இன்று(9-பிப்) வீட்டருகிலேயே இரண்டு கி.மீ நடை. கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்திருக்கும் இப்பகுதியுடனான எனது உறவு 2006-ல் முதல் முறை சிங்கை வந்தபோது தொடங்கியது. நேர்த்தியான கட்டுமான வடிவமைப்பு கொண்ட பகுதி. இருபுறமும் ஓங்கிய மரங்கள் நிறைந்த சாலைகள். பதினெட்டாவது மாடியில் குடியிருந்த வீட்டின் மூன்று புறத்து ஜன்னல்களிலும் தெரியும் நீலக்கடல், விரிவெளியை அள்ளி வீட்டுக்குள் நிறைக்கும் விசாலமான ஜன்னல்கள் என மிகவும் மனதுக்குகந்த வீடு. அன்றைய வாடகை 800டாலரில் நானும் அலுவலகத் தோழியும் பகிர்ந்து தங்கியிருந்தோம்.
இரண்டாவது முறை சிங்கை வந்த போதும் மிகவும் ஆர்வத்தோடு இப்பகுதியில் மீண்டும் வீடு தேடியதற்கு, ஐந்து நிமிட நடை தொலைவில் உள்ள கடலும், நூலகமும், அழகிய மரங்களடர்ந்த சூழலும், எனப் பல காரணங்கள்.
இரவுணவுக்குப் பிறகு காலாற இப்பகுதியில் உலவுவது என் மனதுக்குந்த ஒன்று. அருகிலேயே ஓடும் சிக்லாப் கால்வாய் இப்பகுதிக்கு மேலும் அழகூட்டுகிறது. இதை ஒட்டியே செல்லும் சிக்லாப் பூங்கா இணைப்பு வழி நடைபாதை வழியெங்கும் மரங்களோடு அரிய வகை செடிகளோடு, ஆங்காங்கே உடற்பயிற்சிக் களங்களோடு, இளைப்பாற நிழல் கூரைகளோடு நடையை ஊக்குவிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மழைநீர்க் கால்வாய்களில் கடல் ஏற்றத்தின் போது கடல் நீர் உட்புகும். சமீபத்தில் ஒரு முழுநிலவு நாளில் அவ்வண்ணம் நீர் நிறைந்து மரகதப் பச்சையில் மின்னிய நீர் ஏறத்தாழ கரைதொட்டு ஓடிக்கொண்டிருந்தது.
இரண்டரை கிமீ நீளம் கொண்ட இந்த மழை நீர் மேலாண்மைக்கான கால்வாய் கிழக்கு கடற்கரையில் சென்று சேருமிடத்தில் கடலைப் பார்க்கும் வண்ணம் ஒரு அழகான காட்சித்திடல் 2017-ல் உருவாக்கப்பட்டிருக்கிறது. காலை மாலை வேளைகளில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோரும், இசையை வழிய விட்டபடி மிதிவண்டியில் செல்வோரும், வியர்வையில் நனைந்த சட்டை உடலோடு ஒட்டியிருக்க ஓடுவோரும் நடை செல்வோரும், காற்று வீசும் காலங்களில் பல வண்ணக் காற்றாடிகளோடு குடும்பங்களும், என வண்ணமயமாக இருக்கும் இடம். வீட்டிலிருந்து கிளம்பி நாற்புறமும் ஓங்கி நிற்கும் அடுக்குமாடிகளையும் அடிபருத்த அங்சானா மரங்களையும் (வேங்கை மரங்கள்) , மஞ்சள் மலர்களால் நிறைந்திருக்கும் பெருங்கொன்றை மரங்களையும் கடந்து இவ்விடத்தில் சென்று அமர்ந்து இரவின் அமைதியில் அலைகள் மட்டும் ஒலிக்க கடல் சென்று கவிழும் வான் வெளியைத் தொடுவதைப் பார்த்திருந்து விட்டு வருவது விசை கூடிய இந்நகர வாழ்வுக்கு இசை சேர்ப்பது.
இயற்கை எழில் நிரம்பியது போன்ற காட்சிதரும் இந்த மரைன் பரேட் எஸ்டேட் முழுக்க முழுக்க கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.பெடோக் மலைகளைத் தகர்த்து கடோங் கடலுக்கு அணையிடுவோம் என்ற தாரக மந்திரத்தோடு இவ்வேலையில் இறங்கியிருக்கிறார்கள். 1960களில் துவங்கியது இந்த நில மீட்புப் பணி.
Source: https://mpthenandnow.wordpress.com/
சிக்லாப் மற்றும் பெடோக் பகுதிகளில் இருந்த சிறு குன்றுகள் சமதளமாக்கப்பட்டு அந்த மண் இதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த மிகப் பெரிய குடியிருப்பு நிர்மாணப் பணிகளுக்கென 20,000 மெட்ரிக் கியூப் மண் இந்தக் குன்றுகளில் இருந்து கடலுக்கு நகரும் தானியங்கி பட்டைகளில் பயணித்திருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்தும் மண் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. 1971ல் கிழக்கு கடற்கரை விரைவுச் சாலையும் மரைன் பரேட் என்னும் பகுதியும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது . மரைன் பரேட் உருவாக்கத்தின் பல கால கட்டங்களைப் பதிவு செய்த புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் கிடைத்தவற்றில் இருந்து தொகுத்திருக்கிறேன். இவற்றை எடுத்து இணையத்தில் பதிவு செய்தவர்களுக்கு நன்றி.
1970களில் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான டன் மண் கொட்டி நிரப்பப்பட்டு இந்த நிலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்போது கட்டப்பட்ட பிளாக் 1 இந்நிலத்தில் எழுந்த முதல் குடியிருப்பு வளாகம். இதை அடுத்த பிளாக் 3 குடியிருப்பில் தான் 2006ல் நான் குடியிருந்தேன்.
முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 1 - தெலோக் குராவ் சாலைகள்
அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 3 - சிராங்கூன் சாலை
Looking at Singapore through a different glass. Nice one
ReplyDeleteVery good article. Makes us to understand the great work done at the place we stay nw.. Liking for this place is getting converted to love for those behind today's marine parade estate!!
ReplyDelete