Friday, February 26, 2021

சிங்கை குறிப்புகள் - 18 - சிங்கையின் சிறகுகள்

அப்பாவின் பணிநிமித்தம்  பள்ளிநாட்களில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் வருடாவருடம் நிகழ்ந்திருக்கிறது. எனவே ஒரு ஊரை விட்டுப் புறப்படுவதும் பதிய ஊருக்கு சென்றிறங்குவதும் பழகிவிட்ட ஒன்றுதான். ஆனால் அந்த புறப்படும் கணம் எப்போதுமே மன எழுச்சியையே தந்திருக்கிறது. 



சாங்கி விமானநிலையம் - புறப்பாடு

'இனி இங்கில்லை' என்பது போல விடுதலை தருவது வேறொன்றில்லை. பறவைகள் ஒவ்வொன்றும் அச்சொல்லை உதிர்த்துவிட்டே இறகு விரிக்கின்றன. கிளம்பும் இடத்தின் எடையோடு பறக்க இயலாது. மனதுக்கு மிக அணுக்கமான இடத்தை விட்டுக் கிளம்பினாலும் கூட விட்டுச்செல்லும் ஏக்கத்தை விட, முன்னே காத்திருக்கும் அறியா வெளியின் ஈர்ப்பு  இனிது.



ரயில் நிலையங்கள் முன்பு அந்த இனிய மனவெழுச்சியைத் தரும். எத்தனை எத்தனையோ உணர்வுகளை ஆங்காங்கே ஏற்றிக்கொண்டு கதம்பமாய் கட்டி இழுத்துச் செல்லும் ரயில், அனைத்தையும் எங்கெங்கோ இறக்கிவிட்டு பயணத்தைத் தொடரும். வழியில் அதன் ஒவ்வொரு நிறுத்தமும் கூட நிறுத்த இயலாத சக்கரங்களையே, பயணத்தையே நினைவுபடுத்துகிறது. பயணத்துக்குப் பிறகு சேர வேண்டிய இடம் சென்றடைந்த பிறகும், விரையும் மனது பல மணிநேரங்கள் ஓடிக்கொண்டே இருப்பதை உணரமுடியும்.

தரைவழிப்பயணங்களில்  நிலக்காட்சிகள் ஏற்படுத்தும் உணர்வுநிலைகளும், வான்வழிப்பயணத்தின் எல்லையகளற்ற திசைசூழ் வெளி கிளர்த்தும் மனநிலைகளும், நில்லாப் புவி மேல் ஓயா அலைகளில் நீளும் நீர்வழிப் பயணம் தரும் உள்ளோட்டங்களும் வேறு வேறானவை.
பெயரறியா தீவு


முதல் சில வான்வழிப் பயணங்களின் உளக்கிளர்ச்சிகள் அடங்கிய பிறகு, எப்போதுமே விமானப் பயணங்களை மிகவும் விரும்பியே செய்திருக்கிறேன். முதல் காரணம் முன்னர் சொன்னது போல, அந்தத் தரையிலிருந்து மேலெழும் தருணத்தின் ஒரு பரவசம். விமான நிலைய சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் முடிந்து ஏறி அமர்ந்த பிறகு, இவ்வுலகு அச்சிறு உலோகக் கூண்டென சுருங்கி கூட்டுப்புழு போல உணரும் சில நிமிடங்கள். சில கணங்களுக்குப் பிறகு எல்லையற்ற வெளியில் ஒரு துளியென விரியும் பயணம். 


அதிலும் சிங்கை போன்ற  மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஓடுதளம் நோக்கி, வெகு தூரம் காரை ஓட்டிச் செல்வது போல விமானம் உருண்டு செல்லும். அதன்பிறகான சில நிமிடங்கள் நான் தவறவே விடாதவை. ஓடுதளத்தில் மெதுவாகத் தொடங்கி சரசரவெனத் தீபோல பற்றியேறும் வேகம்; புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு விமானம் அந்தரத்தில் தொற்றி ஏறிக் கொள்ளும் அந்த ஒரு நொடி; வயிற்றில் நிகழும் ஒருகண அமிலமாற்றம்; நேர்க்கோட்டில் தெரியும் நிலம் சாய்வான கோணத்தில் தெரியும் கணங்கள், நாம் கடுகென நின்றிருந்த மாபெரும் நிலவெளி உரு சிறுத்து, சுருங்கி ஒரு வரைபடம் போல மாறும் நிமிடங்கள்,  மேகப்பொதிகள் வந்து விமானத்தை முற்றிலும் ஏந்திக் கொள்ளும் தருணங்கள் என ஒவ்வொரு முறையும் இக்கணங்கள் அற்புதமானவை.



இரண்டாவது காரணம், புவியில் கால்பாவாது மேகமென மிதந்தவாறு நிலத்தைக் கடலைக் கண்டு செல்லும் பயண நிமிடங்கள். வானும் கடலும் ஒன்றென்றே ஆகும் விரிவெளியில் ஒரு சிறு புள்ளியென கரையக் கிடைக்கும் வாய்ப்பு. முழுநிலவின் மேகங்களை விமானத்திலிருந்து பார்த்த பிறகு மண்ணிறங்குவது மிகக் கடினம். பகலென்றாலோ மேகக்குவைகளும் நீலக்கடலும் போதும் பித்தெழச்செய்ய.





தரையிறங்குவது எதனாலோ எப்போதும் பதற்றமாகவே இருக்கும். இத்தனை நூற்றுக்கணக்கான பயணங்களுக்குப் பிறகும் கூட சக்கரங்கள் வெளியே வந்து  தரையை வேகமாக உணரும் அந்த நொடி உள்ளுக்குள் சகலமும் அடங்கியே காத்திருக்கச் செய்யும்.
முதல் முறை சிங்கை வந்த விமானப் பயணத்திலோ மழைக்காலம் ஆதலால் வங்காள விரிகுடாவின் மேலேறியதுமே விமானம் அவ்வப்போது சற்றுத் தளளாடியபடியே வந்தது.  தரையிறங்க முக்கால்மணி நேரம் முன்பே மலேசியா தெரியத் தொடங்கிவிட
மலேசிய வானில் பல இடங்களில் மின்னல் கொடிவிரித்துக் கொண்டே இருந்தது. இருளில் நகர ஒளிகளில் சுடர்கொள்ளும் மேகங்களும் அவ்வப்போது கிளைபிரியும் மின்னல்களும் என அந்த இரவு கடந்தது. யாரோ விட்டுச் சென்ற ஒளிரும் நகையென சிங்கை கீழே கிடந்தது. பிறகு உயரம் குறையத் தொடங்கி சில நிமிடங்களுக்கு எதுவுமே கண்ணில் தெரியவில்லை. கனத்த மேகங்களூடே, விமானத்தின் சிறுவிளக்கின் ஒளி மேகத்தில் பிரதிபலிக்க, உடல் பதறியபடி இறங்கிய விமானமும், சாளரம் வழியே கண்ணுக்குத் தெரிந்த படபடத்த விமான இறக்கையும் என சில நிமிடங்கள்.
சிங்கையின் கிழக்கு கடற்கரை - தரைதொடும் முன்னர்


 சட்டென்று நீருக்குள் பாய்ந்து ஆழத்துக்குள் வந்தது போல அவ்வளவு அடர் மேகங்களுக்கு அடியில் சிங்கை வழக்கம் போல பரபரப்பாக பளபளத்துக் கொண்டிருந்துது. குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போலத் தெரிந்த  சாலைகள் விரைந்து நெருங்கி பெரிதாகி விமானத்தை நோக்கி வந்தன. கடலின் எல்லையிலேயே துவங்கும் ஓடுதளம் அதிவேகமாக பின்னோக்கி விரைய சாங்கிக்குள் ஒரு சிறு வெள்ளி மீனென நுழைந்தது வான்பறவை. கதவு திறக்க மயன் படைத்த உலகு  கண்முன் விரிந்தது.


அன்றுமுதல் இன்றுவரை எனக்கு சிங்கையிலேயே மிகப் பிடித்த இடங்களின் பட்டியலில் சாங்கி விமான நிலையத்துக்கு முக்கிய இடமுண்டு.  மற்ற விமான நிலையங்கள் போல வருவதற்கும் போவதற்குமான வாயில் மட்டுமல்ல இவ்விமான நிலையம். இதுவே ஒரு தனித்த சுற்றுலாத் தலமும், வணிக மையமும், உணவகங்களின் தொகுதியும், கேளிக்கை மையமும் ஆக விளங்குகிறது. எனவே இங்குள்ள வாழ்வின் ஒரு பகுதியாகிறது.

இரண்டாவது கட்டமாக சிங்கை வந்த பிறகு தங்கியிருந்த வீடும் விமான நிலையத்துக்கு வெகு அருகில் என்பதாலும், அலுவலகம் அமைந்திருக்கும் வர்த்தகப் பூங்கா இதற்கு அடுத்த ரயில் நிலையம்தான் என்பதாலும்  இது வீட்டுப் புழக்கடை போல பழகிப்போனது. அதிநவீனமான புழக்கடை.



பயணம் மேற்கொள்ளாவிட்டாலும் சாங்கி விமான நிலையத்தில் நுழைவதற்கு நம்மூர் விமான நிலையங்கள் போல கெடுபிடிகள் கிடையாது. பயணச்சீட்டு சோதனை வரிசை, பெட்டிகளை பயணவரிசையில் சேர்க்குமிடம் ஆகியவை தாண்டி பயண ஆயத்தம் முடிந்து குடியேற்ற  (Immigration) நுழைவாயில் வரை எத்தடையுமின்றி பொதுமக்கள் வந்து வெளியேறும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே வழியனுப்ப வருவோரும், எதிர்கொண்டு அழைக்க வருவோரும் எக்காரணமும் இன்றி எனைப் போல சுற்றிப் பார்க்க வருவோருமென கலகலப்பாகவே விமான நிலையம் இருக்கும். 



இங்கு நான்கு முனையங்கள் (terminals) உள்ளன. நான்காவது முனையம் சில வருடங்கள் முன்னர்தான் (2017-ல்) திறக்கப்பட்டது. இவற்றில் மற்ற மூன்று நிறுத்தங்கள் 'ப' வடிவில் அமைந்தவை. மூன்று முனையங்களை இணைத்து சிறிய ரயில் ஒன்று உயரத்தில் செல்லும். அதைக் காணவே, பயணம் செய்யவே தொடக்கத்தில் பல முறை சென்றிருக்கிறோம். அதில் மிக வியப்பான ஒன்றாகத் தெரிந்த ஒரு விஷயம் - அந்த இரண்டு ரயில் பெட்டிகளில் முதல் பெட்டியில் பயண ஆயத்தம் முடித்தவர்கள் பயணம் செய்ய, இரண்டாவது பெட்டியில் பொதுமக்கள் பயணம் செய்யலாம். அவரவர் உள்நுழையும்/வெளியேறும் பக்கங்கள் வேறு. பயண ஆயத்தம் பெற்றவர்கள் பயணிக்கும் பகுதி விமான நிலைய குடியேற்றம் கடந்தவர்களுக்கான பக்கம் உட்புறமாகத் திறக்க, மற்றொரு பெட்டி வெளிப்புறம் திறக்கும். மிக எளிதானது போலத் தோற்றம் தரும் அந்த எல்லைக்கோட்டைக் கையாளும் விதம் மிக வியப்பாக இருந்தது.  
Skytrain

வாடிக்கையாளர்களுக்கு உராய்வுகளற்ற அதாவது செயல் சிரமமற்ற அனுபவத்தை ஏற்படுத்தித் தருதல் இன்று நவீன வங்கி, வணிக செயலிகளை வடிவமைக்கும் பொழுது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.   அது போல இந்த விமான நிலையத்தில் நிகழும் எந்த ஒரு அனுபவத்தாலும் ஒரு நடைமுறை சிரமம் இருப்பதாக மக்கள் உணர்ந்துவிடலாகாது என்ற கவனத்தை முதன்மையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்ட செயல்முறைகள், முறைமைகளின்  மேலாண்மை. 

மேலும் நகரத்தில் இருந்து சாங்கி விமான நிலையத்துக்குள் பேருந்திலோ காரிலோ வந்து நுழையும் பொழுது ஓரிடத்தில் தலைக்கு மேல் விமான ஓடுதளம் சாலையைக் கடக்கும். அதில் பெரிய விமானங்கள் குறிப்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள், ஒரு அழகிய பெரிய திமிங்கிலம் போல நாம் வரும் அதே நேரம் நம்மைக் கடந்து செல்வதைப் பார்க்க நேர்ந்தால் குழந்தைகள் போல குதூகலிப்பது உண்டு. 




இது தவிர சில சமயங்களில் இங்குள்ள உணவகளுக்கென, கடைகளுக்கென, சிங்கை வரும் நண்பர்களுக்கு விமான நிலையத்தையும் சுற்றிக் காட்ட என்று பல காரணங்களுக்காக வருவதும் உண்டு.  மாதம் ஒரு முறையேனும் பயணம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் கூட ஒவ்வொரு பயணத்துக்கு முன்னும் மூன்று மணிநேரம் முன்னதாகவே வந்துவிட்டு இங்குள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்கான தோட்டத்தையோ(T3), டெய்ஸி எனப்படும் மாபெரும் இயந்திர மலர் நமது நடமாட்டங்களைப் பொறுத்து தலை திருப்புவதையோ(T3), பல வண்ண மலர்கள் நிறைந்த மயக்கும் தோட்டத்தையோ(T2), மனதை ஒருநிலைப்படுத்திவிடும் ஆயிரம் தாமிர மழைத்துளிகள் அந்தரத்தில் புரியும்  நடனத்தையோ (T1),   கள்ளிகளின் தோட்டத்தையோ(T1), முகமே மலரென விரியும் சூரியகாந்தி மலர்களையோ(T2),  எஃகு மலர்க்குவைகளையோ பார்த்தவண்ணம் விமானம் கிளம்ப சில நிமிடங்கள் முன் வரை திளைத்து நிற்பேன். பித்துப் பிடித்த குரங்கு தேறல் மாந்தியது போல ஏற்கனவே பயணம் தரும் மன எழுச்சியை மேலும் அதிகரிப்பவை இந்தக் காட்சிகள்.

Kinetic Rain


Daisy 


ஒவ்வொரு இடமும் அங்கே நாம் அடைந்த உணர்வுநிலைகளாலும் அத்துடன் தொடர்புறுத்திக் கொள்ளும் நினைவுகளாலும் ஆனது.  
சில மறக்கவே முடியாத வாழ்நாளுக்கான நட்புகளை இங்கே முதல் முறை சந்தித்த தருணங்களையும், நெருங்கிய ஒரு உறவினரை அவரது மறைவுக்கு முன் கடைசி முறையாக இங்கு சந்தித்ததும் என பல நெகிழ்வான நினைவுகள் இந்த விமான நிலையத்தில் நிறைந்திருக்கின்றன.  பிரிதலும் பிரிதல் நிமித்தமும் தொடங்கி  ஐந்திணையின் உரிப்பொருளும் இங்கே நிகழக் காணலாம். நாளையும் இங்கே வரலாம்.



  




5 comments:

  1. Great article... so many memories😊😊😊

    ReplyDelete
  2. Airport was an exciting place. Thank you for rekindling those memories

    ReplyDelete
  3. சுபஸ்ரீ, உங்களுடைய துறை சார்ந்த அனுபவங்களோடு இணைத்து விமானநிலைய கட்டமைப்பை ஒப்பிட்டு இருப்பது அருமை. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட ஒரு இரண்டாயிரம் பக்க நாவலை நீங்கள் எழுதியே தீரவேண்டும் என அன்புக் கட்டளை இடுகிறோம். நில வர்ணனைகள் வாழ்க்கைச் சூழல் வர்ணனைகள் மனநிலை படப்பிடிப்புக்கள் என ஒரு தேவதைபோல் உயரத்தில் நின்று எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது பார்த்ததே எழுத்தில் வடிக்க உங்களால் இயல்கிறது. நிச்சயம் சிங்கை மண்ணுக்கு ஒரு உண்ணத நில வரலாற்று உணர்வு பூர்வ இலக்கியப் படைப்பை அளிக்க முடியும் உங்களால்.

    சில வரிகள் வெகு வெகு அருமை...

    //வானும் கடலும் ஒன்றென்றே ஆகும் விரிவெளியில் ஒரு சிறு புள்ளியென கரையக் கிடைக்கும் வாய்ப்பு.//

    //பித்துப் பிடித்த குரங்கு தேறல் மாந்தியது போல //

    இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சுபஸ்ரீ!!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சுபஸ்ரீ
    இனிமையான நினைவுகளை எடுத்துச் செல்கிறீர்கள் என்பதை உங்கள் புகைப்படங்கள் காட்டுகிறது.  "ஒவ்வொன்றும் அச்சொல்லை உதிர்த்துவிட்டே இறகு விரிக்கின்றன" உங்களுடைய இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. மேன்மேலும் உங்கள் அனுபவங்களை எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்வின் இன்னொரு முக்கியமான கட்டத்தில் நுழைகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சுபஸ்ரீ
    இனிமையான நினைவுகளை எடுத்துச் செல்கிறீர்கள் என்பதை உங்கள் புகைப்படங்கள் காட்டுகிறது.  "ஒவ்வொன்றும் அச்சொல்லை உதிர்த்துவிட்டே இறகு விரிக்கின்றன" உங்களுடைய இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. மேன்மேலும் உங்கள் அனுபவங்களை எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்வின் இன்னொரு முக்கியமான கட்டத்தில் நுழைகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete