"நகரை விட்டு வெளியேறியதும் ஒரு குறுகிய பள்ளத்தாக்கின் வழியாகப் பாதை செல்கிறது. இருபுறமும் வரிசையாக சிறு சிறு குன்றுகள் அணிவகுக்கின்றன. அவற்றின் மீது சில வீடுகளும் ஆங்காங்கே இருப்பது தெரிகிறது. மூங்கில் காடுகள் இருபுறமும் நிற்க பாதையின் இருபுறத்து மரங்களும், மேலே கைகள் பிண்ணி இவ்வழகான பாதையை நிழல் செறிந்ததாக்குகிறது. செங்கற்களால் கட்டப்பட்ட பெரிய வீடுகளுக்குப் பின்னால் ஜாதிக்காய் தோட்டங்கள் இன்னும் தெரிகின்றன, அதற்கப்பால் சிறிதளவே காடும், மிளகு, கம்பியெர் தோட்டங்களும் கண்ணுக்குப் படுகின்றன." - இத்தனை அழகிய வர்ணனைக்கு உரித்தான சிங்கையின் பகுதி எதுவென்று பார்த்தால் பெயரளவில் இன்றும் பழத்தோட்ட்டச்சாலை எனப் பெயர் கொண்ட ஆர்ச்சர்ட் சாலை (Orchard Road). 1873-ல் "வெள்ளை யானையின் நிலம்" என்ற நூலில் பிராங்க் வின்சென்ட்(Frank Vincent) என்பவர் இச்சாலை குறித்தெழுதியது.
இன்று சிங்கைக்கு சுற்றுலா வரும் அனைவரும் இச்சாலையை அநேகமாகப் பார்த்திருப்பார்கள். நகரிலேயே உயர்வர்க்க, அதிஆடம்பர பொருட்கள் விற்கப்படும் சாலை எனப் பெயர் பெற்றிருக்கிறது ஆர்ச்சர்ட் சாலை.
அது தவிர கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலத்தில் ஒரு 20 நாட்கள், இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள இவ்வீதி முழுவதும் வண்ண விளக்குகளாலும், மாபெரும் ஒளிமிக்க கிறிஸ்துமஸ் மரங்களாலும் அலங்கரிக்கப்படுவதும் இவ்வீதியின் சுற்றுலா சிறப்புக்கு மற்றொரு காரணம்.
அந்த குன்றுகள் என்னவாயின? ஜாதிக்காய் தோட்டங்கள் இருந்த வீதிக்கு கனிமரச் சோலையின் பெயர் வர என்ன காரணம்? உலகின் அத்தனை செல்வமும் வந்து குவியும் இடமாக, வணிகப் பெருவீதியாக இது எப்படி உருமாறிற்று? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் 200 வருட வரலாற்றில் இருக்கின்றன.
1800-களில் இக்குறிப்பு சொல்வது போல கம்பியெர், ஜாதிக்காய்த் தோட்டங்களும், குன்றுகளும் நிறைந்த கிராமப்புற சாலையாகவே இப்பாதை இருந்திருக்கிறது. 1820-களின் வரைபடத்தில் அரசாங்க மலைக்கும் (Government Hill - Fort Canning) சோஃபியா குன்றுக்கும் இடையே இருபுறமும் ஜாதிக்காய் தோட்டங்களூடே சென்ற ஒரு பெயரற்ற சாலையாக இருக்கிறது. ஹாக்கியன் பேசுவோரால் டாங்லின் சந்தை என்றும் தமிழர்களால் வைராகிமடம் என்றும் இச்சாலை சிலகாலம் அழைக்கப்பட்டிருக்கிறது. டாங்லின் எனும் இடத்தருகே பெரிய மேடு இருந்தமையால் மேட்டுதான்(!?) என்றும் தமிழர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தமிழர்கள் வேறு எப்படியெல்லாம் குறிப்பிட்டார்கள் என ஒரு சிறு நிகழ்வு. இப்பகுதிக்கு நான் 2006-ல் கிறித்துமஸ்-க்கு முந்தைய மாலைப் பொழுதில்தான் முதல் முறை வந்தேன். அக்டோபர் மாதம் சிங்கை வந்திறங்கியிருந்தாலும் அலுவலகம் இருந்த மில்லெனியா டவர், வீடிருந்த மரின் பரேட், லிட்டில் இந்தியா இவை தவிர அதுவரை வேறெங்கும் சென்றிருக்கவில்லை. எனவே அந்த மாலை வேளையில் முதல் முறையாக அந்நிய தேசத்தில் வாழும் உணர்வை அறிந்தேன். அலுவலகத்தில் இருந்து நேராக சாமர்செட் (Somerset) வந்துவிடுமாறு உடன் பணிபுரிந்த நண்பர் கூற, நானும் ரயிலில் கிளம்பியிருந்தேன். அங்கே நிரம்பி வழியும் கூட்டத்தினால் அடையாளம் கண்டுகொள்வது கடினம் என்பதால் ஆர்ச்சர்டில் இறங்கியதும் தொலைபேசியில் அழைக்குமாறு கூறினார்.சாமர்செட், ஆர்ச்சர்ட் இரண்டும் அடுத்தடுத்த ரயில் நிறுத்தங்கள். எதில் இறங்குவதென குழப்பம் ஏற்பட்டு மீண்டும் நண்பரை அழைத்தால் எடுக்கவில்லை. நானும் ஆர்ச்சர்ட் சென்றிறங்கி அழைத்துக் கொண்டே இருந்தேன். கூட்டம் என்னை வெளியே தள்ளி அழைத்துப் போய்விட்டது. நண்பர் சாமர்செட்டில் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு என்னை அழைத்தார். மீண்டும் ரயில் ஏறுவதற்கு கூட்டம் அனுமதிக்காது எனப் புரிந்தது. எனவே இருவரும் பாதி வழியில் சந்திப்பதென முடிவாயிற்று. நான் அங்கிருந்து வெளியேறி அந்தச் சாலையின் விளக்கு அலங்காரங்களைப் பார்த்தபடி சாமர்செட் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
ஒரு கிலோமீட்டர் தொலைவுதான் என்றாலும் அந்த மிக அகன்று பரந்த சாலை முழுவதும் தலைகள். லட்சக்கணக்கில் மின்விளக்குகள், உயர்ந்த வணிகக் கட்டிடங்களின் வாயிலில் இரண்டு-மூன்று தள உயரத்துக்கு மின்னும் கிறித்துமஸ் மரங்கள். டிஸ்னி உருவங்களும் இன்னும் நானறியாத எத்தனையோ கார்ட்டூன் உருவங்களும் தெருக்களில் நடனமாடிக் கொண்டு, எங்கும் காற்றில் இசை நிறைந்திருந்தது. ஆணும், பெண்ணும், குழந்தைகளும், யுவதிகளும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். நேர் எதிரில் முட்டிக் கொள்வது போல வருபவரைக் கூட அடையாளம் கண்டு கொள்ள வழி இல்லை. அவ்வளவு ஒளியும், ஒலியும். இடைவிடாது ஒலிக்கும் ஜிங்கில் பெல்ஸ் பாடல், ஆங்காங்கே செயற்கை பனிப்பொழிவு. அந்த மாயாலோகத்தில் இரண்டு மணிநேரம் உலவிவிட்டு நண்பரை சந்திக்காமலேயே சாமர்செட் வரை சென்று சேர்ந்து, பிறகு இரண்டு மணிநேரம் கழித்து ஒருவழியாய் வீடு சென்று சேர்ந்தேன்.
அதனால் இந்த சாலைக்கு ரங்கநாதன் தெரு என்று பெயர் வைத்தேன். இதே போல ஒரு தீபாவளிக்கு முந்தைய நாளில், சென்னையில் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் இறங்கி, ரங்கநாதன் தெருவில் தைக்கக் கொடுத்திருந்த புத்தாடையை வாங்க சென்ற என்னை ஆயிரம் மக்கள் கைத்தாங்கலாக நேரே கொண்டு சென்று உஸ்மான் ரோட்டில் சேர்த்துவிட்டார்கள். அப்படியே எங்கெங்கோ கூட்டம் அழைத்துச் சென்ற வழியெல்லாம் போய் ஆடையை வாங்காமலேயே வீடு சென்று சேர்ந்தேன்.
இதே ஆர்ச்சர்ட் சாலையில்தான் சிங்கையின் குடியரசுத் தலைவரின் அரசாங்க குடியிருப்பான இஸ்தானா இருக்கிறது. அது முன்னர் 1800களில் இருந்து பிறகு காணாமல் போன குன்றுகளில் லாக்ஸ் குன்று மற்றும் கரோலினா குன்று இருந்த இடத்திலேயே இன்று இஸ்தானா மாளிகை நிற்கிறது.
இதுதவிர மேற்கு மலைகள், எமரால்டு குன்று, காய்ர்ன் குன்று, எலிசபெத் குன்று, கிலேமோர் குன்று என பல சிறு குன்றுகள் இருந்திருக்கின்றன. அதனால்தான் ஆர்ச்சர்ட் சாலை ஒரு பள்ளத்தாக்கில் இருந்திருக்கிறது. அந்தக் குன்றுகளை பெருமளவு வெட்டி சமப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் பல இடங்கள் செங்குத்தாக மேலேறி கீழிறங்கி செல்வதை இங்கு இன்றும் காணலாம்.
இன்று ஆர்ச்சர்ட் செல்பவர்கள் அனேகமாக "டோபி காட்" (Dhoby Ghat) நிலையத்தில் சென்றிறங்குவார்கள், அது மூன்று வெவ்வேறு ரயில் பாதைகளின் சந்திப்பாக இருப்பதால் அங்கு செல்வதே எளிது. இந்தப் பெயர் சொல்லும் கதை இது வண்ணான் துறையாக இருந்திருக்கிறது என்பதே. 1800-களில் இங்கு சங்கெய் ப்ரஸ் பாஸா (Sungei Bras Basah) என்ற சிற்றோடை ஓடியிருக்கிறது. கேனிங் கோட்டை அரசாங்க இல்லத்து அதிகாரிகளின் துணிகளை வெளுக்கும் இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த துணி துவைக்கும் வண்ணார்கள் அதில் ஆடைகளைத் துவைத்து உலர்த்திய பகுதி என்பதால் இப்பெயர் நிலைத்துவிட்டது. இன்றைய கேத்தே திரையரங்கை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த இந்தியர்கள்(க்ளிங்-கள் என்று இந்தியர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்) குளிப்பதும், கால்நடைகளைக் குளிப்பாடுவதும் என இருந்திருக்கிறார்கள். இன்று அந்த இடத்தில் வரலாற்றை வெளுத்துக் காயப் போட்டிருப்பது போல பளபளக்கும் கட்டிடங்களுக்கு இடையே " டோபி காட்" என்ற பெயரோடு ரயில் நிலையம் இருக்கிறது.
அப்பகுதியிலேயே தாழ்வான பகுதி என்பதால் மழை வெள்ளநீர் பலமுறை ஆர்ச்சர்ட் சாலையில் தேங்கியிருக்கிறது. 1800களில் மிகவும் மோசமாக ஐந்தடி வரை வெள்ளம் நின்ற இப்பகுதியில் 1980கள் வரை கூட மழைநாட்களில் நீர் சேர்வதும், நின்றுபோய்விட்ட கார்களைத் தள்ளுவதும் இயல்பான காட்சியாக இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் மழை நீர் எங்காவது தேங்கிவிட்டால், அது நாடளாவிய தலைப்புச் செய்தி. முதல் முறை சிங்கை வந்த புதிதில் செய்திகளில் "இன்று அங் மோ கியோ பகுதிகளில் மழை நீர் வடியாமல் அரையடி வரை நீர் தேங்கிஇருந்தது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கடும் மனஉளைச்சலுக்கு அரசு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது" என்ற செய்தியை வானொலியில் கேட்டு, அரையடி நீர் இருபது நிமிடம் நின்றதற்கு அரசாங்கம் மன்னிப்பா என்று நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். அதற்கு சில மாதங்கள் முன்புதான் சென்னையில் வானைக் கிழித்து ஊற்றிய மழையில் இடுப்பளவு நீரில் திருவான்மியூரில் நீந்திக்கொண்டிருந்தது அன்றாட வாடிக்கையாக இருந்தது. 2010-2011-ல் பெய்த பெருமழையில் ஆர்ச்சர்ட் சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு செய்திகளில் வந்தது.
ஊருக்கு ஊர் மன உளைச்சல்களை அளக்கும் அளவுகோல்கள் வேறு, மேலும் இளமையில் இருந்தே மிகை வசதிகளுக்குப் பழகி விடும் போது, சிறு சிரமமும் மக்களுக்குப் பெரும் மனஉளைச்சல்களைத் தர முடியும் எனப் பல சம்பவங்களில் இங்கு உணர்ந்திருக்கிறேன்.
இது சற்றே நீண்ட சாலை, நாளை மேலும் நடக்கலாம்.
முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 12 - பசுமையின் வரலாறு
அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 14 - பழத்தோட்டச் சாலை
மிக அருமை சுபஸ்ரீ. அந்தக்கால பழத்தோட்ட சாலைக்கு கூட்டிச் சென்று விட்டீர்கள். காலம்தான் எத்தனை வேகமாக இடங்களை மாற்றிப் போடுகிறது. என் கண்ணெதிரே கடந்த 30 ஆண்டுகளில் தலைகீழாக மாறிப் போன சென்னை ஆற்காடு சாலையை எண்ணிக்கொண்டேன். எத்தனையோ மாந்தோட்டங்கள் குயில் தோப்புகள் இன்று காங்க்ரீட் காடுகளாக... உங்களுக்கு மிக அழகாக எழுத வருகிறது நில வர்ணனைகள் வெகு அருமை. ஆர்ச்சிட் ரோடு ரங்கநாதன் தெரு ஒப்பீடு ஆஹா...உங்களுடைய எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும். தொடர்ந்து எழுத நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteI have always thought of Singapore as a flat land with 2 or 3 hiils. Wonder why they flattened them. A very new light to the shiny orchard I have seen.
ReplyDelete