Monday, February 8, 2021

சிங்கை குறிப்புகள் - 1 - தெலோக் குராவ் சாலைகள்

ஒவ்வொரு நாளும் சில வரிகளேனும் எழுதலாம் என ஒரு முயற்சி. 

சென்ற மார்ச் 16லிருந்தே வீட்டிலிருந்துதான் அலுவலகம். இடையில் ஒரு நாள் அலுவலகம் சென்று வர நேர்ந்தது. இந்த மாதத்தில் ஒரு நாள் செல்ல வேண்டியிருக்கலாம்.

அலுவலகம் செல்லும் தினங்களில், சராசரியாக எட்டாயிரம் முதல் பத்தாயிரம் காலடிகள் (6-8 கிமீ) நடை இயல்பாக வந்துவிடும். வீடுறையும் காரணத்தால் வலிந்து நடைக்கு செல்லாவிட்டால் சில நூறு காலடிகளில் நாள் முடிந்து விடுகிறது. அப்படியே சென்றாலும் மாலை ஆறு மணிக்கு மேல் அல்லது இரவுணவுக்குப் பிறகு நடை செல்வதால் சூரிய ஒளி மேலே படாமலேயே பல தினங்கள் கடந்து விடுகின்றன. 

வழக்கமாக கடற்கரைப் பகுதியில் கடலோரமாகவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி நடப்பது வழக்கம். இன்று சாலைப்புறமாக தெலோக் குராவ்(Telok Kurau) பகுதியில் நடக்க முடிவு செய்தேன். 

சிறு வரலாற்றுக் குறிப்பு. இது நகர்ப்புறமாவதற்கு முன்னர் கடலோர மீன்பிடி கிராமமாக இருந்த பகுதி. மலாய் மொழியில் மாமர மீன் வளைகுடா (Mango Fish Bay). இங்கிருந்திருக்கிறது கடற்கரை. இன்று நான் வாழும் பகுதியெல்லாம், கடலைப் புறங்காட்டி கவர்ந்தெடுத்த நிலம் (reclaimed land). இன்று நடுத்தர, உயர் நடுத்தரக் குடியிருப்புகள் நிறைந்த பகுதி. 1980களில் கம்போங்(Kampong) எனப்படும் கிராமப்புறங்கள் அகற்றப்பட்டு நவீனப்படுத்தப்படும் வரை தெலோக் குரோவில் இந்த மலாய் கிராமம் இருந்திருக்கிறது. உலகப் போருக்கு முந்தைய காலகட்டங்களில்   இப்பகுதிகளில் இந்தியர்களும் அதிகம் வாழ்ந்திருக்கிறார்கள். வீட்டுக்கு வீடு பசுக்களும் கன்றுகளுமாக இருந்த பகுதி. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது இங்கிருந்த மலாய் பள்ளி சோதனை வளாகமாகவும் சூக் சிங் படுகொலை என வர்ணிக்கப்படும் ஜப்பானியர்களுக்கு எதிரானவர்களென சந்தேகத்துக்குள்ளான அனைவரையும் அழித்தொழித்த இடமாகவும் இருந்திருக்கிறது. 1942-ல் பிப்ரவரி 21 முதல் மார்ச் 4 வரை இங்கு பதினெட்டு முதல் ஐம்பது வயது நிரம்பிய சீன ஆண்கள் வரவழைக்கப்பட்டு சந்தேகமேற்பட்டவர்கள் அனைவரும் ஜப்பானிய கெம்பிட்டாய் காவலர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.





ஆறு மணியளவில் கிளம்பி தெலோக் குரோவ் சாலை வழியாக சாங்கி சாலை வரை சென்றேன். லோராங் G, H முதல் N வரையிலான நீண்ட சாலைகள் தெலோக் குரோவ் சாலையைக் குறுக்காக வெட்டிச் சென்றன. லோராங் என்றால் மலாய் மொழியில் சிறிய தெரு. சற்றே பரபரப்பான முக்கிய சாலையிலிருந்து  இந்த லோராங் சாலைகள் அமைதியாக இருபுறமும் தனித்த வீடுகளோடு, சாலையோரம் நிறுத்தப்பட்ட கார்களோடும் இருபுறமும் இரு கிமீக்கு மேலாக நீண்டு கிடந்தன.



சிங்கையில் அதிகம் காணப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வாரிய (HDB Flats - Housing Development Board) வீடுகள் மற்றும் வசதிவாய்ந்த குடியிருப்புகளான காண்டோ (Condominium) போலல்லாது, நிலத்தோடு கூடிய தனித்த வீடுகள் (Landed Properties) நிறைந்த பகுதி இது. இத்தகைய வீடுகளை வெளிநாட்டினர் இங்கு வாங்க முடியாது. இத்தகைய வீடுகளின் வாடகையும் மிக அதிகம். எனவே நிதானமாக ஒவ்வொரு வீட்டின் தோட்டங்களையும் வெளிப்புற அலங்காரங்களையும் கவனித்தபடி நடை. 

இப்பகுதியில் தனித்த பங்களாக்களைப் போன்ற வீடுகள், ஒரு சுவரைப் பகிர்ந்து கொள்ளும் வீடுகள் (Semi Duplex), மற்றும் மொட்டைமாடியோடு கூடிய வீடுகள் என சில வகைகளும் தென்பட்டன.


பல வீடுகளிலும் முகப்பில் மஞ்சளும் சிவப்பு கலந்த ஆரஞ்சுமாக கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த Bauhinia kockiana செடிகள்  (பெயர் உதவி தாவரவியல் பேராசிரியை தோழி லோகமாதேவி). மாலை வெயிலில் கனலென,கனல் தகித்த பொன்னென ஒளிர்ந்தது. 


Bauhinia kockiana 

பிறகு விதவிதமான கள்ளிகள், பல வண்ணங்களில் காகிதப்பூக்கள்(Bougainvillea), மிக்கி மௌஸ் மலர்கள் பூக்கும் Ochna kirkii எனப் பல செடிகள். 


Ochna kirkii

அனேகமாக பல வீடுகளில் முகப்பில் கண்ணாடியாலான சுவர்கள் அமைத்து திரைச்சீலையிட்டு இருக்கிறார்கள். நாள் முழுவதும் கனமான திரைச்சீலையிட்டு அறைகளை இருளாக்கி விட்டு செயற்கை ஒளியும், குளிரூட்டப்பட்ட அறையுமாக வாழ்க்கை. வெளியே மாலையிலும் 31°செல்சியஸ் ஆக இருந்தது. ஆனால் காற்று சீராக வீசிக் கொண்டிருக்கவே சிரமம் இல்லை.

சாங்கி சாலை வரை நீளும் 1.75கிமீ சாலையில் நடந்து, இடப்புறம் திரும்பி கெலாங்(Geylang) வழியாக மேலும் ஒரு கிமீ நடந்தேன். மலாய் அடையாளங்களோடு இருக்கும் பகுதி இந்த கெலாங், ஹரிராயா (ரம்ஜான்) சமயத்தில் மிக அழகாக அலங்கரிக்கப்படும் இச்சாலைகள். அங்கிருந்து இடப்புறம் ஒரு நடைபாதை இருபுறமும் தோட்டங்களோடு அழகாக வகிடென நீண்டு சென்றது. அதில் நுழைந்து நடக்கத் தொடங்கினேன். இப்பாதை குறித்து முன்னரே வாசித்திருந்தேன். ஹெய்க் நடைபாதை எனப் பெயர் கொண்ட அப்பாதை அழகான நடைபாதைகளில் ஒன்றென பட்டியலில் இருந்தது. எந்தத் திட்டமும் இன்றி இன்று இங்கு வந்தாயிற்று.

அந்திச் சிவப்பில் கருமை ஏறிவிட்டது. மாபெரும் தொட்டிகளில் பல்வேறு குறுமரங்கள் வளர்ந்திருந்தன. சிமெண்ட் பாவிய நடைபாதை. ஒரு புறம் பாதுகாக்கப்பட்ட சமூகத் தோட்டங்கள், பல விதமான செடிகள் வளர்க்கப்படுகின்றன. முதலில் போன்சாய் வகைகளுக்கென ஒரு பகுதி, பிறகு ஆர்கிட் மலர்கள், அதன் பிறகு பல வகையான கள்ளிகள்.



 அதைத் தொடர்ந்து காய்கறித் தோட்டங்கள். அவரைக் கொடி படர்ந்து காற்றில் கரம் நீட்டி சிலப்பதிகாரம் சொல்வது போல "போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட" நின்றது. வெள்ளரிக் கொடி, பூசணிக் கொடிகள். இருளத் தொடங்கியதும் கண்ணை உறுத்தாத சாலை விளக்குகள் ஒளியேற்றிக் கொண்டன. இந்தப் பாதையில் 1.5கிமீக்கு மேல் நடந்து, நூலகம் வழியாக வீடு வந்து சேர்ந்தேன். 



கூகுள் மேப் 6.3கிமீ என்றது. காலடிகளை கணக்கிடும் செயலி 5.8கிமீ என்றது. 


எதுவாயினும் நிறைவான மாலை.


அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 2 - மரைன் பரேட் எனும் மானுடக் கனவு

6 comments:

  1. Nice. Article helps to imagine the area and surrounding!!😊

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. \\கடலைப் புறங்காட்டி கவர்ந்தெடுத்த நிலம்,அந்திசிவப்பின் கருமை ஏறிவிட்டது//
    எந்தவித விளக்கமும் இன்றி கற்பனையை வாசிப்பவர் மனதில் ஏற்றப்படும் மொழிநடை .பணி சிறக்க வாழ்த்துக்கள்��

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது சுபா. தொடருங்கள்

    ReplyDelete