Thursday, February 18, 2021

சிங்கை குறிப்புகள் - 11 - வரலாற்றுப் பசுமை

வரலாறு சார்ந்த இடங்கள் தரும் மன எழுச்சி ஒன்றுண்டு. கால அடுக்குகளில் பின்னால் சென்று அங்கு நிகழ்ந்த சம்பவங்களுள் சில பொழுது வாழ்ந்து மீளும் அனுபவம், அங்கு வாழ்ந்த வரலாற்று மனிதர்களுடன் அந்த வளாகங்களில் உலவி வரும் நினைவு தரும் மனஅதிர்வு அது. அதுபோல இங்கும் சில இடங்கள் இருக்கின்றன.  இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இந்திய தேசிய ராணுவம் இயங்கிய தளங்களையும், அதில் சிங்கையிலேயே சிலகாலம் பணிபுரிந்த தாத்தாவின் சுவடுகளையும் தேடி சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்ற பயணம் அவ்விதம் மனதுக்கு நெருக்கமானது. அதுபோல இன்றும் ஒரு வரலாற்றுத் தலம் - கேணிங் கோட்டை.



ஒரு கோட்டை என்றதும் நம் நினைவில் எழுவது அதனோடு இணைந்த வரலாறு, அதன் கட்டுமானம், அழகியல் போன்றவை. இவற்றோடு இணைந்து மரங்களை, பசுமையை நினைவுறுத்தும் ஒரு கோட்டை இங்கு இருக்கிறது. மைய நகரத்தில் அமைந்திருக்கும் ஃபோர்ட் கேனிங் (Fort Canning).

கேனிங் கோட்டை அமைந்திருப்பது ஒரு சிறு குன்றின் உச்சியில். புக்கிட் லரங்கன் என்று முன்னர் அழைக்கப்பட்ட இக்குன்றைச் சுற்றிலும் சுழலும் போக்குவரத்து நெரிசலுக்கும், இரைச்சலுக்கும் அப்பாற்பட்டு இப்பகுதி மட்டும் வேறொரு காலத்தில் காலூன்றி விண்ணோக்கி எழுந்த மரங்களோடு தனித்து வாழ்கிறது.



இத்தீவின் முதல் அறியப்பட்ட பூர்வகுடியினர் வாழ்ந்த இடம், பின்னர் தொடர்ந்த காலனிய ஆதிக்க காலத்தில், ஆங்கிலேயர்களின் முதல் கொடியேற்றப்பட்ட இடம், சிங்கையின் ராணுவப் பாதுகாப்பு குறித்து ஒரு கோட்டை நிறுவப்பட்ட இடம், சிங்கையை ஆங்கிலேயர் ஜப்பானியரிடம் சரணடையச் செய்ய முடிவெடுத்த இடம் எனப் பல வரலாற்றுத் தொடக்கப்புள்ளிகளோடு சிங்கை எனும் நகரின் வாஸ்து மண்டலத்தின் மையப்புள்ளியாக இக்குன்றை எண்ணிக்கொள்கிறேன். இன்று இங்கு கலை நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன, முக்கிய தருணங்களை புகைப்படமெடுக்க வருகிறார்கள், வரலாற்று ஆர்வலர்களின் நடைகள் ஒருங்கமைக்கப்படுகின்றன, தாவரவியல் இயற்கை ஆர்வலர்களுக்கும் இங்கு காண்பதற்கும் அறிவதற்கும் நிறைய இருக்கின்றன.

சிங்கையின் வரலாறு இங்கு துவங்குகிறது எனலாம்.
பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே சிங்கை பற்றிய தகவல்கள், பிற தேசத்துக் குறிப்புகளில் காணப்படுகின்றன.
கடலோடிகளாய் வாழ்ந்த பூர்வகுடிகள் குறித்த வரலாற்று எச்சங்கள் அதிகமில்லை. 
Kingdom of Singapura



14ஆம் நூற்றாண்டு சீனப் பயணி வாங் தவ்யான் 1330-ல் இங்கு அவர் கண்ட தன்மாக்ஸி (Danmaxi - Temasek) பற்றிக் குறிப்பெழுதியிருக்கிறார். இவர் சீனாவின் குவான்ஜோவிலிருந்து  மலேசிய தீபகற்பத்தின் பெரும்பகுதிகளுக்கு கடல்வழியாக இரு பெரும் பிரயாணங்களை செய்து அப்பயணக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். தீவின் அன்றைய இரண்டு குடியிருப்புகளாக அவர் லோங் யா மென் (Long Ya Men) மற்றும் பான் ஜூ (Ban Zu)வைக் குறிப்பிடுகிறார். இதில் பான் ஜூ எனக் குறிப்பிடப்படும் பகுதி இன்றைய கேனிங் கோட்டை நிற்கும் இடமாக இருக்கலாம் என்றறியப் படுகிறது. லோங் யா மென் குடியினர் கடற்கொள்ளையராக இருந்திருக்கையில், இந்த மலையை அடுத்து வாழ்ந்த பான் ஜூ குடியினர் நாகரீக வாழ்வுடையவர்களாக, சிவப்பு நிற ஆடையும், பொன்னிறத் தலைப்பாகையும் அணிந்து, ஒரு தலைவரின் கீழ் திரண்டு வாழ்ந்திருக்கின்றனர்.  பதின்மூன்றாம்-பதினான்காம் நூற்றாண்டுகளில் இக்குன்றில் குடியிருப்புகள் இருந்ததன் சுவடுகள் 1984-ல் நிகழ்ந்த அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன.

தெமெங்காங் (Temenggong) என்று மலேய மொழியில் குறிப்பிடப்படும் ஜோஹர்(Johor) சுல்தானிடமிருந்து பிரிட்டிஷார் இத்தீவை வாங்கிய போது ஒரு பழைய பண்பாட்டின் அடையாளங்கள் இம்மலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் எச்சமாக இருந்திருக்கின்றன. ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய சிங்கையின் வரலாறு குறித்து சிங்கை சிராங்கூன் டைம்ஸ் இதழில் வரலாற்றுத் தொடர்களை தொடர்ந்து எழுதி வரும் ஹேமா "ஆதி நிலத்து மனிதர்கள்" என்ற தலைப்பில் விரிவாக எழுதி வருகிறார், சுவாரசியமான தொடர்.  

29 ஜனவரி 1819-ல் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் இத்தீவுக்கு வந்தபோது சிங்கை நதிக்கரையில் வாழ்ந்த ஜோஹர் சுல்தானோடு(அப்துல் ரஹ்மான்) நட்பு கொண்டிருக்கிறார். ஜோஹர் முடியுரிமையில் இருந்த குழப்பத்தைத் தீர்த்து வைத்து மற்றொரு வாரிசான ஹுசைன் ஷாவை ஜோஹரின் சுல்தானாக அங்கீகரித்து இருவருக்கும் வாழ்நாள் ஊதியம் தருவது என்ற ஒப்பந்ததத்தோடு, இத்தீவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்துறையாக  நிறுவிக் கொள்ளும் உரிமையை பெற்றிருக்கிறார். இது சிங்கப்பூர் ஒப்பந்தம் (Singapore Treaty) எனப்படுகிறது. இப்பகுதியில் அதுவரை நிலவிய டச்சு கோன்மைக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கிறது. 1824 வரை நிலவிய ஆங்கிலேய டச்சு மோதல்கள், ஒரு நட்புசார் ஒப்பந்தத்தின் வாயிலாக ஜோஹர் மேலான உரிமையை இரண்டாகப் பிரித்து, ரியாவ் தீவுகளின் உரிமை டச்சுக்காரர்களுக்கும், புதிய ஜோஹரின் உரிமை ஆங்கிலேயர்களுக்குமென முடிவாகிறது. ஏனோ குழந்தையில் கேட்ட குரங்கு-பூனை-அப்பம் கதை நினைவுக்கு வருகிறது.
Life-size model display of the signing of the Treaty of Friendship and Alliance on 6 February 1819, Museum in Sentosa




1819-ல் ஜோஹர் சகோதரர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் ஹுசைன் ஷா, கிழக்கிந்திய நிர்வாகிகள் ராஃபில்ஸ் மற்றும் ஆங்கிலேய  மேஜர் வில்லியம் ஃபர்குஹரோடு (Major William Farquhar) கையெழுத்திட்ட சிங்கப்பூர் ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு ஐந்தாயிரம் ஸ்பானிஷ் வெள்ளிகளைப் பெற்றுக்கொண்டு தெலோக் ப்ளாங்கா பகுதியில் குடியமர்கிறார் அப்துல் ரஹ்மான், ஆண்டுக்கு 3000 ஸ்பானிஷ் வெள்ளிகளோடு சுல்தான் முடியுரிமையைப் பெறுகிறார் ஹுசைன் ஷா.
1819 சிங்கப்பூர் ஒப்பந்தம்


மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மற்றொரு முக்கியமான அஸ்திவாரத்தை, சிங்கப்பூரை நிறுவுகிறார்  ராஃபில்ஸ். ராஃபில்ஸ் இப்புதிய நிலத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பையும், சில நிர்வாக ஆணைகளையும் ஃபார்குஹரிடம் அளித்துவிட்டு சுமத்ரா செல்கிறார்.
ஆவிகளும் பேய்களும் உலவுவதால் ஏறக்கூடாத மலையென இத்தீவின் குடியினரால் கருதப்பட்ட புகித் லரங்கன்னில் மலாக்கா வீரர்களின் உதவியோடு ஏறி யூனியன் ஜாக் கொடியைப் பறக்க விடுகிறார் மேஜர் ஃப்ரகுஹார். இக்குன்று சிங்கப்பூர் குன்று என்ற பெயர் பெறுகிறது.
1823-ல் வரையப்பட்ட ஓவியம் - கடலில் இருந்து தெரியும் சிங்கப்பூர் மலை  



ஜார்ஜ் ட்ரம்கோல்டு கோல்மென் (George Drumgold Coleman) என்ற ஐரிஷ் கட்டமைப்பாளர் ராஃபில்ஸ்க்கென சிங்கப்பூர் மலையில் ஒரு வீட்டை வடிவமைக்கிறார். நீர்த்தென்னை(Nipa palm) ஓலைகள் வேய்ந்த ஒரு மரக்கட்டிடமாக அந்த பங்களா அமைக்கப்படுகிறது.
நீர்த்தென்னை

நீர்த்தென்னை சதுப்பு நிலத்தில் வளரும் ஒரே தென்னை வகை. அதன் ஓலைகளைக் கொண்டே சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா பகுதிகளில் வீடுகளுக்கும் பல கட்டிடங்களுக்கும் கூரை (attap roof) வேய்ந்திருக்கிறார்கள். 100அடி நீளமும் 50அடி அகலமும் கொண்ட, இணையான இரண்டு கூடங்களோடு, முன்னும் பின்னும் நீண்ட தாழ்வாரங்களோடும், இருபுறம் நீளும் சதுர படுக்கை அறைகளோடு அமைக்கப்பட்ட வீடு. சிங்கையின் வெயிலுக்கு இந்த தென்னை ஒலை வேய்ந்த மரக்குடில் மிக ஏற்றதாக இருந்திருக்க வேண்டும். அருகிலேயே துறைமுகத்தில் வணிகக் கப்பல்களின் வருகையை உணர்த்தும் கொடியை ஏற்றும் கம்பமும், ஒரு கலங்கரை விளக்கமும் நிறுவப்பட்டிருக்கின்றன.

அதன் பிறகு வரும் ஆங்கிலேய கவர்னர்களுக்கான மாளிகையாக உருமாறும் இவ்விடம் பின்னர் செங்கல் கட்டிடமாக கட்டப்பட்டு அரசாங்கக் குன்று (Government Hill) என்ற பெயரையும் பெறுகிறது. கோட்டை கட்டுவதற்காக 1859-ல் இக்கட்டிடம் இடிக்கப்பட்டது.

சிங்கையின் கடற்புறம் பாதுகாப்பு அரண் ஏதுமின்றி திறந்தவெளியாக இருக்கவே சிங்கையின் முகப்பென சிங்கப்பூர் ஆற்றை நோக்கித் திறந்திருக்கும் இக்குன்று ராணுவ முக்கியத்துவம் பெற்றது. அதனால் கவர்னர் மாளிகையை வேறிடத்துக்கு மாற்றிவிட்டு குன்றின் உச்சிப்பகுதியில் மூன்று ஹெக்டேர் அளவுக்கு மேலும் சமதளமாக்கப்படுகிறது. 500-600 கைதிகளைக் கட்டிடத் தொழிலாளர்களாகக் கொண்டு புதிய கோட்டை எழுப்பப்படுகிறது, அப்போது இந்தியாவின் முதல் வைஸ்ராயாக இருந்த ஜான் கேணிங் பெயர் சூட்டப்படுகிறது.

இந்தக் கோட்டை ராணுவ கட்டளை மையமாக, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையமாக விளங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கங்களும், நிலவரைகளும், நிலத்தடியில் ரகசிய வலைப்பின்னல் வழிகளும், குண்டு துளைக்காத அரண்களும் கொண்ட கோட்டை.

நான் சென்ற நாளில் இவை அனைத்தும் நிகழ்ந்த இக்குன்று அதிகாலை இளவெயிலில் குளித்துக் கொண்டிருந்தது. குன்றின் பல திசைகளில் இருந்தும் இந்த உச்சிக்கோட்டை நோக்கி ஏறலாம்.

நாளை ஏறலாம்.

1 comment:

  1. வாசிக்க தூண்டும் வரலாற்றுச்சம்பவங்கள்��

    ReplyDelete