சிங்கை வந்து ஓராண்டுக்குப் பிறகு ஒரு முறை, நண்பர்கள் கணேஷ் - மாதங்கி மற்றும் குழந்தைகள் இந்தியா செல்ல அதிகாலை ஐந்து மணி விமானத்துக்கு பயண முன்பதிவு செய்திருந்தனர். குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாகவேனும் விமான நிலையம் சென்று சேர வேண்டும். எனவே இரண்டரை மணிக்கு அலாரம் வைத்து மூன்றரை மணிக்கு விமான நிலையம் சென்று சேர்வதாகத் திட்டம். காலை நான்கு மணியளவில் என் அறையில் இருந்து எழுந்து வந்து வெளியே பார்த்தபோது வீடே நிசப்தமாக இருந்தது. சொல்லாமல் கிளம்பிவிட்டார்களா, சிறு ஓசைக்கும் எழுந்து விடும் நான் எப்படி இப்படி அவர்கள் கிளம்பியது தெரியாமல் உறங்கினேன் என நொந்து கொண்டு முன் அறையைப் பார்த்தால் அனைத்து பெட்டிகளும் இருந்தன. அவசரமாக சென்று குரல் கொடுத்து எழுப்பினேன்.
அடுத்த அரைமணிநேரத்தில் நிகழ்ந்ததை வேறெங்கும் எதிர்பார்ப்பது கடினம். நான்கு மணிக்கு எழுந்து அப்படியே பிள்ளைகள் இருவரையும் கிளப்பி, பத்தாவது நிமிடம் டாக்சியில் ஏறி விமான நிலையம் ஓடினர். நாங்கள் தங்கியிருந்த சீமெய் பகுதியிலிருந்து விமான நிலையம் 10 நிமிட பயணத்தொலைவு. அதுவும் அதிகாலை வேளை, ஆளரவமற்ற சாலை, ஐந்து நிமிடத்தில் விமான நிலையம் சென்று சேர்ந்தனர். பெட்டிகளை இறக்கச் சொல்லிவிட்டு கணேஷ் பாஸ்போர்ட் டிக்கெட்களோடு உள்ளே ஓடினார். விமானத்துக்கு நாற்பது நிமிடமே இருந்த நிலையில் அனைவரும் உள்ளே சென்றுவிட ஆளில்லாமல் இருந்த கவுண்டர்-ல் இருந்த விமான சேவை பணியாளர், குழந்தைகள் இருவரோடு அவசரமாக உள்ளே நுழைந்ததைப் பார்த்து உடனே பரபரப்பானார்கள். பயண ஆயத்த ஏற்பாடுகளை கணினியில் செய்து கொண்டே உள்ளே அவசரமாக அழைத்து நால்வர் வந்து கொண்டிருப்பதைத் தெரிவித்தார்கள். பெட்டிகள் தனியே அவசரமாக ஒருபக்கம் ஓடின. அதிகாலை வேளையிலும் எத்தனையோ விமானங்கள் வருவதும் போவதுமாக விமான நிலையம் பரபரப்பாகவே இருந்தது.
இவர்களுடன் கூடவே சென்ற ஒரு விமானப் பணியாளர் இவர்களது விமானத்தைக் குறிப்பிட்டு குடியேற்றப் பரிசோதனை வரிசையில் முன்னால் அனுப்பினார். தானியங்கி முறை குழந்தைகளுக்குக் கிடையாது என்பதால் அந்தத் தாமதம், இல்லையேல் அதுவும் ஒரு நிமிட ஸ்கேனிங் மட்டுமே. அனைத்தையும் விரைவாக முடித்து ஓடிச் சென்று விமானம் ஏறினார்கள். இவ்வளவு அதிவிரைவாக அன்று அனைத்தும் முடிவுற்று விமானத்தை அவர்கள் பிடித்ததில் சாங்கியின் சீரான எளிதாக்கப்பட்ட நடைமுறைகளும் கையாளுதலும் தெரிந்து கொள்ள முடிந்தது.
நான் ஒவ்வொரு முறையும் பயணம் செய்வதாக இருந்தால் வெகு முன்னதாகவே வந்து விடுவது வழக்கம். பயண சடங்குகள் எல்லாம் முடிந்து உள்ளே சென்றுவிட்டால் அது ஒரு தனியுலகம். வழக்கமாக கடைசி நிமிட பரிசுப்பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் தீர்வை இல்லாத மது விற்பனைக் கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். அவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தீவு போல சில குட்டி ஆச்சரியங்கள் காத்திருக்கும்.
மஞ்சள் வண்ண டேன்டேலியன் மலர்கள் போல படிகத்தில் செய்யப்பட்ட 12 மலர்களின் தோட்டம், இச்சிற்பங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொஹீமிய கண்ணாடி வடிவங்களால் ஆனவை. முதலில் ஏதோ கடையின் விளம்பரத்துக்காக வைத்திருக்கிறார்கள் என்றெண்ணிக் கடந்திருக்கிறேன். இவற்றைக் குறித்து வாசித்த பிறகு, இதன் வேலைப்பாடுகள் வியக்க வைத்திருக்கின்றன.
மூன்றாம் டெர்மினலில் இன்னொரு இடம் இங்குள்ள வண்ணத்துப்பூச்சிகளின் தோட்டம், நாற்பதுக்கும் மேற்பட்ட வகைமைகளில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகளைக் காண முடியும். இதற்கென சில குறிப்பிட்ட செடிகளையும் இத்தோட்டத்தில் வளர்க்கிறார்கள். குழந்தைகளுக்கான மிகப் பெரிய சறுக்குக் குழாயும் இங்கு உண்டு. முதல் தளத்தில் பூலோகத்தில் தொடங்கி அதலம், விதலம், சுதலம் கடந்து மூன்றாவது அடித்தளத்தில் கொண்டுவந்து விடும் உலோக நாகங்கள் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தவை, பெற்றோருக்கும் ஆசையாகத்தானிருக்கும், உள்நுழைய அனுமதி இல்லை.
ஒவ்வொரு முறையும் பயணம் செல்வதற்கு முன் கிடைக்கும் ஒரு மணிநேரத்தில் ஏதோ முடிந்த அளவு சுற்றிப் பார்ப்பதற்கே நேரமிருக்கும். ஒரு நாள் ஐந்து-ஆறு மணிநேரம் விமான நிலையத்தின் உட்புறம் சுற்றிப் பார்க்க ஒரு அழகிய வாய்ப்பு கிடைத்தது. கம்போடியா பயணம் முடிந்து ஆசிரியர் ஜெயமோகன் மற்றும் அருணா அக்கா, அஜிதன், சைதன்யா அனைவரும் சிங்கை வழியாக இந்தியா திரும்பினார்கள். எனது பயணம் சிங்கையோடு முடிகிறது. அவர்களுக்கு ஆறு மணிநேரம் அடுத்த விமானத்துக்கு இருந்தது. விமானம் விட்டிறங்கியதும் ஆசான் வெண்முரசு எழுத அமர்ந்துவிட்டார்.
ஒவ்வொரு முறையும் விமான நிலைய காட்சிகள் காண சலிக்காதவை. இந்தியாவிலேயே கிடைத்தாலும் இன்றும் கோடாலித் தைலம் எனப்படும் ஆக்ஸ் ஆயில், டைகர் பாம் போன்றவற்றை வாங்கக் கடைகளில் கூட்டம் இருக்கிறது. இங்குள்ள மிக முக்கியமான இன்னொரு கூட்டத்தை ஈர்க்கும் விஷயம் கால்களைப் பிடித்துவிடும் தானியங்கி சாதனங்கள். பயண ஆயத்தங்கள் முடிந்து உள்ளே விமானம் புறப்படும் வாயிலுக்கு வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கும். அதற்கும் ரயில், பேட்டரி கார், தானியங்கி நடைப்பட்டைகள் எல்லாம் இருந்தாலும் நடந்து சென்றால்தான் காத்திருக்கையில் மக்கள் என்னென்ன செய்கிறார்கள் எனப் பல காட்சிகளைக் காண முடியும். முக்கியமாக நம்மூரில் இருந்து வரும் பலரும் காத்திருந்து தங்கள் குடும்பத்தினருக்கு இந்தக் கால்பிடித்துவிடும் இருக்கைகளில் இடம் பிடித்து சில நிமிடங்கள் அங்கே அமர்ந்து பிறகு அழைத்துச் செல்வார்கள். முதலில் இதென்ன ஒரு சர்வதேச விமான நிலையத்தில் இதற்கு இப்படி வரிசையில் காத்திருக்கிறார்களே எனத் தோன்றினாலும், இத்தகைய கைக்கு எட்டாத வசதிகளை விளம்பரத்துக்குத்தான் என்றாலும் அனைத்து தரப்பினருக்கும் கைக்கெட்டும்படி (காலுக்கெட்டும்படி) செய்திருக்கிறார்களே என மகிழ்ச்சியடைந்து கொண்டேன். மதுரை சுங்கடி சேலையணிந்து நெற்றியில் பெரிய பொட்டோடு, முகத்தில் ஒரு குழந்தைச் சிரிப்போடு இந்தக் கால் அமுக்கிவிடும் இயந்திரம் ஏற்படுத்தும் புதிய குறுகுறுப்பை அனுபவித்தபடி, பக்கத்தில் நின்ற மகனின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு கேளிக்கையில் ஈடுபட்டிருக்கும் மனநிலையோடு அமர்ந்திருந்த வயதான தாயாரின் முகம் இன்றும் நினைவில் இருக்கிறது. அந்த சந்தோஷம் கிடைக்குமென்றால் எந்த நாசூக்கும் பார்க்கத் தேவையில்லை.
வழக்கமாக சென்னை, பெங்களூர் விமானங்கள் டெர்மினல் 3லிருந்து கிளம்பும், அரிதாக 2ஆவது முனையம். டெர்மினல் 1 சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கானது. அதனால் வெகு காலம் வரை முதல் டெர்மினலின் உட்புறம் நான் பார்த்தது இல்லை. மூன்றில் அது காலத்தால் முந்தையது(1981-ல் கட்டப்பட்டது) என்பதால் வெளியில் உள்ள வளாகமே சற்று மங்கிய ஒளியோடு தெரியும். நான் சிங்கை வந்த சில மாதங்களிலேயே அங்கு பகுதி பகுதியாக புணரமைப்புப் பணிகள் நடந்தேறின. 2019-ல் சாங்கியின் அணிநகை எனப்படும் சாங்கி ஜ்வெல் (Changi Jewel) கட்டி முடித்து திறக்கப்பட்டபோது இந்த முதல் டெர்மினலும் புத்தொளி கொண்டு மின்னியது.
வழக்கமாக செல்லும் மூன்றாவது டெர்மினல் 2008-ல் தான் கட்டி முடிக்கப்பட்டது. முகப்பிலும் உட்புறமும் மிகுதியும் கண்ணாடி பயன்படுத்தப்பட்டிருக்கும் இக்கட்டுமானத்தில் கூரையில் இருந்து வரும் இயற்கை வெளிச்சத்துக்கும் பெரும் பங்கு இடம் விட்டிருக்கிறார்கள். தரைத்தளத்தில் புறப்பாடு தொடர்பான நீண்ட வரிசைகளும், மேல் தளத்தில் விமான வருகைகளும் இருக்க, மூன்றாம் நான்காம் தளங்கள் உணவகங்கள், கடைகள் நிரம்பியது. விமானங்கள் கிளம்புவதை பார்க்கும் வண்ணம் ஒரு பார்வையாளர் உப்பரிகையும் நான்காம் தளத்தில் உண்டு. இதுவும் வெளியிலிருந்து உணவகங்களுக்கு வரும் மக்கள் கூட சென்று பார்கக முடியும், இலவசம். இது தவிர நிலத்துக்கடியில் மூன்று தளங்களில் கார் நிறுத்துமிடங்களும், பிற கடைகளும், மற்ற டெர்மினல்களை இணைக்கும் நடை பாதையும், நகரத்துக்கு செல்லும் ரயில், பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லும் வழியும் அடித்தளங்களில் இருக்கின்றன.
ஏறக்குறைய இதே அமைப்புதான் முதல் மற்றும் இரண்டாவது டெர்மினல்களும் கொண்டிருக்கின்றன, என்றாலும் காலத்தால் முற்பட்டவை. காலம் என்றவுடன் நினைவில் எழுவது ஒன்று இரண்டாவது டெர்மினல் புறப்பாடு தளத்தில் முகப்பிலேயே பொதுமக்கள் பார்வைக்கு உள்ளது.
ஒவ்வொரு கணமும், இதற்கு முன்னும் பின்னும் நிகழும் பல்லாயிரம் நொடிகளில் நடந்தவற்றால்/நடக்கப்போவதால் சமைக்கப்பட்டது என்பதை ஒவ்வொரு முறையும் நினைவூட்டிய வண்ணம் இருக்கும் "A Million Times at Changi". பல நூறு கடிகார முட்களின் ஒன்றிணைந்த நடனத்தில் கணப்பொழுது சிங்கை நேரம் தோன்றி மறையும். ஸ்டாக்ஹோமை சேர்ந்த வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை என்பது தேய்வழக்கில் ஓர் நகைமுரண். நேரம் என்பது அலகிலா நடனத்தில் நம் சிந்தையில் அள்ள முடிந்த ஒரு துளி, அதுவும் காலம் தனது இருப்பை உணரச்செய்யும் தருணங்களில் மட்டும். அங்குமிங்குமாக ஏதோ நடனம் புரியும் இயந்திரக் கரங்கள் அவ்வப்போது அந்த நிமிடத்தைக் காட்டுவது மீள மீள நம்மை மயக்குவதும் அதை விலக்குவதுமான அனுபவம். அவசியம் இந்தக் காணொளியில் அதன் ஒரு துளியைக் காணுங்கள் - https://youtu.be/MgkCe8cbi-Y. இறுதியில் வரும் "Celebrating the beauty of time" என்ற வாசகம் மேலும் ஒரு மனஎழுச்சியைத் தருகிறது.
முதல் முனையத்துக்கு செல்லும் வாய்ப்பு வியட்நாம் சென்றபோது அமைந்தது. அங்கும் கள்ளிகள் தோட்டம்,மழைக்காட்டு வாழ்விடங்கள் (Rainforest vivarium) என பல இடங்கள் இருக்கின்றன. இதைத் தவிர இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் ஒரு சமூக மரம் ஒன்றிருக்கிறது. டிஜிடல் திரைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பெரிய மரம் போன்ற மைய வடிவம். அங்குள்ள புகைப்படக்கருவியில் புகைப்படம் எடுத்துக்கொண்டால் சிறிது நேரத்தில் நமது புகைப்படம் அந்த மரத்தில் கிளையேறும். சில நிமிடங்கள் வரை பறவைகள் மரத்தில் தத்தித் தாவுவது போல பலநூறு படங்களுக்கு நடுவே நமது முகங்களும் தத்தித் திரியும். ஆணும் பெண்ணும் இருமையைக் குறித்து இருவிரல் காட்டி இம்மரம் முழுவதும் சிரிக்கின்றனர்.
2017-ல் திறக்கப்பட்ட நான்காம் டெர்மினல் இத்துடன் இணைக்கப்படாமல் தனியாக இருக்கிறது. அங்கு பேருந்தில் செல்லலாம். ஏறத்தாழ முற்றிலும் தானியங்கிகளாகி விட்ட முனையம் இது. பயண ஆயத்தம், பயணச்சீட்டு விவரங்களை அச்சிட்டு பெட்டிகளில் ஒட்டி உள்ளே அனுப்புவது, பாஸ்போர்டைக் காட்டி குடியேற்ற முறைமைகள் செய்வது அனைத்தும் இயந்திரங்களோடும் கணிப்பொறிகளோடும் மட்டுமே. ஒரு நபரிடம் கூட கண் நோக்காமல், ஒரு வார்த்தையும் பேசாமல் கடந்து உள்நுழைகிறது பெரும் பயணியர் கூட்டம்.
குடியேற்ற முறைமைகள் நிகழும் மாபெரும் வாயிலில் தலைக்கு மேலே பல டிஜிடல் திரைகள் ஒன்றிணைக்கப்பட்ட மாபெரும் திரையில் ஏதேதோ காட்சிகள், சிங்கை, மற்றும் கிழக்காசிய நகரங்களின் காணொளிகள். நமை பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தொலைதூர நகரங்களுக்கு அழைத்துச் செல்லும் விமானங்களின் விளம்பரங்கள், மற்ற சில அறிவிப்புகள். உண்மையில் அதில் வரும் தகவல்களை விட இந்திரபிரஸ்த மாளிகையைக் கண்ட கௌரவ நூற்றுவர் போல தலைசுற்றிப் போவதே அதிகம்.
இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல அமைந்திருப்பது 2019-ல் புதிதாகத் திறக்கப்பட்ட சாங்கி ஜ்வெல் வளாகம். 'ப' வடிவ முதல் மூன்று டெர்மினல்களை 'ப்' வடிவமாக்கிய கட்டிடம். உண்மையாகவே ஒரு இந்திரபுரி போல அமைக்கப்பட்டிருக்கிறது. தரை, சுவர், கண்ணாடி ஒவ்வொன்றும் தொடுவதற்கே கூச்சம் கொள்ளும் அளவுக்கு உயர்தர வெளிச்சம் பொருத்தப்பட்டு மின்னுகிறது. தலைக்கு மேல் அந்தரத்தில் மிதக்கும் பூக்குலைகள், மேகங்கள், வைரங்கள்.
இதன் மையத்தில் விண்கங்கை மண்ணிறங்க சித்தம் கொண்டது போல மேலிருந்து ஒரு நீர்ப்பொழிவு. மேலே சுழன்றிறங்கும் நீர் அறுபடாது மென்மையாக வடிந்து மையத்தில் உட்புறமாகப் பொழியும் காட்சியில் அது ஒரு நீர்ப்பெரும்தூண் என்றே தோன்றுகிறது, அல்லது நீர் கிளைவிரித்தெழுந்த மரம் போல. அடித்தளம் சென்று காண ஒரு மாபெரும் கண்ணாடிக்குவளைக்குள் அத்தனை நீரும் பொழிகிறது. இந்த நீர்மரத்தில் பல வண்ணங்கள் பட்டுத் தெரிகின்றன. அவ்வப்போது அந்நீரையே திரையாக்கி வண்ணக் கதிர்கள் கோலமிட காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன.
இதை ரயிலில் சென்ற படி பார்க்கும் வண்ணம் முனையங்களை இணைக்கும் சிறிய ரயில் இதன் குறுக்கே மிதந்து செல்கிறது. சுற்றிலும் நூற்றுக்கணக்கான கடைகள். இக்கட்டிடம் முதன்மையாக ஒரு வணிக வளாகம், சிங்கை வழியாக விமானத்தில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வண்ணம் இது அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பித்து ஒரு வருடத்துக்குள்ளாகவே நோய்த்தொற்று ஆரம்பித்துவிடவே பல பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. எதிர்பார்த்த வருவாய் கிட்டியிருக்காது.
ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) என்னும் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களை தர வரிசைப்படுத்தும் அமைப்பு தரும் சிறந்த விமான நிலையத்துக்கான விருதை சாங்கி எட்டு வருடங்களாய் தொடர்ச்சியாய் தக்க வைத்திருக்கிறது. இந்த நிலையை சிங்கப்பூர் விமான நிலையம் அடைவதற்கு முன் நீண்ட வரலாறு இருக்கிறது.
1943-44-ல் போர்க்கைதிகளைக் கொண்டு ஜப்பானியர்கள் முதல் சாங்கி விமான ஓடுதளத்தை அமைத்ததை முன்னர் பார்த்தோம். அதை அடிப்படையாகக் கொண்டே ராயல் விமானப் படை 1946-ல் முதற்கட்ட விமானப் படை செயல்பாடுகளைத் துவங்கியது. 1955-ல் பாயா லேபரில் (Paya Lebar) குடிமக்கள் பயன்பாட்டுக்கான விமான நிலையம் துவங்கியது. 1937-ளிலேயே துவங்கப்பட்ட கல்லாங் (Kallang) விமானதளம் மிகச் சிறிய விமானங்களையே கையாளக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு அளவிற் பெரிய பயண விமானங்கள் பெருகவும் விமான நிலையத்தை விரிவாக்க வேண்டிய நிலை வந்தது. நகர மையத்தின் அருகே இருந்த கல்லாங்கில் விமான நிலையத்தை விரிவாக்க முடியாததால் சாங்கி அடுத்த தேர்வாக இருந்தது. ஆனால் அதன் மண்ணின் உறுதி பற்றிய சந்தேகம் இருந்தமையால் பாயா லேபருக்கு போனது விமான நிலையம். 1952-களில் பாயா லேபர் விமான நிலையம் கட்டுவதற்கு நிலம் தோண்டும் முயற்சியில் அங்கு அதுவரை வெடிக்காமல் மண்ணில் புதையுண்டிருந்த ஜப்பானிய வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மீண்டும் தோண்டிப் பார்த்ததில் மேலும் சில குண்டுகள் சிக்கின. எனவே திட்டமிட்டதை விட அதிக பொருட்ச்செலவில் அவ்விடத்தை பாதுகாப்பாக்கி, ஆங்கிலேய அரசால் கட்டி முடிக்கப்பட்டது அவ்விமான நிலையம். 1955-ல் எல்லா வர்த்தக விமானங்களும் பாயா லேபர் விமான நிலையத்திலிருந்து இயங்கத் தொடங்கின. ஆனால் 1970-களில் விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டது. அது வடிவமைக்கப்பட்ட கையாளும் அளவாகிய வருடத்துக்கு 1 மில்லியன் என்ற பயணிகள் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு பயணிகளை அது கையாள வேண்டிவந்தது.
சாங்கி கைகொடுத்தது. இதுவும் கடல் தந்த கொடைதான். கடலைப் பின்தள்ளி மண் உறுதியாக்கப்பட்டு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. முதல் டெர்மினல் 1981-ல் இயங்கத் துவங்கியது. எதிர்காலத் தொலைநோக்கோடு திட்டமிடுதல் என்பதை முக்கியமான அடிக்கல்லாகக் கொண்டு சாங்கி விமான நிலையம் இயக்கப்படுகிறது. 1986-லேயே இரண்டாவது முனையத்துக்கான கட்டுமானப் பணிகள் துவங்கின. 1991-ல் அதுவும் செயல்படத்துவங்கி வருடத்துக்கு 44 மில்லியன் பயணிகளை கையாளத் துவங்கியது சாங்கி.
விமானப் பயணம் அனைவருக்கும் சாத்தியமாகிக் கொண்டிருந்த 90-களின் இறுதியில் மூன்றாவது முனையத்துக்கான திட்டமிடல் துவங்கியது. வெறும் பரப்பளவு, கொள்ளளவு போன்ற கணக்குகள் மட்டுமின்றி சேவையின் தரம், மற்றும் வசதி என்பதை முதன்மையாக்கிக் கொண்டது சாங்கி. 2006களில் குறைந்த செலவு விமானங்களுக்கான முனையம் ஒன்றும் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் அதன் திட்டமிட்ட கணக்குகளை விட அதிக அளவில் போக்குவரத்து சூடு பிடிக்கவே, அதை முழுமையாக இடித்துவிட்டு, நாளைய உலகுக்கான விமான நிலையம் என்னும் கனவோடு நான்காவது முனையம் கட்டும் பணிகள் துவங்கின. மற்ற முனையங்களுக்கான சாலைப் போக்குவரத்து எவ்விதமும் தடங்கல்களே இல்லாமல் இந்தப் பணி நடந்ததைக் கண்கூடாகக் கண்டோம். உதாரணமாக பாதசாரிகள் கடக்கும் பாலம் 24-மணிநேரமும் வாகனங்கள் கடக்கும் சாலைக்கு மேலாக அமைக்கப்பட்ட விதம், சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இன்றி இந்தப் பாதசாரிகள் கடக்கும் பாலம் தூக்கி நிறுத்தப்பட்டதைக் காணலாம். இந்தக் கட்டுமானப் பணிகளில் சிங்கப்பூர் அடைந்திருக்கும் திறமை தனியாகப் பேசப்பட வேண்டியது.
அதே போல கட்டுமானத்துக்கு மிக அருகில் இருந்த ஒரு மரத்தை வெட்ட வேண்டிய நிலை வந்தபோது அது அப்படியே குழந்தை போல தூக்கி சாலையின் அப்புறம் இறக்கிவிடப்பட்டது. மரங்களும் அவ்வப்போது பெரிய கனரக வாகனங்களில் இங்கு இடம் பெயர்ந்து புது மனை குடி போவதை இங்கு பார்க்கலாம். சாங்கி நான்காவது முனைய நிர்மாணத்தில் இது நடந்தது.
வணிகத்தின் வாயிலாக வரும் பணமே முக்கிய வருவாய் என்பதால் விலைகுறைந்த விமான சேவைகளுக்கான முனையம் என்ற பிம்பத்தையும் மாற்றியாக வேண்டி இருந்தது. எனவே மற்ற மூன்று டெர்மினல்களையும் விஞ்சி எழுந்தது நான்காவது முனையம்.
தனக்குத்தானே அறைகூவல் விட்டுக்கொண்டு முன்செல்கிறது சாங்கி. ஐந்தாவது முனையத்துக்கான கனவுகளும் திட்டங்களும் ஏற்கனவே கையில் இருக்கின்றன. விமான நிலைய விரிவாக்கங்களுக்கென தொடர்ந்து கடலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுக்கொண்டே இருக்கிறது சிங்கப்பூர்.
கட்டுமானத்தில், அழகியலில், தொழிநுட்பத்தில், வசதிகளில், அன்றாட இயங்குமுறைகளை அதிக மனிதத் தேவைகளின்றி தானியங்கி மயமாக்கியதில் என பல விதங்களிலும் தன்னைத்தானே வென்று முன்னிலையைத் தக்க வைத்துக்கொள்கிறது சாங்கி விமான நிலையம். ஒரு விதத்தில் சிங்கப்பூர் எனும் ஒரு பானை சோற்றின் பதம் காட்டும் ஒரு சோறு சாங்கி விமான நிலையம் என்றும் சொல்லலாம்.
Very well captured... We will never forget that trip and the ease with which it was facilitated by changi airport and staff.
ReplyDeleteDefinetely one of the best experiences in life and one of our most favourite places in Singapore!😍
Wonderful article. An airport that truely adds to the joy of travel. Thank you for rekindling beautiful memories.
ReplyDelete