Sunday, February 14, 2016

சற்குரு - தாத்தா - 23

மீண்டும் கடந்தகாலத்துள் நிகழ்காலம். (சற்குரு - தாத்தா - 13லிருந்து http://manaodai.blogspot.com/2015/07/13.html தொடரும் ஆறுமுகநேரி)
போர்க்கரையில் கதையை நிறுத்தி விட்டு எங்கு செல்கிறாய் என்போருக்கு - இப்படித்தான் ஆபத்தான இடங்களில் தாத்தா கதையை நிறுத்திவிட, அடுத்த நடை வரை காத்திருக்க வேண்டும். காத்திருத்தலில் ஒரு சுகமுண்டு. இன்றைய உடனடித்துவ உலகில் காத்திருத்தலுக்கான பொறுமை காணாமல்போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் காலம் கற்றுக் கொடுக்கும், காத்திருக்கவும், கடந்து செல்லவும்.
மீள்வோம்.மலேயாவின் கதைகள் இவ்விதமாய் ஒவ்வொரு நடையிலும் நீளும். இந்தக் கதைகள் கேட்கக் கேட்க அலுத்ததே கிடையாது. ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் மாலையில் மிகவும் எதிர்நோக்கும் தருணங்களாய் நடை நேரம். தொற்றிக் கொள்ளும் கதையின் சுவாரசியமும் தீவிரமும் பள்ளியில் நண்பர்களிடமும் பகிர என் நட்பு வட்டத்தில் என்றுமே (இன்றுவரை) தாத்தா ஒரு மையப்புள்ளியாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். கதை வாயிலாய் மட்டுமன்றி, வீட்டின் அருகிருந்த தோழிகள் தாத்தாவுடனான காலை/மாலை பேச்சுக்களிலும், தியான வேளைகளிலும் உடன் வர ஆரம்பிப்பதுண்டு. வயது பாரபட்சமின்றி மிக இயல்பாகத் தன் உற்சாகமான உரையாடல் மற்றும் அக்கறையோடு கூடிய ஊக்கமூட்டும் பேச்சுகள் வாயிலாக ஒரு வாழ்நாள் உறவையும், நல்லியல் சுவடுகளையும் தாத்தா பதிப்பதை அருகிருந்து காணக் கிடைத்தது. என் தோழியர் அனைவரும் தாத்தாவின் நட்பு வட்டத்துக்குள்ளும் வருவது வழக்கமாயிற்று.
அவ்விதம் ஆறுமுகநேரியிலும் பின்னர் தாராபுரத்திலும், மிகச் சிறந்த தருணங்கள் மலர்ந்து, புதிதாக அரும்பத் தொடங்கியிருந்த நட்பு வட்டங்களை நினைவுகளில் நிரந்தரமாக்கியது. அவர்கள் ஒவ்வொருவரும் இன்று வரை தாத்தா குறித்துப் பேசுவதும் தொடர்கிறது.
அடுத்ததாக  மாலை நேர வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோன்றும் விண்மீன்களாய் random ஆக அகத்தில் மிளிரும் சில நினைவு நட்சத்திரங்கள்:
ஆறுமுகநேரியிலிருந்து அதிகாலை இருள் பிரியும் முன்னர் நாலரை மணியளவில் எழுந்து கிளம்பி திருச்செந்தூர் வரை சென்ற பாதயாத்திரை.   விடிவெள்ளியும் நட்சத்திரங்களும் மறைவதன் முன் இருள் பிரியா அழகோடு அதிகாலை வானம். பிரம்மமுகூர்த்தம் - தேவர்களுக்கும் உகந்த காலம், கற்கும் கலையை கல்மேல் எழுத்தாய் மாற்ற கலைமகள் அருளும் தருணம். அதிகாலையின் சிறப்பைக் குறித்தும், ozone காலை வேளையில் உடலுக்கு நலம் தருவது குறித்தும், பேசிய காலைநேர நடைபயணம். சில காதம் கடந்ததும், முதற்கதிர் நீட்டும் கதிரவனை கண்கொட்டாது பார்த்து, கண்களை மூடிக் கொண்டு, மூடிய கண்களுக்குள் சுழலும் ஒளித்திகிரியை பார்க்கச் சொல்லும் பயிற்சி. விடுமுறைக்கு வந்திருந்த தங்கை ஜெயஸ்ரீயும் நானும் ஏதேதோ பேசிக் கொண்டே தாத்தாவுடன் பத்து பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்து திருச்செந்தூர் அடைந்தது, கடலலையில் கால்நனைத்து, செந்திலாண்டவன் பாதம் பணிந்தது, ஓம் என ஓங்காரமிடும் அலை ஒலியை ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மதில் சுவர் துவாரத்தில் கேட்டது என அனைத்தும் சுடர்விடுகிறது மனப்பேழையில்.
அடுத்து வருவதும் ஒளியேற்றிய தருணம் குறித்துதான்.
காரைக்குடியில் ஒரு கோடை விடுமுறை - செக்காலையில் வீட்டில் இருந்து தொடங்கி கண்ணதாசன் மணிமண்டபம் வரை ஒரு நாள், இளங்காற்றில் கலகலவென சிரிக்கும் அரசமரங்கள் நிறைந்த குளக்கரை ஆஞ்சநேயர் கோவில் வரை ஒரு நாள், என ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு திக்கில் விஜயம் தங்கையருடன்.
ஒவ்வொரு நடையின்போது உலகம் புதிதாய் மொட்டவிழ்ந்து கொள்ளும் - வீட்டுத் தோட்டத்திலேயே வேரில் காய்த்துத் தொங்கும் பலா, தெருப் பாய்ச்சலாய் அமையும் வீடுகளில் வாசலில் அமர்ந்திருக்கும் விநாயகர், களவாடி வேறிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டால் சிறப்பு எனக் கருதி கடத்தப்படும் அபாயத்தால்  கம்பிச் சிறைக்குள் அமர்ந்திருக்கும் பிள்ளையார்கள் என சிறு சிறு கவிதைகள் அறிமுகமான அழகிய நாட்கள்.
அங்கு ஒருநாள் - நடை நேரத்தில் செம்மை வீதியெங்கும் உருகி வழிந்து காணும் இடமெல்லாம் மருதோன்றி இட்டிருந்தது. நடை முடித்து நாங்கள் வீடடையும் வேளை, கதிரொளி கூடடைந்திருந்தது. செம்மை மேல் கருமை படர்ந்து இரவு மேலும் இருள் கொள்ளத் தொடங்கியிருந்தது. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. அம்மா தன் பெயருக்கிணங்க ஏற்றியிருந்த ஜோதி மட்டும் அறையில் இருந்தது. தாத்தா எங்களை அருகில் அழைத்து பாடல் ஒன்று சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்கள். இதைப் பாடுங்கள் மின்சாரம் வரும் ஒளி நிறையும் என்று சொல்லி  'அருட்ஜோதி தெய்வம்  எனை ஆண்டு கொண்ட தெய்வம்'.. பாடத் தொடங்கினார்கள். நாங்கள் அனைவரும் பாட, கூடம் அசையாச்சுடர் விளக்கின் பொன்னொளியில் நிறைந்திருந்தது. பாடல் முடியவும் மின் விளக்குகள் உயிர் பெறவும், அன்று அது ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் அந்த நாள், அந்த அந்தி வேளை, அந்தப் பாடல், அன்று அங்கிருந்த எங்கள் அனைவர் மனதிலும் நித்தியமாயிற்று. அன்றிலிருந்து இன்றுவரை மின்சாரத் தடை ஏற்படும் ஒவ்வொரு பொழுதுகளிலும் தாத்தாவின் மெல்லிய குரலில் அந்தப் பாடலும் அந்த நாளும் எங்கள் அனைவர் மனதிலும் வந்து ஒளிநிறைக்கும்.


No comments:

Post a Comment