Sunday, February 14, 2016

சற்குரு - தாத்தா - 29

ஆறுமுகநேரிக்குப் பிறகு ராமநாதபுரம். எனது எட்டாம் வகுப்பு. உலக வரலாறும் புவியியலும் ஏறக்குறைய 50பாடங்களுக்கும் மேல் இருந்தது சமூகவியலில். வரலாறும் புவியியலும் தாத்தாவுக்கு மிகவும் விருப்பப்பாடம். உலகநாடுகள் அனைத்தின் தலைநகரம், நாணயம், மொழி, முக்கிய ஆறுகள், ஊர்கள், கணிமவளம், தலைவர்கள், நடப்பு செய்திகள் என அனைத்தும் ஏதோ 'கலெக்டர் படிப்பு' படிப்பது போல உள்ளே ஏறும். நிலவொளியில் நனைந்து கொண்டு,  தாத்தாவுடன் கதை போல உலகம் படித்த கனாக் காலம்.
மாலைதோறும் வீட்டின் சிறு பலகணியில் அமர்ந்து, நானும் தாத்தாவும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அப்பத்தாவும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழ்ப்பாடத்தில் மதுரையின் சிறப்பைக் கூறும் 'கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல் காணும்' பாடல் தாத்தா அப்பத்தா இருவருக்கும் பிடித்த பாடல். அந்தப் பாட்டைத் தொடர்ந்து, சிறுமலைத் தோட்டத்தில் விளைவது குறித்தும், மலை வாழைப்பழம் குறித்தும், தாத்தா உற்சாகமாய் பேசத்தொடங்க, எசப்பாட்டுப் போல அப்பத்தா தனது பிறந்தவீட்டுப் பெருமையையும், பசளையின் கதிரறுப்பு காலத்தின் நிகழ்வுகளையும் கூற, இடையிடையே என்றேனும் நான் பாடமும் படித்ததுண்டு.
தமிழ்ப்பாடத்தில், ராமநாதபுரத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் தாயுமானவர் சமாதி அடைந்தார் என வந்தது. அடுத்த நாள் அதைத் தேடிக் கண்டு பிடித்து என்னையும் அழைத்துச் சென்றார்கள் தாத்தா.
வேப்மரங்கள் சூழ்ந்த சிறு தபோவனம். மயில்களும் முயல்களும் உலவிக் கொண்டிருக்க  உதிர்ந்தும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன பன்னீர் புஷ்பங்கள். அமைதியான சூழலுக்கு இடையே ஒரே குரலில் பலர் தாயுமானவர் பாடல்களைப் பாடத் துவங்கினர். நாங்களும் சென்று அமர, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த சிவம், மோனத்தில் மூழ்கிய தாத்தாவின் மனதுள் பரிபூரணமாய் நிறைந்ததாய்த் தோன்றியது.
தியானம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம். இருளை விரட்ட முயன்று, இருளைப் பெரிதாக்கிக் காட்டிய விளக்குகள் நிரம்பிய சாலை. ஆங்காங்கே தெருநாய்கள் தங்கள் சக்திக்கு மீறிக் குரைத்துக் கொண்டிருந்தன. தபோவனம் மனதில் நிரப்பிய அதிர்வுகளோடு ஏதும் பேசாமல் நடந்து கொண்டிருந்த தாத்தா, 'இதுபோல ஒரு இடத்தில் என் இறுதி நாட்கள் அமைதியாகக் கழியும் எனில் அது பெரும் பேறு' என்றார்கள். ஏனோ அந்தப் பேச்சு வருத்தத்தை அளிக்கவில்லை, அதுவே நல்ல முடிவாக இருக்கும் என்றே மனம் எண்ணியது. ஆனால் அந்த எண்ணத்துக்கு பயந்து, தாத்தா கரத்தை மேலும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

No comments:

Post a Comment