Wednesday, February 10, 2021

சிங்கை குறிப்புகள் - 3 - சிராங்கூன் சாலை

இன்று ஒரு நினைவுக்குறிப்பு. 2006 அக்டோபர் முதல் வாரத்தில் சிங்கை வந்திறங்கியபோது அதுவே எனது முதல் வெளிநாட்டுப் பயணம். வெளிநாட்டுப் பயண ஆயத்தங்கள், விமான நிலைய முறைமைகள், விசாவுக்கு பதிலாகக் கையில் கொடுக்கப்பட்ட அனுமதிக் கடிதம், அதை சிங்கை சென்று கொடுத்தபின்னர் விசா தருவார்கள் என்ற சொல்லில் ஏற்பட்ட லேசான ஐயம் எனப் பல தகவல்களை சிங்கையில் இருந்த நண்பர்கள் சிலரிடம் பேசிப் புரிந்து கொண்டு விமானம் ஏறிவிட்டாலும், இங்கு வந்து இறங்கியதும் சற்று பதற்றமாகவே இருந்தது. சாங்கி விமான நிலையத்துக்கு என்னை வரவேற்க  நண்பர் ஒருவர் வந்திருந்தார். 

டாக்சி எடுத்து அவருடன் பேசியபடி எனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி அறைக்கு சென்றபோது உள்ளே ஏதோ ஒரு சிறு பயமும் உற்சாகமும் கலந்தே இருந்தன.  இரண்டில் எதன் விகிதம் அதிகம் எனத் தெரியவில்லை. இருளையே  பகல் என நடிக்க முயன்ற விளக்கொளியில் வழுக்கிச் சென்ற கார் ஏதோ ஒரு மேம்பாலத்தில் ஏறியபோது கடல் எங்கும் கார்த்திகையின் அகல் சுடர் போல ஒளிப்புள்ளிகளாகத் தெரிந்தது . 

வானுயர்ந்த ஒரு சில கட்டிடங்களை முதல் முறை கண்டதும் மீண்டும் ஒரு பயம் அடிவயிற்றில் எழுந்தது. நண்பர் இங்குதான் உனது அலுவலகம் இருக்கிறது என்றார். அப்படி அறிமுகமானது  மில்லெனியா டவர்(Millenia Tower) என்ற 41 மாடிக் கட்டிடமும் அதன் அருகே அமைந்த சன்டெக் கோபுரங்களும்(Suntec Towers). இதைக் கடந்து கார் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீதி ஒன்றில் நுழைந்தது. வரவிருந்த தீபஒளித்  திருநாளை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த ஒளிவெள்ள ஒப்பனைகள்.  

2017 - தீபாவளி வண்ணவிளக்குகள் - சிராங்கூன் சாலை நுழைவு

2018 தீபாவளி மாதங்கியுடன்

திடீரென தி.நகரின் பரபரப்பான ஒரு வணிக வீதிக்குள் நுழைந்துவிட்ட உணர்வு. லிட்டில் இந்தியா எனப்படும் சிராங்கூன் சாலையில் அமைந்திருந்தது விடுதியறை.  எங்கும் தமிழில் பெயர்ப்பலகைகள்.  கண்ணில் படும் அனைவரும் அறிந்தவர்கள் போலிருந்தார்கள். 



அறியா நிலங்களில் மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தாலும் வீடு திரும்பியதும் மனதில் ஏற்படுவது போன்ற ஒரு ஆசுவாசம். தங்கும் அறையை அடைந்து ஒரு சாளரத்தின் வழியே வெளியே நோக்கியதும், அங்கு கண்ட காட்சி மீண்டும் திடுக்கிட வைத்தது. அருகில் இருந்த மிகச் சிறிய ஒரு புல்வெளியில் நூற்றுக்கணக்கான ஆட்கள். அதற்கப்பாலும் நீளும் அச்சாலை முழுவதும் ஆயிரக்கணக்கில் தலைகள், அனைத்தும் ஆண்கள். அது போல ஒரு காட்சியை அதற்கு முன் கண்டிராததால் மனம் திடுக்கிட்டது. உணவுண்ண வெளியே சென்ற போது அது ஒவ்வொரு வார இறுதியிலும் லிட்டில் இந்தியாவில் காணப் போகும் காட்சி என்பது புரிந்தது. இந்த வாராந்திர நிகழ்வுகள், நாட்கள் செல்லச்செல்ல  பழகிவிட்ட போதும், இரண்டு வருடங்களுக்கு முன் ஒருமுறை சிராங்கூன் சாலைக்கு இணையாக செல்லும் ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து குறுக்கே வந்து சிராங்கூன் சாலையில் இணையும் ஒரு குறுக்குத்தெருவில்  ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு இடையில் நடந்து வந்த போது  பெண் என்னும் தன்னுணர்வும் ஒரு அனிச்சையான தற்காப்பு உணர்ச்சியும் ஏற்பட்டதை உணர நேர்ந்திருக்கிறது.  

இந்த நாட்டின் கட்டுமானப் பணிகளிலும் உற்பத்தித் துறையிலும் ஈடுபடும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பணியாளர்கள் இந்த இரு சாலைகளிலும் குழுமும் தினங்கள் வார இறுதி நாட்கள்.  இடைவிடாது தன்னை செதுக்கிக் கட்டிக்கொண்டே இருக்கும் இந்நாட்டின் ஓயாஉளிகளை இயக்கும் பல்லாயிரம் கரங்கள். விடியலுக்கு முன்னரே தொடங்கி இருளும் வரை நீளும் பணிச்சுமை, மிகச் சிறிய தங்குமிடங்கள் தவிர வேறெங்கும் செல்ல அனுமதியில்லாத வார வேலை நாட்களின் சுமையை சற்றே இறக்கிவைக்கவும் தங்கள் நண்பர்களை சந்தித்து அளவளாவவும், இந்திய உணவு வகைகளை சுவைக்கவும், மது அருந்தவும், வார இறுதியில் பெற்ற ஊதிய பணத்தை வீட்டுக்கு அனுப்பவும், அத்தியாவசிய பொருட்களை மலிவாக முஸ்தபா மற்றும் அருகிருக்கும் அங்காடிகளில் வாங்கவும் என இந்தக் கூடுகைகளுக்கு பல காரணங்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு சிறு கலவரத்துக்குப் பிறகு இப்பகுதியில் சட்டதிட்டங்கள் கூடியிருக்கின்றன.   நோய்த்தொற்று காலத்துக்குப் பின்னர் அநேகமாக இவர்களின் வருகை நின்று போய்விட்டது, அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தியாவுக்கு அழைக்கும் தொலைபேசி அட்டைகள் இங்கு விலை மலிவாகக் கிடைக்கும். ஒலிபெருக்கிகள் கூவிக் கூவி இவற்றை விற்பதை இங்கே காணலாம். இந்திய, வங்க தேச, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் குழுமும் இடமாக சிராங்கூன் சாலை திகழ்கிறது. ஞாயிறு மாலை அனைவரும் அணிவகுத்து நின்று மீண்டும் தங்கள் புறாக்கூடுகளுக்கு செல்வதை எத்தனையோ நாட்கள் வருத்தத்தோடு பார்க்க நேர்ந்திருக்கிறது. இன்று போல இணைய இணைப்புகளும் வாட்சப் வசதிகளும் இல்லாத நாட்கள் அவை. கிடைக்கும் ஓரிரு மணித்துளிகள் அவசரம் அவசரமாக ராமநாதபுரத்திலும், தேவிபட்டணத்திலும், அறந்தாங்கியிலும் இருக்கும்  உற்றாரோடு பேசிவிட்டு மீண்டும் அந்தக் கூண்டுகளுக்குள் ஏறிக்கொள்ளும்  அந்த இளைஞன் தினமும் வயிறாற உண்கிறானா? தன் தாயிடமோ மனைவியிடமோ அவன் சாப்பிட்டதாகச் சொன்ன உணவு வகைகளை உண்மையிலேயே உண்டிருப்பானா? ஊருக்குப் பணம் அனுப்பிவிட்டு சட்டைப் பையைத் துழாவும் அந்தக் கைகளில் எவ்வளவு மிச்சமிருக்கும்?  இவ்விதம் பல காட்சித் துணுக்குகளைக் கண்டுவிட்டு ஒரு சிறுகதை எழுதிவிட பரபரக்கும் கையை ஒவ்வொரு முறையும் கட்டுப்படுத்திக் கொள்ளும் விவேகம் எனக்குண்டு.

முஸ்தபா அங்காடி அருகே


லிட்டில் இந்தியாவின் ஞாயிற்றுக்கிழமை


லிட்டில் இந்தியாவைக் கடந்து மேல் சிராங்கூன் சாலையாகி சிராங்கூன் என்னும் பகுதி வரை நீள்கிறது சிராங்கூன் சாலை. இது தீவின் ஆரம்ப நாட்களில் அமைக்கப்பட்ட சாலைகளில் ஒன்று. 1828-ல் தயாரிக்கப்பட்ட சிங்கப்பூரின் ஒரு வரைபடத்தில் தீவை குறுக்காகக் கடந்து செல்லும் சாலை என இது குறிப்பிடப்பட்டிருக்கிறது.  திட்டமிட்டு அமைக்கப் பட்டதுபோலன்றி இப்பகுதி காலப்போக்கில் இந்தியர்கள் அதிகம் வாழ்ந்து வணிகம் செய்து லிட்டில் இந்தியாவாக உருவாகி இருக்கிறது. 1820களில் செங்கல் சூளைகளும் கால்நடை மேய்ச்சலும் இப்பகுதிகளில் நடந்திருக்கிறது. 1819ல் நாராயணப் பிள்ளை என்பவரால் இப்பகுதியின் முதல் செங்கல் சூளை துவங்கப்பட்டிருக்கிறது. 1860 மற்றும் 1936களில் இவை அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுவிட்டது.  

கடைவீடுகள் 


இந்தப் பகுதியில் கிழக்காசிய நகரங்களில் அதிகம் காணப்படும் கடைவீடுகள் (Shophouses) எனும் வகையைச் சேர்ந்த கட்டிடங்கள் நிரைவகுக்கின்றன. அடுத்தடுத்து நெருக்கமாக அமைந்த வரிசை வீடுகளாகவும், வீட்டின் கீழ்த்தளங்கள் வணிகப் பயன்பாட்டுக்கும், மேல்தளம் பணியாளர்கள் தங்கும் இல்லங்களாகவும் அமையும் கட்டிடங்கள். மலேசியாவில் கோலாலம்பூர், பினாங், வியட்நாமின் ஹனோய் எனப் பல இடங்களில் இத்தகைய கட்டிடங்களை காலனிய வரலாற்று இடங்களில் காணமுடியும்.

தேக்கா என்றழைக்கப்படும் பல பொருட்களும் விற்கப்படும் வளாகத்தை ஒட்டி அமைந்த பஃபலோ வீதியில் நுழைந்ததும் விதவிதமான உணவு வகைகளின் மணமும், அருகில்  அமைந்திருக்கும் மூன்று கோவில்களுக்கு அருகேயும் எழும் ஆலயம் சார்ந்த நறுமணங்களும்,  மளிகை மற்றும் காய்கறிகளின் வாசனையும் என மனம் நாமறிந்த இந்தியக் கடைவீதிகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும். லிட்டில் இந்தியாவின் முகப்பில் அமைந்திருக்கும் இந்தத் தேக்காவின்(Tekka) மூலப்பெயர் தேக் கியா கா (Tek Kia Kha) - சீன மொழியில் இளமூங்கில் குருத்துக்கள். இங்கு செல்லும் ரோச்சர் கால்வாய்(Rochor Canal) கரையெங்கும் ஒருகாலத்தில் வேணுவனமாய் இருந்ததால் வந்த பெயர். பல வண்ண நிறங்களில் விற்கப்படும் உடைகளும், அவற்றைத் தைக்கும் கைவினைஞர்களும், தமிழ் பேசத் தெரிந்த சீன வணிகர்களும் நிறைந்த கட்டிடம்.   நம் ஊரில் காண்பது போல அரிசி, கோதுமை, மிளகாய் மல்லி ஆகியவற்றை அரைப்பதற்கான  மாவு அரைக்கும் இயந்திரம் நிற்கும் ஒரு கடையை இச்சாலையில் காண முடிந்தது.



நமது பண்டிகை விசேஷ நாட்களின் தேவைகளுக்கும், பூஜை மற்றும் கோவில் காணிக்கைகள், ஹோமங்களுக்கும், பிறப்பிலிருந்து ஈமச்சடங்குகள் வரை அனைத்து சாங்கியங்களுக்குமான பொருட்களும் கிடைக்கும் ஜோதி ஸ்டோர்ஸ் இங்கு அனைவரும் அறிந்த பெயர். 1961-ல் ஒரு சிறிய வெற்றிலைக் கடையாகத் துவங்கியிருக்கிறது இக்கடை. ஐந்துக்கு ஐந்து அடி சிறிய சாலையோரக் கடையாகத் துவங்கி இன்று இந்தியக் கலாச்சார மையம் அமைந்திருக்கும் கேம்ப்பெல் லேனின்(Campbel lane) அடையாளமாக ஐந்து மாடிக் கட்டிடமாக வளர்ந்திருக்கிறது. இந்தக் கேம்ப்பெல் லேனில் நவராத்திரி சமயத்தில் தெருவெங்கும் கொலு பொம்மைகளும், பொங்கல் தீபாவளி சமயங்களில் அவற்றுக்குரிய அனைத்துப் பொருட்களும் தெருவெங்கும் வண்ணம் நிறைக்கும். இங்கு நிகழும் இந்திய உணவுத் திருவிழாவில் ஒருமுறை சென்று பல  வகையான பாரம்பரிய உணவுகளை சுவைத்துக் கைகளில் மருதோன்றியிட்டுக் கொண்டிருக்கிறேன்.



கொரோனா கட்டுப்பாடுகள் வியாபாரத்தை முடக்கும் முன்னர் இக்கடையும் மேலும் அருகிலிருக்கும் பல இந்தியக் கடைகளும் சேர்ந்து ஒரு இணைய தளத்தில் இங்குள்ள கடைகளின் பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார்கள்.


கேம்ப்பெல் லேனில் விழாக்கால விற்பனை

ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு சென்ற வாரம் இப்பகுதிக்குச் சென்ற போது இந்த நோய்த் தொற்றுக்காலத்தில் பல கடைகள், உணவகங்கள் மூடப் பட்டுவிட்டன.

 சிராங்கூன் சாலையின் கடைகளை வரிசையாகத் தாண்டி நடக்கும் ஒருவர் 1970களில் துவங்கி 2000 வரையிலான பல இளையராஜா பாடல்களை கடைக்கு ஒரு வரியென கதம்பமாகக் கேட்டுக்கொண்டே கடக்க நேரும். அவ்விதம் ஒரு கடையில் கேட்ட பின்னணி இசையின் தொடக்க வரி நினைவில் எழாமல் நாள் முழுவதும் அந்த ஒற்றை இசையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் உண்டு. நேற்று முளைத்த அனிருத் வரை பாடல்கள் ஒலித்தாலும் அவற்றை வெற்றோசையென காதுகள் ஒதுக்கிவிடுகின்றன. முன்பு இச்சாலையில் நிறைய திரைப்பட சிடி மற்றும் டிவிடிக்களை விற்பனை செய்யும் கடைகள் இருந்தன. இந்தியாவில் கண்ணாடிச் சதுரங்களில் மூன்று குறுந்தகடுகள் வடிவில் திரைப்பட டிவிடிக்கள் புழக்கத்தில் வருமுன்னரே சிங்கப்பூர், மலேசியாவின் அடையாளங்களாக இங்கே தரமான டிவிடிக்கள் கிடைத்திருக்கின்றன. கால மாற்றத்தில் இன்று அக்கடைகள் அளவில் சிறுத்து விட்டன. எந்தப் பொருளும் கிடைக்கும் எனப் பெயர் பெற்ற முஸ்தஃபா பல்பொருள் அங்காடியிலும் மிகப் பெரிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒலி/ஒளித் தகடுகளின் விற்பனை இப்போது அருகிவிட்டதை, மிகச் சிறிய ஒற்றை வரிசையாக அது மாறியிருப்பதில் பார்க்கலாம்.

அடுத்ததாக ஒரு டாலர் விற்பனைக் கடைகள் இங்கு மக்கள் வந்து குவியுமிடங்கள். ஊருக்கு பல விதமான கைக்கடிகாரங்களும், சிங்கப்பூர் புகழ் கோடாலித் தைலமும், விலை மலிவான நறுமணங்களும், பலவண்ண அலங்காரப் பொருட்களுமென சிங்கை வந்து தாயகம் திரும்புவோர் பரிசுப் பொருட்களை வாங்கும் சுரங்கங்களாக இருந்த இக்கடைகள் இன்று பத்து வெள்ளிக்கு மூன்று பொருட்கள் என்று விற்கும் 3 for 10$ கடைகளாக மாறியிருக்கின்றன.


மதுரை முருகன் இட்லியில் இருந்து காரைக்குடி செட்டிநாடு உணவு வரை, பஞ்சாபி உணவிலிருந்து வங்க உணவு வரை அனைத்தும் கிட்டும் அன்னசாலை. பல நூறு கடைகள் புதிதாகத் தோன்றியும் காலப்போக்கில் உதிர்ந்து கொண்டும் இருக்கும் இச்சாலையில் 1947-ல் துவங்கப்பட்டகோமள விலாஸ் சைவ உணவகம் அன்று முதல் இன்றுவரை தனக்கென ஒரு தனிச்சுவையோடும், தரத்தோடும் இன்றும் சிங்கையின் உணவு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.






இவ்விதம் ஒரே வீதியின் பல இடங்களில் இருந்துகொண்டு கடல் தாண்டி இருக்கும் உறவுகளோடு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து கொண்டும், நடந்து கொண்டும் பேசிக் கொண்டிருப்பது, சிங்கையில் இருந்து இந்தியாவுக்கு வான்வெளியில் பல்லாயிரம் குரல்களால் ஆன ஒரு பாதை இருப்பது போல ஒரு மனச்சித்திரத்தை எனக்கு ஏற்படுத்துவதுண்டு.  இந்தப் பகுதியில் நிலவும் பண்பாட்டு நடவடிக்கைகள், நிலவும் பழக்க வழக்கங்கள், வழிபாடுகள், உண்ணப்படும் உணவுகள்,  கிடைக்கும் பொருட்கள், இவைகளால்  மட்டுமல்ல, அங்கு நடக்கும் நிற்கும் கடக்கும் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மண்ணை ஏதோ ஒரு காரணத்துக்காக எண்ணியபடியே பேசியபடியே இங்கு ஒரு எண்ண வடிவிலான பாரதத்தை உருவாக்குகிறார்கள், அதனாலேயே இதற்கு லிட்டில் இந்தியா என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது என எண்ணிக் கொள்வேன்.   

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 2 - மரைன் பரேட் எனும் மானுடக் கனவு

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 4 - கோங் க்ஸி ஃபா ட்ஸாய்

Tuesday, February 9, 2021

சிங்கை குறிப்புகள் - 2 - மரைன் பரேட் எனும் மானுடக் கனவு

இன்று(9-பிப்) வீட்டருகிலேயே இரண்டு கி.மீ நடை. கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்திருக்கும் இப்பகுதியுடனான எனது உறவு 2006-ல் முதல் முறை சிங்கை வந்தபோது தொடங்கியது. நேர்த்தியான கட்டுமான வடிவமைப்பு கொண்ட பகுதி. இருபுறமும் ஓங்கிய மரங்கள் நிறைந்த சாலைகள். பதினெட்டாவது மாடியில் குடியிருந்த வீட்டின் மூன்று புறத்து ஜன்னல்களிலும் தெரியும் நீலக்கடல், விரிவெளியை அள்ளி வீட்டுக்குள் நிறைக்கும் விசாலமான ஜன்னல்கள் என மிகவும் மனதுக்குகந்த வீடு. அன்றைய வாடகை 800டாலரில் நானும் அலுவலகத் தோழியும் பகிர்ந்து தங்கியிருந்தோம்.

ப்ளாக் 3

இரண்டாவது முறை சிங்கை வந்த போதும் மிகவும் ஆர்வத்தோடு இப்பகுதியில் மீண்டும் வீடு தேடியதற்கு, ஐந்து நிமிட நடை தொலைவில் உள்ள கடலும், நூலகமும், அழகிய மரங்களடர்ந்த சூழலும், எனப் பல காரணங்கள்.

  ப்ளாக் 3லிருந்து தெரியும் காட்சி 

இரவுணவுக்குப் பிறகு காலாற இப்பகுதியில் உலவுவது என் மனதுக்குந்த ஒன்று.  அருகிலேயே ஓடும் சிக்லாப் கால்வாய் இப்பகுதிக்கு மேலும் அழகூட்டுகிறது. இதை ஒட்டியே செல்லும் சிக்லாப் பூங்கா இணைப்பு வழி நடைபாதை வழியெங்கும் மரங்களோடு அரிய வகை செடிகளோடு, ஆங்காங்கே உடற்பயிற்சிக் களங்களோடு,  இளைப்பாற நிழல் கூரைகளோடு நடையை ஊக்குவிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மழைநீர்க் கால்வாய்களில் கடல் ஏற்றத்தின் போது கடல் நீர் உட்புகும். சமீபத்தில் ஒரு முழுநிலவு நாளில் அவ்வண்ணம் நீர் நிறைந்து மரகதப் பச்சையில் மின்னிய நீர் ஏறத்தாழ கரைதொட்டு ஓடிக்கொண்டிருந்தது.  

சிக்லாப் கால்வாய்
சிக்லாப் கால்வாய்


இரண்டரை கிமீ நீளம் கொண்ட இந்த மழை நீர் மேலாண்மைக்கான கால்வாய் கிழக்கு கடற்கரையில் சென்று சேருமிடத்தில் கடலைப் பார்க்கும் வண்ணம் ஒரு அழகான காட்சித்திடல் 2017-ல் உருவாக்கப்பட்டிருக்கிறது. காலை மாலை வேளைகளில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோரும், இசையை வழிய விட்டபடி மிதிவண்டியில் செல்வோரும், வியர்வையில் நனைந்த சட்டை உடலோடு ஒட்டியிருக்க ஓடுவோரும் நடை செல்வோரும், காற்று வீசும் காலங்களில் பல வண்ணக்  காற்றாடிகளோடு குடும்பங்களும்,   என வண்ணமயமாக இருக்கும் இடம். வீட்டிலிருந்து கிளம்பி நாற்புறமும் ஓங்கி நிற்கும் அடுக்குமாடிகளையும் அடிபருத்த அங்சானா மரங்களையும் (வேங்கை மரங்கள்) , மஞ்சள் மலர்களால் நிறைந்திருக்கும் பெருங்கொன்றை மரங்களையும் கடந்து இவ்விடத்தில் சென்று அமர்ந்து இரவின் அமைதியில் அலைகள் மட்டும் ஒலிக்க கடல் சென்று கவிழும் வான் வெளியைத் தொடுவதைப் பார்த்திருந்து விட்டு வருவது விசை கூடிய இந்நகர வாழ்வுக்கு இசை சேர்ப்பது.    



இயற்கை எழில் நிரம்பியது போன்ற காட்சிதரும் இந்த மரைன் பரேட் எஸ்டேட் முழுக்க முழுக்க கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.பெடோக் மலைகளைத் தகர்த்து கடோங் கடலுக்கு அணையிடுவோம்  என்ற தாரக மந்திரத்தோடு இவ்வேலையில் இறங்கியிருக்கிறார்கள். 1960களில் துவங்கியது இந்த நில மீட்புப் பணி.


Source: https://mpthenandnow.wordpress.com/

சிக்லாப் மற்றும் பெடோக் பகுதிகளில் இருந்த சிறு குன்றுகள்  சமதளமாக்கப்பட்டு அந்த மண் இதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த மிகப் பெரிய குடியிருப்பு நிர்மாணப் பணிகளுக்கென 20,000 மெட்ரிக் கியூப் மண் இந்தக் குன்றுகளில் இருந்து கடலுக்கு நகரும் தானியங்கி பட்டைகளில் பயணித்திருக்கிறது. 

Source: https://mpthenandnow.wordpress.com/

வெளிநாடுகளில் இருந்தும் மண் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. 1971ல் கிழக்கு கடற்கரை விரைவுச் சாலையும் மரைன் பரேட் என்னும் பகுதியும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது . மரைன் பரேட் உருவாக்கத்தின் பல கால கட்டங்களைப் பதிவு செய்த புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் கிடைத்தவற்றில் இருந்து தொகுத்திருக்கிறேன். இவற்றை எடுத்து இணையத்தில் பதிவு செய்தவர்களுக்கு நன்றி.

கடல் தந்த நிலம்


கிழக்கு கடற்கரையில் வளைந்து செல்லும் பழைய சாலை

1970-களில் கட்டுமானப் பணிகள்

விமானத்தில் இருந்து சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் கண்ணில் விரியும் என் மனதுக்கினிய கிழக்கு கடற்கரைப் பகுதியின் காட்சி 


அன்று
ஆறாயிரம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும், சமூகப் பயன்பாட்டு வசதிகளும், சந்தைப் பகுதியும், உணவகங்களும், நூலகமுமாக விரிந்தது. 2014கணக்கெடுப்பின்படி  7863 வீடுகளும் இருபத்து மூன்றாயிரம் மக்களும் இருக்கும் பகுதி. இன்று நாம் காணும் அத்தனை பசுமையும் மானுட உழைப்பில் இங்கு எழுந்தவை. வேரடி மண் முதற்கொண்டு வேரோடு சுமந்து வரப்பட்ட பலவகையான மரங்கள் வரை மானுடத் திறனின், திட்டமிடலின், உழைப்பின், சீரான நிர்வாகத்தின் சான்றென நிற்பவை.

Source: https://amylamsg.com/



1970களில் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான டன் மண் கொட்டி நிரப்பப்பட்டு இந்த நிலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  அப்போது கட்டப்பட்ட பிளாக் 1 இந்நிலத்தில் எழுந்த முதல் குடியிருப்பு வளாகம்.  இதை அடுத்த பிளாக் 3 குடியிருப்பில் தான் 2006ல் நான் குடியிருந்தேன். 


1970-ல் கட்டப்பட்ட முதல் குடியிருப்பு


அதன் இன்றைய தோற்றம்

முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 1 - தெலோக் குராவ் சாலைகள்

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 3 - சிராங்கூன் சாலை

Monday, February 8, 2021

சிங்கை குறிப்புகள் - 1 - தெலோக் குராவ் சாலைகள்

ஒவ்வொரு நாளும் சில வரிகளேனும் எழுதலாம் என ஒரு முயற்சி. 

சென்ற மார்ச் 16லிருந்தே வீட்டிலிருந்துதான் அலுவலகம். இடையில் ஒரு நாள் அலுவலகம் சென்று வர நேர்ந்தது. இந்த மாதத்தில் ஒரு நாள் செல்ல வேண்டியிருக்கலாம்.

அலுவலகம் செல்லும் தினங்களில், சராசரியாக எட்டாயிரம் முதல் பத்தாயிரம் காலடிகள் (6-8 கிமீ) நடை இயல்பாக வந்துவிடும். வீடுறையும் காரணத்தால் வலிந்து நடைக்கு செல்லாவிட்டால் சில நூறு காலடிகளில் நாள் முடிந்து விடுகிறது. அப்படியே சென்றாலும் மாலை ஆறு மணிக்கு மேல் அல்லது இரவுணவுக்குப் பிறகு நடை செல்வதால் சூரிய ஒளி மேலே படாமலேயே பல தினங்கள் கடந்து விடுகின்றன. 

வழக்கமாக கடற்கரைப் பகுதியில் கடலோரமாகவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி நடப்பது வழக்கம். இன்று சாலைப்புறமாக தெலோக் குராவ்(Telok Kurau) பகுதியில் நடக்க முடிவு செய்தேன். 

சிறு வரலாற்றுக் குறிப்பு. இது நகர்ப்புறமாவதற்கு முன்னர் கடலோர மீன்பிடி கிராமமாக இருந்த பகுதி. மலாய் மொழியில் மாமர மீன் வளைகுடா (Mango Fish Bay). இங்கிருந்திருக்கிறது கடற்கரை. இன்று நான் வாழும் பகுதியெல்லாம், கடலைப் புறங்காட்டி கவர்ந்தெடுத்த நிலம் (reclaimed land). இன்று நடுத்தர, உயர் நடுத்தரக் குடியிருப்புகள் நிறைந்த பகுதி. 1980களில் கம்போங்(Kampong) எனப்படும் கிராமப்புறங்கள் அகற்றப்பட்டு நவீனப்படுத்தப்படும் வரை தெலோக் குரோவில் இந்த மலாய் கிராமம் இருந்திருக்கிறது. உலகப் போருக்கு முந்தைய காலகட்டங்களில்   இப்பகுதிகளில் இந்தியர்களும் அதிகம் வாழ்ந்திருக்கிறார்கள். வீட்டுக்கு வீடு பசுக்களும் கன்றுகளுமாக இருந்த பகுதி. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது இங்கிருந்த மலாய் பள்ளி சோதனை வளாகமாகவும் சூக் சிங் படுகொலை என வர்ணிக்கப்படும் ஜப்பானியர்களுக்கு எதிரானவர்களென சந்தேகத்துக்குள்ளான அனைவரையும் அழித்தொழித்த இடமாகவும் இருந்திருக்கிறது. 1942-ல் பிப்ரவரி 21 முதல் மார்ச் 4 வரை இங்கு பதினெட்டு முதல் ஐம்பது வயது நிரம்பிய சீன ஆண்கள் வரவழைக்கப்பட்டு சந்தேகமேற்பட்டவர்கள் அனைவரும் ஜப்பானிய கெம்பிட்டாய் காவலர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.





ஆறு மணியளவில் கிளம்பி தெலோக் குரோவ் சாலை வழியாக சாங்கி சாலை வரை சென்றேன். லோராங் G, H முதல் N வரையிலான நீண்ட சாலைகள் தெலோக் குரோவ் சாலையைக் குறுக்காக வெட்டிச் சென்றன. லோராங் என்றால் மலாய் மொழியில் சிறிய தெரு. சற்றே பரபரப்பான முக்கிய சாலையிலிருந்து  இந்த லோராங் சாலைகள் அமைதியாக இருபுறமும் தனித்த வீடுகளோடு, சாலையோரம் நிறுத்தப்பட்ட கார்களோடும் இருபுறமும் இரு கிமீக்கு மேலாக நீண்டு கிடந்தன.



சிங்கையில் அதிகம் காணப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வாரிய (HDB Flats - Housing Development Board) வீடுகள் மற்றும் வசதிவாய்ந்த குடியிருப்புகளான காண்டோ (Condominium) போலல்லாது, நிலத்தோடு கூடிய தனித்த வீடுகள் (Landed Properties) நிறைந்த பகுதி இது. இத்தகைய வீடுகளை வெளிநாட்டினர் இங்கு வாங்க முடியாது. இத்தகைய வீடுகளின் வாடகையும் மிக அதிகம். எனவே நிதானமாக ஒவ்வொரு வீட்டின் தோட்டங்களையும் வெளிப்புற அலங்காரங்களையும் கவனித்தபடி நடை. 

இப்பகுதியில் தனித்த பங்களாக்களைப் போன்ற வீடுகள், ஒரு சுவரைப் பகிர்ந்து கொள்ளும் வீடுகள் (Semi Duplex), மற்றும் மொட்டைமாடியோடு கூடிய வீடுகள் என சில வகைகளும் தென்பட்டன.


பல வீடுகளிலும் முகப்பில் மஞ்சளும் சிவப்பு கலந்த ஆரஞ்சுமாக கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த Bauhinia kockiana செடிகள்  (பெயர் உதவி தாவரவியல் பேராசிரியை தோழி லோகமாதேவி). மாலை வெயிலில் கனலென,கனல் தகித்த பொன்னென ஒளிர்ந்தது. 


Bauhinia kockiana 

பிறகு விதவிதமான கள்ளிகள், பல வண்ணங்களில் காகிதப்பூக்கள்(Bougainvillea), மிக்கி மௌஸ் மலர்கள் பூக்கும் Ochna kirkii எனப் பல செடிகள். 


Ochna kirkii

அனேகமாக பல வீடுகளில் முகப்பில் கண்ணாடியாலான சுவர்கள் அமைத்து திரைச்சீலையிட்டு இருக்கிறார்கள். நாள் முழுவதும் கனமான திரைச்சீலையிட்டு அறைகளை இருளாக்கி விட்டு செயற்கை ஒளியும், குளிரூட்டப்பட்ட அறையுமாக வாழ்க்கை. வெளியே மாலையிலும் 31°செல்சியஸ் ஆக இருந்தது. ஆனால் காற்று சீராக வீசிக் கொண்டிருக்கவே சிரமம் இல்லை.

சாங்கி சாலை வரை நீளும் 1.75கிமீ சாலையில் நடந்து, இடப்புறம் திரும்பி கெலாங்(Geylang) வழியாக மேலும் ஒரு கிமீ நடந்தேன். மலாய் அடையாளங்களோடு இருக்கும் பகுதி இந்த கெலாங், ஹரிராயா (ரம்ஜான்) சமயத்தில் மிக அழகாக அலங்கரிக்கப்படும் இச்சாலைகள். அங்கிருந்து இடப்புறம் ஒரு நடைபாதை இருபுறமும் தோட்டங்களோடு அழகாக வகிடென நீண்டு சென்றது. அதில் நுழைந்து நடக்கத் தொடங்கினேன். இப்பாதை குறித்து முன்னரே வாசித்திருந்தேன். ஹெய்க் நடைபாதை எனப் பெயர் கொண்ட அப்பாதை அழகான நடைபாதைகளில் ஒன்றென பட்டியலில் இருந்தது. எந்தத் திட்டமும் இன்றி இன்று இங்கு வந்தாயிற்று.

அந்திச் சிவப்பில் கருமை ஏறிவிட்டது. மாபெரும் தொட்டிகளில் பல்வேறு குறுமரங்கள் வளர்ந்திருந்தன. சிமெண்ட் பாவிய நடைபாதை. ஒரு புறம் பாதுகாக்கப்பட்ட சமூகத் தோட்டங்கள், பல விதமான செடிகள் வளர்க்கப்படுகின்றன. முதலில் போன்சாய் வகைகளுக்கென ஒரு பகுதி, பிறகு ஆர்கிட் மலர்கள், அதன் பிறகு பல வகையான கள்ளிகள்.



 அதைத் தொடர்ந்து காய்கறித் தோட்டங்கள். அவரைக் கொடி படர்ந்து காற்றில் கரம் நீட்டி சிலப்பதிகாரம் சொல்வது போல "போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட" நின்றது. வெள்ளரிக் கொடி, பூசணிக் கொடிகள். இருளத் தொடங்கியதும் கண்ணை உறுத்தாத சாலை விளக்குகள் ஒளியேற்றிக் கொண்டன. இந்தப் பாதையில் 1.5கிமீக்கு மேல் நடந்து, நூலகம் வழியாக வீடு வந்து சேர்ந்தேன். 



கூகுள் மேப் 6.3கிமீ என்றது. காலடிகளை கணக்கிடும் செயலி 5.8கிமீ என்றது. 


எதுவாயினும் நிறைவான மாலை.


அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 2 - மரைன் பரேட் எனும் மானுடக் கனவு

Tuesday, February 2, 2021

பசுமையின் ஆயிரம் வண்ணங்கள் - 2

நியூஸிலாந்து பயணத்தின் முதல் எண்ணம் தோன்றியது முதலே அந்நாட்டின் விரிந்த வெளிகளில், நீண்ட நெடுஞ்சாலைகளில் காரில் பயணம் செய்ய வேண்டும், அதைத் தானே ஓட்டவேண்டும் என்ற ஆசை கணேஷுக்கு இருந்தது. இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் அந்நாடுகளில் அனுமதி பெற்று கார் வாடகைக்கு எடுக்க முடியும் என்றறிந்தோம். இந்தியாவில் நீண்ட சாலைப் பயணங்கள் செல்வதை மிகவும் விரும்பும் கணேஷுக்கு ஆறாண்டுகளுக்கு மேலாக சிங்கையில் அத்தகைய பயணகளுக்கான வாய்ப்பில்லாது போகவே, இதை மிகவும் எதிர்நோக்கி இருந்தார். ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் வருடம் என்பதால்,   இந்திய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவென இரு முறை இந்தியப் பயணம் மேற்கொண்டு அதை ஒரு வழியாக வாங்கியும் வைத்திருந்தார். கார் பயணத்துக்கென்றே நியூசிலாந்தின் டுனிடின் (Dunedin) பகுதியில் மூன்று நாட்களை திட்டமிட்டிருந்தோம். 

விமானம் ஓடுதளத்தில் ஒடத் தொடங்குகையில் கார் ஓட்டுவது குறித்து ஏதோ பேசத் தொடங்கவும், அத்தனை சிரமங்களுக்கிடையே பெற்ற ஓட்டுநர் உரிமத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்பது கணேஷுக்கு நினைவு வந்தது. மிகுந்த மகிழ்ச்சிக்கிடையே  சில மணித்துளிகள் அனைவருக்கும் ஒரு சிறு தொய்வு ஏற்பட்டது. பிறகு, விமானத்தின் உணவு வகைகள் வரத்தொடங்க அதைக் கண்டு குதூகலிக்கத் தொடங்கிய பிள்ளைகளைக் கண்டு மனது இலகுவானது. சிங்கையில் இருந்து ஆக்லேண்ட் ஏறத்தாழ பத்து மணிநேரப் பயணம். சிங்கையில் இருந்து மாலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு, நியூஸிலாந்து நேரம் காலை எட்டரை மணியளவில் ஆக்லேண்ட் சென்று சேர்ந்தோம்.

நியூஸிலாந்து, அங்கு குடியேறிய பூர்விகக் குடியினராகிய மாஓரிகளின்(Maori) மொழியில் அவ்டேரவா (Aotearoa) என்றழைக்கப்படுகிறது.  வடக்குத் தீவு, தெற்குத்தீவு என இரண்டு முக்கிய நிலப்பரப்புகளும் 700க்கும் மேற்பட்ட தீவுகளும் கொண்ட நாடு. உலக வரைபடத்தில் சற்றே தலையை உயர்த்தியபடி ஊர்ந்து செல்லும் நத்தை போலத் தோன்றும்  இந்நாட்டின் வடக்குத்தீவின் வடக்குப் பகுதியில் (நத்தையின் உணர்கொம்புகள் தலையில் முளைக்கும் இடத்தில்) இருக்கும் ஆக்லேண்ட் முக்கியமான நகரங்களில் ஒன்று. 

ஒவ்வொரு விமானப் பயணத்தின் போதும், விமானம் ஓடுதளத்தில் இருந்து மண்ணைக் கைவிட்டு வானேறும் நிமிடங்களையும், படிப்படியாக உயரம் குறைந்து, முதலில் சிறு தீற்றல்களாகத் தெரியும் நிலப்பரப்பு நகரமாக, உயிர்ப்புள்ள வரைபடமாக, கட்டிடங்களாக, வயல்வெளிகளாக, ஆறுகளாக கண்ணில் புலனாகி, அதற்குள் ஒரு பருந்து போல வந்திறங்கும் அந்த தருணத்தையும் தவறவே விடக்கூடாதென நினைப்பேன். அந்த சில ஆயிரம் அடிகளில் இருந்து சில நூறு அடிகளுக்கு இறங்கும்/ஏறும் தருணங்களில் அந்த நகரம் ஒரு ஒட்டுமொத்த வடிவம் கொண்டு நான் இதுதான் என்பதுபோல ஒரு சித்திரம் கொடுக்கும். அந்த நிமிடத்தில் மனதில் பதிந்துவிடும் தூல உருவத்தைக் கொண்டு அந்நகரம் குறித்த ஒரு முதல் எண்ணம் உருவாகும். ஒவ்வொரு ஊரும் வேறு வேறு கைரேகைகளும் முகச்சாயல்களும் கொண்ட தனித்த உயிரிகள். 



நியூஸிலாந்தை நெருங்கும் அதிகாலை. விடியலை ஒரு ஒளிர்நகையென அணிந்திருந்தது விண்வெளி. பொன்வெயிலில் சுகமாக மிதந்து கொண்டிருந்த பஞ்சுக் குவைகள் மொத்தமாக நிலத்தை மூடியிருந்தன. மேகங்களை மெல்ல விலக்கி, பனியை ஊடுருவிய காலைக் கதிரில் பளபளத்த கடல் பகுதியைக் கடந்து இறங்கத் தொடங்கியது விமானம். பல சிறிய பசிய குன்றுகளும், பச்சை விரிப்பில் அடுக்கி வைக்கப்பட்ட கொலு பொம்மைகள் போல அமைந்த வீடுகளும், ஆங்காங்கே நீல விழிகளெனத் தெரிந்த நீர்நிலைகளும், அதிக உயரமற்ற சமதளமான கட்டிட அமைப்புகளும், ஊடே கண்ணை உறுத்தாது நீண்டு செல்லும் நெடுஞ்சாலைகளுமாக ஆக்லேண்ட் ஒரு  விடுமுறைக்கு கிராமத்தின் வயல்வெளிகளை ரசிக்க வந்த நகரத்துப் பெண் போல கண்ணில் பட்டது. மிக அழகிய இயற்கைப் பின்னணியில் நடுவில் மின்னும் சிறு நவீன நகரம். கடற்கரையை ஒட்டியே தொடங்கும் விமான ஓடுதளம்.



விமான நிலையத்தில் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. சிங்கை விமான நிலையத்தோடு ஒப்பிட்டால் ஏறக்குறைய ஒழிந்தே காணப்பட்டது. வழக்கமாக இறுகிய முகத்தோடு காணப்படும் குடியேற்ற அதிகாரிகளைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு இனிமையான புன்னகையோடு வரவேற்ற அதிகாரிகள் ஒரு இனிய மாறுதல். வெளியேறி, மெல்லிய குளிரும் இளம் வெயிலுமாக இருந்த காலைப் பொழுதை ரசித்தபடி நாங்கள் பதிவு செய்திருந்த வீட்டுக்கு வாடகைக் காரில் பயணம் செய்தோம். ஓட்டுநர் கரீபியன் தீவுகளில் வளர்ந்த ஒரு நியூஸிலாந்து பெண், ஆறடிக்குக் குறைவின்றி புன்னகையோடு காணப்பட்டார். எங்கும் தெருக்கள் ஒழிந்து காணப்படவே, அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ஆக்லேண்ட் முக்கிய நெடுஞ்சாலைகளும் வழக்கமாக நெரிசலில் திணறும் என்றும், அன்று புனித வெள்ளியாக இருந்தபடியால் பலரும் நீண்ட வாரஇறுதியைக் கொண்டாட வெளியூர்களுக்கு சென்றுவிடவே சாலைகள் மூச்சுவிட்டுக் கொண்டு ஏகாந்தமாக இருக்கின்றன என்றார்.  நியூஸிலாந்து செல்வதற்கு ஏப்ரல் மத்தியில் இருந்து மே தொடக்கம் வரை மிகத் தோதான பருவமெனக் கண்டுகொண்டோம். பொதுவாக பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் மே மாத இறுதியையும் (கடும் குளிர் காலம்), இனிய கோடை விடுமுறைக்கென செல்பவர்கள்  டிசம்பர் மாதத்திலும் பயணம் மேற்கொள்வார்கள். ஏப்ரல் இரண்டாவது வாரம் இலையுதிர் காலம் தொடங்கும் காலம். நாடு முழுவதும் ஒரு வண்ணக் கொந்தளிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.             


இவ்விடத்தில் Airbnb வசதி குறித்து ஓரிரு வார்த்தைகள். Airbnb வசதி வந்த பிறகு பயணங்களில் தங்குமிடங்களும்  சுற்றுலாத் தலங்களுக்கு இணையாக ஒரு முக்கியமான தெரிவு ஆகியிருக்கிறது. குடும்பமாக அல்லது நண்பர்களாக செல்லும் போது விடுதிகளில் ஓரிருவராய் அறைகளுக்குள் அடைந்து கிடைப்பதைவிட இது போல வீடுகளை தெரிவு செய்யும் போது அனைவரும் ஒன்றாய் அமர்ந்து நேரம் செலவிடுவதற்கும், அவ்வப்போது எளிய உணவுகளை செய்து கொள்வதற்கும் ஏதுவாகிறது.முக்கியமாக  செல்லும் இடங்களின் வீடுகளை, அந்தந்த நாடுகளின், ஊர்களின் குடியிருப்புகளை சில நாட்களேனும் தங்கி அப்பகுதிகளை அறிந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது.   

ஆக்லேண்டின் மவுண்ட் ராஸ்கில் எனும் புறநகர்ப் பகுதியில் மிக அழகான ஒரு வீட்டில் சென்று இறங்கினோம்.  மூன்று நாட்கள் அங்கு தங்குவதாகத் திட்டம். பின்னால் அழகிய சிறுதோட்டம் கொண்ட வீடுகளின் வரிசை. குளிருக்கான கணப்போடு கூடிய மிக அழகான வீடு. களைப்பு தீர சற்று இளைப்பாறிவிட்டு நானும் மாதங்கியும் அந்தப் பகுதியை அறிந்து கொண்டு, ஏதேனும் கடைகள் இருப்பின் பால், ரொட்டி போன்றவை வாங்கி வரலாம் எனக் கிளம்பினோம்.


ஒவ்வொரு வீடும் மலர்ந்தும் பொன்னிலைகளின் ஒளியிலும் நிறைந்திருந்தது. கையகல செம்பருத்திகள், விதவிதமான ரோஜாக்கள், பொன்னிற இலைகள் நிறைந்த மரங்கள் என அழகு கொழித்த சாலைகளின் வழி சிறிது நடந்ததுமே ஒரு சிறிய கடையும், அருகிலேயே ஒரு இந்திய உணவகமும் கண்ணில் பட்டது.உலகெங்கும் எல்லா நாடுகளிலும் கண்ணில் படும் பஞ்சாபி சகோதரர்கள் அங்கும் அந்த அழகிய சிறு உணவகத்தை நடத்தினர்.  காபி, தேநீருக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி, அனைவரையும் தயாராகச் சொல்லி மதியத்துக்கான திட்டம் தீட்டினோம். இரண்டாவது நாளில் இருந்துதான் சில குறிப்பிட்ட திட்டங்கள் இருந்தன, எனவே அன்று நிதானமாக ஊர் சுற்றிப் பார்க்கும் எண்ணம் மட்டும்தான்.

நாங்கள் தங்கியிருந்த புறநகர்ப் பகுதி நகரின் தென் பகுதியில் இருந்தது. அங்கிருந்து நகர்மையத்துக்கு செல்ல நகர்ப்பேருந்து இருப்பதை அறிந்து, பிரிட்டோமார்ட்(Britomart) என்னும் மைய பேருந்து நிறுத்தம் வரை சென்று அங்கிருந்து  மிஷன் பே (Mission Bay) என்னும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதாக முடிவு. எளிய காலை/மதிய உணவை முடித்துக்கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்தபோது கரிய இறகுகளும் நீல நிற கழுத்துப் பகுதியோடும் சிவந்த அலகோடும் கண்ணில் பட்டது ஒரு பறவை. கோழி போல இருந்த அந்தப் பறவை புகேக்கோ(pukeko)  ஆஸ்திரேலிய சதுப்புநிலக் கோழி வகையைச் சேர்ந்தது. 



அதனுடன் சில படங்கள் எடுத்துவிட்டு  இருபுறமும் மஞ்சளும் பல வண்ணப் பச்சையுமாக விரைந்த நகரை ரசித்துக் கொண்டே பிரிட்டோமார்ட் நிலையத்தை சென்றடைந்தோம். 





அங்கு ஒரு காபி அருந்திவிட்டு மிஷன் பே கடற்கரைக்கு இன்னொரு பேருந்து. மேலும் ஒரு அரைமணிநேரப் பயணம் கடற்கரையோரமாகவே சென்றது.  நகரைச் சார்ந்த பகுதியில் இருப்பினும் ஆங்காங்கே கடலுக்குள் எழுந்து நின்ற மலைகளோடு வெளிர்நீலத்தில் மிக அழகாக இருந்தது மிஷன் பே கடற்கரை. 



மிக நவீனமான பல தரப்பட்ட கடைகளும், உணவகங்களும் அந்த சாலையில் இருந்தாலும், அத்தனை சந்தடிக்கும் அப்பாற்பட்டு நின்றது நீலவெளி, நிலவின் வெளி. அன்று சித்திரை முழுநிலவு என்பது நிலவைக் காணும் வரை நினைவில் இல்லை. கடலில் சற்றுப் பொன்கரைத்து உருக்கி விட்டுக் கொண்டே மேலெழுந்தது நிலவு. 



நிலவு தரும் போதையில் சற்று நேரம் இருந்து விட்டு, இரவுணவை அங்கேயே முடித்து விட்டு  மீண்டும் பேருந்துகளில் பயணம் செய்து, இரவு பத்து மணிக்கு மேல் வீடு திரும்பினோம். அறிந்த மனிதரை அறியாநிலத்தில் சந்திப்பது போல, தென்துருவத்து வானம் கண்களுக்கு பழக்கமில்லாத வேறு இடங்களில் பழகிய நட்சத்திரங்களுடன்  இருந்தது. மொத்த சுற்றுப்புறமும் நிலவு மட்டும் சூடி வெள்ளியொளி கொண்டிருந்தது. வேறெந்த ஒளியும் இல்லாத அந்த சிறிய சாலையில் நிலவு கண்ணில் படாமல் ஒளி சிந்திக்கொண்டிருந்தது.  வீட்டை நெருங்கவும் கூரை மேல் பூனை போல எப்போது வேண்டுமானால் எந்தப் பக்கமும் குதித்துவிடுவேன் என அமர்ந்திருந்தது நிலவு.  



Tuesday, January 12, 2021

பசுமையின் ஆயிரம் வண்ணங்கள் - 1

பச்சை என்ற வர்ணத்தின் பேதங்கள் எத்தனை எனக் கேட்டால் பெண் என்பதாலும், வண்ணங்களை ஓரளவு ஓவியத்தில் கையாளுபவள் என்பதாலும் பத்து முதல் பதினைந்து வகைகளை என்னால் தோராயமாக சொல்லி இருக்க முடியும். ஆனால் நியூஸிலாந்துக்கு 2019ஆம் ஆண்டில் சென்று வந்த பின்னர், இந்த பச்சை என்னும் வர்ணத்தையே  மஞ்சள், நீலம், வெண்மை, கருமை என வித விதமான சேர்க்கைகளில் கலந்து தூரிகையில் தோய்த்து வரைந்திட்ட ஒரு நிலத்தைக் கண்கூடாகக் கண்டபின்னர், பசுமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ணங்கள் உண்டு என அறிந்துகொள்ள நேர்ந்தது. இது உயர்வு நவிழ்ச்சி எல்லாம் இல்லவே இல்லை. உண்மை என அந்த நிலம் சொல்கிறது. நமது ஊரிலும் கேரளம் மற்றும் வடகிழக்கில் பயணம் செய்கையிலும், பாலி மற்றும் இந்தோனேசியாவின் வேறு பகுதிகளிலும் பசுமை விரவிக் கிடக்கிறது  என்றாலும் இந்நிலத்தின் பச்சையின் வகைகள் வேறெங்கும் கண்டதில்லை.


உலக வரைபடத்தை பார்த்தால்,  வண்ணங்களைக் குழைத்து உலகை வரைந்த ஓவியன் இறுதியாக ஓவியத்தின் அடியில் இட்ட கையொப்பம் போல, அல்லது ஓரமாகத் தீட்டிவிட்ட வண்ணக்கீற்று போல, கைதவறி சொட்டிவிட்ட இருசொட்டுகள் போல இருக்கிறது  நியூஸிலாந்து. அதன் மேலும், கீழும், வலப்புறமும் முடிவிலி வரை நீளும் நீர் வெளிக்கு நடுவே மிக ஏகாந்தமாக இருந்த அந்தத் துளி நிலம் மனதை உடனே கவர்ந்து கொண்டது. 

நியூஸிலாந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய பிறகுதான் அந்நாட்டைக் குறித்த விரிவான வாசிப்புத் தொடங்கியது. முதலில் மூன்று நண்பர்களின் குடும்பங்கள் இணைந்து செல்வதாக ஒரு திட்டமிருந்தது. இரு மாதங்கள் எடுத்துக் கொண்டு, நியூஸிலாந்தின் அனைத்துப் பகுதிகளையும் பட்டியலிட்டு, ஒவ்வொரு இடமாய் வாசித்து, இணையத்தில் தேடி, அங்கு என்ன சிறப்பு, எந்த வகையான இடம், நாங்கள் செல்ல முடிவெடுத்த ஏப்ரல்-மே மாதங்களில் (குளிர்காலம்) எந்த இடங்கள் செல்லக்கூடியவையாக இருக்கும்,  என்பதை எல்லாம் சேகரிக்கும் பணி தொடங்கியது. பிறகு உடன் வருபவர்களின் வயது மற்றும் ஆர்வங்களைக் கணக்கில் கொண்டு சில இடங்கள் தெரிவு செய்யப்பட்டன. அவற்றை ஒற்றைப் பயணத்திட்டமாக இணைப்பதன் சாத்தியங்களை யோசித்து மூன்று விதமான பயணத் திட்டங்களை வகுத்தேன். முதல் திட்டத்தில் ஆஸ்திரேலிய 8 நாட்களும், நியூஸிலாந்து 10 நாட்களுமாக இருந்தது. இரண்டாவது திட்டம்  - 12 நாட்கள் மட்டும் எடுத்து நியூஸிலாந்தின் தெற்கு தீவு மட்டும் பார்த்து வரும் திட்டம். மூன்றாவது திட்டம் நியூஸிலாந்தின் தெற்கு, வடக்கு இரண்டு தீவுகளையும் சேர்த்து 18 நாட்களில் பார்ப்பதாகத் திட்டம். பிறகு நண்பர்கள் இணைவதில் சில இடர்கள் தோன்றின. முக்கியமாக தேதிகள் ஒரே போல கிடைப்பது, அதுவும் வெவ்வேறு தேசத்தில் இருந்து வருபவர்களுக்கு மிகுந்த சவாலாகப் போனது. மேலும் முழுமையாக நியூஸிலாந்தை பார்ப்பதென ஒரு சாராரும், அவ்வளவு தூரம் போவதால் ஆஸ்திரலேயாவையும் சேர்த்துப் பார்த்துவிடமேண்டுமென ஒரு சாராரும் எண்ணவே திட்டமிடுதல் நீண்டு கொண்டே சென்றது. 

18 நாட்கள் பயணத்திட்டம் என்பதால் அத்தனை பேருடைய தேதிகளையும் ஒரே போல முடிவு செய்வதில் உள்ள சிரமங்கள் தலைதூக்கவே, இறுதியாக நானும் கணேஷ்-மாதங்கி மற்றும் பிள்ளைகளும் செல்வதாக முடிவாகியது. 



அதன் பிறகு துரிதகதியில் திட்டங்கள் வரையறுத்து முடிவு செய்துகொண்டோம். அவசரம் அவசரமாக அனைத்து இடங்களையும் பார்ப்பதில் ஆர்வம் இல்லை, நீண்ட பயணம் என்பதாலும், இரண்டு பிள்ளைகளுடன் செல்வதாலும், சற்று நிதானமாக ஒவ்வொரு இடத்திலும் தங்கி அவ்விடத்தை சுற்றியுள்ள சில அழகான இடங்களை  ரசித்துவிட்டு அடுத்த இடத்துக்கு செல்வது போல ஒரு திட்டம் உறுதியானது.

புனித வெள்ளி மற்றும் மே தினம் என இரண்டு நீள் விடுமுறைகளை இணைக்கவே பத்து தினங்கள் விடுமுறை எடுத்தால் 18 தினங்கள் பயணத்துக்கு கிடைத்தது. பயண ஆயத்தமாக குளிர் ஆடைகள் மற்றும் காலணிகள் மட்டும் வாங்கவேண்டி வந்தது.  



2019 ஏப்ரல் 18ஆம் தேதி சிங்கையில் இருந்து ஏர் நியூஸிலாந்து விமானத்தில் கிளம்பினோம். வீட்டில் இருந்து சாங்கி விமான நிலையம் செல்வதே பெரும் கொண்டாட்டமாக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களை நினைத்து ஒரே பூரிப்பு. சாங்கி விமான நிலைய சாங்கியங்களை முடித்துக் கொண்டு விமானம் ஓடுதளத்தில் கிளம்பத் தொடங்குகையில்தான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. கணேஷ் தலையில் கையை வைத்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்தார். 



(தொடரும்)

Monday, January 4, 2021

மண்வீணைக் கம்பி



ஒவ்வொருவருக்குள்ளும் பசுமைமாறா இடம் ஒன்று இருக்கும். வளர்ந்த வீட்டின் திண்ணை, கிணற்றடி, மொட்டைமாடி, முதுகு பட்டுக் காய்ப்பேறிய சில சுவற்றுத் தடங்கள், குளக்கரை, குட்டிச்சுவர்கள், அன்றாடம் நடந்த சில சாலைகள், காத்திருந்த சில பேருந்து நிறுத்தங்கள் என ஏதோ சில இடங்கள், சில வழிகள் என்றைக்குமாய் மனதில் மாறாமல் இருக்கும். அந்த வழியின், இடத்தின் ஒவ்வொரு திருப்பமும் மேடு பள்ளமும், ஒவ்வொரு மரமும் செடிகொடியும், நாம் அறிந்தவையாகத் தோன்றும். அவ்வழி என்பது வழியாக மட்டுமல்லாது உடன் வந்த ஒரு உறவின், நட்பின் இருப்பாக உணர்வதனாலேயே அது ஞாபக அடுக்கில் மணம் மாறாமல் இருக்கும். ஆனால் அது சென்ற காலத்தின் ஒரு துளியாக அங்கேயே உறைந்து விட்ட ஒரு கணம். அதன் பின்னர் காலம் நிகழ்த்தும் பற்பல மாற்றங்கள் அந்தத் துளியை தொடுவதில்லை. 


நிகழ் தருணமெனும் சூரியனை மறைக்கும் ஒரு கடந்தகால மேகம் போதும், அது பொழியும் சிறு மழை போதும், மனதுள் உறங்கும் அந்த நினைவின் விதை முளைவிட்டு இரு பசுஞ்சிறகு கொள்ள.

அந்த இடமும் வழியும் அதனோடு இயைந்த உறவும் முற்றிலும் அடையாளமின்றி மாறிய பின்னரும் உள்ளுறையும் ஒரு நினைவில் அவை பசுமையாய் நீடுவாழும். கணந்தோறும் மாறிக் கொண்டே இருப்பவற்றை மாற்றமின்மையில் நிறுத்திவைக்கும் மாயையின் கருவிக்கு மனமென்று பெயர்.




அப்படி ஒரு கால்பட்டுத் தேய்ந்த நடைவழியைப் பற்றிய ஒரு பாடல். அவ்வழி நடந்த இருவரைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகள் ஏதுமின்றியே அதைக் குறிப்பால் உணர்த்துவதன் எளிமையாலேயே அழகாகும் பாடல். வழியைப் பாடி, காலடியைப் பாடி, அந்த உறவைப் பாடும் பாடலாகிறது.

சென்ற வருடம் கேட்ட பாடல்களிலேயே மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று. இப்பாடலின் இசையும் ராகமும் (ஸ்ரோதஸ்வினி) அந்த நினைவோட்டத்துக்கு அழகு சேர்க்கிறது. கேரளத்து செருதோனி ஆற்றங்கரைப் பகுதிகள் நீர்மை மின்ன பதிவாகியிருக்கிறது.




படம்: பூழிக்கடகன்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஆன் ஆமி
கவிஞர்: ரஃபீக் அகமத்
இசை: ரஞ்சித் மேலெபட்

மலையாளப் பாடல் வரிகள்:

பொன்வெயிலின் கசவாய்
பொடிமழையுடெ நொரியாய்
மண்வீணக்கம்பி போலே ஒரு வழி
அதில் புழபோலே ஒழுகுண்ணு களிச்சிரி

ஆ வழியில் சரள்வழியில்
ஆளொழியும் சந்த்யகளில்
ஆரோருமோரார்த்த நேரங்களில்
ஆ வழியில் சரள்வழியில்
ஆளொழியும் சந்த்யகளில்
ஈரந்நிலாவின்டே நாளங்களில்

ஈ புழையுடெ குளிரலையில்
பூவிதழுகள் போலே
நாமொழுகியதோர்க்குன்னு
பூமருதும் ஞானும்

(பொன்வெயிலின்)

ஈ வழியில் நடவழியில்
காலடிதன் பாடுகளில்
பூமூடி இலமூடி
மாய்ஞ்செங்கிலும்
ஈ வழியில் நடவழியில்
காலடிதன் பாடுகளில்
ராவோடிப் பகலோடி
மாய்ஞ்செங்கிலும்
ஆத்ய மழத்துள்ளி வீன்னு
புழையிளகும் நேரம்
ஓர்மைகளில் நிறையுன்னு
மண்மனமும் நீயும்
(பொன்வெயிலின்)

தமிழில் எனது சிறுமுயற்சி:

பொன்வெயிலின் பட்டிழையாய்
சிறுதூறலின் சிற்றிழையாய்
மண்வீணைக்கம்பி போல ஒரு வழி
அதில் நதி போல ஒழுகிவரும் புன்னகை

அவ்வழியில், சரள்வழியில்
ஆளில்லா அந்திகளில்
யாரோடுமில்லாத நேரங்களில்..

அவ்வழியில், சரள்வழியில்
ஆளில்லா அந்திகளில்
குளிர்கொண்ட நிலவொளியின் நாளங்களில்..

இந்நதியின் குளிரலைகளில்
பூவிதழ்கள் போலே
நாம் ஓடிய நினைவுகளில்
பூ மருதமும் நானும்..

(பொன்வெயிலின்....)

இவ்வழியில் நடைவழியில்
காலடியின் சுவடுகளில்
பூமூடி இலைமூடி
மறைந்திருந்தாலும்..

இவ்வழியில் நடைவழியில்
காலடியின் சுவடுகளில்
இரவுகளும் பொழுதுகளும்
கடந்திருந்தாலும்..

முதல்மழையின் துளிவிழுந்து
நதி சிலிர்க்கும் நேரம்..
நினைவுகளில் நிறைகிறது மண்மனமும் நீயும்..

(பொன்வெயிலின்....)

பொன் வெயிலிலும் பொடி மழையிலும் சரிகையென மின்னும் சிறுவழி. அவ்விருவர் கால்களன்றி அதிகம் யாரும் நடந்திராத வழி. சரளை பாவிய அவ்வழியில் உதிர்ந்து மூடிய இலைகளும், மலர்களும், காலைகளும், மாலைகளும், குளிர்நிலவொளியும், ஏகாந்தமும் மட்டுமே அறிந்த பாதை.


மனதில் ஒட்டிக் கொண்டது மண்வீணைக் கம்பி போல ஒரு வழி எனும் வரி. மண் எனும் வீணையில் காலடிகள் மீட்ட, இசை எழுப்பிய கம்பி போன்ற சிறுவழி எனலாம். இசைக்க சாத்தியமில்லாத ஒரு மண்வீணை, அதில் ஒரு மீட்ட முடியாத கம்பி, எக்கணமும் இல்லாதாகிவிடக்கூடிய ஒன்றின் நுண்மையை உணர்த்தும் படிமமாகவும் பொருள்கொள்கிறது. அவரவர் நடைவழிக்குத் தக்கபடி..

https://youtu.be/YtBke3ys2_U








Saturday, January 2, 2021

நில்லா உலகு



புவியில் இரவு (Night on Earth) என்னும் நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படத் தொடர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன்.  இதுவரையில் பதிவு செய்யச் சாத்தியமில்லாதிருந்த இரவுநேர உலகை, ஆழ்கடலின், அடர்கானகத்தின், உறைபனியின், நகர்வாழ்வின் இரவுலாவிகளை மற்றும் பல்வகையான இரவுலகின் காட்சிகளை அதிநவீன புகைப்படக்கருவிகளின் உதவிகொண்டு படம்பிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியுமே இதுவரை அறிந்திராத அரிய காட்சிகளை, தகவல்களை, அற்புதங்களைப் பதிவு செய்கிறது. 


இதில் நேற்று பார்த்த பகுதி, நகர்ப்புறங்களில் வாழும் உயிரினங்களைப் பற்றியது. மனிதர்கள் இப்புவியை ஒலியாலும் ஒளியாலும் நிரப்பி வைத்திருப்பது குறித்தும் அது ஏனைய உயிரினங்களை பாதிக்கும் விதங்களைக் குறித்தும் பேசியது . உலகெங்கும் நிகழும் புத்தாண்டு வானவேடிக்கையின் காணொளிகளை இணையத்தில் அப்போதுதான் பார்த்திருந்துவிட்டு இதைப் பார்த்தேன். அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியில் நடைபெறும் சுதந்திர தின வானவேடிக்கை நிகழ்வுகள் கடல்வாழ் ஆமையின் வாழ்வை எவ்விதம் பாதிக்கிறது என்ற மறுபுறத்தை இதில் காண நேர்ந்தது. 



தாய்லாந்தின் உறக்கம் தொலைத்த குரங்குகளும், மும்பையில் நகருள் உலவித் திரியும் சிறுத்தையும், தென்னாப்பிரிக்காவில் தனது மூதாதையின் வழித்தடங்களில் தனது குடும்பத்தையே வழிநடத்தி அழைத்து வரும் மதங்கத்தலைவி இடையில் புதிதாய் முளைத்துவிட்ட நகரத்தைப் பார்த்து திகைப்பதும், நகரவாழ்வெனும் சந்தடியுள் நாம் விலங்குகளையும் எப்படி மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம் எனச் சொன்னது.

24*7 எனப்படும் இருபத்துநான்கு மணிநேரமும் ஏழு நாட்களும் நில்லாமல் ஓடும் நிலையை அடையவே மானுடம் பெருமுயற்சி செய்து வருகிறது. நிலையாமை குறித்து சொல்லப்பட்ட 'நில்லா உலகு' இன்று தடையற்ற ஓட்டம் (Always On) என்ற மந்திரத்தை இடையறாது உச்சரிக்கிறது.

இன்று காலை கேட்ட ஒரு சம்பந்தர் தேவாரப்பதிகம் இப்பகுதியை மீண்டும் நினைவில் எழுப்பியது:

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழை என்று அஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே


பாடலின் பொருள்: ஐம்புலன்களும் கலங்கி அறிவழிந்து நிலை தடுமாறிப் பதறும் காலத்தில் அஞ்சேல் என அருள்பவன் அமர்ந்திருக்கும் கோவில் ஐயாறு. அதைச் சுற்றி வலம் வரும் நடன மங்கையர் ஆட, முழவு எனும் தாளக்கருவி அதிர, அதை மழையின் வரவு அறிவிக்கும் இடியென்று அஞ்சி குரங்குகள் பதறி மரமேறி முகிலைப் பார்க்கும் திருவையாறு! என்ன ஒரு காட்சி! முழவொலியை இடி என்று அஞ்சி மரமேறுகின்றன குரங்குகள். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒலி இடியோடு ஒப்பிடும் அளவில் இருந்திருக்கக்கூடும். இன்று நாம் எட்டுத் திக்கும் சிதறிப் பரப்பும் ஒலியையும் ஒளியையும் எதனோடு இணைத்துப் புரிந்து கொள்வது என்றறியாமல் திகைக்கிறதோ உயிர்க்குலம் எனத் தோன்றியது. ஆனால் அன்று முதல் விலங்குகளும் மனிதர்களின் போக்குகள் அனைத்துக்கும் தகவமைத்துக் கொண்டும் வருகின்றன. இயற்கையின் மாறுபாடுகள் மனிதனையும் தகவைமத்துக் கொள்ள வைத்துக் கொண்டுமிருக்கிறது.



அதே இணையத் தொடரில் சிங்கையின் நீர்நாய்கள் (Otters) குறித்தும், சிங்கை எவ்வண்ணம் விலங்குகளின் வாழ்வியலுக்கு உகந்த நகரமாக மாற்றம் கொண்டு வருகிறது என்றும் காட்டப்பட்டது. இந்த கோவிட் காலகட்டத்தில் அவ்வப்போது நீர்நாய்கள் சிங்கையின் சாலைகளில் கண்ணில்பட்டுக் கொண்டுமிருந்தன. மனித நடமாட்டமும் போக்குவரத்தும் சற்று மட்டுப்பட்டதன் விளைவான சிறு முன்னேற்றம். நீர்நாய் எனில் இது சாத்தியம், மும்பை போல சிறுத்தை உலவினால் என்ன செய்வதெனத் தெரியவில்லை.

அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை 'நீயும் எனது ஒரு பகுதி'தான் எனக்கூறும் இயற்கையின் மொழி காதில் விழ ஆங்காங்கே நிதானமாக நின்று இளைப்பாற வேண்டி இருக்கிறது. சும்மா இருப்பதெப்படி என்பதைக்கூட இணையத்தில் தேடும் இப்புத்தியை நிறுத்துவதெக்காலம்!