Wednesday, May 23, 2018

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

செல்வநிலையத்து வேம்புக்கும் அது பொருந்தும்.மதுரையில் செல்வநிலையம் வீட்டு வாசலில் நின்ற 42 வயதான இரு வேப்பமரங்களில் ஒன்று இன்று விழுந்துவிட்டது. வீடுகட்டப்பட்ட போது தாத்தாவால் வீட்டின் இருபுறமும் நட்டுவைக்கப்பட்டவை. வீட்டின் அடையாளமே வாசலில் இருபுறமும் நிற்கும் வேம்புதான்.

அவை மரமல்ல. நினைவுகள், ஆழ்மனப் படிமங்கள், உணர்வுகள், இன்றளவும் எனது கனவுகளின் நிலத்தின் பிரிக்க முடியாத துணை. தாத்தாவோடு சேர்ந்தேதான் இம்மரம் நினைவில் இருக்கிறது. இரு புறமும் இரண்டு நெட்டிலிங்க மரங்களும் பல வருடங்கள் இருந்தன. அது வெட்டப்பட்ட போதும் ஒரு வெறுமை எழுந்தது. எனில் இது வேறு உணர்வு.

பொதுவாக சில மாதங்களுக்கு ஒரு முறை, விரிந்து கரம் விரித்த மரத்தின் கிளைகளை மின்சாரவாரியம் வெட்டிவிட்டுச் சென்றதும் முடி வெட்டிய குழந்தை போல சில நாட்கள் இருக்கும். அதையே அதிகமாக வெட்டிவிட்டால் ஏதோ ஒரு வெறுமை மனதில் தோன்றும். அதில் வாழும் அணில், வெட்டப்பட்ட கிளையில் பத்து முறை ஏறி இறங்கி நம்மிடம் ஏமாற்றத்தைத் தெரிவிக்கும்.

வீடற்ற எதிர்மனை வாசலில் குழாயடி வந்த பிறகு, வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள் பலருக்கும் வேப்பமரத்தடி இறையைப் போல இளைப்பாறுதல் தந்தது. நெடு வழி மேய்ச்சல் செல்லும் கறவைப் பசுக்கள், பழம் விற்பவர்கள், துணி தேய்க்கும் வண்ணான், தெருவில் விளையாடும் சிறுவர்கள், அனைவருக்கும் அது ஒரு ஆசுவாசம்.

பொம்மைகளை இறைத்து விளையாடும் குழந்தை உறங்கியதும் தாய் வீட்டை ஒழுங்குபடுத்த முனைய, விழித்தெழுந்ததும் வீடு முழுதும் களம் பரப்பும் சிறு குழந்தை போலத்தான் இம்மரங்கள்.
முதற்கதிர் எழுவதன் முன்னம் தாத்தா எதிர் மனை வாசல் வரை வேப்பமரம் உதிர்த்தவற்றை பெருக்கி அள்ள, அரைமணி நேரத்தில் வாசல் நிறைத்து இலையாய், பூவாய், பழமாய் கொட்டிச் சிரிக்கும்.

தவழ்ந்ததும், நடந்ததும், படித்ததும், பேசியதும், கனவுகள் கண்டதும், கண்ணீர் விட்டதும், வீட்டுக்கு வந்தவரை தெருமுனை திரும்பும் வரை வழியனுப்ப நின்றதும், வருபவரை எதிர்பார்த்து கால்கடுக்க காத்திருந்ததும், தொலைதூர அன்பை சுமந்து வரும் கடிதங்கள் வந்து சேர்வதும் அனைத்தும் அதன் அடியில்தான். கோலத்தின் முதற் கீற்றை இழுத்துவிட்டு அண்ணாந்து பார்க்கும் போது தெரியும் வேம்பின் கிளைவழி இறங்கும் ஒளிக்கீற்று வழியாகவோ, அது உதிர்க்கும் முதல் இலையை கை அகற்றும்போதோ, நான் வைத்த புள்ளிக்கு நிகர் புள்ளியென ஒற்றை வேப்பம் பூவை அது உதிர்க்கும்போதோ கோலம் கைவழி உயிர் பெறும்.

நட்பென வந்த உறவுகளோடு விடை பெற மனமில்லாது, கிளம்பியபின்னர் பல மணித்துளிகள் அதனடியில் நின்று பேசிவிட்டு, உள்ளிருந்து பெரியவர்களின் குரல் கேட்டதும், மனமின்றி வாசற்கதவை மூடும் போது தாழ் விழும் இடத்தில் நான்கு வேப்பம்பூக்கள் அமர்ந்திருக்கும், அதன் மேல் தாழிட மனமிலாது அதை உதிர்த்துவிட்டு உள்ளே செல்ல அந்த நினைவுகளோடு வேம்புமனமும் கலந்தே உள் நிறையும்.

விசும்பின் கீழுள்ள அனைத்தையும் தாத்தாவோடு திண்ணையில் அமர்ந்து பேசியதனைத்தையும் கேட்டது அந்த மரங்கள்தான். வானொலியை சன்னமாக இசைக்கவிட்டு அப்பாவோடு அமர்ந்திருந்ததும் அங்குதான். அனைத்து சகோதர சகோதரியரும் அங்கமர்ந்து பேச உள் திண்ணையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, கிளிகள் கிள்ளைமொழி பேசிக் கூச்சலிடுவது போல இருக்கிறது என அப்பா ரசிப்பதையும் அந்த வேம்புதிர் வாசல் கண்டிருக்கிறது. யாருமற்ற தனிமையின் பெருமூச்சுக்களும் அங்கு அந்தக் காற்றில் கலந்தே இருந்தது.

உணர்ச்சிவசப்பட்ட எழுத்து போலத் தோன்றலாம், அங்கு வாழும் அணில்களுக்கும் குருவிகளுக்கும் இது நிச்சயம் புரியும்.

மிகச் சாதாரண ஒரு மழைக்காற்றில் தூரோடு இன்று சாய்ந்திருக்கிறது. பலத்த காற்று இப்போதுதான் வீசத் தொடங்கியிருக்கிறது மனதுள், நினைவுகளின் சுழற்காற்று.

Tuesday, May 15, 2018

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

கல்கியில் தொடங்கி, சுஜாதாவில் கால்வைத்து பலதரப்பட்ட எழுத்துகளை மேய்ந்து கொண்டிருந்த பதின்பருவத்து வாசிப்புகளில் பாலகுமாரன் எழுத்துக்களில் கண்டது புது மின்னல். அவரது படைப்புகளில் நான் வாசித்த முதல் கதை அகல்யா. பள்ளிக்கு பாரதி வேடமிட்டு வரும் பல குழந்தைகளைக் கண்டு உணர்ச்சி மேலிடும் சிவசுவையும், அம்மாவையும், அகல்யாவையும் வாசித்து இவர் எழுத்தைத் தொடர ஆரம்பித்த நாட்கள். வரிசையாக நூலகத்தில் இரும்பு குதிரைகள், மெர்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது, அப்பம் வடை தயிர்சாதம், என் கண்மணித் தாமரை, என்னுயிர்த் தோழி, உள்ளம் கவர் கள்வன், என் மனது தாமரைப்பூ, என்றென்றும் அன்புடன், திருப்பூந்துருத்தி, முதிர்கன்னி, பந்தயப்புறா, அப்பா, ஆனந்த வயல், முன்கதைச் சுருக்கம் என்று மூச்சிரைக்க வாசித்த பொழுதுகள். பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு உடையாரும் கடிகையும் காட்டுவது வேறொரு அருள்மொழியை.

அவரது கதையின் மனிதர்கள் குறிப்பாகப் பெண்கள் ரத்தமும் சதையுமாக நாம் வாழ்வில் காணக்கூடியவர்களாகவும், எனில் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் தீர்மானங்களும், நாம் அந்தரங்கக் கனவுகளில் மட்டுமே காணக் கூடியதாகவும் இருக்கும்.அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஆண்-பெண் உறவுகளின் தத்தளிப்புகளே பெரும்பான்மையானவை. அவற்றின் கொந்தளிப்பில் திகைத்து நிற்பவர்களுக்கு அவரது எழுத்து பெரும் வழித்துணை அல்லது தன் அகம் காட்டும் கண்ணாடி. இந்த மைய முடிச்சை மிக நன்கு கையாளத் தெரிந்தவர் பாலகுமாரன்.

பூமியில் வேரூன்றி விண்ணில் கிளைபரப்பும் விருட்சங்களாக அவர் கதைகள் இருந்தன. வணிக எழுத்து இலக்கிய எழுத்து எனும் எல்லைகளைத் தாண்டி, அவரது எழுத்தெனும் உச்சாணிக் கிளையிலமர்ந்து வானைக் காணும் கனவைக் கிளர்த்தியவை அவரது எழுத்துகள்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இளையராஜாவின் பல பாடல்கள், குறிப்பிட்ட தருணத்தையோ, மனிதர்களையோ நினைவுபடுத்தும். அதுபோலத்தான் பாலாவின் எழுத்துக்களையும் நினைக்கத் தோன்றுகிறது. அவரது பெரும்பாலான கதைகளையும் நாவல்களையும் வாசித்து அவரது நடையும் கதைப்போக்கும் பழகிப் போய் பிற எழுத்துகளுக்குக் கடந்து போன பிறகும் அவரது பல வரிகள் மனதில் நிரந்தரமாக இருக்கின்றன, பல இனிய நட்புகளையும் சிநேகங்களையும் நினைவுபடுத்திக் கொண்டு. நாம் அவரது கதைகளை வாசிக்கும் போது ஒப்பிட்டு நாம் மனதில் நினைத்த சில மனிதர்களோடும் நினைவுகளோடும் சேர்ந்தே நினைவில் நிற்கிறார் பாலகுமாரன்.

பந்தயப்புறா என்று நினைக்கிறேன், "மாறுதல் நேரத்து மயக்கம் இது. உனக்கு மயக்கமில்லை. உன் எண்ணம் தொலைதூரம். உன் வழி நெடும் பயணம், பற, பற, மேலே... மேலே.." அக்கதையை வாசித்த இறுக்கமான பொழுதிலிருந்து இன்று வரை இந்த வார்த்தைகள் என்னுடன் இருக்கின்றன. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..

இன்று அவரது மறைவுச் செய்தி கேட்டு அவரது எழுத்துகளை மனதுள் மீட்டிக் கொண்டிருக்கும் பல்லாயிரம் வாசகர்களுடன் சேர்ந்து வணக்கங்களுடனும் பிரார்த்தனைகளுடனும் - சுபா

Sunday, May 13, 2018

மின்னல் மலர்த்திடும் தாழை


'மின்னல் மலர்த்திடும் தாழை' என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் இம்மாதம் (பிப்ரவரி 2018) வெளிவந்த லா.ச.ரா படைப்புகள் குறித்த எனது வாசிப்பனுபவக் கட்டுரை.


எல்லோருக்குமென சுழலும் உலகில் அவரவருக்கான உலகங்கள் தனித்த அச்சில் சுழல்கின்றன. காட்சிகள் ஒன்றே எனினும் தரிசனங்கள் வேறு - லா.ச.ரா வார்த்தைகளில் சொல்வதெனில் அவரவர் பூத்ததற்கு தக்கபடி. புரியாத நடைக்குச் சொந்தக்காரர் என்று பரவலாகப் பெயர் பெற்ற லா.ச.ராமாமிருதம் எனும் லா.ச.ராவின் எழுத்துக்கள் அந்த வகைமைதான். அவரவர் பூத்ததற்கு தக்கபடி மணம் கொள்பவை.

இது அவரது நடை மற்றும் எழுத்து குறித்த ஆய்வுக் கட்டுரையோ விமர்சனமோ அல்ல. அவ்வெழுத்து என்னுள் நிகழ்த்திய அலைத் தளும்பல்களை, அதிர்வுகளைப் பதிவு செய்யும் முயற்சியே.

கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகக்தின் அட்டையில் நரைத்த புருவங்களோடு இருந்த இந்தத் தாத்தா ஒரு மந்திரவாதி என்பது அறியாமல் இவரது 'அபிதா'வுடன் அறிமுகமானேன். என் அப்பா அந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு லா.ச.ரா, தான் பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் பணிபுரிந்தார் என்று கூறிவிட்டு மேலதிகமாக 'லா.ச.ரா பார்ப்பதற்கு மகாபாரதத்தில் வரும் பகதத்தன் போலிருப்பார். பகதத்தன் எனும் மன்னனுக்கு வயோதிகம் காரணமாக புருவங்கள் நரைத்து இமை இரப்பைகள் தொங்கி விழிகளை மூடியிருக்கும், எனவே விழித்து நோக்கவென பட்டுத்துணியால் இமைகளை நெற்றியோடு சேர்த்துக் கட்டியிருப்பான். கௌரவ சேனையில் போரிட்ட அவனை வெல்ல அவன் பட்டுத்துணியில் சரம் தொடுக்குமாறு அர்ச்சுனனிடம் கூறினார் கிருஷ்ணர்' என்று ஒரு சிறு காலாட்சேபம் செய்தார்.

வங்கி அலுவலர், பகதத்தன், தாத்தா என ஒரு கலவையான மன உருவகங்களோடு லா.ச.ராவை வாசிக்கத் தொடங்கினேன். கொதிக்கும் வெந்நீர்ப் பானையை சூடறியாது வெறுங்கையில் தூக்கிவிட்டது போல இருந்தது என்று கூறலாம். இன்றளவும் சூடும் குன்றவில்லை, இறக்கிவைக்கவும் மனமில்லை.

அபிதா - தான் சிறுவயதில் காதலித்த பெண்ணின் நினைவுகளோடு தான் வளர்ந்த கிராமத்துக்கு தன் மனைவியோடு வரும் நடுவயது கடந்த நாயகன், தன் காதலியின் பெண்ணைக் காண நேரும்போது, அவன் விட்டுச் சென்ற காலம் அப்போதே உறைந்து இக்கணத்தில் இருந்து தொடர்கிறதெனக் கொண்டு தன் மனதை அவளிடம் இழக்கிறான். அதில் நினைவுகளைக் குறித்து வரும் பத்தி:

'ஆயினும் ஒரு எண்ணம் - ஒரே எண்ணம் - நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்த ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக்கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே'.

இந்த வரிகள் உடனேயே மனதுள் தன்னைச் செதுக்கிக் கொண்டது. எதுவுமே எனக்கும் மறப்பதில்லை; மிக நுண்ணியதாக சில தருணங்களில் மனதுள் ஓடிய வரிகள், மனம் நுகர்ந்த வாசனைகள், ஒலிகள், சிறு வயதில் என் வீட்டில் தலைக்கு மேல் ஓங்கிய ஜன்னல் வழியே, சூரியன் மலைக்குப் பின்னால் மறைவதைப் பார்க்க நின்றிருந்த போது ஒரு காகிதப்பூ பூங்கொத்து அதை மறைக்க முயன்று, அதன் மெல்லிய இதழ்கள் ஒளி பெற்று ஒளிர்ந்து ,மெல்ல மெல்ல சூரியனோடு அவிந்தது - இதுபோல ஆயிரமாயிரம் நினைவுத் துணுக்குகள்; எனக்கு இரண்டு வயதுவாக்கில் இருந்த  வாடகை வீட்டின் முழு வடிவமும் ஒளியும் நிழலும், அங்கு நிகழ்ந்தவற்றின் நினைவுத் துணுக்குகளும், அங்கு முதன்முறையாகக் கேட்ட பாடலும் நினைவிருக்கிறது. அனைத்தும் நினைவில் இருப்பது ஒருவிதமான போதையாகவும் ஒருவிதமான துயரமாகவும் இருக்கிறது ஒரே நேரத்தில்.  
நினைவுகளில் இருந்து விடுதலை உண்டா என்ன? எனவே ஒவ்வொரு முறை முற்றிலும் கடந்து விட்ட ஒன்றை ஏதோ ஒரு நோக்கோ, இசையோ, மணமோ தொட்டு மேலெழுப்புகையில் இந்த வரிகளும் உடன் மேலெழும் - 'எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே'

புரிந்தும் புரிந்துவிட்ட பாவனையிலுமாக மகுடி முன் மயங்கி அதைத் தொடர்ந்து சென்றடைந்த மற்றொரு சிறுகதைத் தொகுதி லா.ச.ராவுடையது, 'பச்சைக்கனவு' என நினைக்கிறேன்.

அந்தத் தொகுதியில் ஒரு சிறுகதை தரிசனம். 'எனக்கு வயது பன்னிரண்டிலேயே கன்யாகுமரி மேல் காணாமலே காதல் கொண்டு விட்டேன். நான் குமரன். அவள் குமரி' எனத் தொடங்கும் கதை, கதையென்றே சொல்ல இயலாத நடை. குமரனாய்க் காதலித்த கன்யாகுமரியைக் காண மனைவி சகிதம் தலை நரைத்த காலத்தில் செல்கிறான். (அபிதாவும் இதுதானே! - மானுட வாழ்வே இதுதானே. அவளில் தொடங்கி அவளைத் தேடி அலைந்து அவள் மடியில் மடிவதுதானே. 'அவள்' மீண்டும் மீண்டும் வருகிறாள் லா.ச.ராவின் தேடலில்.). காத்திருந்த வயதுகளின் கணக்குளின்றி குமரியைக் காண நெருங்குகையில் படபடப்பு. கன்யாகுமரியின் அழகை இப்படி எழுதுகிறார்: 'சிற்பியின் செதுக்கல் முடிந்து முழுமை கண்டதும் அவனையே காலால் உதைத்துத் தள்ளிக் கொக்கரிக்கும் சௌந்தர்யம்'. கலை கலைஞனை மீறி பேருருக் கொண்டெழும் தருணம். உமையைப் பிரிந்த சிவம் வடக்கே உறைபனியில் தவமிருக்க, தென்கோடியில் இவள் அவனுக்கென தவமிருக்க, காத்திருத்தலின் வியர்த்தம் குறித்த ஏன் என்ற கேள்வியோடு கதை முடிகிறது. 'வீம்புத் தவம், வீண் தவத்தில் ஒருவருக்கொருவர் ஏன் அரண் கட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? ஏன்? அர்ச்சகர் அலங்காரம் செய்யத் திரையை இழுத்து விட்டார். ஏனாகவே அவள் அதன் பின் மறைந்து போனாள்.' என்னுள் இருந்த கன்யாகுமரிக்கு அக்கதை மிகவும் பிடித்துப்போனது. கண்ணறியாது மலர்ந்த தாழை மணம் மனதைப் பித்தாக்குவது போல அறியாத மன இடுக்குகளில் வேர் பிடிக்கும் இவர் எழுத்து.

சமீபத்தில் இணையத்தில் மதுரையின் வாடிக்கைக் காட்சிகளை அரிதான புகைப்பட தருணங்களாகப் படம்பிடித்து கட்புலன்களில் நாம் காணத் தவறியவற்றை அடிக்கோடிட்ட ஒரு வெளிநாட்டுப் பயணியின் புகைப்படத் தொகுப்பைக் கண்டேன். அன்றாடத் தூசு படியாத வெளிப்பார்வையில் ஸ்படிகம் போல மின்னுகிறார்கள் மனிதர்கள்.
அதுபோல நாம் அனுதினமும் காணும் மனிதர்கள்தான் இவரது கதைகளிலும் வருகிறாரகள். எனில் அவர்களது சலிப்புமிக்க அன்றாட வாழ்வைத் தவிர்த்து, உச்ச தருணங்களேயே படம் பிடிக்கிறார் லா.ச.ரா. தீவிர ஸ்வரங்கள் மீட்டி எழுப்பும் உணர்வெழுச்சியே இவரது எழுத்தின் ஆதார ஸ்ருதி எனலாம்.


ஒவ்வொரு வார்த்தைக்கும் தவம் செய்கிறேன் என்று சொல்லும் இவரது நடை, கட்டற்று சிதறிப் பரவும் சொற்பிரவாகம் என்று உருக் கொள்கிறது. அது நம்முள் உறைந்திருக்கும் அனுபவங்களெனும் பாறைகளில் மோதி கரை ஒதுக்கும் சிற்சில அலைகளில் நம்மைக் கண்டுகொள்ள முடிந்ததெனில், நம் உணர்ச்சிகளுக்கு எழுத்துருவம் கொடுத்தவரென லா.ச.ரா நமக்கு அணுக்கமாகிறார். அப்படிக் கரையேறியது கசடெனினும் அமுதெனினும் அது நதியின் பிழையன்று.

இவரது மொழி எண்ணத்தின் மொழி, சிந்திக்கும் வேகத்தில் தெறித்து விழுபவை எனத் தோன்றுபவை. எனில் நாள்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருந்து அணிகோர்க்கப்படவை என்பது ஒரு முரண்.

தன் வம்சம் விளங்காது போக தன் மகனுக்கே சாபமிட்ட ஓர் அன்னையின் முதல் சொல்லிலிருந்து "அடே" எனத் தொடங்குகிறார் 'புத்ர' எனும் நாவலை. அந்தச் சொல் அருவமாய் ஒரு பாத்திரமாய் பிரசவிக்கும் தருணத்தை இப்படி எழுதிச் செல்கிறார்:

"...ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபிவேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில்,

சப்தத்தின் சத்தியத்தில்,

நா நறுக்கிய வடிவில்,

ஸர்வத்தின் நிரூபத்தினின்று,

வாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய்,

அதன் கதியே என் ப்ரக்ஞையாய்,

நான்

பிதுங்கினேன்."

இதில் 'நான்' அச்சொல். பிறந்துவிட்ட சொல்லின் பிறப்பு அனுபவம் அது. 'உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பதுபோல்.. வார்த்தைகளுக்கே உயிர் உண்டோண்ணோ'(கணுக்கள்)

சபித்த பொழுதில் தவவல்லமை அனைத்தையும் இழக்கும் முனிவர்கள் குறித்துக் கதைகளில் கேட்டிருக்கிறோம். அந்த சாபச் சொல் பிறக்கும் தருணத்தில் அதன் ஊற்று முகத்தில் நாடி நரம்பெங்கும் ஊடுருவும் நடுக்கம் உட்பட சபிக்கப்பட்டவரினும் சபித்தவரே எரிந்து போகும் கனலை எழுத்தில் கொண்டு வருகிறார்.

அச்சொல் தன்னைக் குறித்து இப்படிச் சொல்கிறது:
"நான் விருப்பு வெறுப்பற்ற வாக்கு
என் ஜனிப்பே என் பொருள்
சொல் செயலாவதன்றி ஏன்? எதற்கு? என்று? எனும் கலகங்கள் எனக்கில்லை". சொல் பிரம்மமாகும் தருணம்.

உருவமின்றி, சொற்களென உருத்திரளாமல் வாசகனுள் கடந்து சென்று விட்ட உணர்வுகளை எழுத்தில் கடத்திவிட அவரால் முடிகிறது. கதையுள் பாத்திரங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை அவை தோன்றிய கணமே அதன் நிர்வாணத்தோடு வாசகனுள் மடைமாற்றுகிறார். அதற்கு அவர் கையாளும் உவமைகளும் படிமங்களும் அடர்த்தியானவை:
'மௌனம் தன் சிறகுகளை விரித்து, உங்கள் மேல் இறங்கியிருக்கிறது' (குரு-ஷேத்ரம்)
'வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் அளிப்பது போல, அவள் என் வாழ்ககையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள்' (அபூர்வ ராகம்)
இன்னும் பல.

சலனம் குறித்தும் இரைச்சல் குறித்தும் ஏகப்பட்ட வார்த்தைகளை இரைத்து எழுதிவிடலாம். தனிமை குறித்தும் மௌனம் குறித்தும் வாசகனிடத்து அவற்றைக் கடத்துமாறு எழுதுவது அரிது.
த்வனியில் தனிமை குறித்து இப்படி எழுதுகிறார்:

"தனியாயிருந்தால் மட்டும் தனிமை கிட்டி விடுமோ? அதுவே முதலில் இருக்கிறதோ?

ஏனெனில் நான் எங்கு போனாலும், யாரை விட்டுத் தப்பி வந்தாலும், எப்பவும் என்னோடு இருக்கிறேனே!

துறந்து விட்டதால் மட்டும் தனிமை வருமோ? ஒன்றைத் துறந்தால் மற்றொன்று அதனினும் பெரிது இட்டு நிரப்ப வந்து விடுகின்றது.

சகலமும் துறந்தவனுக்கு உலகமே உடைமை. ஆகையால் சின்ன உடைமை, பெரிய உடைமை எனும் தாரதம்மியங்கள் தவிர உண்மையான தனிமையுமில்லை.

உண்மையான துறவுமில்லை"


இவரது எழுத்துக்கள் முதற் பார்வைக்கு பாற்கடலில் அவரே சொல்வது போல, குடும்பம் என்னும் பாற்கடலைக் கடைந்து உள்ளுறையும் அமுதையும் உடன்பிறந்த நஞ்சையும் வெளிக்கொணர்பவை; எனில் அதன் வழியாக பிரபஞ்ச தரிசனம் வரை மேலெழுபவை. குடும்ப வலைகளுக்குள்ளேயே புழங்கி அம்மாக்களும் அத்தைகளும் மாமிகளுமான கதைமாந்தர்களில் நூற்றாண்டு பழைய வாழ்க்கை முறைகளையும் மரபுகளையும் விவரித்த இவரது எழுத்தில் இன்றும் பசுமை இருக்கிறது. மின்னல்கள் தெரிக்கின்றன. இவரது எழுத்தில் வெளிப்படும் பெண்கள் பேராளுமைகள். அனைவரும் அம்மாக்களே. அவரே சொல்வது போல அவரது அம்மா அவர் எழுதித் தீராத நதி. தாய்மையின் எழுதித் தேய்ந்த முகங்களை மட்டுமன்றி தடுமாற்றங்களையும், குரூரங்களையும் எழுதியிருக்கிறார்.


கொல்வேல் கொற்றவையும் அருளும் அன்னையுமென நிற்கும், லா.ச.ரா மீள மீள எழுதும் "அவள்" அவரது குலதெய்வமான பெருந்திருவின் உருவகம். இலக்கியம் வாயிலான அவரது தேடல் பெண்மையின் அழகை, பன்முகங்களை, உள்ளொளியை அவர் எழுதும் படிமங்களாக, உவமைகளாக மாற்றி நிறைக்கிறது.

இவரது எழுத்தை அணுக முடியவில்லை எனக் குறை கூறுபவர்கள் இருக்கலாம், ஒரே கதையைத் தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் உண்டு. அனைத்தையும் ஒரு புன்னகையோடு கடந்து நிற்கிறார் லா.ச.ரா. அவரது வாக்குமூலம்:
"நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு. இல்லையேல் அப்பவும் சந்தேகம் உங்களுடையது. உண்மை என்னுடையது அவ்வளவுதான்" - இந்த அறுதியான கூர்மையோடு அவரது சொற்கள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன.

Tuesday, February 20, 2018

துலாமுனை நடுக்கங்கள்

எனது தந்தை 40+ வருடங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்று நாட்டை உலுக்கியிருக்கும் ஒரு மிகப்பெரிய மோசடியின் தருவாயில் இந்தப் பதிவை தலை நிமிர்ந்தே எழுதுகிறேன்.




அப்பாவின் வேலை பற்றிய சிறு குறிப்பு. வேலையில் இருந்த வரை இரவு பகல் பாராது உழைத்தவர். கணக்கில் புலி, வேலையில் சிம்மம். மதுரை மற்றும் பல கிளைகளில் தூண் எனப் பெயர் பெற்றவர். இது தேய்வழக்கல்ல, அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து காலை ஏழு மணி வரை கணக்கு வழக்குகள் பார்ப்பதும், விடுமுறை நாளன்று வேறு இடையூறுகள் இருக்காதென்று அலுவலகம் சென்று வேலை பார்ப்பதும் பலநாள் வாடிக்கை. இந்த வழிமுறைகள் இன்று காலாவதியாகி பணிபுரியும் நிறுவனத்துக்கு விசுவாசமாய் இருப்பது என்பதே கேலிக்குறியதாகிவிட்டது வேறு விஷயம். இத்தைகைய மாபெரும் இயந்திரங்களை நகர்த்தும் முகமறியா பல்சக்கரங்களில் ஒருவராக இருந்து மறைந்தவர்.

இன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் செய்திகளையும் கேலிச் சித்திரங்களையும் பார்க்க நேர்ந்திருந்தால் எவ்வளவு வலியும் வேதனையும் அடைந்திருப்பார் என்று முதலில் தோன்றியது.
முதற்பார்வைக்கு அவ்வண்ணமே தோன்றுகிறதென்றாலும் உண்மையில் அப்பாவின் நிலைப்பாடு இதில் என்னவாக இருந்திருக்கும்! கடந்த இரண்டு மூன்று தினங்களாக இந்த மோசடி, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் பல சட்டக இடைவெளிகளையும் ஓட்டைகளையும் ஊடகங்களில் வாசித்துக் கொண்டிருந்த அதே பொழுதுகளில் ஆழுள்ளம் இதை யோசித்துக் கொண்டிருந்தது.

அப்பா குறிப்பிடும் சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

அப்பா வேலை பார்த்த வங்கிக் கிளை, ஒரு வணிக முதலீட்டாளருக்குக் கொடுத்திருந்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும் அவர் கடனைத் திருப்பி அடைக்காததால் வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. அந்த வழக்கில் அப்பா வங்கியின் ஒரு சாட்சியாக செல்ல வேண்டியிருந்தது. குறிப்பிட்ட ஒரு தேதியில் வங்கி மேற்படி நினைவூட்டல் அறிவிப்புக் கடிதம் அனுப்பி விட்டதென சொல்லவேண்டும். ஆனால் உண்மையில் வங்கி அந்தத் தேதியில் அறிவிப்பை அனுப்பவில்லை, தாமதாகவே அனுப்பியிருந்தது. அதை அப்பா வங்கியின் வழக்கறிஞரிடம் எடுத்துச் சொன்ன போது, "அதை உள்ளபடி நீதிமன்றத்தில் சொன்னால் வழக்கு கடன் பெற்றவருக்குச் சாதகமாகத் தீர்ப்பாகி விடும். எனவே நீங்கள் உங்களை இந்தத் தேதியில் அனுப்பப்பட்டதா எனக் கேட்கும் போது, ஆம் என்று மட்டும் சொல்லுங்கள்" என்று பயிற்றுவித்தார்கள். எனில் அப்பா நீதிமன்றத்தில் விசாரணையின் போது உண்மையில் தாமதமாகவே கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறி, அதனால் வங்கிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது

இரண்டாவது சம்பவம்: கல்கத்தாவுக்கு பிராந்திய மேலாளராக பதவி உயர்வு கிடைத்துப் போன போது, மேல்தட்டில் நிகழும் பலவிதமான கீழ்த்தரமான ஊழல் நடவடிக்கைகளுக்குப் பணிந்து போகாமல் இருக்கவே, அசாம் மாநிலத்தின் குக்கிராமம் வரை பந்தாடப்பட்டதும் நடந்தது. வேலையே போனாலும் பரவாயில்லை என்று சில ஒழுங்கீனங்களுக்கு உடன்பட மறுக்கும் போது தண்ணியில்லாக் காடுகளுக்கும் யாரும் போக விரும்பாத ஒற்றை ஊழியர் மட்டுமே கையாளும் குக்கிராமக் கிளைகளுக்கும் பந்தாடப்படுவதும் இறுதி வரை நிகழ்ந்து கொண்டேதான் இருந்தது. 12ஆம் வகுப்புக்குள் பதினோரு பள்ளிகள் நான் பார்த்ததும் அதன் விளைவே 😊

ஓய்வு பெற்ற பின்னரும் கூட, அப்பா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படதற்கான மருத்துவச் செலவுகளை காப்பீட்டுத் திட்டத்தில் திரும்பிப் பெற்றுக் கொள்ள ஓய்வு பெற்றோருக்கான திட்டம் வழியாக முயன்ற போது, மிகவும் மோசமாக அலைக்கழித்தது வங்கி. மருத்துவமனை ரசீதுகள் அனைத்தையும் அனுப்பிய பின்னரும், பலமுறை டில்லிக்குத் தொலைபேசியில் அழைத்தபின்னர், அவை எதுவும் வந்து சேரவில்லை என்று அலைக்கழித்தனர். ஓய்வு பெற்ற முதியவர்களை முடிந்தவரை அலைக்கழிப்பார்கள், அவர்கள் தாமாக காப்பீடு பெற முயற்சி செய்வதையும், தொடர்ந்து அதற்காக அலைவதையும் விட்டுவிடுவார்கள் என்று அவ்விதம் செய்கிறார்கள் என்று எண்ணிய அப்பா, சட்டபூர்வ அறிவிப்பொன்றை அனுப்பினார்கள். அடுத்த மாதமே பணம் வந்து சேர்ந்தது.

இதனால் எல்லாம், அப்பா தான் பார்த்தவேலை மீதும் வங்கி மீதும் இருந்த மதிப்பையும் நம்பிக்கையையும் இறுதிவரை இழக்கவில்லை. ஓய்வூதியத்துக்கு வாழ்வுச் சான்றிதழ் புதுப்பிபதற்கு வங்கி ஊழியரை வீட்டுக்கு வர முடியுமா எனக் கேட்கலாம் என்று அப்பாவின் இறுதி தினங்களில் ஒரு முறை கூறியதற்கு, வங்கி மேலாளருக்கு இருக்கக்கூடிய பணிச்சுமையை வலியுறுத்தி, எழுந்து அமரவே சிரமப்பட்ட தனது இறுதிக்கட்டத்திலும் நேரில் வங்கிக்கு செல்ல வேண்டும் என்று முனைப்பாக இருந்தார்கள்.

இவ்வளவு விரிவாக இதை எழுதக் காரணம், அப்பா இன்றிருந்தால், இத்தகைய ஊழல் பெருச்சாளிகள் என்றுமே இருந்தனர் என்பதையும் அதற்கு நடுவில்தான் நாம் நமது மனசாட்சிக்கு உட்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதே அப்பாவின் நிலைப்பாடாக இருந்திருக்கும். என்னை இந்த உயர் அழுத்த வங்கி வேலை வேண்டாம் என்று அப்பா பலமுறை அறிவுறித்தியது இதனால்தான். ஊழ் வலியது - மென்பொருள் பயணமும் ஒருவகையில் அங்குதான் எனைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது 😊

ஆனால் எங்குதான் இவர்கள் இல்லை! தனியாரோ, அரசுப்பணியோ, பெருநிறுவனங்களோ எல்லா இடங்களிலும் நீக்கமற இவர்கள் இருக்கிறார்கள். துலாமுள்ளை நிகர் செய்ய, அலுக்காமல் தங்கள் உண்மையையும் உழைப்பையும் தந்து நிகர் செய்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டு தரப்பும் என்றுமே உண்டு.

வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாக உழைப்பதும், எதிர்மறை மனிதர்களை, நமது இயல்பு, அல்லது சூழல் மற்றும் சார்ந்திருப்போர் முதலிய புறக்காரணிகளைப் பொறுத்து தவிர்த்தோ, தகர்த்தோ அவரவர் தன்னறத்தையும் நெஞ்சுறுதியையும் பொறுத்து எதிர்கொண்டே நாம் எந்த ஒரு வேலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பணம் அதிகமாகப் புழங்கும் துறைகளில் அழுத்தமும் அசிங்கமும் அதிகம். மிக சமீபத்தில் தங்கை ரம்யா தன்னுடைய அலுவலகத்தில் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய மேல்மட்ட ஊழலை வெளிக்கொணர்ந்து மேலிடம் வரை எடுத்துச் சென்று நேருக்கு நேர் மோதி வென்றது. அன்றைய தினம் தந்தையின் இருப்பு இன்றும் தொடர்வது என்ற எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

இதனால் எலலாம் நமக்குக் கிட்டுவது மன உளைச்சலும் பல சமயங்களில் நமது வேலையே இழப்பதும்தான். பிழைக்கத்தெரியாதவர் என்ற பெயர் உட்பட எல்லாம் கிடைக்கும்.

பிழைப்பு என்பது வெறும் வயிற்றால் நிரப்பப்படுவதாக அனைவருக்கும் இருப்பதில்லை, அதை மீறிய ஒன்று, வெறும் வசதிகளாலும் அதிகாரத்தாலும் நிரப்ப முடியாத ஒன்று, நம்மில் சிலருக்கேனும் முக்கியமாக இருப்பதால்தான் பிழைக்கத் தெரியாவிடிலும் பிழை இழைக்கத் தெரியாதவர்களாக இருப்பதில் முனைப்புக் கொள்கிறோம்.இது என்றென்றும் தொடரவிருக்கும் ஒரு சரடு. எனவே தந்தையர் வழி நடப்பதில் பெருமையே.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே -- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ -- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? "

#என்தந்தைஎன்ஆதர்சம்

இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான பல இணையப் பகடிகள் சிரிப்பை வரவழைத்தாலும், நானும் சில சமயங்களில் அது போன்றவற்றை நண்பர்களுடன் பகிர்ந்தாலும், ஆழத்தில் உணர்வது இதுதான்:
நமது முதல் மந்திரிகளையும், எம் எல் ஏ- க்களையும், பிரதமரையும் உட்பட அனைவரையும் அவர்கள் நமக்கு எதிர்நிலைக் கொள்கைகள் உடையவர்களாயிருப்பினும் ஏதோ ஒரு வகையில் நமது பிரதிநிதிகள்தான் என்ற பிரக்ஞையின்றி பகடியெனும் பகிர்வுகள் மூலம் வரையறையின்றி சமூக ஊடகங்களில் பகிரும் வழக்கம் இன்று பலருக்கும் இருக்கிறது. அது, பிடிக்காத நடிகர் அல்லது தலைவர் சுவரொட்டியில் சாணியடிப்பது போலத்தான், நம்முள் ஒரு கீழ்மை நிறைவு கொள்வதன்றி பயன் இல்லை. எனது வீடு குப்பையாக இருக்கிறது என நாமே உரக்க ஊருக்குச் சொல்வதுதான். நம்மால் முடிந்த இடங்களைத் தூய்மை செய்வோம். வீட்டு எல்லையை விஸ்தரித்து குழாயடி வரை சுத்தம் செய்த தாத்தாவும் இதைத்தான் வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.

அதே போலத்தான் இந்த ஊழல் ஒரு அலை, கூடிய சீக்கிரம் இந்த ஊழலை மறந்து அடுத்த ஊழல் நோக்கி நகர்ந்து விடுவோம். எனில் பல்சக்கரங்களை நகர்த்துபவர்களின் சத்தியத்தால் இந்த தேசம் முன்னகர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இந்தப் பதிவை எழுதத் தூண்டிய தம்பி ராஜேஷ்க்கு நன்றி

Thursday, November 9, 2017

பனிக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - முழு வடிவம் - பகுதி 3

-5-

மிக இளம் வயது முதலே என்னுள் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துவன மலைகள். பேருந்துப் பயணங்களில் உடன் வருவது போலத் தோன்றும் மலைத்தொடர்களைப் பார்த்து குழந்தைப் பருவத்தில் பயந்து அழுதிருக்கிறேன். இன்னும் அந்த அச்சத்தின் சுவடை என் ஆழ்மனதில் உணர முடிகிறது. மலைகளின் பேருரு, அசைவின்மை, அணுகமுடியாமை, இருளோடு கரைந்து காண முடியாமல் போகும் ஆழ்நீலம், நுண்கோடுகளாக ஒளிவிடும் தன்மை எனப் பல விளக்கவியலாத காரணங்கள்தனிமை, துயர் ஆகியவற்றால் ஆகிய முடிவேயில்லாத இரவு, நீண்ட  மலைத்தொடரை நினைவுறுத்தும். 'மலையெனத் துயர்வரினும்' என்ற சொற்றொடரை முதலில் சொன்வர் இதுபோல உணர்ந்திருக்கலாம்.



எனில் மலைகளின் கவர்ச்சியும் அதீதமானது. மலைகள் அதன் நிமிர்வால், நொடிதோறும் உருமாறினும் நிலையாயிருப்பதன் காட்சிப்பிழையால், ஒளித்துவைத்திருக்கும் ரகசியங்களால் வசீகரிப்பதும் அதிகமாகிக் கொண்டேதான் வந்தது. தன்னுள் பொதிந்திருக்கும் கரவுகளால் மலைகள் மயக்கின. மேற்குத் தொடர்ச்சி மலையும், மலைகளுக்கெல்லாம் சிகரமாகிய இமயமலையும்  அதில் உலவுவதும் தொடர்கனவுகளாயின.

வடதுருவத்து பனிக்காற்றைத் தன் விரிசடையில் தாங்கி பாரதத்தைக் காக்கும் பேரளியை, அதன் உச்சியில் தோன்றும் நிலவை, முகடுகளிலிருந்து பொழிந்திறங்கும் கங்கையெனும் அருளை, அனைத்தையும் இணைத்து சிவமென உருவகித்த முதல் மூதாதைகளின் உள்ளங்களில் எழுந்த பெருவியப்பும் மெய்சிலிர்ப்பும் இமயத்தை எண்ணும்போதெல்லாம் என்னுள் எழும். அதை ஓவியத்தில் வடிக்கும் பெருவிருப்பும் உண்டு. அப்பனிமலை முகடுகளை இன்னும் சில நிமிடங்களில் பார்த்துவிடலாம் என்னும் சாத்தியமே உடல் தளரும்போதெல்லாம் ஊன்றுகோலாகியது.

உச்சியை அடையும் தருணத்தை மனம் விதவிதமாகத் தீட்டி வைத்திருந்தது. அது  நிகழ்ந்துவிட்டதாலேயே அந்த நிமிடம் ஏதும் உளக்கிளர்ச்சி ஏற்படவில்லை. கீர்கங்கா என்ற அறிவிப்பைப் பார்த்துதும் திரும்பிப் பார்த்தால் ஒரு சரிந்தேறும் விரிந்த புல்வெளியெங்கும் பல வண்ணங்களில் கூடாரங்கள். முன்னரே வந்துவிட்ட குழுவினர்  கீர்கங்காவின் வெந்நீரூற்றுக்களுக்குத்தான் சென்றிருப்பார்கள் எனத் தோன்றியது. அது எங்கே என விசாரித்தால் அப்பெருவிரிவின் உச்சியைக் காட்டினார்கள். அரை கிலோமீட்டரே இருக்கக்கூடும். அத்தொலைவை கம்பூன்றி, 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு' எனப் பாடி ஏறும் கே.பி.சுந்தராம்பாள் போல முக்கால்மணி நேரம் ஏறினேன்.


"முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட மலையேறும் இந்தியப் பெண்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவே, எனவே கவலைப்படாதீர்கள், நீங்கள் ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவர்" என்றெல்லாம் கூறி ஊக்குவித்தனர் குழுவினர். நம்பத்தான் வேண்டியிருந்தது. ஏறும் வழியெங்கும் பயணிகள் மிகக் குறைவே. கசோலில் குழுமியிருந்த நெரிசலில் இருந்து ஒரு சதவீதமே மலையேற வந்திருந்தது. சராசரி வயது முப்பதுக்கும் கீழே. மலையேறுபவர்களில் வெளிநாட்டினர் மட்டுமே இருபாலரும் அனைத்து வயதினரும் இருந்தனர்.

உச்சியில் செங்கொடி பறந்த ஒரு சிறு கோவில் இருந்தது. அதற்கு சில அடிகள் முன்னதாக ஒரு பெரிய வெந்நீரூற்றுக் குளத்தை இரண்டாகப் பிரித்து பெண்களுக்குத் தனி அறை போலக் கட்டியிருந்தனர். 33 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தது. 

 முன்னரே நீராடிக் கொண்டிருந்தவர்களோடு இணைந்து கொண்டேன். நீண்ட காலம் பிரிந்த நட்புகளைக் கண்டது போல சிறிது நேரம் ஒரே உற்சாகம். சிலர் ஏற்கனவே குளித்து வெளியேறி அமர்ந்திருந்தனர். கந்தகம் கலந்த நீராதலால் அதிக நேரம் இருந்தால் தலை லேசாக சுற்றுகிறதென முன்னதாகக் குளித்து வெளியேறிய பெண் கூறினார். வெந்நீர்க்குளம் ஐந்தடி ஆழம் கொண்டது.
அது நீச்சல்குளம் அல்ல, அதில் இறங்குவதற்கு முன்னர், அதிலிருந்து வெளியேறும் சிறு குழாய்களில் குளித்து உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டே நீரூற்றுக்குள் இறங்க வேண்டும். என்பதை வலியுறுத்தும் அறிவிப்புகளும் இருந்தன.


உடலின் ஒவ்வொரு தசையும் தன்னிருப்பை அறிவித்துக் கொண்டிருந்தது. நீர் உடலில் பட்டதும் எரியும் அளவுக்கு வெப்பம். எனில் உள்ளே இறங்கி பாசி படிந்த தரையில் கால்களை ஊன்றிக் கரையைப் பற்றிக் கொண்டு நின்றதும், நீர் அணுஅணுவாக உள்வாங்கி எண்ணத்தையும் நிறைத்துக் கொண்டது. கொதிக்கும் நீரும் குளிரும் உடல்வலியும் ஒரு போதையை ஏற்ற, நீரிலிருந்து வெளியேற மனமே இல்லை. மீண்டும் தோழிகள் எச்சரிக்கவே வெளியேறி கரையில் அமர்ந்ததும் அவர்கள் சொன்னது புரிந்தது. பொதுவாகவே குளியலுக்குப் பிறகு பசியும் இனிய சோர்வும் ஏற்படும். நடையின் களைப்பும் கந்தக நீராவியும் சேர்ந்து செயலோயச் செய்தது. எழவும் உடல் ஒப்புதலின்றி தலை மிகவும் லேசாக உணர, அப்படியே அமர்ந்திருக்கவே முடிந்தது

பின்னர் அந்த அறையிலிருந்து வெளியேறி புல்தரையில் காற்றில் படுத்திருந்தேன்.  இயல்பு நிலை திரும்பியதும் அதுவரை மறைந்திருந்த பசி எழுந்தது. பசியெழுந்த கண்களுக்கு உணவகங்கள் தெரிந்தன.அந்தச் சரிவு முழுவதும் பல விடுதிகள் தங்குமிடமும்(கூடாரம்) உணவகமும் நடத்துகிறார்கள்.  இருபது முப்பது கூடாரங்கள ஒவ்வொரு விடுதிக்கும் சொந்தமாக இருந்தது. மதியதுக்கும் இரவுக்கும் சேர்த்து மாலையில் உணவு. அத்தனை தொலைவில் எல்லா விதமான உணவும் சமைத்தளிக்கும் கைகள். வெளிறிய மஞ்சள் மாலை. அமர்ந்திருந்த இடத்துக்கு அருகில் காற்றில் படபடத்தது கூடாரம். அருகில் ஒரு சிறு பாறையில் மூன்று பெரிய சிலந்திகள் தொற்றி ஏறிக் கொண்டிருந்தன. பாறை மாமலையில் கயிறு கட்டியேறும் மலையேற்றக் குழுவினர்.

கண்ணுக்கு எதிரே பெருமலைத்தொடர் - பார்வதி சிகரம்வெள்ளி உருகியது போல அருவிகள் மலையில் பல இடங்களில் ஒலியின்றி சரிவிறங்கின. அனைத்துக்கும் ஆதார சுருதியாக நதியின் நடையோசை. அத்தலத்தின் புராணமாக பார்வதி தேவி ஒருமுறை நீராடும் போது காதணியைத் தொலைத்துவிட சிவன் தேடித் தந்த இடமாக ஒரு கதையை யாரோ சொன்னார்கள். நீராடும் இடத்தில் தன் தோடைத் தொலைத்துவிட்டுப் புலம்பிய ஹேமாவிடம் அக்கதையைச் சொன்னேன். எங்கிருக்கிறாய் எனது சிவனே என்று குரலெழுப்பி சிரித்தாள். தோடுடைய செவியனும் சிரித்திருக்கக் கூடும்.

வேகமாகச் சரிந்திறங்கிய அந்தியொளியில் மின்னிய பனிமலைகளின் அடுக்குகளிலிருந்து முகில்கள் விரைந்து நாங்கள் இருந்த சிகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனகுளிரும் அடர்ந்து கொண்டே இருந்தது. ஏழு மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே இருந்தது. காடுகளின் மரங்கள் தனிக்கோட்டுருவை இழந்து முதலில் இருளத் தொடங்கின. பூச்சிகளை விரட்டப் பல இடங்களில் புகை மூட்டம் போட்டிருந்தனர். அத்துடன் மேகமும் இறங்கி சூழ்ந்து கொள்ள காட்சி மங்கியது. கேளிக்கைக்கென மூட்டப்பட்டிருந்த நெருப்பு ஆங்காங்கே தெரிந்தது. சூரியமின்விளக்குகள் மிக மென்மையாக ஒளி சிந்திக் கொண்டிருந்தன. இரவின் முற்றுகையில் அந்தி சரணடையும் தருணம் எதுவெனத் தெரியாது நழுவிச் சென்றது.


இரவுணவுக்காகவும் புகைக்காவும் நீருக்காகவும் குழு வேறுவேறு திசைகளில் பிரிந்து சென்றிருந்தது. நானும் ஹேமாவும் இன்னொரு பெங்களூர் தோழி அனுஷாவும் புல்வெளியில் அமர்ந்திருந்தோம். மிக உற்சாகமான இரு பெண்கள். எங்களுக்கு வேறு உத்தேசங்கள் இல்லை. குளிர்  மிகுந்துவிட்டது. கழிவறை வசதிகள் நன்கு இருந்தன - நீள்குழாயில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் இளவெந்நீர் நிறுத்த வேண்டிய தேவையே இல்லாமல் அவ்விடத்தை சுத்தமாக நாற்றம் இன்றி வைத்திருந்தது. மூவர் தங்கிக் கொள்ள ஒரு கூடாரம். உள்ளே மெத்தையிட்டு இருக்க குளிர் ஓரளவு தயங்கி வெளியே நின்றதுதோழியரோடு இரவுக்காக அறையைச் சற்று சீரமைத்துவிட்டு வெளியே வந்தபோது முகில் கடந்து விட்டிருந்தது. கண்களிலிருந்து எண்ணைப் பசை அகன்று விட்டது போல் ஒரு தெளிவு. இருளிலும் ஒளிர்ந்தது பனிச்சிகரம்.

எங்கிருந்து ஒளி கசிகிறது என விண்ணைப் பார்த்ததும் உடல் விதிர்த்ததுஇடைவெளியேயின்றி நட்சத்திரங்கள். ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் உற்று நோக்கும்  பார்வை நிலையழிவை ஏற்படுத்தியது. எவ்வளவு சிற்றுயிர் இந்த மானுடன்; எனில் இயற்கையோடு இடையறாது மோதிக் கொண்டே இருக்கிறான்; குழந்தைகளுக்கே உரிய அறியாமையோடு. கையை இழுத்து, வயிற்றில் ஏறி முடியைக் கலைத்து, முதுகில் குத்தி, கன்னத்தைக் கடிக்கும் மகவின் சீண்டலை கருணையோடு அனுமதிக்கும் தந்தையென பிரபஞ்சம். 'மகத்தான இந்த விரிவின் முன்னால் பதைபதைப்பின்றி நிற்க முடியாதுதான் மனிதன்
வீடுகளைக் கட்டிக் கொண்டான்' என்றகாடு நாவலின் வரி நினைவில் வந்தது.


சிங்கையிலும் மதுரையிலும் சென்னையிலும் எங்கிருந்தாலும் காணும் ஓரியன் மண்டலத்தின் மூன்று தாரகைகளைத் தேட சரிவுக் கோணத்தில் தெரிந்தது. முன்பின் அறியாத கூட்டத்தில் தெரிந்தவர்களைப் பார்த்த அமைதி ஏற்பட்டது. அவற்றை வைத்து, என் தோழியின் மகனோடு தினம் காணும் வேறு சில நட்சத்திரங்களை அடையாளம் காண முயன்று கொண்டிருந்தேன். அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றை அறிய முயலும் மனித அறிவு. அவனிடம் சொல்வதற்கேனும் சில புதிய நட்சத்திரங்கள் காண வேண்டும். பெயரறிய கூகுள் அங்கில்லை. மனதில் மட்டும் பதிந்து கொண்டேன். குளிர் மெல்ல எலும்புகளுக்குள் இறங்கத் தொடங்கியது. இரவு கலப்படமில்லாது  கருமையோடு இருந்தது. கூடாரத்துக்குள் நுழைந்து கொள்ள இரவின் முழுக்கருமையோடு குளிரும் போர்வைக்குள் அடங்கியிருந்தது. இரவை துணைக்கும் எத்தனையோ சிறு பூச்சிகளின் ஒலி. மாலையில் பார்த்த சிலந்திகளின் நினைவு வந்தது. தொடர்ந்து தவளைகளின் ஒலி கேட்டதும் நாகங்களை மனம் கற்பனை செய்து கொண்டது. அரவும் அலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவும் சடை - இறுதி நினைவில் இது என்ன பாடல் என யோசிக்கும் போதே கனவுகளில் குதிரை இந்தியில் பேசத் தொடங்கிவிட்டது.

-6-

விழிப்பு தட்டியதும் கூடாரத்தைத் திறந்து வெளியே பார்த்த போது வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. குளிராடையை கூடாரத்திலேயே விட்டுவிட்டு ஒரு காற்று தடுக்கும் ஆடையை அணிந்து கொண்டு ஊற்றை நோக்கி மெல்ல ஏறத் தொடங்கினேன். காற்று குழலோடும் உடையோடும் கலைத்து விளையாடியது. நீர்க்குளத்தருகே ஓரிடத்தில் அமர்ந்து கதிரின் முதல் ஒளி முகடுகளைத் தொடும் தரிசனத்துக்குக் காத்திருந்தேன். நடமாட்டம் இல்லாத காலை. தொலைவின் பனி உச்சிகள் மெல்ல ஒளியேற்றிக் கொண்டனகதிர் எங்கோ மலைகளுக்குப் பின்னால் எழுந்துவிட்டதை உணர முடிந்தது. வானின் இளநீலமும் மலையின் கருநீலமும் இணையும் கோடுகளில் ஒளி கசிந்து கொண்டிருந்தது. வேகமாக வெளியேறிய இருள் அருகிலிருந்த வலதுபுறக் தேவதாருக் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டிருந்தது.

எதிரே மலையின் உடலில்  மின்னித் தெரிந்தன அருவிகள். விழியை மூடினாலும் பார்வதியின் பெருஞ்சுழிப்பையும் வேகத்தையும் உள்ளே நிறைத்துக் கொண்டிருந்தது நீரின் இடையறாத ஒலி. இரண்டு நாட்களாக மூச்சென உடனிருக்கும் ஆதார நாதம். சில நொடிகளின் விழி அலைவில் தவறவிட்டு விட்டேன்; மலை தனது பொன்முடியைச் சூடி முழுமோனத்தில் அமர்ந்திருந்தது. திடீரென்று மீண்டும் ஒரு குளிர் அலை எழுந்து உடலை மூழ்கடித்தது.

ஆறு மணியானதும் நீரூற்று குளிக்கத் திறக்கப்படும். மீண்டும் ஒரு முறை வெந்நீராடல். இம்முறை ஏகாந்தமாக - மொத்தக் குளமும் எனக்கென விரிந்திருக்க, குளத்தில் வந்து கலந்த சிற்றோடை சலசலத்துக் கொண்டிருந்தது. நீரின் மேலெழுந்து நின்ற மெல்லிய புகையில் மிதந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. கரையேறி உடைமாற்றிக் கோவிலை நோக்கி நீண்ட படிகளில் ஏறும் போது மணி ஒலிக்கத் தொடங்கியது. மணியின் கார்வையோடு வெந்நீர் குளியலுக்குப் பிறகு உள்ளிருந்து எழுந்த இதயத்துடிப்பும் இயைந்து காதில் கேட்டது. படிக்கு ஒரு மணியென ஒலிக்க அந்தச் சிற்றாலயத்தின் நந்தியருகே நின்று பார்த்தேன்.  மலையின் பின்னால் வெள்ளமெனப் பெருகிவிட்டது கதிரொளி.


திரை விலகி உள்ளே ஒற்றை தீபத்தின் ஒளியில் வீற்றிருந்தது சிவம். மூவாயிரம் ஆண்டுகள் அங்கு சிவன் தவமிருந்ததாகக்  தலவரலாறு. மூவாயிரமா - இக்கணம் வரை நீடிக்கும் தவமல்லவா அது.

மனித வருடங்களில் அளவிட முடியாத ஏதோ ஒரு புள்ளியில் ஒளியும் புவியும் விசும்பும் காற்றும் புனலும் மட்டுமே அறிந்த முதல் ஆடலை நிகழ்த்தி விட்டு மலையென அமர்ந்து விட்ட பெருமோனத்தான். ஒலி வெள்ளருவி ஓங்குமலைநாடன். காலையும் மாலையும் அவன் மடியில் தவறவிட்டுச் சென்ற தன் பொன் அணிகளை, பகல் முழுவதும் இரவுமுழுவதும் அவன் மடியில் தவழ்ந்தோடித் தேடியலையும் மலைமகள். சிரிக்கிறாள் சீறுகிறாள் அலைக்கழிகிறாள் . பெருந்தவத்தான் முகம் புன்னகையில் கதிர்சூடி பிறைசூடி ஒளிகொள்கிறது. பொன்னொளி பார்த்து அமைதிகொள்கிறாள்.

ஆலயத்தில் மணி அதிர்ந்தெழ மண்ணில் வந்து விழுந்தேன். படியிறங்கியதும் மலைவிட்டிறங்கத் தொடங்கியதும் அதன் போக்கில் நிகழ்ந்தன. எல்லாமே அதனதன் போக்கில்தானே நிகழ்கின்றன - அறிவென்றும் மனமென்றும் மயங்கி நிற்கும் போது நாம் நடத்துவதாக ஒரு மயக்கம்.

ஏறுவது கடினமெனில் சரிவிறங்குவது அதனினும் அறைகூவலாக இருந்ததுபனியில் நனைந்திருந்த மண்ணில் பாறைப் பதிவுகளில் சறுக்காமல் கால்வைத்திறங்க உடல் பழகிக் கொண்டிருந்தது. இறங்கும்போது சில கிளைவழிகளில் வேகமாக இறங்க முடிந்தது. ஆனால் உயரமான பாறைகளில் இறங்கும் போது கால்மடித்து அமர்ந்து இறங்குவதே பாதுகாப்பாக இருந்தது. நதியை நெருங்கிக் கொண்டிருப்பது அணுகி வரும் பேரோசையில் தெரிந்தது. சிற்றாறுகள் அருவிகள் கடந்து, முந்தைய நாள் மூன்று மணி நேரத்தில் கடந்த தொலைவை ஒன்றரை மணிநேரத்தில் இறங்கி ருத்ரநாக் அருவிக் கரையை வந்தடைந்தோம்.

இளைப்பாற அருவிக்குளத்தில் மீண்டும் இறங்கினோம். முந்தைய தினத்தை விட நீர் தண்ணென்றிருந்ததுகுழுவினரில் சிலர் அருவியை மேலும் அணுகி குளிக்கத் தொடங்கினர். குளத்தின் பெரும்பாறையில் அமர்ந்து நீர் சிலம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்பொழியும் நீர்ச்சிதறல்களில் சிறு வானவில் தெரிந்தது. மாயவில் சிறகு கொண்டது போல நீர்த்திவலைகள் ஊடே பறந்தலைந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி பெருவெள்ளப் பெருக்கின் முன், பெருமலையடுக்கத்துக்கு முன், தன் சிறு சிறகு விரித்து வண்ணங்களோடு தனக்கேயான வானைத் தயக்கமின்றி விரித்தெடுக்கும் சிற்றுயிர்.  தயக்கம் சட்டென்று அகல எழுந்து நீருக்குள் சென்றேன்

முதல் தொடலில் தீக்கதிர் தலையிறங்கியது. இடையைத் தாண்டுவதற்குள் தீயைப் பனியென்று சொன்னது. மேலும் நீருள் முன்னகர, நேற்றும் இன்றும் அற்ற ஒரு பொழுதில், சூழ்ந்து வழிந்திறங்கியது பெருந்தவத்தின் ஒரு துளி பல துளி சிறு வெள்ளமாக - ஓசைகள் அடங்கிய ஒரு தருணம் தலைக்கு மேலே கவிந்திருந்தது.  

மூச்சுக்காக தலையை வெளியே நீட்டியதும் காது வெடித்துத் திறந்தது போல ஓசைகள். ஒளியும் நீரும் வழிந்து விழிதிறக்க முடியாத சில நொடிகளுக்குப் பிறகு கால்வழியாகக் குளிர்தெரிந்தது
ஹேமா அந்தக் குளிர் நீர் சுனையில் வில்லென பின்புறம் உடல் வளைத்து நிலம்தொட்டு ஒரு கால் தூக்கி அசையாது நின்றாள். அர்ஜுனன் கையேந்திய காண்டீவம் என உடல் வளைந்திருக்க, சீறத் துடித்த நிலையில் சிலைத்திருந்தது வான்நோக்கிய அவள் சிறுபாதம். இன்ஒரு பக்கம் ‘Teach for India’ எனும் அமைப்பில் பணிபுரியும் மற்றும் ஒரு பெண் ஆர்ப்பரித்து வீழும் அருவியின் மடியில் தாவியேறி பெருநீர்ப் பொழிவைக் குழலில் தாங்கி கொற்றவையெனக் கால்மடித்து அருவியில் அமர்ந்தாள். இயற்கை ஒவ்வொருவருக்கும் உள்ளிருந்த இன்னொருவரை இழுத்து வெளியில் விட்டது


பாம்பு சட்டையை உரித்து விட்டது போல, அதுவரை எனக்கு உள்ளிருந்த தயக்கங்கள் அச்சங்கள் அங்கே கரைந்தன. அங்குதான் இப்பயணம் முழுமை கொண்டது. சிறிது தாமதமான தருணமாக இருக்கலாம்; அதுவரையிலும் சில காட்சிகளை தரிசனங்களை அதீத முன்னெச்சரிக்கையிலும் தயக்கங்களிலும் தவறவிட்டிருக்கலாம். இருந்தாலும் இப்போது மனம் உற்சாகம் கொண்டிருந்ததுபறக்கத் தெரிந்துவிட்ட பறவையின் முதல் சிறகு விரித்தல்.
ஐந்து கிலோமீட்டர் இறங்கி முடித்திருந்தோம்; இன்னும் எட்டு கிலோமீட்டர் இருந்தது. உச்சிவெயில் - உருகும் வியர்வை - களைத்த உடல் - எனில் உள்ளம் மலர்ந்திருந்தது. குழுவில் பெரும்பாலோர் விரைவாக இறங்கத் தொடங்கிவிட்டனர். மூவர் மட்டும் குழு ஒருங்கிணைப்பாளர் ஒருவருடன் சில அடி தொலைவுகளில் முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்தோம். எண்ணற்ற முகமறியா பயணிகள் இறங்க முடியாமல் தவித்து நின்ற பாறைச் சரிவுகளில் கை கொடுத்தனர். ஒவ்வொரு அடியிலும் பயணம் விரிந்து கொண்டே சென்றது.

மீண்டும் இரு நதி இணைவையும் நீர்மின்னணு நிலையத்தையும்  கடந்து பர்ஷிணியைச் சென்றடைந்தோம். அன்றிரவே தில்லி நோக்கிய பயணம்.

இறங்கும் பயணத்தில் பின்னால் சென்று மறைந்த மலைகளைப் போல அனைத்தும் நினைவுகளாகி விட்டன. இரண்டு நாட்களின் ஐந்து ஆறு மணிநேர நடைமலையேற்றம், தில்லி திரும்பிய நெடும்பயணம், சிங்கை திரும்பிய வான்பயணம், அனைத்தும்.

இந்தப் பயணம் முதல் முறையாக கூடுடைத்து வண்ணத்துப்பூச்சி சிறகு விரித்த அனுபவம். குழுவில் இருந்த ஒவ்வொரு பெண்கள் வாயிலாகவும் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை குறித்த பார்வையும் அவர்களது தெளிவான தெரிவுகளும் இப்பயணத்தில் நான் அறிந்து கொண்ட மற்றுமொரு முக்கியமான பகுதிஅதை விரித்தெழுத இன்னொரு தொடர் தேவைப்படும்.

சிறகுகளில் கனவுகளெனும் வண்ணம் சுமந்து காத்திருக்கிறது வண்ணத்துப்பூச்சி. கண்ணாடிக்கு வெளியே சாங்கி தளத்திலிருந்து ஓசையின்றி பறந்தேறுகிறது ஒரு விமானம் வேறொரு மலர்தேடி.

- வேறு பயணங்களில் சந்திப்போம் -