Tuesday, February 2, 2021

பசுமையின் ஆயிரம் வண்ணங்கள் - 2

நியூஸிலாந்து பயணத்தின் முதல் எண்ணம் தோன்றியது முதலே அந்நாட்டின் விரிந்த வெளிகளில், நீண்ட நெடுஞ்சாலைகளில் காரில் பயணம் செய்ய வேண்டும், அதைத் தானே ஓட்டவேண்டும் என்ற ஆசை கணேஷுக்கு இருந்தது. இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் அந்நாடுகளில் அனுமதி பெற்று கார் வாடகைக்கு எடுக்க முடியும் என்றறிந்தோம். இந்தியாவில் நீண்ட சாலைப் பயணங்கள் செல்வதை மிகவும் விரும்பும் கணேஷுக்கு ஆறாண்டுகளுக்கு மேலாக சிங்கையில் அத்தகைய பயணகளுக்கான வாய்ப்பில்லாது போகவே, இதை மிகவும் எதிர்நோக்கி இருந்தார். ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் வருடம் என்பதால்,   இந்திய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவென இரு முறை இந்தியப் பயணம் மேற்கொண்டு அதை ஒரு வழியாக வாங்கியும் வைத்திருந்தார். கார் பயணத்துக்கென்றே நியூசிலாந்தின் டுனிடின் (Dunedin) பகுதியில் மூன்று நாட்களை திட்டமிட்டிருந்தோம். 

விமானம் ஓடுதளத்தில் ஒடத் தொடங்குகையில் கார் ஓட்டுவது குறித்து ஏதோ பேசத் தொடங்கவும், அத்தனை சிரமங்களுக்கிடையே பெற்ற ஓட்டுநர் உரிமத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்பது கணேஷுக்கு நினைவு வந்தது. மிகுந்த மகிழ்ச்சிக்கிடையே  சில மணித்துளிகள் அனைவருக்கும் ஒரு சிறு தொய்வு ஏற்பட்டது. பிறகு, விமானத்தின் உணவு வகைகள் வரத்தொடங்க அதைக் கண்டு குதூகலிக்கத் தொடங்கிய பிள்ளைகளைக் கண்டு மனது இலகுவானது. சிங்கையில் இருந்து ஆக்லேண்ட் ஏறத்தாழ பத்து மணிநேரப் பயணம். சிங்கையில் இருந்து மாலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு, நியூஸிலாந்து நேரம் காலை எட்டரை மணியளவில் ஆக்லேண்ட் சென்று சேர்ந்தோம்.

நியூஸிலாந்து, அங்கு குடியேறிய பூர்விகக் குடியினராகிய மாஓரிகளின்(Maori) மொழியில் அவ்டேரவா (Aotearoa) என்றழைக்கப்படுகிறது.  வடக்குத் தீவு, தெற்குத்தீவு என இரண்டு முக்கிய நிலப்பரப்புகளும் 700க்கும் மேற்பட்ட தீவுகளும் கொண்ட நாடு. உலக வரைபடத்தில் சற்றே தலையை உயர்த்தியபடி ஊர்ந்து செல்லும் நத்தை போலத் தோன்றும்  இந்நாட்டின் வடக்குத்தீவின் வடக்குப் பகுதியில் (நத்தையின் உணர்கொம்புகள் தலையில் முளைக்கும் இடத்தில்) இருக்கும் ஆக்லேண்ட் முக்கியமான நகரங்களில் ஒன்று. 

ஒவ்வொரு விமானப் பயணத்தின் போதும், விமானம் ஓடுதளத்தில் இருந்து மண்ணைக் கைவிட்டு வானேறும் நிமிடங்களையும், படிப்படியாக உயரம் குறைந்து, முதலில் சிறு தீற்றல்களாகத் தெரியும் நிலப்பரப்பு நகரமாக, உயிர்ப்புள்ள வரைபடமாக, கட்டிடங்களாக, வயல்வெளிகளாக, ஆறுகளாக கண்ணில் புலனாகி, அதற்குள் ஒரு பருந்து போல வந்திறங்கும் அந்த தருணத்தையும் தவறவே விடக்கூடாதென நினைப்பேன். அந்த சில ஆயிரம் அடிகளில் இருந்து சில நூறு அடிகளுக்கு இறங்கும்/ஏறும் தருணங்களில் அந்த நகரம் ஒரு ஒட்டுமொத்த வடிவம் கொண்டு நான் இதுதான் என்பதுபோல ஒரு சித்திரம் கொடுக்கும். அந்த நிமிடத்தில் மனதில் பதிந்துவிடும் தூல உருவத்தைக் கொண்டு அந்நகரம் குறித்த ஒரு முதல் எண்ணம் உருவாகும். ஒவ்வொரு ஊரும் வேறு வேறு கைரேகைகளும் முகச்சாயல்களும் கொண்ட தனித்த உயிரிகள். 



நியூஸிலாந்தை நெருங்கும் அதிகாலை. விடியலை ஒரு ஒளிர்நகையென அணிந்திருந்தது விண்வெளி. பொன்வெயிலில் சுகமாக மிதந்து கொண்டிருந்த பஞ்சுக் குவைகள் மொத்தமாக நிலத்தை மூடியிருந்தன. மேகங்களை மெல்ல விலக்கி, பனியை ஊடுருவிய காலைக் கதிரில் பளபளத்த கடல் பகுதியைக் கடந்து இறங்கத் தொடங்கியது விமானம். பல சிறிய பசிய குன்றுகளும், பச்சை விரிப்பில் அடுக்கி வைக்கப்பட்ட கொலு பொம்மைகள் போல அமைந்த வீடுகளும், ஆங்காங்கே நீல விழிகளெனத் தெரிந்த நீர்நிலைகளும், அதிக உயரமற்ற சமதளமான கட்டிட அமைப்புகளும், ஊடே கண்ணை உறுத்தாது நீண்டு செல்லும் நெடுஞ்சாலைகளுமாக ஆக்லேண்ட் ஒரு  விடுமுறைக்கு கிராமத்தின் வயல்வெளிகளை ரசிக்க வந்த நகரத்துப் பெண் போல கண்ணில் பட்டது. மிக அழகிய இயற்கைப் பின்னணியில் நடுவில் மின்னும் சிறு நவீன நகரம். கடற்கரையை ஒட்டியே தொடங்கும் விமான ஓடுதளம்.



விமான நிலையத்தில் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. சிங்கை விமான நிலையத்தோடு ஒப்பிட்டால் ஏறக்குறைய ஒழிந்தே காணப்பட்டது. வழக்கமாக இறுகிய முகத்தோடு காணப்படும் குடியேற்ற அதிகாரிகளைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு இனிமையான புன்னகையோடு வரவேற்ற அதிகாரிகள் ஒரு இனிய மாறுதல். வெளியேறி, மெல்லிய குளிரும் இளம் வெயிலுமாக இருந்த காலைப் பொழுதை ரசித்தபடி நாங்கள் பதிவு செய்திருந்த வீட்டுக்கு வாடகைக் காரில் பயணம் செய்தோம். ஓட்டுநர் கரீபியன் தீவுகளில் வளர்ந்த ஒரு நியூஸிலாந்து பெண், ஆறடிக்குக் குறைவின்றி புன்னகையோடு காணப்பட்டார். எங்கும் தெருக்கள் ஒழிந்து காணப்படவே, அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ஆக்லேண்ட் முக்கிய நெடுஞ்சாலைகளும் வழக்கமாக நெரிசலில் திணறும் என்றும், அன்று புனித வெள்ளியாக இருந்தபடியால் பலரும் நீண்ட வாரஇறுதியைக் கொண்டாட வெளியூர்களுக்கு சென்றுவிடவே சாலைகள் மூச்சுவிட்டுக் கொண்டு ஏகாந்தமாக இருக்கின்றன என்றார்.  நியூஸிலாந்து செல்வதற்கு ஏப்ரல் மத்தியில் இருந்து மே தொடக்கம் வரை மிகத் தோதான பருவமெனக் கண்டுகொண்டோம். பொதுவாக பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் மே மாத இறுதியையும் (கடும் குளிர் காலம்), இனிய கோடை விடுமுறைக்கென செல்பவர்கள்  டிசம்பர் மாதத்திலும் பயணம் மேற்கொள்வார்கள். ஏப்ரல் இரண்டாவது வாரம் இலையுதிர் காலம் தொடங்கும் காலம். நாடு முழுவதும் ஒரு வண்ணக் கொந்தளிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.             


இவ்விடத்தில் Airbnb வசதி குறித்து ஓரிரு வார்த்தைகள். Airbnb வசதி வந்த பிறகு பயணங்களில் தங்குமிடங்களும்  சுற்றுலாத் தலங்களுக்கு இணையாக ஒரு முக்கியமான தெரிவு ஆகியிருக்கிறது. குடும்பமாக அல்லது நண்பர்களாக செல்லும் போது விடுதிகளில் ஓரிருவராய் அறைகளுக்குள் அடைந்து கிடைப்பதைவிட இது போல வீடுகளை தெரிவு செய்யும் போது அனைவரும் ஒன்றாய் அமர்ந்து நேரம் செலவிடுவதற்கும், அவ்வப்போது எளிய உணவுகளை செய்து கொள்வதற்கும் ஏதுவாகிறது.முக்கியமாக  செல்லும் இடங்களின் வீடுகளை, அந்தந்த நாடுகளின், ஊர்களின் குடியிருப்புகளை சில நாட்களேனும் தங்கி அப்பகுதிகளை அறிந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது.   

ஆக்லேண்டின் மவுண்ட் ராஸ்கில் எனும் புறநகர்ப் பகுதியில் மிக அழகான ஒரு வீட்டில் சென்று இறங்கினோம்.  மூன்று நாட்கள் அங்கு தங்குவதாகத் திட்டம். பின்னால் அழகிய சிறுதோட்டம் கொண்ட வீடுகளின் வரிசை. குளிருக்கான கணப்போடு கூடிய மிக அழகான வீடு. களைப்பு தீர சற்று இளைப்பாறிவிட்டு நானும் மாதங்கியும் அந்தப் பகுதியை அறிந்து கொண்டு, ஏதேனும் கடைகள் இருப்பின் பால், ரொட்டி போன்றவை வாங்கி வரலாம் எனக் கிளம்பினோம்.


ஒவ்வொரு வீடும் மலர்ந்தும் பொன்னிலைகளின் ஒளியிலும் நிறைந்திருந்தது. கையகல செம்பருத்திகள், விதவிதமான ரோஜாக்கள், பொன்னிற இலைகள் நிறைந்த மரங்கள் என அழகு கொழித்த சாலைகளின் வழி சிறிது நடந்ததுமே ஒரு சிறிய கடையும், அருகிலேயே ஒரு இந்திய உணவகமும் கண்ணில் பட்டது.உலகெங்கும் எல்லா நாடுகளிலும் கண்ணில் படும் பஞ்சாபி சகோதரர்கள் அங்கும் அந்த அழகிய சிறு உணவகத்தை நடத்தினர்.  காபி, தேநீருக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி, அனைவரையும் தயாராகச் சொல்லி மதியத்துக்கான திட்டம் தீட்டினோம். இரண்டாவது நாளில் இருந்துதான் சில குறிப்பிட்ட திட்டங்கள் இருந்தன, எனவே அன்று நிதானமாக ஊர் சுற்றிப் பார்க்கும் எண்ணம் மட்டும்தான்.

நாங்கள் தங்கியிருந்த புறநகர்ப் பகுதி நகரின் தென் பகுதியில் இருந்தது. அங்கிருந்து நகர்மையத்துக்கு செல்ல நகர்ப்பேருந்து இருப்பதை அறிந்து, பிரிட்டோமார்ட்(Britomart) என்னும் மைய பேருந்து நிறுத்தம் வரை சென்று அங்கிருந்து  மிஷன் பே (Mission Bay) என்னும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதாக முடிவு. எளிய காலை/மதிய உணவை முடித்துக்கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்தபோது கரிய இறகுகளும் நீல நிற கழுத்துப் பகுதியோடும் சிவந்த அலகோடும் கண்ணில் பட்டது ஒரு பறவை. கோழி போல இருந்த அந்தப் பறவை புகேக்கோ(pukeko)  ஆஸ்திரேலிய சதுப்புநிலக் கோழி வகையைச் சேர்ந்தது. 



அதனுடன் சில படங்கள் எடுத்துவிட்டு  இருபுறமும் மஞ்சளும் பல வண்ணப் பச்சையுமாக விரைந்த நகரை ரசித்துக் கொண்டே பிரிட்டோமார்ட் நிலையத்தை சென்றடைந்தோம். 





அங்கு ஒரு காபி அருந்திவிட்டு மிஷன் பே கடற்கரைக்கு இன்னொரு பேருந்து. மேலும் ஒரு அரைமணிநேரப் பயணம் கடற்கரையோரமாகவே சென்றது.  நகரைச் சார்ந்த பகுதியில் இருப்பினும் ஆங்காங்கே கடலுக்குள் எழுந்து நின்ற மலைகளோடு வெளிர்நீலத்தில் மிக அழகாக இருந்தது மிஷன் பே கடற்கரை. 



மிக நவீனமான பல தரப்பட்ட கடைகளும், உணவகங்களும் அந்த சாலையில் இருந்தாலும், அத்தனை சந்தடிக்கும் அப்பாற்பட்டு நின்றது நீலவெளி, நிலவின் வெளி. அன்று சித்திரை முழுநிலவு என்பது நிலவைக் காணும் வரை நினைவில் இல்லை. கடலில் சற்றுப் பொன்கரைத்து உருக்கி விட்டுக் கொண்டே மேலெழுந்தது நிலவு. 



நிலவு தரும் போதையில் சற்று நேரம் இருந்து விட்டு, இரவுணவை அங்கேயே முடித்து விட்டு  மீண்டும் பேருந்துகளில் பயணம் செய்து, இரவு பத்து மணிக்கு மேல் வீடு திரும்பினோம். அறிந்த மனிதரை அறியாநிலத்தில் சந்திப்பது போல, தென்துருவத்து வானம் கண்களுக்கு பழக்கமில்லாத வேறு இடங்களில் பழகிய நட்சத்திரங்களுடன்  இருந்தது. மொத்த சுற்றுப்புறமும் நிலவு மட்டும் சூடி வெள்ளியொளி கொண்டிருந்தது. வேறெந்த ஒளியும் இல்லாத அந்த சிறிய சாலையில் நிலவு கண்ணில் படாமல் ஒளி சிந்திக்கொண்டிருந்தது.  வீட்டை நெருங்கவும் கூரை மேல் பூனை போல எப்போது வேண்டுமானால் எந்தப் பக்கமும் குதித்துவிடுவேன் என அமர்ந்திருந்தது நிலவு.  



No comments:

Post a Comment