Sunday, February 14, 2016

சற்குரு - தாத்தா - 26

மரண வாயிலில் வாழ்வெனும் போது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாய் உருமாறி உயிர்வாழ்வைத் தொடர்கிறது.
ஒருமுறை இவ்விதமாய் போர்க்காலத்தில் நடந்த நிகழ்வு - குண்டு வீச்சில் வேரோடு பறிக்கப்பட்ட ஒரு மரம் பறந்து சென்று வேறு ஒரு இடத்தில் குழியில் விழுந்தது. சில நாட்களில் அது அங்கேயே வேர் ஊன்றி துளிர்க்கவும் செய்தது. நிலம் பெயர்ந்து வீழ்ந்த இடத்தில் வேறூன்றிய மரம் போல ஒருசிலர் புலம் பெயர்ந்த நிலத்தில் காலூன்றத் தொடங்கினார்கள்.
நீர் அற்ற நிலத்தில் நிற்கும் மரங்கள் கண்ணுக்குப் புலனாகாது பூமிக்கடியில் பல அடிகள் நீர் தேடி வேர்க்கரம் நீட்டுவதும் இயற்கைதானே. இருத்தலின் தேவைதானே உயிர்களை செலுத்துகிறது. பிழைத்து இருத்தலா பிழையாது இருத்தலா பிழைத்தல் என்ற கேள்விக்கு, பிழையாது பிழைத்திருந்து பதிலிறுத்தோர் வெகுசிலரே. அதற்கு தெய்வமென்றோ, பாசமென்றோ, ஒழுக்கமென்றோ, நெறியென்றோ ஆணிவேர் ஆழ இருக்க வேண்டும். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் பசுமை தழைக்கச் செய்யும் நீரோட்டம் வேண்டும்.
சுற்றத்திடமிருந்து எந்தத் தகவலுமின்றி தனித்து விடப்பட்ட பலரும் அங்கு துணையைத் தேடி வாழ்வமைத்துக் கொள்ளவும் தலைப்பட்டனர். அந்த உறவுகள் நிரந்தரமா தற்காலிகமா என்பது வாழ்வுக்கும் அதே கேள்வி எழும்பியிருந்த அன்றைய நிலையில் அர்த்தமற்று இருந்திருக்கலாம். 
விதையின் வீர்யம் விதியின் கைகளில் விண்ணவர்களால் இயற்கையால் சோதிக்கப்படும்போது தெரிகிறது. தந்தையிடம் கண்டதும் கற்றதும் அங்கு கைவந்தது தாத்தாவுக்கு. 'உறுதியான உள்ளம் கைவர உடலினை உறுதிசெய். உடல் வில்லென வளைய மனதை அசையாச் சுடரென நிலைநிறுத்து. யாருமற்ற ஏகாந்த வாழ்வு யோக சாதனத்துக்கு ஏற்றது. கசக்கும் தனிமையை தவமாக்கு' - இவ்விதமாய் சுயகட்டளைகள் விதித்துக் கொண்டு, அதிகாலை எழுந்து யோகாசனப் பயிற்சியும் தியானமும் அன்றாட வழக்கமாய் பயின்று உடல் வன்மையும் மனத் திண்மையும் வளர்த்துக் கொள்ள முற்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் கொண்ட பல நெறிமுறைகள் வாழ்வின் இறுதி வரை கடைப்பிடிக்கும் நித்திய வழிகளாயிற்று. தனது உயிர்பிரியும் வேளையை வகுத்துக் கொண்ட பீஷ்ம பிதாமகர் போல, தனது இறுதி நாட்கள் ஒருநாளும் படுக்கையில் வீழாது போய்விட வேண்டுமென்ற தாத்தாவின் நெஞ்சுரம் அவ்வண்ணமே நிகழ்வதற்கும் இந்த நெறிமுறைகளே பெருமளவு வழிவகுத்தது - அனாயாசேன மரணம்!!
இப்படியாகத் தனது கர்மபூமிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தவரை விழியறியாக் காலம் கவனித்துக் கொண்டுதானிருந்தது. நமது தீவிரமான தேடலை பிரபஞ்ச சக்திகள் நிறைவேற்ற முனையும் என்பதற்கிணங்க, நாணிழுத்த வில்லென கூரெழுந்த அம்பென தயாராகி வந்தவரை களம் கொண்டு செல்ல காலம் முடிவு செய்தது.


No comments:

Post a Comment