவள் எரியை எரித்த புவிமகள்
இவள் புவியை எரித்த எரிமகள்
முன்னவள் கண்ணீரில் கனன்ற அக்னி
பின்னவளைப் பெற்றெடுத்ததோ?

அன்றோர் பொறுமை தீ குளித்தது
அவள் பொறை கண்டு தீ குளிர்ந்தது
யுகங்கள் தாண்டி செந்தழல் விளைந்தது
தீயிலே பிறந்த தீ தீமையைக் களைந்தது

நிலத்தடி அழுத்தம் ஆண்டுகள் தாங்கக்
கரியும் ஆகும் ஒளிமிகு வைரம்.
எத்துணை வலியும் நேரெதிர் நோக்க
வலிமையாய் மாறும் வல்லமை சேரும். 

Thursday, April 23, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - பாரதி

"நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன?" என்று கேட்டதற்கு கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் தானாக உணரும் வண்ணம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் எழுத்தாளர் சுஜாதா. சில கவிதைகள் எனக்குப்  புரியவில்லையே என்று சக நண்பர் வினவியபோது, அப்படியென்றால் அது உங்களைப் பொறுத்தவரை நல்ல கவிதையல்ல என்ற குறிப்பிட்டார். நல்ல கவிதை என்பது தனிமனிதன் சார்ந்த ரசனை/வாசிப்பனுபவம் என்ற சுஜாதாவின் கருத்து நியாயமாகப் படுகிறது.

இன்றைய நாளிதழ்களிலும் இணையத்திலும் வெளிவரும் காதலியின் தும்மல் விக்கல் குறித்த கவிதைகளுக்கிடையே unwritten lines இருக்கலாம், ரசிக்க நமக்கு முதிர்ச்சி போதவில்லை போலும். இப்படிப்பட்ட காளான் கவிஞர்களிடம் தமிழ்க் கவிதை படும் பாடு தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?

தமிழின் தகைமை முழுதாய்ப் புரியும் முன்னரே பள்ளிப்பிராயத்தில், தன் கவிதைகள் வாயிலாக என் உள்ளம் கவர் கள்வன் பாரதி. பலருக்கும் அப்படியே. அனைவரும் பாடங்கள் வழி கற்ற பாப்பாப் பாட்டைத் தவிர வீட்டில் அனுதினம் பாடிய 'முருகா முருகா' வழி அறிமுகம். மேற்பார்வைக்கு வெறும் பக்திப்பாடலாய்த் தோற்றமளிக்கும் இப்பாடலுக்குள் நுண்ணிய வரங்கள் கேட்டிருப்பான்.
"அடியார் பலர் இங்கு உளரே -
அவரை  விடுவித்தருள்வாய்" என  விடுதலை கேட்கும் அந்த வரிகள் மாயையிலிருந்து, அறியாமையிலிருந்து, அகங்காரத்திலிருந்து என பலவிதமான அடிமைத்தளைகளில் இருந்து கேட்பதோடு அன்று அந்நியரிடம் அடிமைப்பட்டிருந்த அனைவருக்காகவும் கேட்ட வரம் அது.

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பாட்டியின் (தாத்தாவின் அம்மா) மறைவையொட்டி பெருங்குடை விரித்த கல்லாலமர விழுதுகளென அனைவரும் பலதினங்கள் எங்கள் ஊரானஅம்மைநகரில் கூடியிருந்த நாட்களில் ஒரு நாள்; நம் மின்சார வாரியம் கடைக்கண் மூடியிருந்த ஒரு மாலையில், பிள்ளைகள் அனைவரையும் கட்டி மேய்க்கும் பொறுப்பேற்ற என் தமக்கை பாடலும் ஆடலுமாய் சொல்லிக் கொடுத்த 'காணி நிலம் வேண்டும்', பாரதி மேல் காதலேற்படுத்திய முதற்பாடல். சில நாட்களில், மாமா வீட்டில் பாரதியார் கவிதைகள் புத்தகம் பார்த்து மயங்கி நின்றபோது, மாமா பாரதி குறித்துக் கூறிய வார்த்தைகள் பசுமரத்தாணியாக மனதில் பதிந்தது.

முதல் முறை "காணி நிலம் வேண்டும்" கேட்ட பொழுதில் தோன்றிய அகக்காட்சி அவ்வயதுக்கு உரியதாய் இருந்தது. வெவ்வேறு காலகட்டத்தில் நினைக்கும்தோறும் வேறு வேறு உருவகங்கள். (அந்தப் பாடலைக் கீழே இணைத்திருக்கிறேன்)

கலையெனப்படுவது யாதெனக் கேட்பின் ரசிகனின் மனவளத்திற்கேற்ப கற்பனாசக்தியின் எல்லைகளுக்கேற்ப விரியும் பாங்குடையது எனலாம். சிறந்த கலை ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு உருப்பெறும். சில மிகச்சிறந்த புத்தகங்கள் திரைப்படமாக வரும்போது, புத்தகம் அளவு சிறப்பாக இல்லை எனக் கருதப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இன்று நாம் உடல் நலம் தொலைத்து, தொலைதூரம் திரிந்தலைந்து வாழ்வின் பெருநோக்கங்களில் ஒன்றாய் ஊர்க்கோடியில் வாங்கும் 3BHK வீடு பேறு அல்ல பாரதி கேட்டது.  தனது வேண்டுதலை ஓர் அழகிய காட்சியாக நம் மனக்கண் முன் விரிக்கிறான். "காணி நிலம்" (லௌகீகமாய் practicalஆகக்  கணக்கு போடவேண்டுமா - 1 காணி 132 சென்ட் அல்லது 1.32 ஏக்கர் - இன்றிருந்தால் shopping mall + multiplex கட்டிவிடலாம்.) - அவனும் அதில் ஒரு மாளிகையை கட்டித் தரும்படி கேட்கிறான் பராசக்தியிடம்.  அருகே ஒரு கேணி - இந்நீர் நிறைந்தூறும் கேணியருகே தென்னை மரங்கள் ஒன்றிரண்டல்ல - பத்து பன்னிரண்டு.

என்ன ஒரு வசந்தமான கோரிக்கை - தென்னங்காற்றும் நிலவொளியும்  நிறையும் வீடு. பகல் முழுதும் உழைத்த களைப்புத்தீர இரவில் அமைதி கொள்ள, சித்தம் மகிழ்ந்திட முத்துச்சுடரொளியாய் நிலவு முகம் காட்டும் முற்றம். வானையும் நிலவையும் வாழ்வில் தொலைத்த நமக்கு இன்று இந்த காட்சியைக் கண்முன் கொண்டு வருமளவேனும் நினைவில் இவை இருக்கிறதா? கத்தும் குயில் - தொலைவில் இருக்கும் தன் துணையை அழைக்கும் குயிலின் குரல் கூவலாக இருக்காது கத்துவது போல்தான் தொனிக்கும், அந்தக் குயிலின் குரல் காதில் விழவேண்டும்.

இங்கு சங்க இலக்கியங்கள் போல அந்த நிலப்பரப்புக்கு உரிய மரங்களையும் பறவைகளையும் பாடலில் கொணர்ந்து பரிபூரணமாக காட்சியாய் கண்முன் விரிக்கிறான். பாட்டுக் கலந்திடவே பத்தினிப் பெண் - மகாகவிஞன் அல்லவா - பாட்டை ரசிக்கும் முதல் ரசிகையாய் ஒரு பெண். அவர்கள் கூட்டுக் களியினிலே பிறக்கும் உன்னதமான கவிதைகள். இந்த உன்னதங்கள் கலைந்துவிடாதிருக்கக் காவலாய் பராசக்தியை அழைக்கிறான். இவையனைத்தும் நீ தந்துவிட, என் பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடல் வேண்டும் என்கிறான். அவனது கவிதைகளுக்காக பராசக்தி இதற்கு மேலும் தரலாம்.


"வீடென்று எதை சொல்வீர்
அது அல்ல எனது வீடு" - மாலன் கவிதை நினைவுக்கு வரும் ஒவ்வொரு முறையும். பாரதியின் தாக்கம் இல்லாத நல்ல தமிழ்க்  கவிஞர்கள் இல்லை எனலாம்.

இன்னொரு தளத்தில் பார்த்தால் துய்ய நிறத்தினதாய் பராசக்தி கட்டும் மாளிகை அவனது ஆன்மாவுக்கானது.கீழ்மைகள் நிறைந்த இவ்வுலக வாழ்விலிருந்து தனித்து ஏகாந்தமாய் அவனிருக்க ஓர் இல்லம்.அனுதினம் அல்லலுற்று அவதியுறும் சித்தத்தை குளிரவைக்கும் தென்றல், கற்பனைகளின் ஊற்றுக்கண்ணாய் உடனிருக்க சகி. வையம் முழுதையும் காத்திட விழையும் அவன் ஆவலில் பிறக்கும் கவிகள். என்ன ஒரு வரம்!!

பாடத்திட்டம் தாண்டி திரைப்பாடல்கள் வழி மேலும் சில பாடல்கள் அறிமுகம். மணமகள் படத்தில் இடம்பெற்ற "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" - வில்
"உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடீ
மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ" எனும் வரிகளை கண்ணீர் துளிர்க்காமல் கேட்க முடிவதில்லை. மேலும் பாடலின் சரணம் கண்ணம்மாவிடம் சரணடையும் இடம் - "உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ " - கேட்கும் போதெல்லாம் மெய்சிலிர்க்கும் பாடல் அனுபவம்.

'பாரதி' - "எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்" என்று எழுத்தை வணங்கிய மகாகவி.
பிரம்மன் பன்னிரண்டு சரியாய் பயிலாப் பிழையால், பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் குறிஞ்சிப்பூ.

பாப்பாப் பாட்டு முதல் பரசிவ வெள்ளம் வரை பாய்ந்த மாகங்கை. விரிசடை பாய்ந்து மண்ணிறங்கிய கவிதைப் பிரவாகத்தில் அவனது ஊணுடல் தாங்கிய மானிடத் துயரும் இன்னல்களும் கசடுகளாய் அடித்துச் சென்றது போலும். வளமான வண்டலாய்த் தேங்கிய அவருடைய எழுத்துக்களில், வரலாற்று ஆய்வாளர் காட்டும் ஏழ்மையும் நொய்மையும் எங்குமில்லை. அன்றாட அரிசி பருப்புக் கவலைகள் எல்லாம் விட்டு விடுதலை ஆகி நிற்க முடிந்த சிட்டுக்குருவி.. அல்லது விடுதலையாக விரும்பிய கவிக்குருவி. எந்த நிலையிலும் அவரது வாழ்வின் கசடுகள் எண்ணத்திலும் எழுத்திலும் எதிரொலிக்காதிருந்த காரணம் நன்மையில் நல்லியல்புகள்மேல் அவருக்கிருந்த அபார நேர்மறை நம்பிக்கை (optimism) எனலாமா?மண்ணில் வீழ்ந்ததனால் மறைந்து மாய்ந்து விடாமல் கதிரென முளைத்தெழுந்த வீரியமான விதை எங்கள் பாரதி.

பிறிதோர் சொல் அவர் சொல்லிய சொல்லை வெல்வதற்கு இல்லை எனும் வண்ணமே அனைத்துக் கவிதைகளும் இருக்கும். இவ்வண்ணம் இன்பமாய் வாழ வழி சொல்லும் கவி இங்கு தவம் இயற்றச் சொல்கிறார். தவம் என்பது தன்னலம் அற்றுப் போதல், ஒருமுகமாய் உள்நோக்குதல்..

"செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு"

இவர் கூறும் தவம் அன்பு பழகுதல். தவம் என்றுமே எளிதன்றே..  கலக மானிட பூச்சிகள் சூழப் பறந்தாலும் கலையாதிருப்பது தவம்.

இவ்வன்பு சக மானிடர் மேல் மட்டுமல்ல..
"வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்" என நம்மை நாம் நேசிக்கும் அளவுக்கு அனைத்துயிரையும் நேசிப்பதே இவர் சொல்லும் தவம்.

அன்பைப் பாசமாக, கனிவாக, காதலாக, பக்தியாக, நட்பாக காட்டத் துடித்த பாரதி, கண்ணனைத் தனது  தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், காதலனாய், காதலியாய், கண்ணம்மாவாய், குலதெய்வமாய், ஆண்டானாய் பார்த்த பித்தன்.
அவரது கண்ணன் பாடல்களைப் பற்றி மட்டுமே பல பக்கங்கள் பேசிடலாம்.

தமிழுக்கு இன்முகம் காட்டிய இந்தக் கவிராஜன், பன்முக ஒளிபடைத்த பளீர் வைரம்.

இன்கவி அங்கே குறைகிறதென்று என்று இறைவன் இளமையிலேயே அவரை தன் புறம் அழைத்துக்கொண்டான். சாகாவரம் பெறுவதன் வழியை மொழிந்துவிட்டு 39 வயதில் அமரரானார்  மாகவி
"அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்"

ஆம் பாரதிக்கும் அவர் கவிதைகளுக்கும் சாவென்பது இல்லாமல் அழிந்தே போயிற்று!!

காணி நிலம் வேண்டும் பாடல்

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் - அங்கு
கேணி அருகினிலே தென்னைமரம்
கீற்றும் இளநீரும்

பத்துப் பனிரெண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்குக்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும் என்றன்
சித்த மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும்.

Tuesday, April 14, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர்

மன்மத ஆண்டின் முதல் பதிவு.

இன்றைய ஹைவே பயண வாழ்கையின் அவசரங்களுக்கு இடையே இதற்கு அவகாசம் தந்து வாசிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இதைப் படித்துவிட்டு, வாழ்த்தில் என்ன கஞ்சத்தனம், இதை வாசிக்காதவருக்கு வாழ்த்தில்லையா என யாரும் வழக்கு தொடுக்க இயலாது. (வழக்கு எதற்கெல்லாமோ போடப்படுகிறது, தெளிவுபடுத்தி விடுதல் நலம்). இதுவரை வாசித்தாலே வாழ்த்து உங்களுக்கும் உரியது.

முதல் வணக்கம் முன் நின்று காக்கும் முத்தமிழ் முதல்வனுக்கு சொல்லி தமிழ்க்களம் புகுகிறது இந்தத் தொடர் பதிவு. அம்மா என்ற சொல்லோடு அவன் பெயரும் சேர்த்துப் பயின்ற தமிழிது.

அமிழ்து-அமிழ்து என இடைவிடாது சொல்லிப்பார் தமிழ் தமிழ் என ஒலிக்குமென சிறு வயதில் தமிழாசிரியர் விதைத்த தமிழ்காதல் விதை - இந்த பயிருக்கு வேராய், விளைவுக்கு நீராய், உயிருக்கு நேராய் உயிருடன் கலந்தது.

மொழி எனப்படுவது ஒருவர் கருத்தை மற்றொருவருக்கு ஐயமற உணர்த்தும் கருவி என்ற அடிப்படை பயன்பாட்டைத்தாண்டி,  தமிழ், கலையாய் காவியமாய் கனியத் தொடங்கியே பல்லாயிரம் ஆண்டுகள்!! எத்தனை எத்தனை மாமனிதர்களின் அறிவையும், சிந்தனைகளின் உச்சங்களையும், கற்பனைகளின் விஸ்தீரணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது இம்மொழி!!

பல நாடுகள் வேட்டையாடி குகை வாழ்ந்த காலத்தில் பண்புகளின், வாழ்வியல் தத்துவங்களின், நாகரிகத்தின் சிகரம் தொட்ட தேசமிது. 'Globalization'  நம் வீட்டின் உள்ளே அனுமதியின்றி நுழைந்து தன் காலையும் வாலையும் ஆட்டுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என ஓங்கிச் சொன்னது தமிழ். அடுத்த வரியிலேயே 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என ஒற்றை வரி கீதை சொன்ன கணியன் பேசிய மொழி இது.

இதன் பெருமையை, மொழியின் ஆளுமையை உணரச்செய்தவர்கள் எனக்கு அமைந்த நற்றமிழாசிரியர்கள். வசந்த காலத்தில் மலர்கள் பெறும் பாராட்டை வேர்கள் பெறுவதில்லை. இலையுதிர்காலத்திலும் மரத்தைத் தாங்கும் வேர்களுக்குப் பெயரில்லை. நம் ஒவ்வொருவரையும் உளி கொண்டு செதுக்கிய ஆசிரியர்கள் அத்தகைய பேர் தெரியாத வேர்களாய் இருக்கிறார்கள். தமிழ் ஆர்வத்தைப் பற்றாக்கியதில் சில ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.ஏழாம் வகுப்பில் கமலாவதியில் தமிழறிவித்த சுந்தர்ராமன் ஸார்-எங்கிருக்கிறீர்கள். Facebook தொடமுடியாத தொலைவிலா!! நீங்கள் சொல்லிக்கொடுத்த எந்தப்பாடலும் மறக்கவேயில்லை. "இளமை கழியும் பிணி மூப்பு இயையும்' இன்னும் காதில் ஒலிக்கிறது.

தமிழ்ப்பற்றைப் தமிழ்பித்தாக்கியதில் பல எழுத்தாளர்கள் தங்கள் பங்கை செவ்வனே செய்தார்கள். புத்தகங்களின் மாயா உலகின் கதவைத் திறந்தது - ஒரு சிறு நூலகத்தையே வீட்டில் சேகரித்து வைத்த என் அம்மா. அப்பாவின் அலுவல் மாற்றல் பந்தாட்டங்களுக்கு இடையே 50+ வீடுகள் மாற்றி அத்தனைக்கும் இடையில் புதையலாய், பொக்கிஷங்களாய் புத்தகங்கள் சேகரித்தது நிச்சயமாய் வாழ்நாள் சாதனை விருதுக்குரிய விஷயம். தன் எழுத்தாளர் தந்தையிடமிருந்து கொண்ட தமிழார்வத்தை எனக்குள்ளும் வேரூன்றினார்.

உங்கள் பிள்ளைகள் தமிழில் ஆர்வம் கொள்ள எளிய வழி. ஐந்து வயதிலேயே தமிழ் கதைப் புத்தகம் கொடுங்கள். உணவோடு தமிழ் உள்ளே செல்லட்டும். ஒருவரைத் தமிழ் பித்தனாக்க, கையில் கல்கியின் 'பொன்னியின் செல்வனை' சிறுவயதிலேயே கொடுத்தால் போதுமானது. ஆறாம் வகுப்பு பள்ளி விடுமுறையில் மூன்றே நாளில் ஊணுறக்கம் இன்றி வாசித்த முதல் முறை தொடங்கி, பல நூறு முறை தனித்தனி அத்தியாயங்களாகவும், 30 முறையேனும் அனைத்து பாகங்களும் படித்து, பல முறை பலருடனும் விவாதித்து, கதை சொல்லி மகிழ்ந்த அமரர் கல்கியின் அமர காவியம் அது. (எனக்கு ஒரு நல்ல நட்பையும் கொடுத்த கதை இது ) இளமையிலேயே வல்லவரையன் வந்தியத்தேவனும், பழுவேட்டரையரும், அன்பில் அநிருத்த பிரம்மராயரும் வாயில் சடுகுடு ஆடிவிட்டால், விரைவிலேயே T.M.S போல 'முத்தைத்தரு பத்தித்திருநகை அத்திக்கிறை சக்திச்சரவண' வரை பல்லுடைய தமிழ் படித்துவிடலாம்.( TMS  தான் பாடினார் -அருணகிரிநாதரா அவர் யார் - விரைவில் பேசுவோம்)

எழுத்தறிவித்த இறைவர்கள் வரிசையில் கம்பன், சைவ சமயக் குரவர்கள் நால்வர், பாரதி தொடங்கி கண்ணதாசன், கல்கி வரை பலரும் இருக்க, எந்த விதமான சந்தேகத்துக்கும் இடமில்லாமல் சீர்காழி,  T.M.S,  சிவாஜி போன்றோர் மூலம் வெகுஜன ஊடகத்தின் வழி அனைவரையும் நல்ல தமிழ் சென்று சேர்ந்தது.

இன்றைய டமிலும் ஊடகத்தின் பாதிப்பே!! 'ழ' கூட எப்படியோ சொல்லி விடுகிறார்கள். 'ள'கரம் மனநிலை பாதிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டது.

நல்ல புத்தகங்கள், நல்ல பாடல்கள், நல்ல தமிழ் பேசும் திரைப்படங்கள், நமது பேச்சு வழக்கில் நல்ல தமிழ் - அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்க்கும்.

இந்த வருடம் இதனை முயற்சிப்போம். யாரேனும் ஒருவருக்கேனும் நல்ல தமிழை அறிமுகம் செய்வோம். நாமும் தொடர்ந்து வாசிப்போம்-வளர்வோம்.

முந்தைய பதிவுகளையும்  part1 ஆக எழுதி பிற பகுதிகளை வெளிவராத விஸ்வரூபம்2வாய் வைத்திருக்கிறேன். எனின் இதன் தொடர்ச்சி தொடர்ந்து எழுதிவிடுவேன் என நம்புகிறேன். 

Wednesday, March 18, 2015

கறை நல்லது..

"நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்"  சமீபத்திய உள்ளம் தொடும் பாடல்களில் ஒன்று.

நேர்கோட்டில் கிளம்பும் பல யாத்திரைகள் இங்கே வட்டத்தில்தான் முடிகிறது, தொடங்கிய இடத்தில்.. பூமியை நேர்கோட்டில் வலம் வந்துபார்த்தால் வட்டம்தானே!! எனினும் எங்கோ தொடங்கி எங்கோ முடியும் இந்த வட்டச் சுழலில் சுற்றும் வரை பூமி காலுக்கடியில் இருப்பதாக நம்பத்தான் வேண்டியிருக்கிறது. புவியே ஒரு நாள் இருந்தவிடத்தில் மறுநாள் இல்லையெனும் போது, நாம் நிலையாய் நிலைத்திருப்பதாய் எண்ணுவது எவ்வளவு பெரிய வேடிக்கை.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு நீரில் மூழ்கி நம் நினைப்பொழியும் வரையேனும், பிறர் நினைவிலிருக்க நாம் செய்வதென்ன... பாரதி சொன்ன வேடிக்கை மனிதராய் வா(வீ)ழ்வதன்றி வாடிக்கை தாண்டி நாம் செய்வதென்ன..

தொடங்கிய இடத்திலேயே நிற்பதற்குத்தானா இந்த நீண்ட பயணம்..

 'இன்று முதல்', 'இந்த வருடம் முதல்' என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் எல்லாம் மனப் பரணில்.. தூசியடைந்து, தொட்டாலே தும்மல் வருகிறது. தூக்கம் வரும் வரை அல்லது விழிப்பு அலுக்கும் வரை தும்மலைப் பொறுத்துக் கொண்டு தூசி தட்டுகிறேன். படித்து முடித்தபின் ஒவ்வாமையால் யாருக்கேனும் தும்மல் வந்தால் நான் பொறுப்பல்ல..

முதலாவது - அடிக்கடி எடுத்துக்கொள்ளும் ஒரு இலக்கு. "கோபம் கூடாது - பொறுமை வேண்டும்". உத்தமமான எண்ணம்தான் - அடுத்த முறை ஏதேனும் ஒன்று, அல்லது யாரேனும் ஒருவர் நம் எதிர்பார்ப்பை பொய்க்கும் வரை.
ஏன் இந்த முயற்சி தோற்கிறது?
நடைமுறைக்கு ஒவ்வாத உயரத்தை எட்ட முயற்சிப்பதால்?
இன்னும் முதிராத மனத்தால்?
Genetic problem ;)?
பழத்திற்கு மலைமீது தனித்தமர்ந்த குழந்தையை நாளும் ஆராதிப்பதால்?
காரணங்கள் பல இருக்குமெனில் குறிக்கோள் பிழையா?

இன்றைய முதிர்ச்சியில் அல்லது முதிர்ச்சியின்மையில், துலாக்கோல் ஒரு பக்கமாய் சாய்கிறது - கறை நல்லது போல கோபமும் நல்லதுதான்.
எப்போதெல்லாம் கோபப்படலாம்? நியாயமான கோபங்கள் தவறல்ல - யாருடைய நியாயம் அளவுகோல்?

எழுத ஆரம்பித்து இந்த இடம் வருவதன் முன்னரே எண்ணம் எப்போதெல்லாம் கோபப்படலாம் என்று தேடுகிறதே..மனமென்னும் குரங்கு..எனினும் குரங்கைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அன்பின் கரம் நீட்டும் போது - சிறுமை மறுபக்கம் வெளிப்பட்டால்.. மலரைப் பிய்த்தெறியும் குரங்கென எளிய மென்மையான மனங்களை கசக்கி நசுக்கும் நச்சுப் பதர்களைக் காணும்தோறும்..பிறன் உழைப்பை தனதென்று முன்னிறுத்தும் அற்பத்தனத்தைக் காணுகையில்... மாற்றான் உயர்வில் (நிம்மதியில் கூட) மனம்புழுங்கும் சிறுமதியினர்பால்..பளபளப்பான புறம் காட்டி, உண்மைக்கு புறங்காட்டும் மாக்களை காண நேர்ந்தால்..  TRP தேடும் ஊடகம் போல பிறர் வாழ்வின் துயரில் வாய் தேயும் சிறுமை காணும்போது..உண்மையை சந்திக்கும் தருணத்தைத் தவிர்க்கும் மனிதர்பால்.. பட்டியல் இன்னும் நீளும். இங்கெல்லாம் ஜகத்தினை அழிக்கும் அளவு இல்லை என்றாலும், மறுமுறை அது நமக்கு (குறைந்தபட்சம்) நிகழாமல் தடுக்கும் அளவேனும் சினம் தேவைதான்.

சினமெனப்படுவது மாற்றம் நிகழ, தவறைத் திருத்த, சிறுமை தவிர்க்க, பொய்மை புறம்தள்ள உதவும் ஊக்கியாகக் கைக்கொள்ளலாம். நம் பிழை மறைக்க, 'நான்'ஐ முதன்மைப்படுத்த வெளிப்படும்போது சினம் சிறுமையாகிறது. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி(சினம்) சேர்ந்தாரைக் கொல்லியாக உருவெடுப்பதில்லை.

இத்தகைய ஆக்க சக்தியாய் நம் கோபம் பண்பட, நமது உள்சமநிலையை இழக்காமல், எதிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அன்பே சிவம் 'நல்லா'  போல பக்குவமாய் மூக்கில் குத்தவும் பயிற்சி தேவை.

எனவே இலக்கில் ஓர் திருத்தம் - "கோபம் கொள்ளவும் பொறுமை தேவை"

புவி தன் சுழற்சிப் பாதையில் ஒரு வட்டம் முடித்து, தொடங்கிய இடமே வந்தாலும் மாற்றம் ஏதுமில்லையென சொல்ல முடியாது. புவி சுழலும் போதே பருவநிலை மாற்றங்களையும், ஒரு வருடமென மானுட தினங்களையும்  முன்னகர்த்திச் சென்றிருக்கிறது.

வாழ்வின் நெடும் சுழற்சியும் அவ்விதமே.  தொடங்கிய இடமே வந்தடைந்தாலும் அனுபவம் வாயிலாக இலக்குகளை கூர்தீட்டிக் கொள்ளலாம். தூசிபடியாது மனதை அவ்வப்போது துலக்கி எடுப்பது நலம்.

**இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் அனைத்து எண்ணங்களும் நேரில் கண்ட உண்மையான மனிதர்களைக் குறிப்பிடுபவையே...கற்பனை அல்ல :)

Sunday, February 22, 2015

இசைபட வாழ்தல்

உயிரின் ஊதியமாய் வள்ளுவன் ஓதும் "ஈதல் இசைபட வாழ்தல்" குறித்த பதிவல்ல இது.

இன்று அதிகாலை கண் விழிக்கும் போதே மனதில் சுழன்ற பாடலின் பின்தொடர்ந்த சிந்தனையின் சுவடு இது.

"ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே" - நேற்று பயணத்தில் கேட்ட பாடல், அணைந்த பின்னரும் அறையில் தவழும் ஊதுவத்தி மணமாய் உள்ளே கமழ்கிறது.

மனதின் நினைவுச் சரடு பல்வேறு தருணங்களில் கேட்ட பாடல்களாலேயே பின்னப்பட்டிருக்கிறது. ஆதி ஞாபகமெனத் தோன்றும் "அந்தி மழை பொழிகிறது" குழந்தையாய் ஒரு வெளிச்சமான காலைப் பொழுதில் கேட்ட நினைவு. அந்தப் பாடலின் ஆரம்ப  humming-ல் ஒவ்வொரு முறையும் மனம் அந்த நாளைத் தொட்டுத் திரும்பும்,

பள்ளிப் பருவத்தில் அவசரமான காலை நேரத்தில் AIR ல் கேட்ட TMS, சீர்காழி, நாகூர் ஹனிபா பக்திப் பாடல்களும், "Lifebuoy எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே"-ஐத் தொடர்ந்து ஒலித்த ஆயிரம் பாடல்களும், இலங்கை வானொலியின் சிருங்காரத் தமிழ் உச்சரிப்போடு ஒலித்த இசைப் பூங்கொத்தில் மிதந்து வந்த பழைய பாடல்களும், அப்பா எப்போது ரேடியோ ஸ்டேஷன் மாற்றுவாரென கேட்க ஆரம்பித்த மதுரை மணி ஐயரும் பட்டமாளும் சிறு வயதின் மறக்க முடியாத ஆணிவேர் ஆழங்கள்.

பாடல்களோடு இயைந்த நினைவுகளாய் சில மனிதர்கள், சில சிந்தனைகள், சில இடங்கள், சில தருணங்கள் - செங்கல் இடுக்கில் பூசப்பட்ட காரைப் பூச்சாக நினைவுகளை நிரந்தரம் செய்கிறது இசை.

"உறவுகள் தொடர்கதை" - ஒரு ரயில் சிநேகமாய் கடந்து சென்ற நண்பரை நினைவுபடுத்தும். வள்ளி படத்தின் "என்னுள்ளே என்னுள்ளே" வுக்கு முன்னர் ஒலிக்கும் மிருதங்கம், என் பிரியமான உறவுகளை நினைவுபடுத்தும். "பூ வண்ணம் போல நெஞ்சம்" கல்லூரிக் கனவுகளை மீட்டும். இது பலரும் நினைப்பது போல இளையராஜா அல்ல - Salil Chowdry!!

10 வயதில் அப்பா திரையிசையில் ராகங்களைக் கண்டறியும் நாட்டத்தை ஏற்படுத்திய பிறகு, பாடல்கள் மேல் பற்று அதிதீவிரமாயிற்று. G. ராமநாதனில் ஆரம்பித்து, C.R. சுப்புராமன், சுதர்சனம், S.V.வெங்கட்ராமன், KVM, MSV,... இளையராஜா வரை வற்றாத நீரூற்றுக்களில் திளைத்த பிறகும் வளர்கின்ற தாகம்.

சில நாட்கள் பாட்டு ஒன்று மனதில் ஒட்டிக் கொள்ளும் ஈரத்துணியாக. அன்றாட அலுவல்களூடேயும் உலரமால் ஒட்டிக் கொண்டே இருக்கும். மாற்றுப் பாடல் அகப்படும் வரை மனம் கீறல் விழுந்த பழைய ரெகார்டாக அதையே மீட்டிக் கொண்டு இருக்கும். 

இன்றைய அவசர கதி வாழ்க்கையில் ஸ்வரஜதியாய் சங்கீதம். ரயில் தடதடக்கும் தண்டவாளத்தின் அருகில் பூக்கும் பூவிலும், அதில் அமரும் வண்ணதுப்பூச்சியிலும் வாழ்கிறது இசை. வாழ்வின் சுவை குறையாதிருக்க யாவருக்கும் வேண்டும் செவிக்குணவு.

தளர்ந்த தருணங்களில் தாய் மடியாய் 
தொலைந்த உறவுகளின் நீள்நிழலாய் 
கலைந்த கனவுகளின் கண்ணீராய் 
சொல்லாத வார்த்தைகளின் உட்பொருளாய் 
தொலைதூர மீட்சியின் சாட்சியாய் 
தொடுவான நிம்மதியின் ஒளிக்கீற்றாய் 
நம்பிக்கை கோபுரம் சாயாதிருக்க சாரங்களாய் 
யாரோ எழுதி யாரோ இசைத்து யாரோ பாடிய பாடல்கள் - நாமறியாமல் நம்மைப் பார்த்து எழுதியது போல, நாமே முன்பொரு பிறப்பில் பாடியது போல...

திரையிசைக் காற்றடித்து விலகிய திரை ஒன்று, நம் கர்நாடக இசை என்னும் வெளிச்சக் கீற்றை மெல்லத் திறந்து காட்டியது.

சத்தியமாக - தெரியுமென்று சொல்லிக்கொள்ள பாடறியேன் படிப்பறியேன். வீணைக்குள் உறங்கும் நாதங்களை மீட்டியெடுக்க, அதன் வாயிலாக என்னை நானே மீட்டெடுக்க - மீண்டும் மீண்டும் எடுக்கும் முயற்சியாய் மட்டுமே நகர்கிறது வாழ்க்கை. கீதம் தாண்டாத சங்கீதம் என்னுடையது. எனினும் ஏதோ விட்ட குறை தொட்ட குறையாய் உயிரை வருடுகிறது இசையும் ராகங்களும். "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" பாடல் அனுபவம் போல உணர்வுகளாய் நிறம் காட்டுகிறது ராகங்கள்.

அதிகாலை வீசும் இளங்காற்று பிருந்தாவனி, மாலை நேரம் மனதுக்குகந்த நட்போடு நடக்கும் போது வீசும் தென்றல் ஹம்சநாதம், மனதை உருக்கும் பக்தி, கருணை - சாருகேசி, நினைவுகளை பின்னோக்கி நகர்த்தும் nostalgic கௌரிமனோஹரி, மிகத் தீவிரமான ஒற்றை நினைவில் உருக வைத்து உரிமையோடு இறையிடம் வாதம் செய்யும் சிம்மேந்திரமத்யமம் - என பார்வை அற்றவனின் யானை அனுபவம்தான் எனக்குப் புரிகின்ற இசை.
எனினும் பற்றற்றான் பற்றைப் பற்றுதற்கு இசை போல இனிதான வேறு மார்க்கம் இருப்பதாய் தெரியவில்லை.

உன்னதமான நம் இசையை, அதன் ஆழங்களையும் சிகரங்களையும் தொட்ட மேதைகளையும் அவர்களின் மேதைமைகளையும் அறிமுகப்படுத்திய நட்புக்கு (Ganesh) நன்றிகள் பல.

மேலும் சில இசை தொடர்பான நினைவுகள் - பாடும் நிலவை (SPB) நேரில் ஒரு முறை ஏர்போர்ட்-ல்  பார்த்தபோது எங்கள் வாழ்வு உங்கள் குரலால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது எனச் சொன்னேன். அன்று விமானம் மேகங்களால் நெய்யப்பட்டிருந்தது. அதே போல, இசையால் நம் தலைமுறை ஆண்ட இசை ராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு என் தங்கையுடன் சென்றிருந்தேன். வயலினும் புல்லாங்குழலும் கொண்டு ஊடும் பாவுமாய் இதயத்தை இசையோடு நெய்தார் ராஜா.

பகல்நிலவின் "பூமாலையே தோள் சேரவா" பாடலின் முன்னர் எழும் 100 violin சேர்ந்திசையும், "தாலாட்டும் பூங்காற்றில்" உருளும் சருகென உதிரும் குழல் ஒலியும் கேட்ட போது உள்ளமொன்று உணரும் மொழி இசை மட்டுமே என்று தோன்றியது.

கானகந்தர்வனை நேரில் கண்டு வெள்ளைக் கமலத்தில் உறை வாணி வந்தது போல வெள்ளாடை வேந்தனாய் வந்த யேசுதாஸ் கச்சேரியில், அவரின் மனமும் மதியும் மயக்கும் குரலில், அவரது சிம்மேந்திர மத்யமத்தில் உயிர் மேலெழுந்து இறையைத் தொட்ட போது மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்றே தோன்றியது.

இசை குறித்து எழுதிக் கொண்டே இருக்கலாம். நாளை திங்கள், மற்றுமொரு விறுவிறுப்பான வாரம் தொடங்க இருக்கிறது. அதன் இறுக்கத்தை சற்று தளர்த்துவதற்கு இன்னும் சில பாடல்கள் தேவைப்படலாம். எழுதும் விழைவிருப்பின் மீண்டும் எழுதுகிறேன்.

பாடல் மேல் காதலை ஏற்படுத்திய கவிஞர் குறித்தும் மதுவென அமிழ்தென மயக்கும் அவர் தமிழ் குறித்தும் அடுத்த பதிவில்..



Sunday, February 8, 2015

நிலவே உன்னிடம் நெருங்குகிறோம்.. நீ நினைக்கும் இடத்தில் நாங்கள் இல்லை..

அது ஒரு அழகான நண்பகல் பயணம்.
உ டன் இனிதான நண்பர்கள் பயணம். Special Thanks Title Slide - to all these friends who made this trip possible.



அன்று இளம் காலை பனி போர்த்தி சாம்பல் பூத்திருந்தது. குளிர் ஊடுருவிய காற்று, உடல் நடுங்க வீசிக் கொண்டிருந்தது.  அகன்று விரிந்த சாலைகளில் car வழுக்கிச் சென்று கொண்டிருந்தது.



காற்றின் மென்கரங்கள் மேகத்திரை விலக்க, மெல்ல சோம்பல் முறித்தான் பகலவன். பின்னர் குளிர் முறித்தான்- சூழலின் சாம்பல் நிறம் உரித்தான். கதிரவன் தொடத் தொட மலர்ந்தது இயற்கை பல வண்ணம் கொண்டு.

"Sun Kissed State" என்று பூரிக்கும் Florida எங்கள் கண் முன்  சூரியனின் அரவணைப்பில்மகிழ்ந்தது. Jacksonville முதல் Port Canaveral வரை கடற்கரை அருகில் தான் பயணம் - கடல் கண்ணில் படவில்லை எனினும் நெய்தல் நிலத்தின் அடையாளம் நிரம்பிக் கிடந்ததது வழி எங்கும் - அலை தழுவ அழைக்கும் 'Surf club" அறைகூவல்கள்.

Port Canaveral - Kennedy Space Center - A background

Google-உம் Wikipedia-உம் மேலும் தகவல் தரும். இது இந்த பதிவில் இருந்து பார்வை விலகாமல் தெரிந்து கொள்ள ஒரு சிறு முன்னுரை மட்டுமே.

Apollo - மனிதன் நிலவில் கால் பதிக்கும் முயற்சிக்கு போடப்பட்ட பிள்ளையார் சுழி.  1961-ல் அன்றைய அமெரிக்க அதிபர் John F. Kennedy கண்ட கனவு. அதுவரை யாரும் தொடா முயற்சி. நிலவைத் தொடும் முயற்சி. அதற்கு NASA விஞ்ஞானிகள் எடுத்த விடா முயற்சி. சுமார் 350Km square  நிலம் வாங்கப்பட்டு KSC நிர்மாணிக்கப் பட்டது.

VAB - Vehicle Assembly Building.

விண்கலம் நிர்மாணிக்கும் விண்ணளாவிய கட்டிடம் வெட்டவெளியில் பிரமிக்க நிற்கிறது. கொள்ளளவில் உலகிலேயே பெரிய ஒற்றைத் தள கட்டுமானம் இந்த VAB (largest/tallest single-story building in the world - என் செய்வது - சில விஷயங்கள் ஆங்கிலத்தில்தான் எளிதில் புரிகிறது!!)

160m உயரம் (526 அடி) - 218m நீளம் (716 அடி) - 158m அகலம் (518 அடி) - அந்த செவ்வக வடிவம், அதன் அருகில் வேறு எந்த கட்டிடங்களும் இல்லாத காரணத்தால் சராசரி உயரம் என்ற மனமயக்கைத் தருகிறது. மழைக்கால புழுக்க நாட்களில், இக்கட்டிடத்தின் உள்ளே மேகம் உருவாகும் என்ற தகவல் நம் பிரமிப்பை ஏற்படுத்த போதுமானது. 4 மிகப் பிரம்மாண்டமான சொர்கவாசல் கதவுகள் திறந்தால் (140m - 456 அடி உயரம்), உள்ளே ராக்கெட் செங்குத்தாக விஸ்வரூபமெடுக்கும் களம். இந்தக் கட்டிடத்தின் வெளிப்புற சுவற்றில் இருக்கும் அமெரிக்க தேசியக் கோடி உலகின் மிகப் பெரியது - அதன் நீல நிற வெளி மட்டுமே ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவாம்.


Enough of background - We are standing in the foreground. Front ground of NASA - KSC.



நாட்டின் தலை சிறந்த தொழில்நுட்பத் தளத்தை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்து, மனித முயற்சிக்கு வானமே எல்லை என்ற கருத்தையும் திறந்து வைத்து, வெளி வரும் போது astronaut என்ற Sci-Fiction role மேல் ஆர்வத்தையும், மதிப்பையும் தோற்றுவிக்கிறார்கள்.Good Job !!

ஏவுகணைத் தளத்திலும், பார்வையாளர் அரங்கிலும் சில புகைப்படங்கள் எடுத்து, முகநூல் பகிர்வென்னும் தலையாய கடமையையும் நிறைவேற்றி விட்டு tour  bus ஏறினோம்.

பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலான அந்தத் தீவு பல உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. வழியில் சில Aligator குட்டிகள்(முதலையின் பங்காளிகள்) வெயில் காய்ந்து கொண்டிருந்தன. சில vehicle launch pads வழியாக சென்ற எங்கள் பேருந்து Saturn V தளத்தில் எங்களை இறக்கி விட்டது. ஒரு சிறிய theatre  போன்ற அரங்கினுள் நுழைய  திரையில்  Apollo Mission குறித்த ஒரு குறும்படம்.

வால்பற்றி மரம் தாவிய நாளில் தலை நிமிர்ந்து இரு காலூன்றி நடக்கவும், வேட்டையாடப்பட்ட நிலை மாற்றி வேட்டையாடவும் தொடங்கிய ஆதி மனிதனின் அளவற்ற ஆர்வம் இன்னும் அடங்கவேயில்லை. காடுகள் வெட்டி, கடல்கள் கடந்து, சிகரங்கள் தொட்ட பின்னரும் நிறைவில்லை. இறை என்றும் இயற்கை என்றும் வான் நோக்கி மிரண்ட குகைமனிதன், விஞ்ஞானக் கரம் பற்றி மேலே இருப்பதென்ன என்று கேட்கத் தொடங்கிய தேடல்.

ரஷ்யாவின் Sputnik வெற்றியைத் தொடர்ந்து, விண்ணில் இருந்து உற்று நோக்கும் ரஷ்ய விழிகள் குறித்த கவலையில் உறக்கம் தொலைத்தது America.

Apollo  Series - மனிதனை தன் கிரஹம் விட்டுக் கடத்தும் மிரட்டல் முயற்சி. Apollo 1-ன் முதல் முயற்சியின் சோதனை ஓட்டத்தில் 3 astronauts உயிர் துறந்தனர் களபலியாக. பலரின் கேள்விகளுக்கும் கேலிகளுக்கும் இடையில் வேள்வி தொடர்ந்தது குறும்படமாக காட்டப்பட்டது. ஒளியும் ஒலியும் நிறுத்தப்பட்டு நெடுங்கதவொன்று திறக்க - Saturn V Apollo Firing room - நிலவை நோக்கி எய்த முதல் அம்பின் நாண் அந்த அறை.

அந்த அறை முழுவதும் control terminals, chairs அப்படியே வைக்கப் பட்டிருந்தது. முன்னதாக பிறை வடிவில் ஒரு சிறு அரங்கம் - நாங்கள் மீண்டும் சென்று அமர, அடுத்த ஒளிப்படம் தொடங்கியது.


1968 - 36 மாடி உயரம் கொண்ட Saturn V பாயத் தயாராக உறுமிக்  கொண்டிருந்தது திரையில். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தத் தளத்தின் 3 மைல் சுற்றளவில் யாரும் அனுமதிக்கப் படவில்லை.  2 கிலோடன் TNT வெடி மருந்தை எரிபொருளாக சுமந்து கொண்டிருந்த ராட்சச வெடிகுண்டு - அந்த விண்கலம்.

முதல் முயற்சியின் தோல்வி - மூவர் உயிர் குடித்த தோல்வி, அன்று அனைவர் தோளிலும் சுமையாய் அமர்ந்திருந்தது. 3 astronauts விண்வெளி ஏக புன்னகையோடு  அமர்ந்திருப்பதை திரை காட்ட, அவர்களது புன்னகை, வெற்றிப் புன்னகையாய் புவிமீள - அந்த ராக்கெட்டின் 2 million உதிரி பாகங்கள் பழுதின்றி இயங்க வேண்டும். ஒரு valve-ன் சிறு கோளாறு, ஒரு degree கோணத்தில் கணக்கில் பிழை - எந்த அக்கினிக் குஞ்சும் போதும் அந்தக் காட்டை வெந்து தணிக்க.

கண் முன்னர் கட்டுப்பாட்டு அறையின் திரைகளில் அற்றை திங்கள், அந்த தருணம் மின்னியது, அன்றைய நிகழ்வு ஒலி/ஒளிப் பதிவில் மீண்டும் உயிர்த்தது. Countdown starts - to count the stars up above the world so high!!

பரபரப்பான, பதற்றமான இறுதி நொடிகள். நாடே சுவாசம் அடக்கி - மனிதன் தன்  காலடி நிலம் நீங்கி, அம்மாஉணவூட்டக் காட்டிய நிலவில் உணவுண்ணக் கிளம்பும் தருணத்தின் ஈர்ப்பில் புவிஈர்ப்பு மறந்தது. ஒவ்வொரு பகுதியாக உயரமான திரையில் செய்தி சொல்லியது - பல்வேறு அங்கங்களின் நலம் குறித்து. வெப்பம், அழுத்தம், எரிபொருள், தொலைதொடர்பு - அனைத்தின் health check. Final seconds...

திரிபுரங்கள் தீயெழ, புகை கிளப்பி, புவி அதிர வானதிர விண் ஏகியது Saturn V. உணர்ச்சிமயமான தழுவல்கள், கரகோஷம்.

நாங்கள் அமர்ந்திருந்த அரங்கின் சாளரங்கள் அதிர்ந்தது, இருக்கை அதிர்ந்தது, ஒளி  நிறைந்தது. காட்சியின் வழி கருத்தை மயக்கும் virtual reality.

பட்டென்று கதவு திறக்க, மறுபுறம் நீண்ட அறையில் விண் உலாச்சென்ற Apollo கலம் பள்ளி கொண்ட பரந்தாமனாய் அந்தரத்தில் அனந்த சயனம். பார்த்து முடித்து, புகைப்படங்கள் எடுத்து, சில நினைவுச் சின்னங்கள் வாங்கி அங்கிருந்து KSC visitor centre க்கு மீண்டும் புறப்பட்டோம்.


iMax - Hubble & Atlantis - அடுத்த பதிவுகளில்.