Sunday, February 21, 2021

சிங்கை குறிப்புகள் - 14 - பழத்தோட்டச் சாலை

எந்த ஒரு பண்டைய நகரத்தையும் போல, சிங்கப்பூர் ஆற்றின் கரையிலேயே  இங்கும் முதற்கட்ட குடியேற்றங்கள் நிகழ்ந்தன. 

இன்றைய சிங்கப்பூர் ஆறு - க்ளார்க் கீ துறை (Clarke Quay)


முதலில் இத்தீவுக்கு வந்த கிழக்காசிய, சீன, தென்னிந்திய வணிகர்கள், ராஃபில்ஸ் வரவுக்குப் பிறகு வந்த கிழக்கிந்திய நிர்வாகிகள், அவர்களுக்கு ஊழியம் செய்ய குடியேறிய மக்கள் என நகரம் ஆற்றை ஒட்டி விரிவடைந்து கொண்டிருந்தது. இந்த ஆர்ச்சர்ட் பகுதி ஊருக்கு வெளியே சற்று ஆள்நடமாட்டமற்ற பகுதியாக கருத்தப்பட்டிருக்கிறது.

1800 - இணையத்திலிருந்து


1700கள் முதலாகவே தோல் பதனிடுவதில் உள்ள பயன்பாட்டுக்கென காம்பியெர் (Uncaria gambir) இப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருக்கிறது.  கிழக்கிந்திய கம்பெனி கால் பதித்த சமயத்திலேயே தீவில் இருபதுக்கும் மேற்பட்ட காம்பியர் தோட்டங்கள்  இருந்திருக்கின்றன. ஆர்ச்சர்ட் சாலையின் அருகிலும் சில தோட்டங்கள் இருந்திருக்கின்றன. இதன் மூலம் பெரும் செல்வந்தரான சியா யூ சின் (Seah Eu Chin)என்ற வணிகர் 1845-ல் தியோசூவ் சீனர்களுக்கென ஙீ ஆன் கோங்சி (Ngee Ann Kongsi) என்ற அமைப்பை நிறுவினார். இன்று வரை சிங்கையில் தொடர்ந்து சேவையாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பு இது. 

காம்பியர் தோட்டங்கள், இணையத்திலிருந்து

ஜோஹோரைச்(Johor) சேர்ந்த மற்றொரு காம்பியர் வணிகரான டான் யாக் நீ (Tan Yeok Nee) என்னும் வணிகர் 1882-ல் டேங்க் சாலை-பெனாங் சாலை சந்திப்பில் தனது குடும்ப இல்லத்தைக்  கட்டினார். இந்த இல்லம் தென் சீன கட்டிட பாணியில் கட்டப்பட்டது. அவர் பின்னர் அவ்வீட்டை விற்றுச் சீனா சென்ற பிறகு, புதிதாகக் கட்டப்பட்ட  டேங்க் சாலை ரயில்வே நிலையத்துக்கென ரயில் நிலைய அதிகாரியின் வீடாக மாறியது.



 கூரையில் நுண் மரச்செதுக்குகளும்,   வண்ணமயமான பீங்கான் வேலைப்பாடுகளும் கொண்ட இவ்வில்லம் பிறகு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஆக மாற்றப்பட்டு இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இரட்சணிய சேனையின் (Salvation Army) தலைமையிடமாகத் திகழ்ந்த இவ்வீடு, பின்னர் பல கைகள் மாறி, 2000ல் சீன பாரம்பரிய கட்டிடக் கலை வல்லுனர்களைக் கொண்டு சீரமைக்கப்பட்டது.  இஸ்தானா பூங்காவின் பினாங் சாலை முகப்புக்கு நேர் எதிரே உள்ள இவ்வீடு காலத்தில் உறைந்தது போலத் தோற்றமளிக்கிறது.  சீனப் பாரம்பரிய முறைப்படி விரிந்த உள்முற்றங்களோடு கட்டப்பட்ட இந்த வீடு 2018-ல் 93 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. இன்று Amity institute இக்கட்டிடத்தில் இயங்குகிறது.

நன்றி : ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்


House of Tan Yeok Nee

இந்த காம்பியர் பயிர்கள் மண்ணின் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து விடக்கூடியவை என்பதால், சில காலம் கழித்து அத்தோட்டங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்களுக்கு தோட்டங்கள் நகர்கின்றன. ராஃபில்ஸ் தாவரவியலில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்று முன்னரே பார்த்திருக்கிறோம். அவரது இரண்டாவது முறை சிங்கை விஜயத்தின் போது இந்தோனேசியாவிலிருந்து கிராம்பு மற்றும் ஜாதிக்காய் பயிரிடுவதற்கு விதைகளும், சிறு செடிகளும் கொண்டு வந்து, அரசாங்கக் குன்றின் சரிவுகளில்  சோதனை செய்து பார்த்திருக்கிறார்.  நதானியேல் வாலிச் துணையுடன் தாவரவியல் பூங்கா ஒன்றை அமைக்கும் ஆலோசனைகளில் ஈடுபட்டதோடு, சிங்கப்பூரில் எந்த வகையான பயிர்கள், தாவரங்கள் நன்கு வளரக்கூடும் என ஆராய்ச்சி செய்து பார்க்கும்படி ராஃபில்ஸ்  கேட்டுக்கொண்டதற்கிணங்க 600-க்கும் மேற்பட்ட ஜாதிக்காய் மரங்களும், 300 கிராம்பு மரங்களும் பயிரிடப்பட்டிருக்கின்றன. இந்தோனேசியாவில் நன்கு வளர்ந்த இம்மரங்கள் அதே போன்ற சூழல் கொண்ட சிங்கப்பூரிலும் வளரும் என்று நம்பினர். அப்போது ஐரோப்பாவில் ஜாதிக்காய் விதையின் மேற்புறத்தோல்(Mace - ஜாதிப்பத்திரி) மற்றும் காயின் விதை(Nutmeg-ஜாதிக்காய்) இரண்டும்  அதிகம் விற்பனையானதால் ஜாதிக்காய் தோட்டங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. 

1830-1840களில் ஐரோப்பியர்கள் பலரும் ஆர்ச்சர்ட் சாலையை ஒட்டிய பகுதிகளை விலைக்கு வாங்கி ஜாதிக்காய் பயிரிடுகிறார்கள். தாமஸ் ஆக்ஸ்லி(Dr Thomas Oxley) என்னும் ஐரிஷ் அறுவை சிகிச்சை நிபுணர் 70 ஹெக்டர் பரப்பளவில் இங்கே ஜாதிக்காய் பயிரிடுகிறார், கில்லினே எஸ்டேட் (Killiney Estate) என்றதற்கு பெயரிடுகிறார். இன்றைய கில்லினி சாலையின் முதற்புள்ளி இந்த ஜாதிக்காய் தோட்டத்தில் தொடங்குகிறது. பல தரமான மலிவு விலை உணவுகங்கள் கொண்ட இச்சாலையில்தான் சிங்கப்பூரின் புகழ் பெற்ற தேனீர் கடையான "கில்லினே கோப்பிட்டியம்" துவங்கியது.


இதற்கு இணை சாலையாக இன்றும் தாமஸ் ஆக்ஸ்லியின்(Oxley Road) பெயர் கொண்டு நிற்கும் சாலையில்தான் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்களுடைய வீடும் இருக்கிறது.  

38, ஆக்ஸ்லி சாலை
சிவப்பு நிறத் தோல் Mace ஜாதிப்பத்திரி, உள்ளே இருக்கும் விதை Nutmeg - ஜாதிக்காய்

அதே நேரத்தில் அஞ்சல் துறை ஊழியரான வில்லியம் கப்பேஜ் (William Cuppage) என்பவரும் அருகில் எமரால்டு குன்றில் ஜாதிக்காய் பயிரிடுகிறார். அவரைத் தொடர்ந்து சார்லஸ் கார்னி (Charles Carnie) என்பவர் கார்ன் குன்றிலும்(Cairnhill),  கிளேமோர் தோட்டத்தில்(Claymore Estate) 5000 ஜாதிக்காய் மரங்களை வில்லியம் ஸ்காட்(William Scott) என்பவரும் வாங்கிப் பயிரிடுகிறார்கள். இந்த அனைத்து தோட்டங்களும் இன்று அந்த நினைவுகளை சுமந்த பெயர்களாக, நவீன சாலைகளாக கப்பேஜ் சாலை,எமரால்டு ஹில்,  கார்ன்ஹில், கிளேமோர் சாலை, ஸ்காட் சாலை என இருக்கின்றன. இன்னும் நேப்பியர், பிரின்செப், என அப்பகுதியின் இன்றைய செல்வந்தர்கள் வாழும் சாலைகள் அனைத்தும் இதே போல ஜாதிக்காய் தோட்டங்களாக இருந்தவையே. இதை நினைவு கூறும் சில சிற்பங்களை இன்று ஆர்ச்சர்ட் சாலையில் காணலாம்.      

ION Orchard வாயிலில் உள்ள ஜாதிக்காய் சிற்பம்

Orchard Central வாயிலில் உள்ள ஜாதிக்காய் சிற்பம் 

இவ்வளவு தோட்டங்கள் இருந்த சாலை ஏன் கனித்தோட்ட சாலையாகிறது? ஜாதிக்காய் சாகுபடி என்பது பத்து வருடங்கள் வரை நீண்ட கால காத்திருத்தலைக் கோருவது. 1857-ல் இத்தோட்டங்களைத் தாக்கிய ஒரு மர்ம நோய்த்தாக்குதலில் ஐந்தே வருடங்களில் பல தோட்டங்கள் முற்றிலும் அழிந்து போகின்றன. இதனால் கார்னி, ஆக்ஸ்லி, பிரின்செப் போன்ற பலரும் தோட்டங்களை விற்றுவிட்டு வெளியேறுகின்றனர். கப்பேஜ் தனது தோட்டங்களில் பழ மரங்களைப் பயிரிடுகிறார். ஜாதிக்காய் வெளியேறி பழமரங்களின் காலம் துவங்குகிறது. 1950-களில் கூட தாய்லாந்து தூதரகத்துக்கு அடுத்திருந்த தோட்டத்தில் மங்குஸ்தான், ரம்புத்தான், சப்போட்டா பழமரங்கள் இருந்திருக்கின்றன.  

ஆர்ச்சர்ட் சாலையில் நின்று கொண்டு இரு புறமும் குன்றுகளையும், ஜாதிக்காய் தோட்டங்களையும், ஆங்காங்கே தோட்டங்களுக்கு இடையே தலைகாட்டும் வீடுகளையும் கற்பனையில் உருவகித்துப் பார்க்க முயலும் ஒருவருக்கு, இன்றைய பரபரப்பான வீதிகளுக்கு இடையே நிற்கும் பெருமரங்களும், விரிந்த பசுந்தோட்டங்களும் ஓரளவேனும் உதவுகின்றன. 

ஆர்ச்சர்ட் - பினாங் சாலையின் சந்திப்பில்


நிலம் என்பதே சிங்கையில் மிகவும் அரிய செல்வம், அதிலும் ஒரு சதுர அடி நிலம்  பல லட்சம் பெறுமானம் கொண்ட இச்சாலையில் பரந்த நிலம் பசுமையாக, தோட்டங்களாக விடப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு எதிர்புறம் நிற்கும் இஸ்தானா பூங்கா, ஆர்ச்சர்ட் சாலைக்கும் இணையாக செல்லும் பினாங் சாலைக்கும் இடையே பச்சை விரிக்கும் ஒரு பூங்கா இவையெல்லாம் வண்ணத்துப்பூச்சிகளுக்கான தனிச்சாலையாக இருக்கிறது.

இஸ்தானா பூங்கா



வண்ணத்துப் பூச்சிகளுக்கு என்றே ஆர்ச்சர்ட் சாலையில் பல இடங்களில் பசுந்திட்டுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு உள்ள பல பெருமரங்களில் மாலை வேளைகளில் பறவைகள் அடையும் ஒலி போக்குவரத்து நெரிசலை மீறி காதில் விழும். சில சமயம் இது ஏதோ ஒலிப்பதிவு செய்து ஒலிக்கச் செய்கிறார்களோ என்றே தோன்றும் அளவுக்கு, அதிதீவிரமான உரையாடல்.  அன்று புதிதாக சந்தையில் அறிமுகமானவற்றை முதலில் வாங்க விழைந்து சாலையில் விரையும் கார்களுக்கு இணையாக வானில் ஒரு இறகாளர்களின் போக்குவரத்து நெரிசல். கிழக்கு ஆசிய-ஆஸ்திரேலேசியா  பறவைப் பாதையில் சிங்கை இருப்பதால் பல பறவைகள் இங்கு வருவதாகக் கூறப்படுகிறது. ஆசிய ஸ்டார்லிங், மற்றும் சிங்கையில் எங்கும் காணப்படும் ஜாவாவைச் சேர்ந்த மைனா, மற்றும் புறாக்கள் இவையே கண்ணில் பட்டிருக்கின்றன. இதன் எச்சங்களை இரவில் கழுவி சாலையை சுத்தம் செய்வதற்கு பெருமளவு நீர் (நாளொன்றுக்கு மூவாயிரம் லிட்டர் தண்ணீர்) செலவிடுகிறதாம் அரசு.   

பட்டாம்பூச்சிகள் தவிர பலவண்ணம் காட்டும் பல்லிகள், (பச்சோந்தியல்ல - changeable lizard), சிறிய இறகுகள் கொண்டு சிறுதொலைவு தாவும் பறக்கும் பல்லிகள் (common flying dragon), மலர்களில் சிறகடித்தபடி தேன் உண்ணும் தேன்சிட்டு வகையைச் சேர்ந்த மஞ்சள் நிற தேன்சிட்டு (olive-backed sunbird), கழுத்தில் வெள்ளைப் பட்டை கொண்ட மீன்கொத்தி  (collared kingfisher) என இக்கனித்தோட்ட சாலையில் இன்றும் வாழ்கின்றன என்பதே இங்கு பேணப்படும் பசுமைக்கு ஒரு சான்றாகக் கொள்ளலாம். அதற்கென, பல்லுயிர் வாழ்தலுக்கு ஏற்றபடி சூழலை ஏற்படுத்தித்தரும் முயற்சிகளை அரசும் தொடர்ந்து செய்கிறது. 

1800களில் இந்த சாலை ஊருக்கு வெளியே ஆள்நடமாட்டமின்றி இருந்ததோடு மயான பூமியாகவும் கல்லறைத் தோட்டமாகவும் இருந்திருக்கிறது. இன்று இஸ்தானா நிற்குமிடத்தில் மலேசியர்களுக்கான கல்லறை இருந்திருக்கிறது, யூதர்களுக்கான நினைவிடங்கள் ஆர்ச்சர்ட் சாலைக்கும் பினாங் சாலைக்கும் இடையே இருந்திருக்கிறது. 1903 வரை கல்லறையாக இருந்த இவ்விடத்தில்தான் இன்றைய டோபி காட் ரயில் நிலையம் நிற்கிறது. தியோசூக்களுக்கான மயான பூமியில்தான் 26 தளங்கள் கொண்ட செந்நிற பல்பயன்பாட்டு வணிக வளாகமான ஙீ ஆன் சிட்டி (Ngee Ann City) நிற்கிறது.  நாம் முன்னர் பார்த்த ஙீ ஆன் கோங்ஸி அமைப்பின் கட்டிடம்தான் இது.  

ஙீ ஆன் சிட்டி

பழத்தோட்டச் சாலை குறிப்புகளை எழுதும் போது குழந்தைப் பருவத்தில் எனது அத்தை சொன்ன கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. 

ஒரு குட்டிக் குரங்கு வாலில் முள் தைத்து விட்டதென துடிதுடித்து அதை எடுக்கும் வழியைத் தேடும். சாலையோரம் கத்தி வைத்து சவரம் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதனிடம் முள்ளை எடுத்து விடச்சொல்லும். பயந்து கொண்டே எடுக்க முனைவான், குரங்கு போடும் ஆட்டத்தில் அவன் கத்தி பட்டு அதன் வாலறுந்து விடவே, இழந்த வாலுக்கு ஈடாக அவனது கத்தியை வாங்கிக் கொள்ளும். பிறகு அவ்வழியே ஒரு சிறிய ஓலைக்கூடை முனையும் பாட்டியிடம் போய் வம்பிழுக்கும். "வெறுங்கையால் ஓலையை கிழிக்கிறாயே, இந்தக் கத்தியை வைத்து வேலை பார்" என்று அதைக் கொடுக்க, அவள் அதை கையில் எடுத்து சில நிமிடங்களில் அந்தப் பழைய கத்தி உடைந்துவிடும். எனவே அவளிடமிருந்த அச்சிறு கூடையை வாங்கிக் கொண்டு செல்லும் வழியில் ஒரு மாம்பழ வியாபாரி தரையில் வைத்து மாம்பழம் விற்பதைப் பார்க்கும். அவனுக்கோ மாம்பழம் கண்ட குரங்கு என்ன பாடு படுத்துமோ என பயம். அது வெகு பணிவாக "பழங்களைத் தரையில் வைத்திருக்கிறாயே, இந்தக் கூடையை வைத்துக் கொள்" என்று கூறும். அவன் அச்சிறு கூடை மாம்பழங்களை வைத்ததும் இற்றுப் பிய்ந்து விடும். எனவே இழப்பீடாக இரண்டு பழங்களைப் பெற்றுக் கொண்டு போய், ஒன்றை உண்டுவிட்டு, மற்றதை இதே போல ஒரு தோசை விற்பவனிடம் கொடுத்து இரு தோசைகளைப் பெற்றுக் கொள்ளும். ஒன்றைத் தின்று பசியாறிவிட்டு நிறைந்த வயிறோடு செல்லும்போது அதற்கு யாரையாவது வம்பிழுக்கத் தோன்றும். 
சாலையோரம் ஒருவன் வயிற்றுப் பிழைப்புக்கு டமாரம் வாசித்துக் கொண்டிருப்பான்.  அவனிடம் சென்று 'ஏன் இதை வாசிக்கிறாய்' என்று கேட்ட குட்டிக் குரங்கிடம், "ஏதோ என் வயிற்றுப்பசிக்காக வாசிக்கிறேன்" என்றவனிடம், "இந்த தோசையை வைத்துக்கொள்" எனக் கொடுக்கும்.  அவன் அதைத் தின்று முடித்ததும், "ஏன் எனது தோசையைத் தின்றாய்?" என வம்பிழுத்து, அவன் வாசித்துக் கொண்டிருந்த தம்பட்டத்தை பிடுங்கிக் கொண்டு மரத்தில் போய் அமர்ந்து கொண்டு, தம்பட்டம் வாசித்தபடி அன்றைய தின நிகழ்வுகளைப் பாட்டாய்ப் பாடும். 

"வால் போய் கத்தி வந்தது டும்டும் டும்டும்.. 

கத்தி போய் கூடை வந்தது டும்டும் டும்டும்.. 

கூடை போய் மாம்பழம் வந்தது டும்டும் டும்டும்..

மாம்பழம் போய் தோசை வந்தது டும்டும் டும்டும்..

தோசை போய் தம்பட்டம் வந்தது டும்டும் டும்டும்.."


காம்பியர் போய் ஜாதிக்காய் வந்தது. ஜாதிக்காய் போய் பழத்தோட்டங்கள் வந்தது. 

பழத்தோட்டங்கள் போய் என்ன வந்தது என நாளை பார்க்கலாம்..



 முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 13 - கனித்தோட்டச் சாலை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 15 - பணத்தோட்டச் சாலை

3 comments: