Monday, February 15, 2021

சிங்கை குறிப்புகள் - 8 - சைனாடவுன் 2.0

சைனாடவுனின் வரலாறு வெறும் இருள் சூழந்ததல்ல. இந்த வீதிகளிலேயேதான் அனைத்து சீன இனக்குழுவினர்க்கும், மற்ற இனத்தவர்களுக்கும், மதத்தினருக்கும் கூட பல வழிபாட்டுத் தலங்கள் உருவாகி வந்திருக்கின்றன. புத்தரின் பல் பாதுகாக்கப்பட்டிருக்கும் கோவில்களில் ஒன்றெனக் கருதப்படும் புத்த ஆலயமும், தியான் ஹாக் கெங்க் சீன வழிபாட்டுத் தலமும், சைனாடவுன் மகா மாரியம்மன் ஆலயமும், நாகூர் தர்க்காவும் புகழ் பெற்றவை.


இந்த நாகூர் தர்கா தமிழகத்திலிருந்து இங்கு குடியேறிய இஸ்லாமிய சூலியா சமூகத்தினரால் நாகூரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது என்னும் இறையாளர் ஒருவருக்காக 1828-30ல் கட்டப்பட்டது. சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ்(Sir Stamford Raffles) சூலியா (Chulia) என்று அடையாளப்படுத்தப்பட்ட தமிழக கிழக்கு கடற்கரை முஸ்லிம் சமூகத்தினருக்காக வழங்கிய இடம் சிங்கப்பூர் ஆற்றை ஒட்டி இருந்தாலும் இந்த தெலோக் அயர் பகுதியில் அவர்கள் வணிகம் செய்த காரணத்தால் இங்கும் நிறைய வாழ்ந்திருக்கின்றனர். அவர்களது பெயரால் சூலியா தெரு இங்கு வானுயர்ந்த கட்டிடங்கள் நிரம்பிய மைய வீதிகளில் ஒன்று.

நாகூர் தர்கா



அதன் அருகிலேயே 1842-ல் கட்டப்பட்ட தியான் ஹாக் கெங்க் ஆலயம் ஹாக்கியன்(Hokkien dialect) பேசும் சீனர்களின் வழிபாட்டுத்தலம். கடலோடிகளைக் காக்கும் தேவதையான மா ஜூ/தியான் ஹௌ-க்கான(Ma zu/Tian Hou) கோவில் இது. பலவித ஆபத்துகள் நிறைந்த, கரைசேரும் நிச்சயமற்ற  கடல் பயணத்துக்குப் பிறகு சிங்கையில் குடியேறிய முதல் தலைமுறை ஹாக்கியர்கள் தங்கள் உயிர்காத்து பிழைக்க வழிகாட்டிய தேவிக்கு நன்றி சொல்லக் கட்டிய அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆலயம். சீன கோபுரக்கலை அமைப்பின் படி, முழுவதும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களால், ஒரு இரும்பு ஆணி கூட பயன்படுத்தப்படாது கட்டப்பட்ட ஆலயம் என்கிறார்கள். மா ஜூ அமோயிலிருந்து(Amoy - இன்றைய ஜியாமென் Xiamen) வந்திருக்கிறார். 1990களில் கரையான்களால் இம்மரக்கட்டுமானம் அரிக்கப்படத்  துவங்கவே சிங்கையில் வரலாற்றுத் தலங்களை பாதுகாக்கும் அமைப்பு விரைந்து செயல்பட்டு சீர்படுத்தியிருக்கிறார்கள்.






தெற்கு பிர்ட்ஜ் சாலையில் அமைந்த மகாமாரியம்மன் கோவில், தீவின் இந்து ஆலயங்களிலேயே பழமைவாய்ந்தது. 1827-ல் நாராயணப் பிள்ளையால் கட்டப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராகப் பணிபுரிந்த இவர் சர் ஸ்டான்ஃபோர்ட் ராஃபில்ஸோடு ( Sir Stamford Raffles - சிங்கப்பூர் நகர் அமைய முக்கிய காரணியாக இருந்த ஆங்கிலேயர், இவரைக் குறித்து வேறொரு நாள் பேசலாம்) சிங்கை வந்திருக்கிறார். இவரேதான் லிட்டில் இந்தியா பகுதியின் முதல் செங்கல் சூளையைத் தொடங்கிய நாராயணப் பிள்ளை. ஆட்சியாளர்கள் தொடர்புடன் வணிகத்தில் இறங்கி, மெல்ல வளர்ந்து, தீவில் குடியேறிய இந்தியர்களின் தலைவர் என்றறியப் பட்டிருக்கிறார். முதலில் ஆலயம் கட்டுவதற்கு தெலோக் அயர் அருகே இடம் வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு வழிபாட்டுக்குத் தேவையான நீர் கிடைக்காதென்பதால் ஸ்டாம்ஃபோர்ட் கால்வாய்க்கு அருகே இடத்தை மாற்றிப் பெற்றுக்கொண்டிருக்கிறார். நகரத்திட்ட அமைப்பில் மாற்றம் ஏற்படவே அந்த இடமும் மாற்றப்பட்டு இன்றைய தெற்குப் பாலச் சாலைக்கு அருகேயுள்ள இடத்தில் குடிகொள்கிறாள் மகாமாரியம்மன். முன்னரே வழிபாட்டுத் தலமாயிருந்தாலும் 1936-லேயே முதல் குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. காலனிய ஆட்சிக்காலத்தில் புதிதாகக் குடியேறிய இந்தியர்களுக்கு அடைக்கலம் அளித்திருக்கிறது இக்கோவில். இங்கு நிகழும் தீமிதித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. 
மாரியம்மன் கோவில் கோபுரம் முதல் கட்டுமானம்

மகா மாரியம்மன் தீமிதித் திருவிழா



மகாமாரியம்மன் ஆலயத்துக்கு அருகிலேயே தமிழக சூலியா இஸ்லாமியர்களுக்காக 1835-ல் கட்டப்பட்ட ஜாமிஆ பள்ளிவாசலும் இருக்கிறது. பெரிய பள்ளி என்றழைக்கப்படும் இப்பள்ளிவாசலும் தமிழ் சூலியா முஸ்லிம்களுக்காகக் கட்டப்பட்டது

மகாமாரியம்மன் கோவிலுக்கு வலப்புறம் இருக்கும் பள்ளிவாசல் ஒரு கடையின் நிலைக்கண்ணாடியில் மேலும் அருகென இடப்புறம் தெரிகிறது

ஜாமிஆ பள்ளிவாசல்



புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் புத்தர் பல் இருக்கும் ஆலயம் 2007-ல் இங்கு கட்டப்பட்டது. மியான்மரில் புத்தரின் பற்களில் ஒன்று பாதுகாத்து வணங்கப்பட்ட ஸ்தூபிகளில் ஒன்று 1980ல் இடிந்த போது, அது பந்துலா மடாலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இருபதாண்டுகளுக்குப் பிறகு, அது இங்கு கொண்டுவரப்பட்டு இவ்வாலயமும் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த புத்தரின் பல் உண்மையா என்பது  குறித்த பல விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஒரு காலத்தில் உள்ளாகியிருக்கிறது. இன்று இவ்வாலயத்தின் மேற்தளத்தில் பொன்மின்னும் கூரையில் மிக அழகான நகை போல மின்னும் இந்த சன்னதியை படம் எடுக்க அனுமதி இல்லை.


இன்று நவீன சைனாடவுனின் மைய சாலையாகத் திகழும் யூ டாங் சென் சாலையில் (Eu Tong Sen Road) சில முக்கியமான கட்டிடங்கள் இருக்கின்றன. நான் இரண்டாவது முறை சிங்கை வந்தபோது எனக்கு முதல் பதினைந்து நாட்கள் தங்கிக் கொள்வதற்கு வழங்கப்பட்ட விடுதி சைனாடவுனுக்கும் சிங்கப்பூர் ஆற்றின் படகுத்துறைகளுள் ஒன்றாகிய க்ளார்க் கீ(Clarke quay)க்கும் இடையில் இருந்தது.
யூ டாங் சென் சாலை

அப்போதுதான் இங்கிருந்த 31 தளங்கள் கொண்ட மக்கள் பூங்கா மையத்திற்கு (People's park complex) செல்ல நேர்ந்தது. கைவினைப் பொருட்கள், அருமணிகள், பூத்தையல் வேலைப்பாடுகளுக்கான பொருட்கள் இங்கு நிறைய கிடைக்கும். 1973-ல் கட்டிமுடிக்கப்பட்ட இந்த வளாகம் சிங்கப்பூரின் முதல் முறையாக பல்பயன்பாட்டு வளாகமாக குடியிருப்புகள், வணிகமையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டது. 
பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளெக்ஸ்



இதை ஒட்டியே இருக்கும் 'தி மெஜஸ்டிக்'(The Majestic) திரையரங்கம் முக்கியமான மற்றொரு கட்டிடம். சீன (காண்டனீஸ்) ஓபராக்கள் நிகழ்ந்த பண்பாட்டு அரங்கம். இதன் முகப்பில் கையால் வரையப்பட்ட ஓபரா கலைஞர்களும், டிராகன் உருவங்களும் இதன் சிறப்பாக சொல்லப்படுகிறது. அருகிலிருக்கும் தோட்டத்தோடு கூடிய நடை மேம்பாலத்திலிருந்து அருகில் பார்க்க முடியும். ஆனால் நோய்த்தொற்று காலத்தை முன்னிட்டு அங்கு செல்ல அனுமதி இல்லை.
தி மெஜஸ்டிக்


அதற்கு அடுத்த கட்டிடமாக நிற்கும் யூ டாங் சென் சந்திப்பில் உள்ள யூ ஹுவா(Yue Hwa) கட்டிடத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காபரே அரங்குகளுக்காக புகழ்பெற்ற 'தி கிரேட் ஸதர்ன் ஹோட்டல்' (The Great Southern Hotel) இருந்திருக்கிறது. இன்று சீன மருத்துவப் பொருட்கள் தயாரிக்கும் யூ ஹூவா நிறுவனத்தின் வணிக மையமாக இருக்கிறது.
பழைய கிரேட் சதர்ன் ஓட்டல்


இந்த யூ டாங் சென் சாலையிலிருந்து இணை கோடுகளாக செல்லும் மசூதி தெரு, கோவில் தெரு, ஸ்மித் தெரு, சாகோ தெரு, பகோடா தெரு அனைத்திலும் வரலாறும் நவீனமும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

மசூதித் தெருவில் காணப்படும் மிகப் பெரிய கட்டிடம் இன்றைய சிங்கப்பூரின் வீட்டு வசதி வாரியத்தின் (Housing Development Board) முன்னோடியான சிங்கப்பூர் வளர்ச்சி அறக்கட்டளை (Singapore Improvement Trust) இக்கட்டிடத்தில்தான் இருந்திருக்கிறது. 1927-ல் சிங்கப்பூரின் தீராத குடியிருப்பு பிரச்சனைகளை சீரமைக்க இவ்வமைப்பு முற்பட்டது.  இதன் கட்டிட அமைப்பு மிகவும் அழகானது. 

Singapore Improvement Trust

அதன்பிறகு நாம் புத்த ஆலயம் நோக்கி செல்லும் போது தவறவிட முடியாத இரண்டு தெருக்கள் உணவு வீதியும், சந்தை வீதியும். சைனாடவுன் உணவு வீதி அமைந்திருக்கும் ஸ்மித் சாலை ஒரு முனையில் 1887-ல் கட்டப்பட்ட மூன்று தளம் கொண்ட 800க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய ஓபரா அரங்கமாக முன்பு இருந்த அழகான கட்டிடத்தில் இருந்து துவங்குகிறது. சிங்கப்பூரின் ப்ராட்வே என்றே சொல்லப்பட்ட இவ்வரங்கு இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்னதாக திரையரங்காக சிலகாலம் செயல்பட்டிருக்கிறது. பிறகு யுத்தத்தில் வெடிகுண்டு வெடிப்பில் மிகவும் சேதமடைந்த இக்கட்டிடம் பிறகு மீண்டும் எடுத்துக் கட்டப்பட்டது.  இன்று இது ஓபரா ஹவுஸ் ஓட்டலாக இருக்கிறது.
ஓபரா ஹவுஸ் ஓட்டல்



இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிவப்பு விளக்கு பகுதியாக இருந்த ஸ்மித் சாலை 1930-ல் மாற்றங்களை சந்திக்கிறது. பின்னர் வேலை தேடுவோர் குழுமும் இடமாக இருந்திருக்கிறது. 2001-ல் இருந்து சாலையிலேயே உணவங்கள் திறக்கப்பட்டு பன்னாட்டு சுவைகளைப் பரிமாறும் பந்தியாக இருக்கிறது இந்த உணவுச்சாலை.
ஸ்மித் சாலை - உணவு வீதி



சந்தைச்சாலை பகோடா வீதியிலிருந்து சாகோ சாலை வரை நீள்கிறது. சீனப்பீங்கான், சீனப் பட்டு, சீன விசிறி, ஓபரா முகமூடிகள், ட்ராகன் மெழுகுவர்த்திகள், கையசைக்கும் அதிர்ஷ்டப் பூனை, மஹோங் விளையாட்டுக் காய்கள் என ஏதேதோ குவிந்திருக்கும் கடைகள். சிறிய பொருட்களால் அவ்வளவு பெரிய பாரம்பரியத்தின் துளிகளை சுமந்துவர முடிகிறது.
பகோடா தெருவின் சந்தைச்சாலை


சைனாடவுன் வரலாற்று மாவட்டம்  நான்கு துணை மாவட்டங்களால் ஆனது - தெலோக் அயர், கிரேடா அயர், புகிட் பாசோ, டாஞ்சோங் பாகர். இவற்றில் நான் எழுதியுள்ள குறிப்புகள் பெரும்பாலீம் கிரேடா அயர், தெலோக் அயர் பகுதிகளைச் சேர்ந்தவை. இந்திய-சீன குடியேற்றத்தின் முகங்களாகத் திகழ்ந்த பகுதிகள். தெலோக் அயர் பகுதியில் இன்று விண்தொடும் கட்டிட நிரைகளின் மற்றொரு முகமும் இருக்கிறது. அது குறித்து மேலும் விரிவாக மற்றொரு சமயம் பார்க்கலாம்.

டாஞ்சோங் பாகர்(Tanjong Pagar) வட்டத்தில் புத்தர் ஆலயத்துக்கு எதிரிலேயே அமைந்த ஜின்ரிக்ஷா நிலையமும் ஒன்று. அது 1903-ல் போக்குவரத்துக்கு பயன்பட்ட அட்களால் இழுக்கப்படும் இழுவண்டியாகிய ரிக்ஷாக்களின் நிர்வாக நிலையமாக இருந்திருக்கிறது. 1869-ல் ஜப்பானில் துவங்கிய ரிக்ஷாக்கள்,  ஜப்பானிலிருந்து ஷாங்காய் வழியாக சிங்கைக்கு 1880-ல்  அறிமுகமாயிருந்திருக்கின்றன. அறிமுகமாகி சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் மட்டும் கிட்டத்தட்ட 13000 ரிக்ஷாக்கள் ஓடியிருக்கின்றன.
ஜின்ரிக்ஷா கட்டிடம்

மலிவு விலைப் போக்குவரத்தாக மக்களிடையே பிரபலமாக இருந்திருக்கிறது. 1945-க்குப் பிறகு மிதிவண்டிகளாக ரிக்ஷாக்கள் மாறிய பிறகு இழுவண்டிகள் அருகின, 1947-ல் இழுவண்டிகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டன.  அதன் பிறகு குடும்ப நல மையமாக, பிரசவ நிலையமாக, குழந்தை நல மருத்துவமனையாக பல வேலைகள் பார்த்த இக்கட்டிடம்  2007-ல் நடிகர் ஜாக்கி சானால் வாங்கப்பட்டது. 

இன்றைய சைனாடவுன் உயர்தர மது விடுதிகளும், அதிநவீன உயர் அடுக்ககங்களும் கொண்டிருந்தாலும் ஒவ்வொன்றிலும் பண்டைய சீனா ஊடுருவி நிற்கிறது. பளீரிடும் கட்டிடங்களின் இடையே மறைந்திருக்கும் இருண்ட நிழல்களென கடந்த காலத்தை மறைத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது சைனாடவுன்.
சைனாடவுன்

தீயுமிழும் ட்ராகனின் செந்நிறமும் தீநாக்குகளின் செம்மஞ்சள் நிறமுமாக பொன் இழைகளோடு கரும்பட்டு நூல் பிண்ணிய  பட்டுத்திரைச்சீலையென ஒட்டுமொத்த சைனாடவுனின் நினைவுகள் மனதில் நிற்கின்றன.

2 comments:

  1. 👌👌மிகவும் அருமையான வர்ணனைகள்👏👏 அற்புதமான தகவல்கள்👍👍🙏🙏😍

    ReplyDelete