Wednesday, February 10, 2021

சிங்கை குறிப்புகள் - 3 - சிராங்கூன் சாலை

இன்று ஒரு நினைவுக்குறிப்பு. 2006 அக்டோபர் முதல் வாரத்தில் சிங்கை வந்திறங்கியபோது அதுவே எனது முதல் வெளிநாட்டுப் பயணம். வெளிநாட்டுப் பயண ஆயத்தங்கள், விமான நிலைய முறைமைகள், விசாவுக்கு பதிலாகக் கையில் கொடுக்கப்பட்ட அனுமதிக் கடிதம், அதை சிங்கை சென்று கொடுத்தபின்னர் விசா தருவார்கள் என்ற சொல்லில் ஏற்பட்ட லேசான ஐயம் எனப் பல தகவல்களை சிங்கையில் இருந்த நண்பர்கள் சிலரிடம் பேசிப் புரிந்து கொண்டு விமானம் ஏறிவிட்டாலும், இங்கு வந்து இறங்கியதும் சற்று பதற்றமாகவே இருந்தது. சாங்கி விமான நிலையத்துக்கு என்னை வரவேற்க  நண்பர் ஒருவர் வந்திருந்தார். 

டாக்சி எடுத்து அவருடன் பேசியபடி எனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி அறைக்கு சென்றபோது உள்ளே ஏதோ ஒரு சிறு பயமும் உற்சாகமும் கலந்தே இருந்தன.  இரண்டில் எதன் விகிதம் அதிகம் எனத் தெரியவில்லை. இருளையே  பகல் என நடிக்க முயன்ற விளக்கொளியில் வழுக்கிச் சென்ற கார் ஏதோ ஒரு மேம்பாலத்தில் ஏறியபோது கடல் எங்கும் கார்த்திகையின் அகல் சுடர் போல ஒளிப்புள்ளிகளாகத் தெரிந்தது . 

வானுயர்ந்த ஒரு சில கட்டிடங்களை முதல் முறை கண்டதும் மீண்டும் ஒரு பயம் அடிவயிற்றில் எழுந்தது. நண்பர் இங்குதான் உனது அலுவலகம் இருக்கிறது என்றார். அப்படி அறிமுகமானது  மில்லெனியா டவர்(Millenia Tower) என்ற 41 மாடிக் கட்டிடமும் அதன் அருகே அமைந்த சன்டெக் கோபுரங்களும்(Suntec Towers). இதைக் கடந்து கார் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீதி ஒன்றில் நுழைந்தது. வரவிருந்த தீபஒளித்  திருநாளை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த ஒளிவெள்ள ஒப்பனைகள்.  

2017 - தீபாவளி வண்ணவிளக்குகள் - சிராங்கூன் சாலை நுழைவு

2018 தீபாவளி மாதங்கியுடன்

திடீரென தி.நகரின் பரபரப்பான ஒரு வணிக வீதிக்குள் நுழைந்துவிட்ட உணர்வு. லிட்டில் இந்தியா எனப்படும் சிராங்கூன் சாலையில் அமைந்திருந்தது விடுதியறை.  எங்கும் தமிழில் பெயர்ப்பலகைகள்.  கண்ணில் படும் அனைவரும் அறிந்தவர்கள் போலிருந்தார்கள். 



அறியா நிலங்களில் மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தாலும் வீடு திரும்பியதும் மனதில் ஏற்படுவது போன்ற ஒரு ஆசுவாசம். தங்கும் அறையை அடைந்து ஒரு சாளரத்தின் வழியே வெளியே நோக்கியதும், அங்கு கண்ட காட்சி மீண்டும் திடுக்கிட வைத்தது. அருகில் இருந்த மிகச் சிறிய ஒரு புல்வெளியில் நூற்றுக்கணக்கான ஆட்கள். அதற்கப்பாலும் நீளும் அச்சாலை முழுவதும் ஆயிரக்கணக்கில் தலைகள், அனைத்தும் ஆண்கள். அது போல ஒரு காட்சியை அதற்கு முன் கண்டிராததால் மனம் திடுக்கிட்டது. உணவுண்ண வெளியே சென்ற போது அது ஒவ்வொரு வார இறுதியிலும் லிட்டில் இந்தியாவில் காணப் போகும் காட்சி என்பது புரிந்தது. இந்த வாராந்திர நிகழ்வுகள், நாட்கள் செல்லச்செல்ல  பழகிவிட்ட போதும், இரண்டு வருடங்களுக்கு முன் ஒருமுறை சிராங்கூன் சாலைக்கு இணையாக செல்லும் ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து குறுக்கே வந்து சிராங்கூன் சாலையில் இணையும் ஒரு குறுக்குத்தெருவில்  ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு இடையில் நடந்து வந்த போது  பெண் என்னும் தன்னுணர்வும் ஒரு அனிச்சையான தற்காப்பு உணர்ச்சியும் ஏற்பட்டதை உணர நேர்ந்திருக்கிறது.  

இந்த நாட்டின் கட்டுமானப் பணிகளிலும் உற்பத்தித் துறையிலும் ஈடுபடும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பணியாளர்கள் இந்த இரு சாலைகளிலும் குழுமும் தினங்கள் வார இறுதி நாட்கள்.  இடைவிடாது தன்னை செதுக்கிக் கட்டிக்கொண்டே இருக்கும் இந்நாட்டின் ஓயாஉளிகளை இயக்கும் பல்லாயிரம் கரங்கள். விடியலுக்கு முன்னரே தொடங்கி இருளும் வரை நீளும் பணிச்சுமை, மிகச் சிறிய தங்குமிடங்கள் தவிர வேறெங்கும் செல்ல அனுமதியில்லாத வார வேலை நாட்களின் சுமையை சற்றே இறக்கிவைக்கவும் தங்கள் நண்பர்களை சந்தித்து அளவளாவவும், இந்திய உணவு வகைகளை சுவைக்கவும், மது அருந்தவும், வார இறுதியில் பெற்ற ஊதிய பணத்தை வீட்டுக்கு அனுப்பவும், அத்தியாவசிய பொருட்களை மலிவாக முஸ்தபா மற்றும் அருகிருக்கும் அங்காடிகளில் வாங்கவும் என இந்தக் கூடுகைகளுக்கு பல காரணங்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு சிறு கலவரத்துக்குப் பிறகு இப்பகுதியில் சட்டதிட்டங்கள் கூடியிருக்கின்றன.   நோய்த்தொற்று காலத்துக்குப் பின்னர் அநேகமாக இவர்களின் வருகை நின்று போய்விட்டது, அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தியாவுக்கு அழைக்கும் தொலைபேசி அட்டைகள் இங்கு விலை மலிவாகக் கிடைக்கும். ஒலிபெருக்கிகள் கூவிக் கூவி இவற்றை விற்பதை இங்கே காணலாம். இந்திய, வங்க தேச, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் குழுமும் இடமாக சிராங்கூன் சாலை திகழ்கிறது. ஞாயிறு மாலை அனைவரும் அணிவகுத்து நின்று மீண்டும் தங்கள் புறாக்கூடுகளுக்கு செல்வதை எத்தனையோ நாட்கள் வருத்தத்தோடு பார்க்க நேர்ந்திருக்கிறது. இன்று போல இணைய இணைப்புகளும் வாட்சப் வசதிகளும் இல்லாத நாட்கள் அவை. கிடைக்கும் ஓரிரு மணித்துளிகள் அவசரம் அவசரமாக ராமநாதபுரத்திலும், தேவிபட்டணத்திலும், அறந்தாங்கியிலும் இருக்கும்  உற்றாரோடு பேசிவிட்டு மீண்டும் அந்தக் கூண்டுகளுக்குள் ஏறிக்கொள்ளும்  அந்த இளைஞன் தினமும் வயிறாற உண்கிறானா? தன் தாயிடமோ மனைவியிடமோ அவன் சாப்பிட்டதாகச் சொன்ன உணவு வகைகளை உண்மையிலேயே உண்டிருப்பானா? ஊருக்குப் பணம் அனுப்பிவிட்டு சட்டைப் பையைத் துழாவும் அந்தக் கைகளில் எவ்வளவு மிச்சமிருக்கும்?  இவ்விதம் பல காட்சித் துணுக்குகளைக் கண்டுவிட்டு ஒரு சிறுகதை எழுதிவிட பரபரக்கும் கையை ஒவ்வொரு முறையும் கட்டுப்படுத்திக் கொள்ளும் விவேகம் எனக்குண்டு.

முஸ்தபா அங்காடி அருகே


லிட்டில் இந்தியாவின் ஞாயிற்றுக்கிழமை


லிட்டில் இந்தியாவைக் கடந்து மேல் சிராங்கூன் சாலையாகி சிராங்கூன் என்னும் பகுதி வரை நீள்கிறது சிராங்கூன் சாலை. இது தீவின் ஆரம்ப நாட்களில் அமைக்கப்பட்ட சாலைகளில் ஒன்று. 1828-ல் தயாரிக்கப்பட்ட சிங்கப்பூரின் ஒரு வரைபடத்தில் தீவை குறுக்காகக் கடந்து செல்லும் சாலை என இது குறிப்பிடப்பட்டிருக்கிறது.  திட்டமிட்டு அமைக்கப் பட்டதுபோலன்றி இப்பகுதி காலப்போக்கில் இந்தியர்கள் அதிகம் வாழ்ந்து வணிகம் செய்து லிட்டில் இந்தியாவாக உருவாகி இருக்கிறது. 1820களில் செங்கல் சூளைகளும் கால்நடை மேய்ச்சலும் இப்பகுதிகளில் நடந்திருக்கிறது. 1819ல் நாராயணப் பிள்ளை என்பவரால் இப்பகுதியின் முதல் செங்கல் சூளை துவங்கப்பட்டிருக்கிறது. 1860 மற்றும் 1936களில் இவை அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுவிட்டது.  

கடைவீடுகள் 


இந்தப் பகுதியில் கிழக்காசிய நகரங்களில் அதிகம் காணப்படும் கடைவீடுகள் (Shophouses) எனும் வகையைச் சேர்ந்த கட்டிடங்கள் நிரைவகுக்கின்றன. அடுத்தடுத்து நெருக்கமாக அமைந்த வரிசை வீடுகளாகவும், வீட்டின் கீழ்த்தளங்கள் வணிகப் பயன்பாட்டுக்கும், மேல்தளம் பணியாளர்கள் தங்கும் இல்லங்களாகவும் அமையும் கட்டிடங்கள். மலேசியாவில் கோலாலம்பூர், பினாங், வியட்நாமின் ஹனோய் எனப் பல இடங்களில் இத்தகைய கட்டிடங்களை காலனிய வரலாற்று இடங்களில் காணமுடியும்.

தேக்கா என்றழைக்கப்படும் பல பொருட்களும் விற்கப்படும் வளாகத்தை ஒட்டி அமைந்த பஃபலோ வீதியில் நுழைந்ததும் விதவிதமான உணவு வகைகளின் மணமும், அருகில்  அமைந்திருக்கும் மூன்று கோவில்களுக்கு அருகேயும் எழும் ஆலயம் சார்ந்த நறுமணங்களும்,  மளிகை மற்றும் காய்கறிகளின் வாசனையும் என மனம் நாமறிந்த இந்தியக் கடைவீதிகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும். லிட்டில் இந்தியாவின் முகப்பில் அமைந்திருக்கும் இந்தத் தேக்காவின்(Tekka) மூலப்பெயர் தேக் கியா கா (Tek Kia Kha) - சீன மொழியில் இளமூங்கில் குருத்துக்கள். இங்கு செல்லும் ரோச்சர் கால்வாய்(Rochor Canal) கரையெங்கும் ஒருகாலத்தில் வேணுவனமாய் இருந்ததால் வந்த பெயர். பல வண்ண நிறங்களில் விற்கப்படும் உடைகளும், அவற்றைத் தைக்கும் கைவினைஞர்களும், தமிழ் பேசத் தெரிந்த சீன வணிகர்களும் நிறைந்த கட்டிடம்.   நம் ஊரில் காண்பது போல அரிசி, கோதுமை, மிளகாய் மல்லி ஆகியவற்றை அரைப்பதற்கான  மாவு அரைக்கும் இயந்திரம் நிற்கும் ஒரு கடையை இச்சாலையில் காண முடிந்தது.



நமது பண்டிகை விசேஷ நாட்களின் தேவைகளுக்கும், பூஜை மற்றும் கோவில் காணிக்கைகள், ஹோமங்களுக்கும், பிறப்பிலிருந்து ஈமச்சடங்குகள் வரை அனைத்து சாங்கியங்களுக்குமான பொருட்களும் கிடைக்கும் ஜோதி ஸ்டோர்ஸ் இங்கு அனைவரும் அறிந்த பெயர். 1961-ல் ஒரு சிறிய வெற்றிலைக் கடையாகத் துவங்கியிருக்கிறது இக்கடை. ஐந்துக்கு ஐந்து அடி சிறிய சாலையோரக் கடையாகத் துவங்கி இன்று இந்தியக் கலாச்சார மையம் அமைந்திருக்கும் கேம்ப்பெல் லேனின்(Campbel lane) அடையாளமாக ஐந்து மாடிக் கட்டிடமாக வளர்ந்திருக்கிறது. இந்தக் கேம்ப்பெல் லேனில் நவராத்திரி சமயத்தில் தெருவெங்கும் கொலு பொம்மைகளும், பொங்கல் தீபாவளி சமயங்களில் அவற்றுக்குரிய அனைத்துப் பொருட்களும் தெருவெங்கும் வண்ணம் நிறைக்கும். இங்கு நிகழும் இந்திய உணவுத் திருவிழாவில் ஒருமுறை சென்று பல  வகையான பாரம்பரிய உணவுகளை சுவைத்துக் கைகளில் மருதோன்றியிட்டுக் கொண்டிருக்கிறேன்.



கொரோனா கட்டுப்பாடுகள் வியாபாரத்தை முடக்கும் முன்னர் இக்கடையும் மேலும் அருகிலிருக்கும் பல இந்தியக் கடைகளும் சேர்ந்து ஒரு இணைய தளத்தில் இங்குள்ள கடைகளின் பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார்கள்.


கேம்ப்பெல் லேனில் விழாக்கால விற்பனை

ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு சென்ற வாரம் இப்பகுதிக்குச் சென்ற போது இந்த நோய்த் தொற்றுக்காலத்தில் பல கடைகள், உணவகங்கள் மூடப் பட்டுவிட்டன.

 சிராங்கூன் சாலையின் கடைகளை வரிசையாகத் தாண்டி நடக்கும் ஒருவர் 1970களில் துவங்கி 2000 வரையிலான பல இளையராஜா பாடல்களை கடைக்கு ஒரு வரியென கதம்பமாகக் கேட்டுக்கொண்டே கடக்க நேரும். அவ்விதம் ஒரு கடையில் கேட்ட பின்னணி இசையின் தொடக்க வரி நினைவில் எழாமல் நாள் முழுவதும் அந்த ஒற்றை இசையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் உண்டு. நேற்று முளைத்த அனிருத் வரை பாடல்கள் ஒலித்தாலும் அவற்றை வெற்றோசையென காதுகள் ஒதுக்கிவிடுகின்றன. முன்பு இச்சாலையில் நிறைய திரைப்பட சிடி மற்றும் டிவிடிக்களை விற்பனை செய்யும் கடைகள் இருந்தன. இந்தியாவில் கண்ணாடிச் சதுரங்களில் மூன்று குறுந்தகடுகள் வடிவில் திரைப்பட டிவிடிக்கள் புழக்கத்தில் வருமுன்னரே சிங்கப்பூர், மலேசியாவின் அடையாளங்களாக இங்கே தரமான டிவிடிக்கள் கிடைத்திருக்கின்றன. கால மாற்றத்தில் இன்று அக்கடைகள் அளவில் சிறுத்து விட்டன. எந்தப் பொருளும் கிடைக்கும் எனப் பெயர் பெற்ற முஸ்தஃபா பல்பொருள் அங்காடியிலும் மிகப் பெரிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒலி/ஒளித் தகடுகளின் விற்பனை இப்போது அருகிவிட்டதை, மிகச் சிறிய ஒற்றை வரிசையாக அது மாறியிருப்பதில் பார்க்கலாம்.

அடுத்ததாக ஒரு டாலர் விற்பனைக் கடைகள் இங்கு மக்கள் வந்து குவியுமிடங்கள். ஊருக்கு பல விதமான கைக்கடிகாரங்களும், சிங்கப்பூர் புகழ் கோடாலித் தைலமும், விலை மலிவான நறுமணங்களும், பலவண்ண அலங்காரப் பொருட்களுமென சிங்கை வந்து தாயகம் திரும்புவோர் பரிசுப் பொருட்களை வாங்கும் சுரங்கங்களாக இருந்த இக்கடைகள் இன்று பத்து வெள்ளிக்கு மூன்று பொருட்கள் என்று விற்கும் 3 for 10$ கடைகளாக மாறியிருக்கின்றன.


மதுரை முருகன் இட்லியில் இருந்து காரைக்குடி செட்டிநாடு உணவு வரை, பஞ்சாபி உணவிலிருந்து வங்க உணவு வரை அனைத்தும் கிட்டும் அன்னசாலை. பல நூறு கடைகள் புதிதாகத் தோன்றியும் காலப்போக்கில் உதிர்ந்து கொண்டும் இருக்கும் இச்சாலையில் 1947-ல் துவங்கப்பட்டகோமள விலாஸ் சைவ உணவகம் அன்று முதல் இன்றுவரை தனக்கென ஒரு தனிச்சுவையோடும், தரத்தோடும் இன்றும் சிங்கையின் உணவு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.






இவ்விதம் ஒரே வீதியின் பல இடங்களில் இருந்துகொண்டு கடல் தாண்டி இருக்கும் உறவுகளோடு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து கொண்டும், நடந்து கொண்டும் பேசிக் கொண்டிருப்பது, சிங்கையில் இருந்து இந்தியாவுக்கு வான்வெளியில் பல்லாயிரம் குரல்களால் ஆன ஒரு பாதை இருப்பது போல ஒரு மனச்சித்திரத்தை எனக்கு ஏற்படுத்துவதுண்டு.  இந்தப் பகுதியில் நிலவும் பண்பாட்டு நடவடிக்கைகள், நிலவும் பழக்க வழக்கங்கள், வழிபாடுகள், உண்ணப்படும் உணவுகள்,  கிடைக்கும் பொருட்கள், இவைகளால்  மட்டுமல்ல, அங்கு நடக்கும் நிற்கும் கடக்கும் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மண்ணை ஏதோ ஒரு காரணத்துக்காக எண்ணியபடியே பேசியபடியே இங்கு ஒரு எண்ண வடிவிலான பாரதத்தை உருவாக்குகிறார்கள், அதனாலேயே இதற்கு லிட்டில் இந்தியா என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது என எண்ணிக் கொள்வேன்.   

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 2 - மரைன் பரேட் எனும் மானுடக் கனவு

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 4 - கோங் க்ஸி ஃபா ட்ஸாய்

9 comments:

  1. A walk down memory lane(s). Thank you Subha

    ReplyDelete
  2. Super.சிங்கப்பூருக்கு வந்து கடகடன்னு சுத்திப்பார்த்துட்டு உடனே திரும்பினாப்பலஇருக்கு

    ReplyDelete
    Replies
    1. 😊 இது ட்ரெயிலர். நிதானமா சுத்திப் பார்க்க வாங்க..

      Delete
  3. சிங்கை அனுபவங்களில் நாடு விட்டு வந்து ஒர்க் பெர்மிட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பற்றிய வர்ணனைகள் நெகிழச்செய்துவிட்டது சுபா��

    ReplyDelete
  4. சமகாலமும் வரலாறும் பிணைந்த நடை அருமை. வான்வெளியில் பல்லாயிரம் குரல்களினாலான பாதை 👌

    ReplyDelete
  5. நன்றி ராஜேஷ்.

    ReplyDelete
  6. வெண்முரசான பதிவுகள்😊 உணர்வுகளும்
    உயிருமாக இருப்பதால் புத்தகமாக போடுவதற்கு தகுதியான பதிவுகள்.
    தொடருங்கள்

    ReplyDelete