Tuesday, February 16, 2021

சிங்கை குறிப்புகள் - 9 - கடலோரம்

ஒருநாள் காலை நேர நடையில் எங்கு செல்லலாம் என்று யோசித்தபடியே கிழக்கு கடற்கரையோரமாக நகரிருக்கும் திசை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்ட கால்களை எங்கே போவதாக எண்ணம் என்று கேட்டுக்கொண்டேன். விண்வெளுத்து வெகுநேரமாகியும் கதிரைக் காண முடியவில்லை. கடல் நீருக்குள் இருந்து ஒளி கிளம்பி வெளியை நிறைத்துக்கொண்டிருந்தது. காசிக்கு அருகே அகன்ற கங்கையின் மறுகரையில் மரங்கள் தெரிவது போல சிங்கையின் கிழக்குக் கடற்கரையில் அது கடல் என்றே உணரவியலா வண்ணம் மறுகரையென அணிவகுத்து நிற்கும் கப்பல்கள் தெரியும். பலவிதமான கலங்கள், சிறுகுழந்தைகள் பலவண்ணத் துண்டுகளை சேர்த்து அடுக்கி கட்டும் வீடுகள் போன்ற மாபெரும் செவ்வக வடிவிலான கொள்கலன்களை நெருக்கமாக ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்கள், நீரில் மிதக்கும் தொழிற்சாலை போல  பெரும் குழாய்களோடு தென்படும் கலங்கள்,   நீண்ட விமான ஓடுதளம் போன்ற நெடும்பரப்பில் எதுவுமே இல்லாதது போலத் தட்டையாகத் தோற்றம் தரும் கப்பல்கள், யானைக் கால்களிடையே ஓடும் சிறு எலி போல இவற்றைக் கண்காணிக்கும், பணியாளர்கள் பயணிக்கும் சிறு படகுகள் என சிங்கையின் நீர்சந்திகளில் கடல் ஓய்வே இன்றி இரவும் பகலும் கடையப்படும். அமுதும் விஷமும் அவரவர் தரப்புக்கு ஏற்றபடி. ஆனால் இந்த இடைவிடாத கடலோட்டமே சிங்கைக்கு முக்கிய பொருளீட்டித் தருகிறது. ஒரு நாளின் எவ்வேளையிலும் இக்கப்பல்களின் எண்ணிக்கை குறைவதில்லை.

ஒரே நேரத்தில் ஆயிரம் கலங்கள் நிற்கக்கூடிய அளவு பெரியது சிங்கப்பூரின் துறைமுகம். சராசரியாக ஒருநாளுக்கு இரண்டாயிரம் கப்பல்கள் சிங்கப்பூர் நீர்ச்சந்தியை கடந்து செல்கின்றனவாம். ஒவ்வொரு 2-3 நிமிடத்துக்கு ஒரு கப்பல் வந்தணையவோ கிளம்பிச் செல்லவோ செய்யும் போக்குவரத்து கொண்ட துறைமுகம். 1819-களில் கடல் வாணிபத்துக்கென்றே விரிவாக்கப்பட்ட நகர்தான் சிங்கை என்பதால் இதில் மிக வியப்பேதுமில்லை.  உலகிலேயே அதிகமான அளவு சரக்குக் கொள்கலன்ககளைக் கையாளும் துறைமுகங்களில் ஒன்று.

வீட்டருகே நடை செல்லும் போது இரவின் மின்விளக்குகளில் இந்தோனேசியாவைச் சேர்ந்த பத்தாம் தீவின்(Batam) கரை தெரியும். மழை பெய்து காற்றைக் கழுவி தூசுகள் படிந்தமைந்துவிட்ட மாலை வேளைகளிலும் இந்தோனேசியக் கரையைக் காண முடியும். 

கீழைக்கடல் முழுதும் கப்பல்

இன்றும் மௌனப் படம் ஒன்றிலென ஒரு சில கப்பல்கள் மெல்ல நகர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தன. காலை ஒளியில் ஒன்றின் மேல் ஒன்று கவிழ்க்கப்பட்ட இரு கண்ணாடிகள் என விண்ணும் கடலும் தங்களுள் ஆழ்ந்திருந்தன. 



 மாபெரும் ஏரிகளில் கரையோரம் தளும்பும் அலை போன்ற மிக மெல்லிய சிற்றலைகளே நாய்க்குட்டிகள் போல கரையை முகர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தன. 



கடல் செம்பருத்தி(Sea hibiscus - Talipariti tiliaceum) எனப்படும் மரம் ஒன்று எட்டுக்கும் மேற்பட்ட திசைகளில் கிளை பரப்ப முயன்று தரையோடு நின்றுகொண்டிருந்தது. எத்திசை நீள்வதென வேரிலும் ஒரே குழப்பம்.



Talipariti tiliaceum

இந்தக் கிழக்கு கடற்கரை முழுவதுமே கடல் பிறக்கோட்டிய சேரன் போல கடலை விரட்டிப் பெற்ற நிலம் என நினைவிருக்கும். கடலை ஒட்டி ஒரு 300-500 மீட்டர் அகலத்துக்கு கிழக்குக் கடற்கரைப் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் இணைகோடுகளென செல்லும் நடைபாதையும் மிதிவண்டிகள் மற்றும் உருள் சக்கரப்பலகைகளுக்கும்,  PMD (Personal mobility devices) என்றழைக்கப்படும் தனிநபர் பயண வாகனங்களும் செல்லும் பாதையும், அதன் இரு புறங்களிலும் பல வகையான மரங்களும் என கண்களுக்குப் பசுமையான பாதை.  ஏறத்தாழ 15கிமீ நீளம் கொண்ட கிழக்குக் கடற்கரையை ஒட்டியே நாகமென நீள்கிறது கிழக்கு கடற்கரை விரைவுச் சாலை.                 

வாரஇறுதியின் காலை மாலைகளில் சீரான இரு வழித்தடங்களில் வியர்வையில் ஒட்டிய வெங்காயத்தோல் போன்ற சட்டைகளும், மணிக்கட்டில் உடல்நலம் பேணும் பாவனையில் காலடியை மட்டுமன்றி பல தரவுகளை உளவு பார்க்கும் கடிகாரமும், புஜங்களில் ஒரு பட்டையில் ஒட்டிக்கொண்ட கைபேசியும், மற்றொரு கையில் இருளில் ஒளியுமிழும் பட்டையும், இடுப்புப் பட்டையில் தலைநீட்டி இருக்கும் கங்காருக்குட்டி போல நீர்ப்புட்டியும் இன்னபிறவும், காதுகளில் வழியும் இசையுமாக இத்தனையும் அல்லது இவற்றில் ஒன்றிரண்டு கூடுதல் அல்லது குறைவாக சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்  மக்களை அதிகம் காணலாம்.  சில சமயம் அவர்களோடு தாங்களும் மூச்சிரைக்க ஓடும் அடுக்கக வாழ்வில் குரைக்க மறந்த நாய்களும், உருள்பலகைகளில் ஒரு கால் வைத்து மறுகால் தரையில் தேய்த்து இழுத்துக் கொண்டு செல்லும் குழந்தைகளும், உருள் சறுக்குக் காலணிகளோடு உடலை பலவிதமாக நிகர் செய்து செல்லும் சிறுவர் சிறுமியரும், விதம் விதமான மிதிவண்டிகளில் பல வேகங்களில் பயணிப்போரும் என கடற்கரையும் கடலுக்கு நிகராக நெரிசலில் இருக்கும்.     

இன்று பணி நாள் ஆதலால் காற்று மட்டும் ஓடுபாதைகளில் சருகுகளைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்தது. ஆட்ட விதிமுறைகளை மீறி சிமெண்ட் தடம் விட்டு மண்ணில் இறங்கிய இலைகளைத் தோற்றுவிட்டதாக அறிவித்துவிட்டு காற்று அடுத்த இலைக் குழுவைத் துரத்தத் துவங்கியது. இந்த விளையாட்டைப் பார்த்தபடி இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடந்து வந்திருந்தேன்.  இப்பூங்காவின் துவக்கத்தில் சிறிது தூரம் வலப்புறம் வெளியேறிச் சென்றால் கோட்டை சாலையில் (Fort Road) சிங்கையின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய மரங்களில் ஒன்றிருப்பதாக எதிலோ வாசித்தது நினைவு வரவே, அதை நோக்கி நடந்தேன். 

இரண்டு புறங்களிலும் நிழல் பரப்பிக்கொண்டு பருத்த அடிகொண்ட அங்சானா (வேங்கை) மரங்களும், கடல் வாதாம் மரங்களும், காட்டரளி(Cerbera odollam) எனப்படும் மரங்களும் மிக அதிகம் காணப்பட்டன.  பாங்பாங்(pongpong) என இங்கு சொல்லப்படும் இந்தக் காட்டரளி தொலைவில் இருந்து பார்க்கும் போது மாமரம் என்றே தோன்றும், இதன் காய்களும் சற்றே உருண்ட மாங்காய் போன்றே தெரிகிறது, இதன் இலைகளும் நுனி மழுங்கிய மாவிலை போன்றே இருக்கிறது. பூக்கும் காலத்தில் மரமெங்கும் வெள்ளை நட்சத்திரங்கள் போல,  நந்தியாவட்டை மலர்போல இருக்கிறது. காய் சிவந்து பழுத்து உதிர்ந்ததும் நார்ப்பந்து போல தரையெங்கும் கிடக்கும். சிங்கையில் உதிர்ந்த மலர், இலை, காய்களைக்கூட எடுக்கக் கூடாது என்பதால் நல்லவேளையாக மாங்காய் போலிருக்கிறதே என சுவைக்கவில்லை, கடும் விஷம் எனப் பின்னர் அறிந்துகொண்டேன். 

உலர்ந்த காய்

காட்டரளி

Cerbera odollam


நான் பார்க்க எண்ணிய மரம் இருக்கும் கட்டாங்(Katong) பூங்கா, இன்னும் இரண்டு கிமீ தொலைவிருக்கிறது என்றது கூகுள். இடப்புறத்தில் வெளிர்நீலக் கடலும் வலப்புறம் இளைப்பாறும் மண்டபங்களும், உணவகங்கள் அமைந்த வளாகமும் கண்ணுக்கு மறைந்து விட்டன. கடல் சவுக்குக் காட்டுக்குப் பின்புறம் மறைந்து விட்டது. வலப்புறம் மேலும் அடர்த்தியான மரங்கள். சிறிது தொலைவில் இன்னும் திறக்காத வாடகை மிதிவண்டி நிலையம். ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை எனைத்தாண்டி விரையும் மிதிவண்டிகள், ஆங்காங்கே துப்புரவுப் பணியில் உலவும் மின்கலன் வாகனங்கள், இவற்றைத் தவிர வேறு ஒலிகள் இல்லை. தொடர்ந்து சில நாட்களாய் பெய்திருந்த மழையில் காணும் இடமெங்கும் பச்சை மலர்ந்திருந்தது. 


நகரின் கால்வாய்களில் ஒன்று கடல் நோக்கி விரைந்துகொண்டிருந்தது. ஒற்றை வகிட்டில் இரு கிளைகள் பிரிந்து ஒன்று இரும்பு மேம்பாலமாக நீண்டது. அது மேலும் மேற்கே நகரை ஒட்டிய பூங்காவை நோக்கி செல்வது. வலப்புறம் சென்ற பாதையில் நடந்தேன்.   

கிழக்குக் கடற்கரை சாலையைத் தொட்டதும் நகரநெரிசல் கண்ணில் பட்டது. பத்து நிமிட நடையில் கடற்கரை சாலைக்கு மறுபுறத்தில் மேயர் சாலையும் கோட்டை சாலையும் சந்திக்கும் இடத்தில் இருந்தது கடோங் பூங்கா(Katong Park).   மண்ணுக்கு அடியில் புதையுண்ட தஞ்சோங் கடோங் கோட்டையின் (Fort Tanjong Katong) எச்சங்களின் மேல் நிற்கிறது இப்பூங்கா. தஞ்சோங் கடோங் கோட்டை ஆங்கிலேயர்களால் கடற்புற கண்காணிப்புக்கென 1879-ல் கட்டப்பட்ட கோட்டை.  கட்டப்பட்டு சில காலத்திலேயே அந்த மண்ணின் தன்மையறியாது கட்டப்பட்டதால் அக்கட்டுமானம் புதையத் துவங்கியது, மேலும் நகரில் இருந்து மிக விலகி இருந்தமையாலும் கைவிடப்பட்டது.


1901-லேயே முற்றிலும் கைவிடப்பட்டது. 1950-களிலேயே இங்கே ஒரு கோட்டையின் எச்சமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், 2001-ல் தான் இதன் சில பகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 2005-ல் தன்னார்வலர்கள் சேர்ந்து மேலும் இவற்றை தோண்டியெடுத்து பாரம்பரிய நினைவுச்சின்னமாக்க முற்பட்டபோதும், பல முயற்சிகளுக்குப் பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் அனைத்தையும் புதைத்துவிட்டார்கள். ஒரே ஒரு சிறிய பகுதி மட்டும் வெளியிடப்பட்டு பார்வைக்கு இருக்கிறது. மீண்டும் மீண்டும் மண்ணுக்குள் புதைந்து கொள்ள விரும்பும் ஏதோ ஒரு தெய்வம் இங்கிருப்பதாக எண்ணிக்கொண்டேன். அதுவே ஒரு நல்ல கதைக்கான சாத்தியங்களோடு தோன்றவே அப்படியே அது இருக்கட்டும்.
கோட்டையின் சிறு சுவடு


1931-ல் இங்கு இப்பூங்கா கடலை ஒட்டிய நீச்சல் குள வசதிகளோடு துவங்கப்பட்டது. 1960-களில் கடல் விலகிச் சென்றதும் பூங்கா அதன் புகழையும் பொலிவையும் இழந்தது. 

கடோங்குக்கு நேராக அமைந்திருக்கும் இன்றைய கடலோரம்

தற்போது கடோங் வாழ் மக்களுக்கு இது ஒரு சிறிய பூங்காவாக, குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியான திடல்களோடு அமைக்கப்பட்டிருக்கிறது. நாய்களுக்கென ஒரு தனி ஓட்ட/நடை பாதையும் இங்கு இருப்பது ஒரு தனிச்சிறப்பு. 

இதன் ஒரு எல்லையில் ஒரு புல்வெளியில் நடுவே ஓங்கி நின்றது நான் தேடி வந்த தைல (யூகலிப்டஸ்) மரம். ஒரு யூகலிப்டஸ் மரத்தைப் பார்ப்பதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்பவர்களுக்கு, இது "Eucalyptus deglupta" எனப்படும் வானவில் மரம் என்பதே இவ்வகையின் சிறப்பு. இது குறித்த மிக விரிவான கட்டுரை ஒன்றைத் தாவரவியல் பேராசிரியை லோகமாதேவி எழுதியிருக்கிறார். (அவர் எழுதிய கட்டுரை இணைப்பு http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43874&cat=1360)

இப்பதிவின் பல தாவரங்களை அடையாளம் காணவும் அவரது உதவியையே நாடியிருக்கிறேன்.  


Mindanao gum எனப்படும் இம்மரம் இப்போது சிங்கப்பூரின் 'இன்ஸ்டாக்ராமிக்கக்கூடிய' வேண்டிய இடப்பட்டியலில் ("Most instagrammable Places") வருகிறது!  இணையத்தில் பல யுவதிகள் இங்கு விதவிதமாகப்  புகைப்படங்கள் எடுத்துப் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதனால்தான் எனக்கு இந்த மரம் இங்கிருப்பதே தெரிய வந்தது.  
Mindanao gum

இதன் மரப்பட்டை உரிவது பல வண்ணங்களில் இருக்கிறது. சிறுவயதில் கரிப்பலகையில் எழுதுவதற்கு வாங்கும் எழுதுகோலில் ஒரே குச்சியில் பலவண்ணம் கலந்து ஒன்று வரும், அது போல இருக்கிறது இதன் உடல். 
பட்டை உரியும் போது இளம்பச்சை நிறத்தில் இருந்தாலும் பின்னர் பல நிறங்களுக்கு மாறி இம்மரத்தை அழகான பலவண்ண பலப்பக்குச்சியாக்கி விடுகிறது. 


அந்நெடிய மரமும் வானில் பலகாலமாக ஏதோ வரைந்து கொண்டிருக்கிறது.  வெயில், மென்மழையில் நனைந்து கொண்டிருந்த ஒரு நாளில் இந்த நெடிதுயர்ந்த பலவண்ண சிலேட்டுக்குச்சி எழுதிய வானவில்லை யாரோ ஒரு சிறுகுழந்தை மட்டும் பார்த்திருக்கலாம்.  



  

1 comment: