Tuesday, February 23, 2021

சிங்கை குறிப்புகள் - 16 - நெய்தல் நடை

இது மற்றொரு காலை நடை, சாங்கி கடற்கரைப் பகுதி.

சாங்கி கடற்கரை

 

ஏன் இத்தனை நடை குறித்த பதிவுகள் என யோசித்துப் பார்த்தால், இந்நாடு, நடப்பவர்களுக்கு செய்து கொடுத்திருக்கும் வசதி ஒரு மிக முக்கியமான காரணம். இரண்டாவது முக்கிய காரணம் ஒரு ஊரை அறிந்து கொள்வதற்கு நடையைப் போல சிறந்த வேறொரு வழி இல்லை. காலறிய கண்ணறியும், கண்ணறிய கனவு அறியும். கனவில் நிகழ்களங்களாக வரத் துவங்கிய  நிலமே நாம் "வாழும்" ஊராகிறது.  இதற்கும் எத்தனை காலம் அவ்வூரில் வாழ்ந்தோம் என்பதற்கும்  தொடர்பிருக்க வேண்டுமென்பதில்லை. மிகக் குறைந்த காலமே வாழ்ந்த ஊர் கூட மனதுக்கு மிக அணுக்கமாகி இருக்கிறது, அதுவும் இதே போன்ற நடை அனுபவத்தால்தான் எனலாம். 

சென்ற நவம்பரில், ஒரு வார விடுப்பும், கொரோனாவால் அனைத்து நாடுகள் கதவடைப்பும் ஒன்று சேர்ந்து கொள்ள, நான் தினமும் அதிகாலை நடைக்குக் கிளம்பினேன். சற்றுத் தொலைவில் உள்ள இடங்கள் என்றால் குறிப்பிட்ட இடம் வரை பேருந்தில் சென்று விட்டுப் பிறகு நடை. முழுமையும் நடந்தும் செல்லலாம்.   அப்படி ஒரு எண்ணமும் இருக்கிறது - ஒரு கரையிலிருந்து மறுகரை வரையிலான நடை செல்வதான திட்டம். அடுத்த ஒரு நீண்ட விடுமுறையில் முயற்சிக்கவேண்டும். 

அப்படி ஒரு காலைப் பொழுதில் சாங்கி கடற்புறம் காணச் சென்றேன். "சாங்கி" என்னும் பெயரை பலரும் விமான நிலையத்தோடு சேர்த்துக் கேள்விப்பட்டிருக்கலாம். சிங்கப்பூர் தீவின் கிழக்கு முனை. ஒவ்வொரு முறையும் விமானம் தரையிறங்கத் தொடங்கும் போது சற்றே பிசகினால் ஒரு சக்கரம் மலேசியாவிலோ இந்தோனேசியாவிலோ இறங்கிவிடக்கூடும் எனும் அளவுக்கு அண்டைத் தீவுகளை அருகில் காண முடியும். சிங்கப்பூர் ஒரு கிழக்கு நோக்கிய ஆமை எனக்கொண்டால் அதன் மூக்கில் இருக்கிறது விமான நிலையம். நான் சென்ற இந்த நடைப்பகுதி ஆமையின் தலையின் மேற்புறம். சிங்கப்பூரைச் சேர்ந்த பெரிய தீவுகளில் ஒன்றான புலாவ் உபின்-ஐ (Pulau Ubin) நோக்கிய வடகிழக்குப் புற கடற்கரை. (Pulau - தீவு)

அப்பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்யும் நேரத்தில் சாங்கியின் அறியப்பட்ட வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம். சாங்கி பகுதிக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. சாங்கி எனும் பெயர் இங்கு அதிகம் நின்றிருந்த செங்கை (Chengai - Neobalanocarpus heimii) மரத்தினால் வந்திருக்கலாம் என்கிறார்கள்.  மலேயாவின் தென் முனையில் ஒரு சிறு பொட்டாக இருந்த சிங்கப்பூரைத் தனித்த அடையாளத்தோடு உலக வரைபடத்தில் முதலில் பெயர் குறிப்பிட்டவர் என "இமானுவல் டீ கோடினோ எரேடியா" (Emanuel Godinho de Erédia 1563-1623) என்னும் மலேய-போர்த்துகீசியரைக் குறிப்பிடுகிறார்கள். 

எரேடியா வரைந்த தற்படம்

இவர் தாய் இந்தோனேசியாவின் சுலாவெசி (Sulawesi) பகுதியை சேர்ந்த இளவரசி; தந்தை போர்த்துகீசிய மிஷனரி சேவைகளுக்காக சுலாவெசி வந்த இடத்தில் பதினைந்து வயதான இளவரசியைக் காதலித்து  மணம் புரிந்துகொண்டு மலாக்கா சென்று குடியேறிவிட்டார். இந்தோனேசிய - போர்த்துகீசிய - மலேய வேர்களைக் கொண்ட  எரேடியா (E. G. de Eredia), ஒரு நிலவரைபடநிபுணர். கோவாவில் (Goa) வானவியல், நிலவரைபடவியல், கணிதம் கற்றிருக்கிறார். இவர் ஸ்பெயினின் அரசுக்காக கிழக்காசிய நாடுகளின் வரைபடங்களைத் தயாரித்தார் எனப்படுகிறது. இவர் 1613-ல் எழுதிய  "Declaraçam de Malaca e da India Meridional com Cathay" என்ற இந்திய, மலேயா, சீனாவைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூலில் இடம்பெற்ற வரைபடத்தில் சிங்கப்பூர் தீவின்  பல பகுதிகள் பெயர்களோடு குறிப்பிடப்படுகின்றன.   

இந்த கேத்தே பசிபிக்(Cathay Pacific) போன்றவற்றில் நாம் கேள்விப்படும் கேத்தே எனும் சொல் ஐரோப்பியர்களால் வட சீனாவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் 'கித்தே' அல்லது 'கித்தான்' (Khitay/Khitan) எனப்படும் மங்கோலிய பழங்குடி நாடோடிக்குழுவினர்  மஞ்சூரியா மற்றும் வடக்கு சீனா பகுதிகளை கைப்பற்றி 200 ஆண்டுகாலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த இனத்தின் பெயரின் மரூஉ கேத்தே (Cathay) எனப்படுகிறது.

1900க்கு முன்னர் வரையபட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதியின் வேறு வரைபடங்கள் எனப்பார்த்தால், பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கடல்வழிகளைக் காட்டும், செல்டனின் சீனா வரைபடம் (Selden Map of China) எனும் வரைபடம் ஒன்றில் சீனாவின் குவாங்ஜோவ் (Guangzhou) பகுதியில் தொடங்கி கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளும், ஜப்பானும், சிங்கப்பூரைச் சுற்றிலும் உள்ள பிரதேசங்களும், கடல் வழிகளும், காட்டப்பட்டிருக்கிறது. அதிக கப்பல் போக்குவரத்து கொண்ட பகுதியாகவே இந்த ஜோஹோர் கடல்சந்தி இருந்திருக்கிறது. 

செல்டனின் வரைபடம் 

சென்ற வருடம் "1867-க்கு முந்தைய சிங்கப்பூர்" என்ற கண்காட்சியில் இந்த வரைபடமும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதைத் தவிர கிழக்கிந்திய கம்பெனியின் வாணிபத்தை விரிவுபடுத்த, முக்கியமான கிழக்காசிய துறைமுகம் ஒன்றை கண்டடைவதற்காக ராஃபில்ஸ் கேட்டுக்கொண்டதன்படி தயாரிக்கப்பட்ட "சிங்கப்பூர் மேப்" விரிவாக சிங்கப்பூர் துறைமுகத்தை ஆவணப் படுத்தியது(கல்கத்தா ஜர்னல் இந்தியா நூலில் இருந்து எடுக்கப்பட்டது). 

கல்கத்தா ஜர்னல் இந்தியாவிலிருந்து - சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம்

1821-ல் சிங்கப்பூரின் கடல் எல்லைகளை விரிவாக ஆராய்ந்து கேப்டன் ஜேம்ஸ் பிராங்க்ளின் (Captain James Franklin)  மற்றும் பிரான்சிஸ் பெர்னார்ட் (Francis Bernard) ஆகியோர் முதல் விரிவான சரியான அளவுகோல்களோடு கூடியஒரு சிங்கையின் வரைபடத்தை வெளியிட்டனர். சிங்கப்பூரின் பல இடங்களுக்கு அவர்களே பெயரும் வைத்து விட்டனர். உதாரணமாக ஏற்கனவே மலாய் மொழியில் சாங்கி எனப் பெயர் இருந்த இடத்திற்கு 'பிராங்க்ளின் முனை' என்றே பெயரிட்டுக் கொண்டனர். 

பிராங்க்ளின் தயாரித்த பென்சிலால் வரைந்த வரைபடம்.

இன்னொன்று ப்யுட் மேப் (Bute map) எனப்படும் 1820-களின் வரைபடம் சிங்கப்பூரின் நிலஅமைப்பை விரிவாக பதிவு செய்த முதல் பதிவு எனலாம். இது ஆங்கிலேயர்கள் ஆட்சி துவங்கிய பிறகு வெளிவந்ததென்பதால் ஸ்டாம்போர்ட் கால்வாய் (ஆர்ச்சர்ட் சாலையில் வண்ணார்கள் துவைத்த அதே சிற்றோடை) முதல் கம்போங் கிளாம் வரை, அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாலங்கள் வரை அனைத்தும் இடம்பெறுகின்றன. 

ப்யுட் மேப்

ஆனால் மிகவும் குறிப்பாக சிங்கைத் தீவின் இடங்களின் பெயர்களைப் பதிவு செய்த வகையில் எரேடியாவின் வரைபடம் முக்கியம் பெறுகிறது.  எரேடியாவின் படத்தில் அவர் சாங்கியையும் குறிப்பிட்டிருப்பதனால் அவரது படத்தை விரிவாகப் பார்ப்போம்.

எரேடியாவின் வரைபடம் 


இவரது மேப் இன்று நாம் வழக்கமாகக் காண்பதைப் போலல்லாமல் தலைகீழானது, தெற்கு மேலேயும். வடக்கு கீழேயும் உள்ள வரைபடம். அதனால் மலேசியாவின் தென்முனைப்புள்ளியான சிங்கப்பூர் இப்படத்தில் தலைக்கு மேலே அமர்ந்திருக்கிறது.ஜோஹோர் நதியின் முகத்துவாரம் என "சிங்கப்பூரா (SINCAPURA)" காட்டப்படுகிறது. புலோவ் சாங்கி (Pulochagni) என ஒரு சிறு தீவும் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.   1604-ல் வரையப்பட்ட இப்படத்தில் இன்றைய பகுதிகளோடு அடையாளம் காணக்கூடிய இடங்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. சிங்கப்பூரா (Singcapura) என சிங்கப்பூர் அடையாளப் படுத்தப்படும் இப்படத்தில்,  தானா மேரா - இன்றும் அதே பெயரில்(Tanamera - Tanah Merah), சுனே போடோ - பெடோக்(இன்று) (Sunebodo - Sungie Bedok), டேன்ஜோன் ரூ - தஞ்சோங் ரூ(இன்று) (Tanjon Ru - Tanjong Rhu) என பல இடங்களும், ஸபேண்டரியா  (Xabanderia / Shanbandahar), எனக் கடல்துறைமுகக் காப்பாளரின் இருப்பிடமும் காட்டப்பட்டிருக்கிறது. 1600களிலேயே இங்கு ஒரு துறைமுகம் இருந்ததை இதில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.  

எரேடியாவின் வரைபடம் - சிங்கை Source: historydelocalized.blogspot.com/

1800-களில் கொசுக்கடி நிறைந்த சேற்றுப் பகுதியாகவும் சில தென்னந்தோப்புகளும் நிறைந்த இப்பகுதி 1845 முதலாகவே கடலோரம் இளைப்பாறும் வீடுகளும், ஆங்கிலேய அரசினர் தங்கும் கடலோர விடுதிகளும் கொண்ட உல்லாச கடற்கரையாக மாறத் துவங்கியது. சாங்கி பேட்டரி குன்று(Battery hill), தேவதைமுனைக் குன்று (Fairy point hill), சாங்கி குன்று (Changi hill) என 3 குன்றுகளோடு சேர்ந்த கடற்கரைப் பகுதி. 1900-களில் ஜோஹோர் பகுதியைச் சேர்ந்த காடுகளில் இருந்து சிறு தொலைவே என்பதால் கடலில் சிறுதூரம் நீந்தி வந்து புலிகள் இங்கு குட்டிகளை ஈன்று சென்ற கதைகளும் இருக்கின்றன. இங்கும் அருகில் உள்ள புலாவ் உபின் தீவிலும் எளிதில் கிடைத்த காட்டுப்பன்றி போன்ற வேட்டை உணவும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். 

சாங்கி கிராமம் (Changi Village) எனப்படும் இப்பகுதியில் தான் இன்றும் பல கடற்கரை உல்லாச விடுதிகள் அமைந்திருக்கின்றன. ஸ்டேகேஷன் (Staycation) என்று இந்த தசாப்தத்தில் அகராதிகளில் இடம் பெற்ற சொல் குறிக்கும் வெளியூர்களுக்கு செல்லாமல் உள்ளூரிலேயே நாட்களை செலவிடும் விடுமுறை இப்பகுதிகளில் சிங்கப்பூரர்களிடையே மிகவும் பிரபலம்.  அதற்கான மனநிலையையும் சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தருகிறது இந்த கடற்கரைப் பகுதி.

இந்தச் சாங்கி கடற்கரைக்கு அருகே அமைந்த ராமர் கோவில் அருகே இறங்கி எனது காலை நடையைத் துவக்கினேன். மரத்தடியில் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்த இந்த ராமர் கோவிலை எடுத்து ஆலயமாகக் கட்டியவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய ராம் நாயுடு எனும் இந்தியர். இக்கோவிலில் புத்தருக்கும், குவான் யின் (ஆர்ச்சரட் சாலை சியான் டெக் ட்ங் ஆலயத்தில் இருக்கும் அதே கருணையின் தேவி) எனப்படும் சீன தெய்வத்துக்கும் சன்னதிகள் இருக்கின்றன. பல சீனர்களும் இங்கு வழிபட வருகிறார்கள்.

ஸ்ரீ ராமர் கோவில்

நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் வீண் என்று நொடிமுள் போல விடாது ஓடும் சிங்கப்பூர் வாழ்வில் இருந்து விலகி சற்றே சோம்பல் பூசிய பகுதியாக இதைப் பார்க்க முடிகிறது. வீட்டருகே உள்ள கிழக்கு கடற்கரை சென்றால் கூட கைக்கடிகாரத்தைப் பார்த்த படி, மணித்துளிகளைக் கணக்கிடும் செயலிகளை அணிந்தபடி கடற்கரையில் நடப்போரையே அதிகம் காண முடியும். காலை ஏழு மணிக்கு இப்பகுதி எங்கும் அமைதியில் தோய்ந்திருக்கிறது. கடல் இன்னும் கண்ணில் படவில்லை. பூங்காவாகத் தெரிந்த ஒரு பகுதியை நோக்கி அதில் தெரிந்த சிங்கப்பூர் நெய்தல் நில அடையாளங்களை (மெலிந்த தென்னைகள், சீரான நடைபாதை, அங்சானா மரங்கள்) கண்ணில் கண்டு அதை நோக்கி நடந்து சென்றேன்.  

சாங்கி முனை படகுத்துறைக்கான(Changi Point Ferry Terminal) வழிக்குறிப்புகள் ஆங்காங்கே கண்ணில்பட்டன. நான் நடந்து சென்ற இடத்தில் இருந்து கரை ஒரு நீண்ட வாளென  கடலுக்குள் சிறிது தூரம் நீண்டு சென்றது.  அதில் சில இளம் இயல்வாகையும் வேங்கை மரங்களும் நிழல் படிந்த இருக்கைகளில் ஒரு பெண்ணும் அவளது நாய்க்குட்டியும் தவிர யாருமில்லை. 

சாங்கி முனை


மறுபுறம் விலகிச் சென்ற ஒரு பாலத்தைக் கடந்து, டீசல் வாடை நிறைந்த படகுத்துறையின் கட்டிடத்தை சுற்றிக்கொண்டு,  சாங்கி முனை கடற்கரை நடைவழிக்கு(Changi Point Coastal Walk) வந்து சேர்ந்தேன். இங்கிருந்து எதிர்க்கரையெனத் தெரியும் புலாவ் உபின் தீவுக்கு படகுகளை இயக்கும் சிறிய படகுத்துறை இது.  மலேசியத் தீவுகளுக்கும் படகுகள் இங்கிருந்து செல்லும், ஆனால் கொரோனா காலம் ஆதலால் கூட்டம் அதிகமில்லை.

சாங்கி முனை நடை என்பது கடற்கரையோரமாகவே செல்லும் ஒரு இரண்டு கிலோமீட்டர் நடை வழி. அதையே ஆறு பகுதிகளாக பிரித்து அடையாளமிட்டு வைத்திருக்கிறார்கள். தொடக்கத்தில் ஒரு சிறிய நிழற்கூரை மண்டபத்தில் நின்று அப்பகுதியின் வரைபடத்தைப் பார்த்துகொண்டேன். சிங்கையில் எங்கேயும் வழி தவற ஆசைப்பட்டால் கூட தொலைந்து போக வழியே கிடையாது. நான் பார்த்துக்கொண்டது, நான் காணவேண்டிய மரங்கள் நிற்கும் பகுதிக்கு எவ்வழியே செல்லவேண்டும் என்பதைத்தான். 



இந்த மண்டபத்துக்கு அருகே ஒரு புறம் கடல் லெட்டூஸ் (Scaevola taccada) எனப்படும் ஹவாய் தீவுகளைச் சேர்ந்த தாவரங்கள் நின்று கொண்டிருந்தன.  இதன் பூக்கள் பாதிமலர் போல இருக்கும் என இணையத்தில் பார்த்திருந்தேன் (மலர்ந்தும் மலராத பாதிமலர் போல அல்ல,மலர்ந்தும் பாதிமலர்;  ஒரு மலரை பாதியாக வெட்டியது போல), ஆனால் அப்போது அந்தப் பாதியும் மலரவில்லை. 


Sea Lettuce - Scaevola taccada
மலர்ந்தும் பாதிமலர் 



இடப்புறம் ஒரு ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடம் - அரசு சேவை சங்கம் (Civil Service Club), அதன் பின்புறம் வேலைகளுக்கு அப்பால் தெரிந்தது.  நீண்ட பலகைகள் பதித்த பாதை (Boardwalk) இறங்கியும் எறியும் சென்றது. கடற்காற்றில் உப்புபாரித்து கருவண்ணம் ஏற்ற பலகைகள். ஊடே ஓடி மறையும் நிறம் மாறும் பல்லிகள். வலப்புறத்தில் கடல் இளநீல வண்ணம் முதல் எழுந்து வரும் கதிர் ஒளியில் கண்கூசும் வெண்மை வரை பலவண்ணங்களிலாகத் தெரிந்தது.   

Boardwalk


வடக்கு நோக்கி நடந்து கொண்டிருந்த பலகைப் பாதை ஓரிடத்தில் மேற்கு நோக்கி திரும்பியது. அத் திருப்பத்தில் பல நாரைகள் கழுத்தை நீட்டிக் கொண்டு நிற்பது போல கடலில் சிறுபடகுகள் கூட்டம். சாங்கி படகோட்டும் சங்கம்(Changi Sailing Club) அருகே இருக்கிறது என நினைவு படுத்தியது அக்கடல் பறவைகள். 


Changi Sailing Club


பாதையை ஒட்டி சிறிதளவே நீண்டிருந்த மணலில் பச்சை நிற வண்ணத்துப்பூச்சி சிறகு குவித்து விரிக்கத் தயாரான நிலையில் அமர்ந்திருப்பது போல இதய வடிவ இலைகளும் ஊடே தலை நிமிர்த்தி சிரிக்கும் ஊதா நிற மலர்களும் அந்த மணல் வெயிலில் விரிந்து கிடந்த காலை வெயிலை மிக அழகாக்கின. பெயர் வைத்தவர்களுக்கு நல்ல ரசனை, பெயரும் அதற்கேற்ற பெயர்தான் (Beach morning glory) , மணற்பாங்கான கடலோரங்களில் படர்ந்து வளரும் களை போன்ற தாவரம் இது. ஊடாக சிறு பட்டுக் குஞ்சம் போலத் தெரிந்த தொட்டாற்சிணுங்கி மலர்கள்.

தொட்டாற்சிணுங்கி மலர்கள்

Beach morning glory


சாங்கி கோல்ப் கிளப்பிற்கு பின்புறம் நடை தொடர்ந்தது. அப்பகுதி ஒரு பழங்காலத்து  கிராமம் போல இருந்தது. வளைந்த தென்னை மரங்களோடு, ஒரு புறம் சரிந்தேறிய மேட்டு நிலமெங்கும் நிறைந்த பசுமையோடு மறுபுறம் பசிய நிழல்கள் கலந்த நீலத்தில் வெள்ளை அலைக்கோடிட்டது. 


காற்றில் உப்பு மனமும், கடற்பறவைகளின் சிறகடிப்பும், அலைகளின் மெல்லிய சிலம்பும் ஒலியும் அன்றி வேறேதுமில்லை. தரையில் சில அடிகள் தள்ளி நிற்பது போன்ற பாவனையில் நின்ற இரு தென்னைகள் மேலே கைகோர்த்துக்கொண்டன. 



அங்கே கடற்கரையெங்கும் கல்பாவியிருந்தது. மக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்கும் பொருட்டு வேலியும் போடப்பட்டிருக்கிறது.   ஆனால் கடல் கை மீறி கரையைத் தொட்டுக்கொண்டே தான் இருக்கிறது. கிழக்கு கடற்கரையில் நாம் முன்னர் பார்த்த எட்டு திசைகளிலும் விரிந்த கடல் செம்பருத்தி (Sea hibiscus - Talipariti tiliaceum) இங்கு சற்றே பெரிய மரமாக இருந்தது.  ஓங்கி வளர்ந்த தென்னையை எட்டிப் பிடிக்க முயல்வது போல கொடிகள் பற்றிப் படர்ந்தேறி தென்னையை சட்டையைப் பிடித்து மிரட்டிக் கொண்டிருந்தன. 



ஒற்றைக் கால் மடித்து நிற்கும் நாரை போல ஒரு படகு ஒற்றைக் காலில் தவமிருந்தது. 



நிலத்தில் நிற்கும் படகுக்குப் போட்டியாக கடல் நீரில் நின்றது ஒரு மரம். உப்பு நீரில்  நின்ற அக்கடல் மரம் பாதி வெயிலும் பாதி நிழலுமாக பாதி மணலும் பாதி கடலுமாக ஹிரண்ய வரம் போல நின்றது. Sonneratia alba என்றது இணையம், சதுப்பு நிலத் தாவரமாம்.  

Sonneratia alba

அங்கே கடலுக்குள் மரப்பாலங்கள் நீண்டு சென்று கடல் மீது கட்டப்பட்ட குடில்கள் வரை நீண்டன.  கதிர்மறைவைக் காணும் அந்த நடைவழிக்கு இப்போது அனுமதி இல்லை. 

Sunset Point

எனவே இடப்புறம் உயர்ந்திருந்த குன்றின் மீது சென்ற படிகள் வழியே மேலேறத் தொடங்கினேன். சில்வண்டின் சத்தமும் இன்னபிற சிறு பூச்சிகளின் ஒலியும் பகலை இரவு போல செவியுணரச் செய்தது.மரங்களின் நடுவே செல்லும் வழி ஏறிக் கொண்டே சென்றது. பச்சை சுவற்றில் சிறு சிறு இடுக்குகளில் கடல் எட்டிப் பார்த்தது. ஒரு குன்றை முழுமையாக ஏறி மறுபுறம் கடந்து இறங்கியது பாதை. 



இந்த இடத்தில் சாங்கி முனை கடற்கரை நடைவழியும் அதன் ஒரு பகுதியான பலகைப் பாதையும் முடிவுக்கு வந்தன.

அருகே இணையாகச் சென்ற ஒரு வாகனங்கள் செல்லும் பாதை மரவேலிக்கு அப்பால் கண்ணில்பட்டது. உல்லாச மாளிகைகளில் ஒன்றின் வாயில் தெரியாத வண்ணம் வேலிகாக்கும் செடிகள் அடர்ந்து நின்றன. சங்குபுஷ்பமும், மிக்கி மவுஸ் மலர் எனப்படும் ஒரு செடியும், வெண்மலரில் ஒரு துளி பசுமஞ்சள் புல்லிவட்டம் கொண்ட ஒரு மலரும் என ஏதேதோ செடிகள் அடர்ந்த வேலிகளில் இடையிடையே கிடைத்த சிறு பிளவுகளில் தலைநீட்டிக்கொண்டிருந்தன. காடாக இருந்த கடந்தகாலக் கனவுகளின் எச்சம் அத்துமீறும் இக்கொடிகளில் மிச்சமிருக்கிறது. 

அத்துமீறியவர்களுக்கு ஏற்படும் கதியைக் காலம்காலமாக கண்ட மண் சாங்கி. அதன் வடுக்களையும் உலராத உதிரத்தையும் நாளை பார்க்கலாம்.

உதவிக் குறிப்புகள்:

https://en.wikipedia.org/wiki/Manuel_Godinho_de_Er%C3%A9dia

https://www.straitstimes.com/singapore/what-are-the-rare-maps-on-display-at-on-paper-singapore-before-1867

முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 15 - பணத்தோட்டச் சாலை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 17 - நெய்தல் சாட்சி

1 comment:

  1. ஓங்கி வளர்ந்த தென்னையை எட்டிப் பிடிக்க முயல்வது போல கொடிகள் பற்றிப் படர்ந்தேறி தென்னையை சட்டையைப் பிடித்து மிரட்டிக் கொண்டிருந்தன. அருமையான வரி

    ReplyDelete