Monday, February 22, 2021

சிங்கை குறிப்புகள் - 15 - பணத்தோட்டச் சாலை

1850களில் ஆர்ச்சர்ட் சாலை மெல்ல மெல்ல குடியிருப்புப் பகுதியாக மாறிய சித்திரத்தை ஜாதிக்காய் கதையோடு இணைத்துப் புரிந்து கொள்ளமுடியும். உதாரணமாக ஆக்ஸ்லியின் ஜாதிக்காய்த் தோட்டத்தின் இன்றைய சுவடாக நிற்கும் வின்ஸ்லாந்து வீட்டைக்(Winsland House) குறிப்பிடலாம். ஒட்டி நிற்கும் இரண்டு இணை முகப்புகளைக் கொண்ட விக்டோரிய பாணிக் கட்டிடங்கள். அன்றைய தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி குடியிருப்புகள் அமைகின்றன. அந்த தோட்டங்களின் பெயர்களிலும், அதை அமைத்தவர் பெயரிலும் வீதிகளும் பகுதிகளும் உருவாகின்றன.

வின்ஸ்லாந்து வீடுகள் 1996-97ல் புணரமைக்கப்பட்டன. இக்கட்டிடங்கள் அதற்கேயுரிய அழகியல் கூறுகளான உயர்ந்த கூரை கொண்ட தாழ்வாரங்கள், கட்டிட முகப்பு ஆகியவை கெட்டுவிடாமல், முன்புறம் படிகள் விரிவாக்கப்பட்டு சிறு மாற்றங்களும் செய்யப்பட்டன.


165, பினாங் சாலை, வின்ஸ்லாந்து வீடுகள்


தோட்டத்தோடு குடியேறிய மக்களின் எண்ணிக்கையோடு சேர்த்து, 1900-களின் தொடக்கத்தில் ஆங்கிலேய உயர் அதிகாரிகள் மற்றும் வணிகர்களின் வசிப்பிடமாக ஆர்ச்சர்ட் மாறிவந்தது. அதே நேரத்தில் பாக்தாதை சேர்ந்த யூதர்களின் குடியேற்றமும் டோபி காட், ப்ரஸ் பாஸா பகுதிகளில் நிகழ்கிறது.    

இவ்விதம் பல இனங்கள் கூடி வாழத் துவங்கவே வழிபாட்டுத்தலங்களும், சந்தைகளும், அரசு சேவை நிறுவனங்களும், கேளிக்கை மையங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை  இன்று பார்க்கலாம். 

ஆர்ச்சர்ட் சாலை - பீட்டர்சன் சாலை சந்திப்பில் ஒரு காவல் நிலையம் 1850களில் துவங்கப்படுகிறது; இன்றைய ION Orchard வளாகம் நிற்கும் இடத்தில்தான் அந்த ஆர்ச்சர்ட் காவல் நிலையம் இருந்தது. 

1880 - காவல் நிலையம்




2016 - Christmas Lighting - ION Orchard

1902-ல் கட்டப்பட்ட அஞ்சல் நிலையம் ஒன்று ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கிறது. இன்றும் அதே இடத்தில் இரண்டாவது தளத்தில் ஒரு தேநீர்க் கடையோடு கூடிய கில்லினே அஞ்சல் நிலையம் இயங்குகிறது. அந்தப் பழத்தோட்ட காலத்தில் இருந்து இன்றைய பணத்தோட்டக் காலத்தை நோக்கி அனுப்பப்பட்ட கடிதம் போல அக்கட்டிடம் நிற்கிறது.

கில்லினே அஞ்சல் நிலையம்

தற்போது குடியரசுத் தலைவரின் அரசுமுறை இல்லமாகிய இஸ்தானா கட்டிடம், 1867-ல் பிரின்செப் வசமிருந்த ஜாதிக்காய் தோட்டம் நின்ற லாக்ஸ் குன்று மற்றும் கரோலினா குன்று ஆகியவை ஆங்கிலேய அரசால் வாங்கப்பட்டு, மலைகள் சமப்படுத்தப்பட்டு, ஆங்கிலேய ஆளுநர்களுக்காக கட்டப்பட்டது. 3000 இந்தியக் கைதிகளை கூலித் தொழிலாளர்களாகக் கொண்டு இக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது.  ஆர்ச்சர்ட் சாலையில் செல்லும் போது வழக்கமாக அழகான உயர்ந்த வாயிற்கதவுகள் அருகே நிற்கும் காவலர்களை மட்டுமே காண இயலும். ஆண்டில் சிலமுறை சிறப்பு தினங்களை முன்னிட்டு பொதுமக்கள் இஸ்தானாவுக்குள் அனுமதிக்கப்படுவதுண்டு. 

பன்னாட்டு தூதரகங்கள் ஆர்ச்சர்ட் சாலையிலும் அருகாமையிலும் இருக்கின்றன. இவற்றில் தாய்லாந்து தூதரகம் மட்டும் பொதுமக்கள் உள்ளே சென்று பார்க்கக் கூடிய வகையில் கண்காட்சிகள், விழாக்கள் ஆகியவற்றை நடத்துகின்றன. 

மரகதக் குன்று எனப் பெயர் கொண்ட எமரால்டு ஹில் பகுதியில் 1930-களில் மலேசியர்கள், தியோசூக்கள், காண்டனீயர்கள், ஹாக்கியர்கள் மற்றும் சில இந்தியக் குடும்பங்கள் அடங்கிய ஒரு சிறு குடியிருப்புப் பகுதி உருவானது. ஏற்கனவே பலபகுதிகளில் அறிமுகமான கடைவீடுகள் அமைப்பில் சிறிய மாற்றங்களோடு, அருகருகே உள்ள வீடுகளை இணைத்து முன்பகுதியில் ஒரு தாழ்வாரம் போல கொண்ட கட்டிட அமைப்பு. இவை ஐந்து அடி வழிகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. எமரால்டு ஹில் வீடுகள் இந்தக் கட்டிடக்கலைக்கு சான்றாக பாதுக்கப்பட்டிருக்கின்றன.  

எமரால்டு ஹில்ஸ் வீடுகள்

இதே போல அருகிலிருந்த கப்பேஜ் வீதியில் அமைக்கப்பட்ட  17 வீடுகள் இன்று மிக அழகான உணவு அங்காடிகளாக சுற்றுலா வருபவர்களை வசீகரிக்கின்றன. இங்கு ஒரு தேநீர் அருந்திவிட்டு நடையைத் தொடர்ந்தேன். சிங்கப்பூரின் தே-சி (பாலோடு சேர்ந்த தேநீர்).


கப்பேஜ் தெரு உணவகங்கள்


செவ்வகம் ஆர்ச்சர்ட் பகுதி - வட்டமிட்டுக் காட்டப்பட்டிருப்பவை லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம், சன்டெக்

ஆர்ச்சர்ட் ரோட்டில் கேணிங் கோட்டை பக்கமாக நுழைந்தால் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக் கழகத்துக்கு (SMU) அருகில் முதலில் நாம் காணும் வரலாற்றுக் கட்டிடம் YMCA கட்டிடம். 1844-ல் துவங்கப்பட்ட YMCAவின் சிங்கை கிளை  1911-ல் கட்டி முடிக்கப்பட்டது. சிங்கையின் முதல் பொதுமக்களுக்கான நீச்சல் குளம் இங்குதான் துவங்கப்பட்டது. 

[இன்று சிங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் பொதுமக்களுக்கான நீச்சல் குளங்கள் மிக சிறப்பான வசதிகள் கொண்டவை.  பேருந்துகளுக்குப் பயன்படுத்தும் அதே கட்டண அட்டையைப் பயன்படுத்தி சிறு கட்டணம் செலுத்திவிட்டு இக்குளங்களில் நீச்சல் பயிலலாம்]. 


இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானியர்கள் ஆட்சி காலத்தில் YMCA கட்டிடத்தின் அறைகள் ஜப்பானிய கெம்பித்தாய் காவல்துறையினரால் சிறைகளாகவும் கொடூர தண்டனை வழங்கும் இடமாகவும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 1981-ல் இதன் பழைய கசந்த நினைவுகள் இடித்துவிட்டு இப்போதிருக்கும் கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார்கள்.



YMCA கட்டிடத்துக்கு எதிர் வரிசையில் நிற்கும் கேத்தே திரையரங்கம் (Cathay Theatre) வரலாற்று சிறப்பு கொண்டது. கேத்தே திரையரங்கம் 1936-ல் கட்டப்பட்ட போது, சிங்கப்பூரின் முதல் உயரடுக்கு கட்டிடம் என்ற பெருமையையும், தென்கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கட்டிடம் என்ற சிறப்போடும் துவங்கியிருக்கிறது. இன்று நாம் மரீனா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) பார்த்து பிரமிப்பதுபோல அன்று இதை உணர்ந்திருப்பார்கள். " The Four Feathers” (1939) திரைப்படம் 1000 பேர் அமர்ந்த நிறை அரங்கில் குளிரூட்டப்பட்ட முதல் திரையரங்கில் திரையிடப்பட்டது.

ஜப்பானியர்களிடம் சிங்கை சரணடைந்ததைக் குறிக்கும் முதல் கொடி இங்குதான் ஏற்றப்பட்டது (இது கேனிங் கோட்டைக்கு மிக அருகே என்பதை மேலே வரைபடத்தில் பார்க்கலாம்). அதன் பிறகு ஜப்பானிய போர்க்கால வானொலி ஒலிபரப்பு மையம் இங்கிருந்தே இயங்கியது. இதிலிருந்து தான் உலகப் போர் காலத்தில் இந்திய தேசிய ராணுவமும் தனது வானொலி ஒலிபரப்பை நிகழ்த்தியிருக்கிறது. நேதாஜி தலைமையில் தற்காலிக அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்ந்ததும் இதே கேத்தே திரையரங்கில்தான். 

கேத்தே திரையரங்கில் சுபாஷ் சந்திர போஸ்

இன்றும் இக்கட்டிடத்தின் முகப்பை வரலாற்று நினைவுச் சின்னமாக அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். பின்னால் ஒரு பெரிய வணிக வளாகமும் ஒரு சிறு கண்காட்சியும் இருக்கிறது. வரலாறு நிகழ்ந்த திரையரங்க மேடைகள்.



2021 - Cathay

சைனா டவுன் பகுதியில் பார்த்தது போல, இங்கும் பல இனத்தவர் கூடுகிற இடம் ஆதலால், பல விதமான வழிபாட்டுத் தலங்கள் உருவாகி வருகின்றன.  YMCA கட்டிடத்துக்கு அடுத்த கட்டிடம் பொது ஆட்சிமுறைத் திருச்சபையின்(presbyterian church) கிறிஸ்தவ தேவாலயம். 1878-ல் கட்டப்பட்ட இந்த சர்ச்,  இப்பகுதியின் மிகப் பழமையான ஆலயம். இரு புறமும் பாக்கு மரங்களோடு ஒரு பழைய காலகட்டத்தை நினைவுறுத்தியபடி ஆர்ச்சர்ட் சாலையின் துவக்கத்தில் நிற்கிறது இந்த தேவாலயம்.  

Presbyterian church

1821-லேயே கட்டப்பட்ட சிவன் ஆலயம் ஒன்றும் ஆர்ச்சர்ட் சாலையில் இருந்திருக்கிறது. இன்று டோபி காட் ரயில் நிலையம் இருக்கும் பகுதியில் இருந்த இந்த சிவனாலயத்துக்கு சிவலிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. சிங்கையில் இன்றும் மிக முக்கியமான திருவிழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவின் போது ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலயத்தில் இருந்து டேங்க் சாலை தெண்டாயதபாணி கோவில் வரை காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் இங்கு ஒரு சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். இங்கு ரயில் நிலைய வேலை துவங்கியதும் இங்கிருந்து கிழக்குப் பகுதிக்கு, கெய்லாங் (Geylang) பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.  ஆர்ச்சர்ட் சாலைக்கு வைராவி மடம் எனப் பெயர் கொடுத்த வைரவிமாதா காளியம்மன் ஆலயமும் 1860களில் கில்லினே சாலையில் ஒரு சாவடியில் துவங்கப்பட்டு  பின்னர் தொ பாயோ(Toh Payoh) பகுதிக்கு மாறியிருக்கிறது. 

உணவகங்களும் மதுவிடுதிகளும் நிறைந்த கப்பேஜ் சாலையின் மறு எல்லையில் இன்னொரு வழிப்பாட்டுத் தலம்  நிற்கிறது. சியான் டெக் ட்ங் (Sian Tek tng) எனப்படும் இச்சீனக் கோவில் எமரால்டு மலையில் வாழ்ந்த சீனப் பெண்கள் வழிபாட்டுத்தலமாக விளங்கியது. குவான் யின் (Guan Yin) எனப்படும் கருணையின் தெய்வம் குடி கொண்ட இவ்வாலயம் பெண்களுக்கான மடமாகத் துவங்கப்பட்டு இங்கு விதவைகளும் மணமாகாத பெண்களும் தங்கி சமய நூல்கள் கற்கவும், பூஜைகளை மேற்கொள்ளவும் செய்திருக்கிறார்கள்.

 Sian Tek Tng


இப்பகுதி 1850-களில் செல்வந்தர்களும் வணிகர்களும் நிறைந்த குடியிருப்புப் பகுதியாக உருமாறத் தொடங்கியதுமே கடைகளும் வணிகமும் தொடங்கிவிட்டன.  1880-ல் இப்பகுதியின் நகராட்சி தலைவராக இருந்த எட்வின் கோக் இங்கு ஒரு திறந்த வெளி சந்தையைத் துவங்கி வைக்கிறார்.  பிறகு அரசாங்கமே இந்த இடத்தில் நகராட்சி சந்தையை துவக்கி வைத்தது. எமரால்டு ஹில் மற்றும் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் காலையில் சென்று காய்கறிகள் வாங்கி வரும் இடமாக அந்த சந்தை இருந்ததென 1960-களில் இப்பகுதிகளில் வளர்ந்தோர் நினைவு கூறுகின்றனர். 

ஆர்ச்ர்ட் சாலை திறந்த வெளி சந்தை

இந்த இடமே ஆர்ச்சர்ட் பாயிண்ட் எனப்படும் வணிக வளாகமாக மாறி நிற்கிறது. 1905-ல் இங்கு துவங்கப்பட்ட கோல்டு ஸ்டோரேஜ் (Cold Storage) அங்காடி இப்பகுதிக்கு ஒரு அடையாளமாக விளங்கி இருக்கிறது. அதுவே சிங்கையின் முதல் பல்பொருள் அங்காடி என்ற பெருமையும் கொண்டது, இன்று இவ்விடத்தில் சென்டர்பாயிண்ட் வணிக வளாகம் இருக்கிறது. 



1800களில் டோபி காட் பகுதியில் எண்ணற்ற குதிரை வண்டிகள், சாரட்கள் விற்கும் கடைகளும், லாயங்களும் இருந்தன. 1900களில் அவையிருந்த இடத்தை கார் விற்பனையகங்கள் எடுத்துக் கொண்டன. சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கான விற்பனை நிலையமாக SMA (Singapore Manufacturers' Association) துவங்கியது. 

SMA Building

துரைமார்களும், துரைசானிகளும், மலேய பெரானக்கன் மக்களும், யூதர்களும் , சீனர்களும், தமிழ் வணிகர்களும்  என பல உயர்குடி மக்களுக்கென  ஆடைகள் தைப்பதற்கென்று சிறந்த பொற்பின்னல் வேலைப்பாடுகள் செய்பவர்களும், பட்டாடை தைப்பவர்களும், மேலை நாகரீக உடைகள் வடிவமைப்போரும் குடியேறுகின்றனர். இன்றும் ஆர்ச்சர்ட் சாலை நவீன ஆயத்த உடைகளுக்கு மட்டுமன்றி, ஆடை வடிவமைப்புக்கும், தையலுக்கும் மிகவும் புகழ்பெற்றது. இதுவும் 1900-களில் இங்கு துவங்கிவிட்டது. இத்தனை வணிகம் நிகழ, வங்கிகளும் இங்கே கிளை பரப்பத் தொடங்கின. அவற்றுள் மெக்டொனால்ட் ஹவுஸ் எனப்படும் கட்டிடமும் HSBC வங்கியால் இச்சாலையில் கட்டப்பட்ட முக்கியமான அடையாளங்களில் ஒன்று.

The MacDonald House

1950-களில் கூட மிக அமைதியான இடமாகவும் மாலைகளில் ஆள்நடமாட்டம் குறைந்தும் காணப்பட்ட இப்பகுதியின் வணிக வாய்ப்புகளை முன்னுணர்ந்து இங்கு உயர்தட்டு வணிகத்தை துவங்கியதில்  முக்கியமானவர் சி.கே. டாங். அவர் தொடங்கிய டாங்ஸ் (Tangs) பல்பொருள் அங்காடி பௌத்த விஹாரங்கள் போன்ற முகப்பு அமைப்போடு வாடிக்கையாளர்களை ஈர்க்கத் துவங்கியது.



கல்லறை இருந்த இடத்தில் துவங்கப்பட்ட ஙீ ஆன் சிட்டியும் அதிநவீன வணிகத்துக்கென புகழ் பெறத் துவங்கியது. இன்று அச்சாலை முழுவதும் இருபுறமும் ஒன்றோடொன்று போட்டியிட்டு எழுந்து நிற்கும் வணிக வளாகங்கள். அதன் இணை சாலைகளில் எல்லாம் உலகின் பெரும் பணக்காரர்கள் பலரும் குடியிருக்கும் வீடுகள்.

1980-களுக்குப் பிறகுதான் ஆர்ச்சர்ட் சாலை இன்றைய நவநாகரீக, அதிநவீன வணிக மையம் என்ற பிம்பத்தை நோக்கி நகரத் துவங்கியது. இதன் உச்சமாக கிறிஸ்துமஸ் ஒளியலங்கார விழாவும் சேர்ந்து கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மற்றும் அதன் மூலம் பெருகும் வருவாயை  அதிகரிக்கும் பொருட்டு கிறிஸ்துமஸ் ஒளிவிளக்குகளின் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சித் துறையால் 1984-ல் துவங்கப்பட்ட இந்நிகழ்வில் இங்கிருக்கும் வணிக அமைப்புகள் அனைத்தும் இணைந்து இந்த இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள தெருவை வருடாவருடம் வெவ்வேறு விதங்களில் ஒளி விளக்குகளால் வண்ணமயமாக்குவார்கள். அவற்றுள் தலை சிறந்த கிறிஸ்துமஸ் அலங்காரமும், கிறித்துமஸ் மரமும் பரிசு பெறும். இதையும் ஒரு சுற்றுலா கேளிக்கையாக உருமாற்றி இரவுலா பேருந்துகள் அந்த நாற்பது நாட்களும் இயக்கப்படுகின்றன. 










அதே போல சிறப்பு சிங்கப்பூர் விற்பனை (Great Singapore Sale) என ஊரே அமர்க்களப்படும் மே மாத இறுதி முதல் ஜூலை வரை நடக்கும் விற்பனை விழாவின் உத்தியும் இங்குதான் ஆர்ச்சர்ட் சாலையில் துவங்கியது. அச்சுறுத்தும் வணிகமயம், எனவே இங்கு எதையும் வாங்கத் தோன்றுவதில்லை. சிங்கை வருவோருக்கெல்லாம் சுற்றிக் காட்டி ஒளிக்குருடாகும் வரை சுற்றித் திரிந்து புகைப்படமெடுத்துத் திரிவதே ஆர்ச்சர்ட் குறித்த நினைவுகள். 


இரண்டாம் உலகப் போரில் இச்சாலையின் பங்கு குறித்தும், இதன் வரலாறு குறித்தும் வாசிக்கத் துவங்கியதும் அதற்கென சில முறை இதன் அடிமுதல் நுனி வரை நடந்திருக்கிறேன். 


இந்த ஆர்ச்சர்ட் பகுதியிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஓரிடம், 'ஆர்ச்சர்ட் கேட்வே' எனப்படும் வணிக வளாகத்தின் நான்காவது தளத்தில் இருக்கும் சிங்கை நூலகத்தின் ஆர்ச்சர்ட் கிளை. 18 முதல் 35 வயதுக்குழுவினரை ஈர்ப்பதற்கென,  நவீன வடிவில் அமைக்கப்பட்ட நூலகம்.   

இந்த "தி டியூப்" (The tube) எனப்படும் கண்ணாடிப் பாலம் சென்று இணையும் "ஆர்ச்சர்ட் கேட்வே" (Orchard Gateway)  கட்டிடத்தில்தான் சிங்கை நூலகத்தின் ஆர்ச்சர்ட் கிளை இருக்கிறது. இது நுண்கலை சார்ந்த புத்தகங்கள், ஒளி/ஒலி தகடுகளுக்கான சிறப்பு நூலகமாகவும் விளங்குகிறது.  அந்தக் கூடணையும் பறவைகளின் பெருமரத்திற்கு மிக அருகே தான்  இக்கனிமரமும் இருக்கிறது.


"The Lifestyle Library"

நேற்றில் வேர்பதித்த கனிமரங்கள்  இன்றில் நிழல் கவியும் சாலை.

மொத்தத்தில் ஜோஹோர் நோக்கி செல்லும் குன்றுகள் சூழ்ந்த தனிமை நிரம்பிய கிராமத்து சாலையில் கடந்து சென்ற பறவைகளின் அடுத்தடுத்த தலைமுறைகள், காம்பியர் தோட்டங்களையும், ஜாதிக்காய் எஸ்டேட்களையும், கனிமரங்களையும், வண்ணான்கள் துணி உலர்த்தியதையும், குதிரை வண்டிகள் கார்கள் ஆகிப் பறந்ததையும், நவநாகரீகமென உலகம் கருதும் ஒவ்வொன்றையும்  முன்னின்று விற்பதையும் வாங்குவதையும் அனைத்தையும் கண்டபடி இன்றும் இவ்விடத்தின் ஒளிஒலி வெள்ளத்திலும் கூடடைய பழகிக் கொண்டிருக்கின்றன.  அப்பறவைகளின் பார்வையில் சிங்கை முன்னேறி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால்  முன்னிரவைப் பகல் என மயங்கி  வாகனங்களின் இரைச்சலை மீறி அவை இடும் கூச்சலில் ஏதோ செய்தி இருக்கிறது.


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 14 - பழத்தோட்டச் சாலை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 16 - நெய்தல் நடை

1 comment:

  1. Simply amazing. From a remote location to thecentre of sale. What a journey!!

    ReplyDelete