சிங்கையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் இங்குள்ள கால்வாய்களை, நீர்வலைப் பின்னல்களைப் பார்த்திருக்கக்கூடும். பகற்பொழுதுகளில் மெல்ல சிரித்தபடி ஓடும் நீர், கடலேற்றத்தின் போதும் இரவிலும், இருகரை தொட்டபடி சத்தமின்றி ததும்பியபடி ஓடுவதைப் பார்க்க முடியும். ஒரு பறவைப் பார்வையில் சிங்கையின் நீர்வழிகள் மாபெரும் நீர்க்கோலம் என, நீரிழைகளின் நெசவு எனத் தெரியக்கூடும். வான்நின்று வழங்கி வரும் அனைத்து நீரும் இக்கால்வாய் வழியோடி நீர்த்தேக்கங்களை சென்றடைகின்றன.
கிழக்கு கடற்கரையில் ஒரு மழைநீர் வடிகால் கால்வாய்
இந்நகர் சார்ந்த எனது நினைவுகளில் இந்நீர்வழிகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. நீர் என்பதை அடிப்படைத் தேவை என்ற நிலையைத் தாண்டி சமூக வாழ்வின் ஒரு அங்கமாக, அன்றாடம் மக்கள் கூடும் ஒரு மனமகிழ் கூடுகைத் தலங்களாக, அதன் இன்றியமையாயை சிறுவயது முதலே வாழ்வியலில் கற்றுக்கொள்வதன் வழியாக அதை ஒரு குடிமைப் பண்பாக, வாழ்வு முறையாக மாற்றியதே இந்நாட்டின் வெற்றி.
நகரின் போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் கூட ஆங்காங்கே, இருகரைகளிலும் சீரான விளக்குகள் அமைக்கப்பட்ட நடைபாதைகளோடு தெளிந்த நீரோடும் கால்வாய்களைக் கடந்து செல்ல நேரும். இவை சிங்கையின் நீர் மேலாண்மைக்கு ஒரு சான்று எனலாம்.
இச்சிறு நகரதேசத்தில் பல நீர்நிலைகள், கால்வாய்கள், ஆறுகள், மழைநீர் சேகரிக்கும் குளங்கள், ஏரிகள், நீர்தேக்கங்கள் ஆகியவற்றின் வலைப்பின்னல் மிகுந்த திட்டமிடலோடு அமைக்கப்பட்டிருக்கிறது. மழை நீரை சேகரித்து நீர்நிலைகளுக்கு கொண்டு சேர்க்கும் கால்வாய்கள், கடல் ஏற்றத்தின் போது உட்புகும் கடல்நீரைக் கையாளும் வெள்ள வடிகால் நீர்வழிகள், கழிவு நீரை வெளியேற்றி மைய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நிலத்தடியில் அமைந்த கால்வாய்கள் எனப் பலவகை நீர்வழிகள் இப்பின்னலில் இருக்கின்றன.
நாடு சுதந்திரமடைந்து முதற்கட்ட நடவடிக்கையாக தேசத்தின் உள்கட்டுமானப் பணிகளில் தலையாயதாக நீர் மேலாண்மை முறைமைப் படுத்தப்பட்டிருக்கிறது. 1960-70களில் இவற்றுக்கென அமைக்கப்பட்ட கால்வாய்களை, மேலும் அழகுபடுத்தும் பணியை அடிப்படைத் தேவை சேவைகளை நிர்வகிக்கும் 'பப்ளிக் யுடிலிட்டீஸ் போர்ட்' (PUB) 2006-ல் முன்னெடுத்தது.
இதற்கு முன்னர் 1980-களிலேயே நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் சிங்கையின் நீர்வழிகளைக் கொண்டே நகரை பசுமைப்படுத்தும் அழகிய கனவோடு செயல்படத்துவங்கியது. கழிவுநீர் வடிகால் துறை, குடியிருப்பு வாரியம், பூங்கா மற்றும் தோட்ட வளர்ச்சித் துறை, துறைமுக நிர்வாக ஆணையம், பொதுப்பணித் துறை எனப் பல துறைகளின் பங்களிப்போடு சில தனியார் நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு நகரத்துக்குள் பசுமையை ஒன்றினைக்கும் திட்டத்தில் இறங்கினார்கள்.
புக்கிட் படோக் கால்வாய்
உயர்ந்த இலக்குகள், அழகிய கனவுகள், தொடர்ந்த நேர்மையான செயல்பாடுகள் அற்புதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமே இல்லை. இன்று சிங்கை பூங்காவுக்குள் ஒரு நகரம் (A City within a Garden) என்ற நிலையை அடைந்துவிட்டிருக்கிறது.
PUB இங்கு குடிநீர், கழிவுநீர், மழைவெள்ள நீர் வடிகால், கடல் நீரேற்றத்தின் போது உள்நுழையும் நீர் வடிகால் என அனைத்தையும் நிர்வகிக்கும் அமைப்பு. இந்த ஒருங்கிணைப்பு, ஒட்டுமொத்த நீர்த் திட்டமிடலுக்கு மிகவும் உதவி செய்திருக்கிறது.
உயிர்த்துடிப்புள்ள அழகிய சுத்தமான நீர் என்பதே அவர்களது கனவு. அதற்கு ABC Waters (Active, Beautiful, Clean Waters) எனப் பெயரிட்டு 2001-ல் துவங்கிய இவர்களது பணி இன்று நகரின் பல இடங்களில் பசுமையும் வண்ணமுமாக மிளிரச் செய்திருக்கிறது.
ஒரு நகரளவே கொண்ட நிலப்பரப்பு என்றாலும் நீர்மேலாண்மையைப் பொறுத்தவரை அதை ஆராய மூன்று மண்டலங்களாக பகுத்துக் கொண்டார்கள்.
நகரின் மேற்குப் பகுதியான ஜுராங் போன்ற பகுதிகள் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி; மத்திய கடல்முகப்பில் அமைந்த அலுவலகங்கள், வணிக மையங்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைந்தது மத்தியப் பகுதி; தீவின் கிழக்குப் பகுதி அதிகமும் குடியிருப்பு சார்ந்தது. இவ்விதம் தொழில்மயமான, வணிகமயமான, குடியிருப்பு சார்ந்த என்ற மூன்று விதமான மண்டலங்களில் உள்ள நீர்சேகரிப்பு பகுதிகளை மனதில் கொண்டு, அவற்றின் நில நீர் அமைப்பையும், பயன்பாட்டையும் கணக்கில் எடுத்து ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு மிக விரிவான திட்டமிடல் நடந்திருக்கிறது.
பெடோக் நீர்த்தேக்கம்
வீட்டருகே செல்லும் நீண்ட கால்வாய் குறித்து முன்பொரு நாள் பதிவில் எழுதியிருப்பேன். அதுபோல முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளநீர் வடிகால் கால்வாய்கள் பொதுமக்கள் காலை மாலை நடைகளில் விரும்பி வரும் இடமாக, கான்கீரீட் வனங்களின் இடையே கண்ணுக்கு குளுமையாக, நீர் மேலாண்மையின் முக்கியம் குறித்த அறிதலோடு சமூக வாழ்வை இயல்பாக இணைத்து விட்டிருக்கிறார்கள். 2030க்குள் நூறு அழகிய நீர்வழிகள் என்பது இவர்களது இலட்சியம். பெடாக் நீர்த்தேக்கம்(Bedok Reservoir), மக்ரீச்சி நீர்த்தேக்கம்(MacRitchie Reservoir), லோயர் செலட்டார் நீர்த்தேக்கம்(Lower Selator Reservoir) போன்ற நீர்த்தேக்கங்கள் இந்த நகர வாழ்விலிருந்து முற்றிலும் விலக்கி நம்மை இயற்கையோடு ஒன்றிவிடச் செய்பவை.
இந்த ஒவ்வொரு நீர்த்தேக்கங்களை சுற்றியும் பாதுகாக்கப்பட்டுள்ள சிறு வனங்களும், காட்டு வழிப்பாதைகளும் இயற்கை நடையை, கான் வழிப் பயணத்தைக் கனவு காண்போருக்கு ஓரளவு தணித்துக் கொள்ள உதவும். எனது இமயப் பயணங்களுக்கு முன்னர் பயிற்சி எடுத்துக் கொள்ள இந்த மக்ரீச்சி நீர்த்தேக்கப் பகுதி அல்லது புகித் திமா மலைப்பகுதிக்கே செல்ல வேண்டும். இமயத்தின் உயரத்துக்கும் இதற்கும் எந்த இணைவைத்தலும் இல்லை. ஆனால் சற்று செங்குத்தான மலைப்பாதையில் ஏறும் பயிற்சிக்கு இது உதவியாயிருக்கும்.
பாண்டன் நீர்த்தேக்கம்
இந்த நீர்த்திட்டங்கள் வெறும் அழகுபடுத்துதல் மட்டுமல்ல, கழிவுநீர் வெளியேற்றம், கடல்/மழை/வெள்ள நீர் வடிகால் சூழலை சீர்குலைக்காது தடுக்கும் திட்டங்களுமாகும். உதாரணமாக மாலை நடைகளில், உடற்பயிற்சிக் களங்களோடு இருக்கும் அதே நடைபாதைகள், பெருமழைக்காலத்தில் நீரை சீராக வெளியேற்றி இந்தக் கால்வாய்களில் கொண்டு சேர்த்துவிடும் அமைப்புகளாக விளங்குகின்றன. கால்வாய் கரைகள் முற்றிலும் சிமெண்ட் பூசப்படாது பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏதுவாக படுகைகள் அமைக்கபட்டிருக்கின்றன. பலவிதமான பட்டாம்பூச்சிகளை, நீர்நாரைகளை, நீர்நாய்களையும் கூட இங்கு காண முடியும். நெட்ஃபிளிக்ஸ் தொடரான புவியில் இரவு (Night on earth) தொடரின் ஒரு பகுதியில் சிங்கையின் நீர்வழிகளில் பல்கித் திரியும் நீர்நாய்களை(otters) படம்பிடித்து, சிங்கை எவ்விதம் அதிநவீன நகரவாழ்வில் பல்லுயிர்கள் வாழ ஏதுவான நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது எனக் காட்சிப்படுத்துகிறது.
கழிவுநீர் பூமிக்கடியில் சேகரிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. வெள்ள நீர் அதிவேகமாக வெளியேறும்போது ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்க, நீரின் வேகத்தை மிதப்படுத்தும் அமைப்புகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நிர்மாணிக்கப்பட்ட மரீனா பராஜ்(Marina Barrage) குறித்து மற்றொரு நாள் காணலாம்.
பல துறை நிபுணர்களும் முன்னெடுக்கும் இந்தக் கூட்டுச் செயல்பாட்டை, தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு "நமது நீர்" என்ற தலைப்பில் பல நிலைகளில் அறிமுகப் படுத்துகிறார்கள். இந்த நீர்வழிகளை, நீர்த்தேக்கங்களை பராமரிக்கும் செலவைப் பொது, தனியார் அமைப்புகளோ, தனிநபரோ கூட தத்தெடுத்துக் கொள்ளலாம். இது தவிர புதிய குடியிருப்புக் கட்டுமானங்களில் அடிப்படை விதிகளை ஏற்று நிர்மாணிக்கப் படும் திட்டங்களுக்கு பசுமை அடையாளம் போன்ற சான்றிதழ் வழங்குகிறது PUB.
இவற்றை என் மனதுக்கு உகந்ததாக ஆக்குவது, இந்தக் கால்வாய்களின் கரையில் எண்ணற்ற காலை மாலைகளில் நடந்த நடைகளே.இதன் கரையில் உடற்பயிற்சிப் பலகைகளில் ஆங்காங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதும், நள்ளிரவின் கடற்காற்றை அனுபவித்தபடி பாடல்களைக் கேட்டுக் கொண்டோ, நட்புகளோடு பேசிக்கொண்டோ பல்லாயிரம் காலடிகள் எடுத்து வைக்க சாத்தியப்படுத்தியிருக்கிறது இந்நாடு. எத்தனையோ உரையாடல்களின், நட்பார்ந்த நிமிடங்களின் போது உடனிருந்த இந்நீர்வழிகள், மழைநீரை சேகரித்து நீர்த்தேக்கம் சேர்ப்பது போலவே நினைவின் துளிகளை கோர்த்து மனக்குளத்தில் சேகரித்திருக்கிறது.
முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 9 - கடலோரம்
அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 11 - வரலாற்றுப் பசுமை
This comment has been removed by the author.
ReplyDeleteAmazing. The last line is out of this world. Congratulations on your 100th blog
ReplyDeleteஅழகிய எழுத்தோவியம்..மனவோடை வற்றாமல் தொடர்ந்து பயணிக்கட்டும்
ReplyDelete