Friday, February 19, 2021

சிங்கை குறிப்புகள் - 12 - பசுமையின் வரலாறு

கடோங் வானவில் மரம் பார்த்த பிறகு இம்மண்ணின் மற்ற பாரம்பரிய மரங்களை பார்க்கும் ஆவல் எழவே, அந்தத் தேடல் இங்கு கொண்டு வந்து சேர்த்தது.  ஒரு காலை நடைக்கு ஃபோர்ட் கேணிங் குன்று கால்வசமாகியது. சுழன்று ஏறும் பாதைகளில் ஏறி பத்து நிமிட நடையில் கோட்டையின் முகப்பை சென்றடைந்தேன். இடப்புறம் தெரிந்த கோதிக் (Gothic) வாயில் வழியாக உள் நுழைந்ததும் ஒரு கல்லறைத்தோட்டம் கண்ணில் பட்டது.

கோதிக் நுழைவாயில்


சற்று முன்னே செல்ல மரங்கள் கரையிட்ட மிகப் பெரிய மைதானமும் நடுப்புறம் உயர்ந்த மேட்டில், மேலே 
சிவப்பு க்ரீம் தடவிய வெள்ளை கேக் நேர்த்தியாக வெட்டப்பட்டு ஒரு தட்டில் உண்ணப்படாமல் இருந்தது போலத் தெரிந்த மையக்கட்டிடமும் காலை ஒளியில் மின்னின. 

ஃபோர்ட் கேணிங் சென்டர்


அதை சுற்றிக்கொண்டு எனது பசுமை நடையைத் துவங்கினேன். கேக் மாளிகையின்(இன்றைய ஃபோர்ட் கேணிங் சென்டர்) இடப்புறம் நகரை நோக்கிய வண்ணம் ஒரு 9-பவுண்டு குண்டுகளை எறியக்கூடிய பீரங்கி நின்றது. அதன் வாழ்வு முழுவதும்  ஒரு அலங்காரப் பொருளாகவே கேணிங் கோட்டையின் நுழைவுவாயிலில் நின்றிருக்கிறது.  நல்லதோர் பீரங்கி செய்தே நலம்பெற புழுதியில் நிறுத்திவிட்டார்! 

 9-பவுண்டு பீரங்கி 


மறுபுறத்தில் குன்றெனக்குவிந்த மாபெரும் (Monstera மற்றும் Fern) இலைத்தாவரங்களுக்கு நடுவே ரகசியப் பாதையான Sally port ன் நுழைவாயில் மறைந்திருக்கிறது. அந்த வழியை மறைக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்தப் பச்சைத்திரை பேரழகாயிருந்தது. யானைக்காது போலப் பெரிதாயிருந்த ஒவ்வொரு இலையும் மழலையர் வகுப்புக்கு நடனம் பயிற்றுவித்தது போல ஆளுக்கொரு திசையில் தலையாட்டிக் கொண்டிருந்தன. ஏதேனும் எதிர்பாராத முற்றுகை அல்லது தாக்குதல் நேர்ந்தால் எதிரியின் கண்ணில் படாமல் கோட்டையிலிருந்து வெளியேறி எதிரிகளை எதிர்கொள்ள இந்த Sally port உதவுகிறது. நான் முற்றுகையிட வந்திருந்தால் இந்த Swiss cheese plant இலையாட்டத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருக்கையில் எளிதாகப் பிடித்திருப்பார்கள். பீரங்கியைவிட நல்ல அரண்.


Sally Port among Ferns and Monstera

இந்த இடம் மைய மாளிகையின் பின்புறம். இதற்குப் பின்னால்தான் நான் தேடி வந்த மரங்கள் நிற்கின்றன. மண்ணின் பாரம்பரிய மரங்களுக்கும்,  ஒரு வரலாற்றுச் சிறப்பும் இராணுவ முக்கியத்துவமும் கொண்ட கோட்டைக்குமான தொடர்பு என்ன என்றால் இதுவே சிங்கையின் முதல் தாவரவியல் பூங்காவாக இருந்த இடம். 1859லேயே ஃபோர்ட் கேணிங்கில் இருந்து வேறு பரந்த இடத்திற்கு தாவரவியல் பூங்கா இடம் மாறி விட்டது

1822-ல் இருபது ஹெக்டேர் பரப்பளவில் இந்தக் குன்றை தாவரவியல் பூங்காவாக உருவாக்கியவர் சர் ராஃபில்ஸ்.தொழில்முறையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவரும், கல்கத்தா தாவரவியல் பூங்காவைத் தொடங்கியவருமாகிய நதேனியல் வாலிச் (Nathaniel Wallich)தான் இங்கும் இந்தத் தாவரிவியல் பூங்காவுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது பெயர் பல தாவர வகைகளுக்கு இடப்பட்டிருக்கிறது.
Nathaniel Wallich

Stamford Raffles



மையக் கட்டிடம் சூரிய ஒளியைத் தடுத்து விட, பின்புற நிழல் சற்றே குளிர்ந்து மழையில் நனைந்த பின்னிரவை இன்னும் அங்கே மிச்சம் வைத்திருந்தது. அங்கிருந்து இருபது படிகள் மேலேறி ஒரு மேடிட்ட தளம் போலிருந்த பகுதிகளில் நான் தேடி வந்த பாரம்பரிய மரங்களை அடையாளம் காண முற்பட்டேன். ஒவ்வொரு மரத்துக்கும் அதன் பொதுப் பெயர், தாவரவியல் பெயர் மற்றும் அம்மரம் உலகின் எப்பகுதியைச் சார்ந்தது போன்ற தகவல்களை ஒவ்வொரு மரத்திலும் அழகாகப் பொருத்தியிருக்கிறார்கள்.  குறிப்பாக பாரம்பரிய மரம் என அடையாளம் காணப்பட்டவை  மேலதிக தகவல்களோடு அருகிலேயே குறிப்புப் பலகைகளோடு அவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு எளிதாக வைக்கப்பட்டிருக்கின்றன.

அது ஒரு சிறிய குன்றின் உச்சிப்பரப்பு. உயரத்தில் சமதளமான பீடபூமி போல இருக்கும் அப்பகுதி முழுவதும் பசுமையைத் தவிர வேறெதுவும் இல்லை. தரை முழுவதும் புல்விரிப்பு. ஆங்காங்கே அப்புல்தரையில் வெயில் புள்ளி வைக்கும் பெருமரங்கள்; அவற்றை இணைக்க முற்பட்டு அவ்வப்போது ஓடும் அணில்கள், முதுகில் கோடில்லாதவை. உயரமான இடங்களுக்கே உரிய காற்றின் வேகம், காலை வேளையின் குளுமை அந்த வெயிலை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தது.

முதலில் வலப்புறம் நின்ற மரத்தைப் பார்த்ததும் சில வருடங்களுக்கு முன், பெங்களூர் வீட்டின் உட்புற மரவேலைகளுக்கென மரத்தகடுகளை(veneer) தேர்ந்தெடுத்தது நினைவு வந்தது. மரங்களில் இயற்கை வரைந்து கொடுக்கும் அத்தனை விதமான வரைகலை வடிவங்களை அப்போதுதான் அறிமுகம் செய்து கொண்டிருந்தேன். அவற்றில் எனக்கு மிகப் பிடித்த ஒரு வடிவநேர்த்தி அந்த மரத்தின் வடிவில் நின்றது. பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட சிறுத்தை மரம் (Brazillian Ironwood tree- leopard tree - Libidibia ferrea) வெண்மையும், மஞ்சளும் கலந்து மிக நளினமான வசீகரமான மரமாக எனக்குத் தோன்றியது. இசை நிரம்பிய மரமும் கூட. வீணை செய்ய பலாமரம் தேர்ந்தெடுக்கப்படுவது போல இது  கிட்டார் செய்யப் பயன்படுகிறது. கிட்டாரின் விரற்பலகைப் பகுதியும், நரம்புகளை கிடார் உடலோடு இணைக்கும் பாலமும் இம்மரத்தில் செய்வது சிறப்பென்கிறார்கள். 

வரைகலை வடிவங்கள்


Libidibia ferrea

அதன் அருகிலேயே இந்தியாவில் நமக்கு அறிமுகமாகியிருக்கும் நாகலிங்க மரம் நிற்கிறது. லிங்க வடிவத்துக்கு நாகம் பத்தி விரித்துக் குடை பிடித்தது போன்ற மிக அழகிய மலர் கொண்ட இம்மரத்தின் பொதுப்பெயர் அச்சுறுத்துவதாக இருக்கிறது  (Cannonball tree - Couroupita guianensis).  நமக்கு சிவம் நினைவுக்கு  வர, அவர்கட்கு சவமாக்க நினைவு வந்தது போலும். இளஞ்செந்நிற மலர்களால்  உடல்மறைந்த அடிமரம் அப்பகுதியை அதன் நறுமணத்தால் கிறங்கச் செய்து கொண்டிருந்தது. ஒரு நாளில் ஆயிரம் மலர்கள் கூட பூக்கக்கூடிய இம்மரத்தின் காய்களே இதற்கு வெடிகுண்டின் பெயர் தருகின்றன.



நாகலிங்க மரம்

நாகலிங்கக் காய்


அங்கிருந்து புல்விரிப்பில் கால் வைக்காமல் விளிம்பிலேயே நடந்து சென்றால் பாதை முடிவில் நிற்கும் மரத்துக்கு "சாங்கி மரம்" என்ற பெயரும் உண்டு. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 50 அடிக்கும் உயரமான ஒரு மரம் சாங்கி (Changi) கடற்கரையில் நின்றதாம்.  இத்தீவை எதிரிகளின் குண்டுகளுக்கு எளிதில் அடையாளம் காட்டிவிடுமென அதை வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள். (Sepetir - Sindora wallichii). நம்ம வாலிச் பெயர் கொண்ட மரம்!!
மிக அதிக உயரத்தில் தழைக் கூரை விரித்து நின்றது இம்மரம். 

அதன் அருகிலேயே குடை போல விரிந்து நின்ற கேடாவுங் மரமும்(Kedawung - Parkia timoriana) வெயிலை உள்நுழைய விடாது தாங்கிப் பிடிந்திருந்தது இதன் தழைமுடி. இந்தியாவின் அசாம், மணிப்பூர் பகுதிகளில், கோரியால் என்றழைக்கப்படும் இம்மரங்கள், அசாமின் மெய்டெய் (Meitei) பழங்குடியினர் வீடுகளில் வீட்டுப் பின்புறத்தை அதிகம் அலங்கரிப்பவை இவை. தாய்லாந்து இந்தோனேசியாவில் இதன் பயறை வறுத்து உண்கிறார்கள். 

மூங்கில் கழிகளை ஓரிடத்தில் நெருக்கமாக நிறுத்தி வைத்தது போன்ற உடல் கொண்ட அடுத்த மரம், ஏனோ "அழும் அத்தி"(Weeping Fig) என்றழைக்கப்படுகிறது. இந்த வெள்ளால் மரங்கள் இந்தியா முதல் சீனா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா வரை எங்கும் வளர்பவை, தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் மரம் என்றே அழைக்கப்படுகிறது(Ficus benjamina). இவை மனிதருக்கும் மண் மறைந்தோர் உலகுக்குமான தொடர்புப் பாலமாக இந்தோனேசியாவில் கருதுகிறார்கள். அந்த சாம்பல் நிறமும், சிறு குழாய்கள் போலத் தொங்கித் தரைதொடுவது போன்ற விழுதுகளும் அப்படித்தான் தெரிகிறதோ!! நான்கு இலைகளைத் தலையில் உதிர்த்து ஆமாம் என்றது மரம். 
அழும் அத்தி- Weeping Fig - Ficus benjamina



கதிர் மாளிகைக்கு மேலே ஏறிவிட்டது. நடுவே இருந்த ஓய்வுநாற்காலியில், காலைநடை வந்து இளைப்பாறிக் கொண்டிருந்த ஐரோப்பியனின் காது மடல்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொண்டோம், அழகிய காலை என்றார்.  அந்த மென்குளிரும் இளஞ்சூரியனும் பசிய மரங்களும் ஆங்காங்கே சிலம்பிக் கொண்டிருந்த சிட்டுக் குருவிகளும் நின்று கொண்டிருந்த அந்தப் பொழுதை வேறெந்தவொரு கூடுதல் சொல்லும் கலைத்துவிடும் .

அவருக்குப் பின்புறமிருந்த ஒரு கட்டிடத்தின் பெயர் கவனத்தை ஈர்த்தது.  OMSQ - Old Married Soldiers Quarters - வயதான பழைய திருமணமான படைவீரர் விடுதி, வயதான காலத்தில் திருமணமான படைவீரர் விடுதி, பழைய திருமணமான படைவீரர் விடுதி,  எப்படி மொழிபெயர்த்தாலும் சற்று இடித்தது. இப்பெயர் கொண்ட சிறு கட்டிடத்தில் திருமணமான ஆங்கிலேயப் படைவீரர்கள் குடியமர்த்தப்பட்டதாகக் குறிப்பு சொல்கிறது. சிறிய கட்டிடம்தான், திருமணமான ஆங்கிலேயப் படைவீரர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையா, படைவீரர்களுக்குப் பெண் கிடைப்பது அவ்வளவு பெரிய விஷயமா, அல்லது இது ஒரு தனிச் சலுகையா, இதன் பின்னணி என்னவென்று தேடவேண்டும்.



இதை ஒட்டியே கம்பீரமான மேற்கு நோக்கிய கோட்டை வாயில் இருக்கிறது. அதன் அருகிலயே மிகப்பெரிய தூங்குமூஞ்சிமரம் (Raintree). அதன் உடலெங்கும் பசிய ஒட்டிவளரும் தாவரங்கள். அது அந்தக் கோட்டையின் துவாரபால மரம் என்றெண்ணிக் கொண்டேன், அவ்வளவு பெரிய மரம். ஆனால் தூங்குமூஞ்சி துவாரபாலன். 
கோட்டையின் மேற்கு நுழைவாயில்

தூங்குமூஞ்சிமரம்


ஒவ்வொரு மரத்தையும் நின்று பார்த்து ரசித்தும் குறிப்புகள் எடுத்துக்கொண்டும் மேலதிகமாக இணையத்தில் வாசித்தும், தோழி லோகமாதேவியோடு வாட்சப்பில் தாவரவியல் சிறப்புகள் குறித்து உரையாடிக் கொண்டே படங்களைப் பகிர்ந்து கொண்டும் அடுத்த தளத்துக்குச் சென்றேன்.

அடுத்து நின்ற பாரம்பரிய மரமான கபோக் மரம் (Kapok - Ceiba pentandra) உடலெங்கும் கூர் முட்கள் நிறைந்தது. இலைகளும் காய்களும் இலவம் பஞ்சு போலத் தெரிகிறதே எனக்கேட்டதற்கு அதுதான் என்று ஆமோதித்து அதற்கு பீமமரம் என்ற பெயர்க்காரணம் தந்த ஒரு மகாபாரத நாட்டார் கதையையும் தேவி பகிர்ந்து கொண்டார். காட்டில் பீமன் திரௌபதியை ஒரு முறை கால் அழுத்திவிடும்படி கூறவே, அவளும் கால்பிடித்து விடுகிறாள். அவனோ தன் கால்களை மடித்தமர்ந்து இந்த மரத்தின் கட்டைகளையே கால்கள் என அவளை ஏமாற்றியதை பிறகு சொல்கிறான். ஊடல் கொண்ட திரௌபதி இனி யாரும் இம்மரத்தில் கைவைக்க இயலா வண்ணம் முள் முளைக்கட்டும் என்று மரத்துக்கு சாபம் தந்துவிடவே இம்மரம் இப்படி உடலெங்கும் முள் கொண்டதாம். பாவம் ஓரிடம் பழி ஓரிடம்! பீமனிடம் கோபம் கொண்டாலும் மரத்தைத் தானே சபிக்க முடியும்! ஐவரில் அவளிடம் அன்பாயிருக்கும் அவனுடலையும் முள்ளாக்கினால் திரௌபதி என்ன செய்வாள்!  இம்மரத்தின் முட்களே இதற்கு ஒரு தனியழகைத் தருகின்றன. வியட்நாம் மொழியில் பாங்கோன்(Bong gon) என்றழைக்கப்படும் இம்மரத்தின் பெயராலேயே சைகோன்(Saigon - Ho Chin Minh நகரத்தின் பழைய பெயர்) அழைக்கப்பட்டிருக்கிறது.

Kapok - Ceiba pentandra




அடுத்ததாக முண்டும் முடிச்சுமாக நின்ற அடி பெருத்த மரத்தின் பெயர் மெட்ராஸ் முள்மரம் (Madras Thorn - Pithecellobium dulce). வெகு ஆர்வமாகப் படம்பிடித்த பிறகு அண்ணாந்து பார்த்தால் நமது கொடுக்காய்ப்புளி மரம். சிறுவயதில் தொண்டை அடைத்துக் கொள்வதையும் பொருட்படுத்தாமல் எத்தனையோ கொடுக்காய்புளிகளைத் தின்றிருப்போம். வீட்டுக்கு எதிரே இருந்த மனையின் ஓரத்தில் நின்ற கொடுக்காய்ப்புளி மரத்தின் இலைகளை ஆடுகள் எட்டிப் பறித்து உண்ண முயலும் காட்சி மனதில் வந்தது. அந்தத் துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையை இன்றும் நா தேடுகிறது.
கொடுக்காய்ப்புளி 


நமது கம்போங் க்ளாமுக்கு பெயர் கொடுத்த காயாப்புடை மரம் (Melaleuca cajuputi) நின்றது. இதை அடுத்து சில யட்சிப்பாலை மரங்களும் (Blackboard tree/Devil tree - Alstonia scholaris), குறும்பலாவைப் போல காய்கள் கொண்ட ஒரு பாதுகாக்கப்பட்ட மரமான Terap (Artocarpus elasticus) மரமும் நின்றன.

Terap - ஒரு தகவல் பலகை

பாதை குன்றின் உச்சியில் இருந்து சீராக இறங்கியபடி சென்றது. குன்றின் பின்புறச் சரிவில் நின்று கொண்டிருந்தேன். இந்தப் பக்கம் இறங்கிச் சென்றால் டாங்க் சாலை தெண்டாயுதபாணி கோவில் அருகில் சென்று சேரும். மேலும் ஒரு வளைவு திரும்பியதும் ஆர்ச்சர்ட் சாலையை ஒட்டிய கட்டிடங்கள் கண்ணில் பட்டன. 



மரங்களைப் பார்த்துக் கொண்டே ஒரு சரிவில் இறங்கியதும் எதிர்ப்பட்ட காட்சியில் சற்றுத் திகைத்துப் போனேன். இப்போது எனக்கு வலப்புறம் இருந்த குன்றின் மேற்சரிவில் நின்ற ஆலமரத்தின் வேர்க்குவைக்கு நேர் கீழாக இட்டு வந்திருந்தது பாதை. நாம் இந்தியாவில் பார்த்திருக்கக்கூடிய சில மிகப் பெரிய ஆலமரங்களை விட அளவில் சிறியதுதான். ஆனால் ஆலமரத்தை அப்படி ஒரு கோணத்தில் அதுவரை பார்த்ததில்லை. தரையில் ஊரும் எறும்பு போன்ற சிற்றுயிர் போல உணரச் செய்தது அப்பேருரு.  அனைத்து விழுதுகளும் தலைக்கு மிக மேலே தொங்கிக் கொண்டிருக்க மரத்தின் காலடியில் மிகச் சிறிய உயிரியாக சில நேரம் அமர்ந்திருந்தேன். தன்னுள் ஆழ்வதற்கு ஏற்ற இடம். 
Burmese Banyan



வெயில் நன்கு ஏறிவிட்டதென குன்றின் பின்புறம் உள்ள கட்டிடங்களின் கண்கூசும் வெளிச்சம் காட்டியது.  ஆனால் இம்மரத்தொகைகளுக்குள் ஏதும் தெரியவில்லை.

அதன் பிறகு இம்மலையில் இருந்த பதினான்காம் நூற்றாண்டின் மலாய் குடியிருப்பை நினைவூட்டும் ஒரு சிறிய நீர்த்தடாகம்  இருந்தது. அதைக் கடந்து அழகிய சரங்களாக மஞ்சள் நிற மலர்கள் தொங்கிய மரத்தை வந்தடைந்தேன். இதன் மரப்பட்டையை உலர்த்திப் பொடி செய்து குளங்களில் கலந்து மீன்களுக்கு தற்காலிக மயக்கம் ஏற்படுத்தி மீன்களைப் பிடிப்பார்களாம். மிக லேசான விஷத்தன்மை கொண்ட, சூழலுக்கோ நீருக்கோ ஊறு விளைவிக்காத இம்முறையால் பெயர் பெற்ற மீன் விஷ (Fish poison) மரம் (Barringtonia racemosa).
Fish poison Tree



முடிவற்றவை போல காட்சி மயக்கு தந்த படிகளின் வழியாக மலையை மறுபுறம் சுற்றி இறங்கி முன்புறம் வந்து கொண்டிருந்தேன். அருகிலேயே எங்கோ இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்குப் பெயர் பெற்ற சுழல் படிக்கட்டுகள் இருக்கின்றன. அத்தனை இயற்கையை உள்நிறைத்துக் கொண்டபின் அதைத் தேடிச் செல்ல அன்று ஆர்வமிருக்கவில்லை.

இணையத்திலிருந்து


ஒரு முழு சுற்று முடிந்து மீண்டும் கல்லறைத் தோட்டத்தின் வாயிலுக்கு வந்து சேர்ந்துவிட்டேன், புனரபி மரணம். அது 1822 முதல் 1865 வரை கல்லறைத் தோட்டமாக இருந்த இடம்.



மிகப் பெரிய மைதானத்தின் வாயிலில் நின்ற ரோஸ்வுட் வகையைச் சேர்ந்த மரமும் பாரம்பரிய மரம் என்ற பலகையைக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தேன். உள்ளே நுழையும்போது கேக் மீதல்லவா கவனம் சென்றது. இரண்டு மணிநேரமாக இலை, மரம், பெயர் என்றே தேடிய கண்களில் இப்போதுதான் இது பார்வையில் படுகிறது. அந்த மரத்தைச் சுற்றி ஏதோ பணிகள் நடைபெறுவதால் அருகே செல்ல முடியவில்லை.

மீண்டும் சில வானவில் மரங்கள் கண்ணில் பட்டன, ஆனால் இளம்பச்சை நிறமே அதிகம் கொண்ட இளமையான மரங்கள்.
இத்துடன் நடையை முடித்துக் கொள்ள எண்ணி விலகும் போது,யாரோ ஈரமுடியில் சீப்பால் அழுந்தி வாரியது போல, சீராக உடல் முழுதும் வரிகள் கொண்ட, ஒரு மரம் (Podocarpus rumphii) நின்றது. மரத்துக்கு திருச்செங்கோடு என நானாக நினைவுப் பெயரிட்டுக்கொண்டேன்.


இள வானவில்


திருச்செங்கோட்டு மரம்



வீடு வரும் வழியிலும் அனைத்து மரங்களுக்கும் பெயர் தேட ஆரம்பித்திருந்தன கண்கள். இவற்றை மீண்டும் சில முறை சென்று பார்த்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போதிருக்கும் தாவரவியல் பூங்கா மீண்டும் செல்ல வேண்டும் என்றெல்லாம் மனக்குறிப்புகள் செய்து கொண்டேன்.

வாணிபம் செய்ய வந்தவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், ஆட்சி செய்ய வநதவர் வரலாறு, புவியியல், தாவரம், உயிர்த்தொகை, தொல்லியல் என அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். அறுவை சிகிச்சை செய்ய வந்தவர் தாவரவியலுக்கு எண்ணற்ற பங்களிப்புகள் ஆற்றியிருக்கிறார், அருங்காட்சியகங்களை ஒருக்கியிருக்கிறார். மாமனிதர்கள் தங்களுக்குத் தரப்பட்ட ஒற்றைச் சிறு வாழ்வில் பலவற்றை நிகழ்த்திச் சென்றிருக்கிறார்கள். மனது தொடர்ந்து இவர்களது தொழில் தாண்டிய செயல்பாடுகளை, முன்னெடுப்புகளைக் குறித்து எண்ணிக்கொண்டிருந்தது.
வரலாறு என்பது சென்ற காலத்தின் தேங்கிய நினைவு அல்ல, நிகழ்காலத்தை  பிரதிபலிப்பதும், எதிர்காலத்துக்கான ஊக்கத்தையும் லட்சியங்களையும் தரும் ஊற்றாகவும் அதுவே நிற்கிறது. அதற்காகவே வரலாறு சார்ந்த மானுடத்தின் தேடல் என்றும் தொடரும்.

இந்தப் பதிவிலும் வேறு பல குறிப்புகளிலும் இடம்பெறும் தாவரங்களின் உலகை அணுகி அறியும் பார்வையை கூர்மையாக்கி, தொடர்ந்த உரையாடல்களில் பல தாவர வகைகளின் பொதுவில் அறியாத தகவல்களை வழங்கிய பேராசிரியை லோகமாதேவிக்கு இப்பதிவு சமர்ப்பணம். 



2 comments:

  1. Very nicely written and glad to read about knowledge sharing amongst writers.. very healthy precedence

    ReplyDelete
    Replies
    1. Got to learn a lot. With the right teachers, every field can be explored.

      Delete