இன்றும் ஒரு தனித்த பண்பாடு நிலவும் பகுதியைத்தான் பார்க்கப் போகிறோம். சற்றே நீண்ட பதிவு என்பதால் இரு நாட்களிலாகப் பதியலாம் என நினைக்கிறேன். கம்போங் க்ளாமின் வடக்குப் புறம் செல்லும் அதே விக்டோரியா சாலையின் இன்னொரு எல்லையில் இருக்கிறது சைனாடவுன். கம்போங் க்ளாமிலிருந்து நேராக அங்குதான் சென்றேன்.
இதைத் தேர்ந்ததற்கு இரு காரணங்கள். சிங்கப்பூர் -7.4% இந்திய இனத்தவர்களும், 15% மலேசிய இனத்தவர்களும், 76.2% சீன இனத்தவர்களும் வாழும் நாடு. லிட்டில் இந்தியாவும், மலேசியா கம்போங்கும் பார்த்த பிறகு பார்க்க வேண்டியது சைனா டவுன் பகுதியைத்தானே. இரண்டாவது காரணம் அன்று மாலை வழக்கமான அளவு கொண்டாட்டங்கள் இல்லையென்றாலும் சீனப் புத்தாண்டு அலங்காரத்தோடு ஒரு முறை சைனாடவுனைப் பார்த்துவிட எண்ணி அங்கு சென்றேன். வரும் எருது ஆண்டை முன்னிட்டு ஆரஞ்சு நிறக் காளை சைனாடவுன் பாயிண்ட் எனப்படும் முகப்பில் நிற்கிறது. அதன் பின்னணி எங்கும் இளஞ்செந்நிற செர்ரி மலர்வுகளும், காளைகளுமாக மின் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவு போக்குவரத்து நெரிசலிலும் மிரளாத காளை. வரிசையாக காளை உருவங்களைப் பார்த்ததும் 'எருதேறி ஏழையுடனே' என்ற கோளறு பதிக பதம் மனதில் ஒட்டிக் கொண்டது.சைனாடவுன் பாயிண்ட்
யூ டாங் சென் சாலை
முதன் முறையாக நான் சைனாடவுன் பகுதிக்கு வந்தது 2006-ல் என்றாலும் அப்போது அந்த இடத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் குறித்த அறிதல்கள் இல்லை. அப்போது நண்பர்களோடு சைனாடவுன் மாரியம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். ஆனால் அவ்வளவே அந்த அனுபவம்.
இரண்டாவது முறை சிங்கை வந்த பிறகு மாதங்கிக்கு அம்மை பார்த்தபோது வேப்பிலை வாங்குவதற்காக சென்றிருந்தேன். அப்போதும் மாரியம்மன் கோவில் மட்டுமே பார்க்க முடிந்தது. அப்போது அங்கு பகோடா வீதியில் நிறைந்திருந்த சிறு பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகளில் குழுமியிருந்த பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளையும், விதவிதமான சீன கைவினைப் பொருட்களிலும் கவனம் சென்றது.
பிறகு 2014-ல் சிங்கையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் காவிய முகாம் நிகழ்வில் கலந்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இரண்டே நாட்களில் மிக அணுக்கமாகிவிட்ட விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களோடு முதன் முறையாக இங்கிருக்கும் புத்தர் கோவிலுக்கு சென்றேன். செந்நிற பட்டுக்குள் பொதிந்து வைக்கப்பட்ட தங்க நகைகள் போல அங்கு சுவரெல்லாம் இருக்கும் நூற்றுக்கணக்கான பொன் நிற புத்தர்களைப் பார்ப்பது பெரும் அனுபவம்.
வேறொரு பதிவில் சிங்கையின் வழிபாட்டுத் தலங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். சிங்கையிலேயே அதுவரை இரண்டு வருடங்கள் வாழ்ந்திருந்தும் இது குறித்த போதமே இன்றி இவற்றையெல்லாம் அதுவரை பார்க்கவேயில்லையே என்று எனையே கடிந்து கொண்டு, அதன் பிறகுதான் சைனாடவுன் குறித்து புத்தகங்களில் வாசித்தும் சில நண்பர்களுடன் பேசியும் நேரில் பல முறை இங்கு வந்தும் அறிந்து கொண்டேன்.
காலனிய கால கட்டிடங்கள் சூழ நிற்கும் நகர மண்டபத்தை (சிட்டி ஹால்) கடந்து சிங்கப்பூர் ஆற்றைத் தாண்டியதுமே சைனா டவுனின் கட்டிடங்கள் கண்ணுக்குத் தென்படும். இன்று குட்டி எருதுகள் காற்றில் அழகாக ஆடிக் கொண்டு வரவேற்றன. எருதேறி ஏழையுடனே என மீண்டும் எண்ணிக்கொண்டேன்.
1819ல் சர் ஸ்டான்ஃபோர்ட் ராஃபில்ஸ் இத்தீவுக்கு வருவதன் முன்னரே இங்கு சீனர்கள் சிலர் குடியேறி மிளகும் கேம்பியரும் (Gambier என்னும் கொடி வகைத் தாவரம், வெற்றிலையோடு சேர்த்து இதன் சாறு உண்ணப்பட்டிருக்கிறது, கேன்சர் எதிர்ப்பு குணங்கள் கொண்டது எனப்படுகிறது) பயிரிட்டிருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து குடியேறிய வணிகர்கள் இந்தப் பகுதியில் வணிகம் செய்து வாழத் தொடங்கினர்.
இதற்கு மாட்டுவண்டித்தண்ணீர் தெரு (நியூ சே ஷுயீ - Bullock cart water) என்றும் சீன மொழியில் பெயர் இருந்திருக்கிறது. இன்று போல அன்றே குடிதண்ணீரைக் காசு கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவவே நெருக்கடியைப் பணமாக்கும் சில சாமர்த்தியமான வணிகர்கள் தண்ணீரை மாட்டு வண்டியில் கொண்டு வந்து விற்றிருக்கிறார்கள்.
சைனாடவுன் சிங்கப்பூர் ஆற்றின் மேற்குப்புறத்தில் ஊட்ரம்(Outram) பகுதியில் அமைந்திருக்கிறது. 1828ன் தீவின் வரைபடத்தில் போட் கீ(Boat quay)யின் தென்மேற்குக்கரை சீனக் கம்போங் (கிராமம்) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. குடியேறிய சீனர்கள் தங்கள் தொழில் சார்ந்தும் இனக்குழு சார்ந்தும் தெருக்களை அமைத்துக் கொண்டனர்.
காண்டனீஸ்(Cantonese) மற்றும் ஹக்கா(Hakka) பேசுபவர்கள் கோவில் தெருவிலும்(Temple street) கிரேடா ஐயர்(Kreta Ayer) பகுதியிலும், ஹாக்கியன்(Hokkien) பேசுபவர்கள் தெலோக் ஐயர் சாலையிலும்(Telok Ayer) ஹாக்கியன் வீதியிலும், தியோசூ(Teochew) பேசுபவர்கள் தெற்கு கால்வாய் வீதியிலும்(South Canal Road), தோட்டத் தெருவிலும்(Garden street), தச்சர் தெருவிலும்(Carpenter street) குடியேறி இருக்கின்றனர். தெலோக் ஐயர், கிரேடா ஐயர் எல்லாம் இங்கு வாழ்ந்த ஐயர்களோ என ஐயம் கொள்வோர்க்கு, ஐயர்/அயர் என்பது மலேய மொழியில் தண்ணீரைக் குறிக்கும் சொல். கிரேடா அயர் என்றால் தண்ணீர் வண்டி.
தண்ணீர் வண்டி
நாம் லிட்டில் இந்தியாவிலும் கம்போங் க்ளாமிலும் ஏற்கனவே பார்த்திருக்கும் கடைவீடுகள் இங்கு மேம்பட்ட வடிவை அடைந்திருக்கின்றன.
இந்தப் பகுதியின் கடைவீடுகளில் ஆறு வகையான கட்டிட அமைப்புகள் இருப்பதாக வகைப்படுத்துகிறார்கள். எளிமையான இரண்டு தள கடைவீடுகள்(1840-1900), சீனக் கட்டிடக் கலை தாக்கத்தோடு கூடிய அமைப்பு, அதிலேயே மேலும் அதிக அலங்காரத்தோடு கூடிய அமைப்பு(1900-1940), சீன-ஐரோப்பிய அழகியலின் இணைப்பில் அமைந்த வீடுகள், ஆர்ட் டெக்கோ(1930-1960) எனப்படும் அழகியல் கொண்ட வீடுகள், 1950க்குப் பிறகு கட்டப்பட்ட நவீன அமைப்பியல் கொண்ட கடைவீடுகள் என ஆறு வகைகள். (உதவி: roots.sg)
கட்டிட அமைப்பியல் அழகியல் சார்ந்த வல்லுநர்கள் இதை மேலும் விரிவாக விளக்க இயலும்.
வரலாறு என்றுமே இருளும் ஒளியும் நிரம்பியது. அதன் இருண்ட முகத்தையும் தற்போது விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்பகுதி சூதாட்ட விடுதிகளாலும், ஓபியம் புகைப்பவர்களாலும் நிறைந்திருந்திருக்கிறது. ஸ்மித் வீதியின் மூன்றடுக்குக் கடைவீடுகள் நிரம்பிய பகுதி சிவப்பு விளக்குப் பகுதியாகவே அறியப்பட்டிருக்கிறது. இங்கு மாரியம்மன் கோவிலின் கோபுரத்தால் பகோடா வீதி(Pagoda - பௌத்த விஹாரையின் கோபுரம்) என்றழைக்கப்படும் சீனப் பரிசுப் பொருட்கள் நிரம்பிய கடை வீதிகளில் முன்னர் அடிமை வணிகம் நடைபெற்றிருக்கிறது. இங்கு துணிக்கடைகளும் தையற்கடைகளும் வருவதன் முன்னர் 1850களில் இந்த கடைவீடுகள் ஓபியம் குகைகளாக இருந்திருக்கின்றன.
வரலாறு என்றுமே இருளும் ஒளியும் நிரம்பியது. அதன் இருண்ட முகத்தையும் தற்போது விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்பகுதி சூதாட்ட விடுதிகளாலும், ஓபியம் புகைப்பவர்களாலும் நிறைந்திருந்திருக்கிறது. ஸ்மித் வீதியின் மூன்றடுக்குக் கடைவீடுகள் நிரம்பிய பகுதி சிவப்பு விளக்குப் பகுதியாகவே அறியப்பட்டிருக்கிறது. இங்கு மாரியம்மன் கோவிலின் கோபுரத்தால் பகோடா வீதி(Pagoda - பௌத்த விஹாரையின் கோபுரம்) என்றழைக்கப்படும் சீனப் பரிசுப் பொருட்கள் நிரம்பிய கடை வீதிகளில் முன்னர் அடிமை வணிகம் நடைபெற்றிருக்கிறது. இங்கு துணிக்கடைகளும் தையற்கடைகளும் வருவதன் முன்னர் 1850களில் இந்த கடைவீடுகள் ஓபியம் குகைகளாக இருந்திருக்கின்றன.
ஸ்மித் வீதி
1840களில் ஜவ்வரிசி தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைந்திருந்த காரணத்தால் சாகோ வீதி(Sago street) எனப் பெயர் பெற்ற வீதியில், 1920களில் பாலியல் தொழிலும், மரண வீடுகள்(death houses) என்றழைக்கப்படும் பிணக்கிடங்குகள் போலிருந்த சிறுநரகங்களும், சவப்பெட்டிகளின் கடைகளும், மரணச் சடங்குகளுக்கான பொருட்கள் விற்பவர்களும், ஆவியுலகோடு பேசுபவர்களும் இருந்திருக்கிறார்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்தவர்கள் சாகும் தருவாயில் இருந்த முதியவர்களை இந்த மரண வீடுகளில் சிறு பணம் செலுத்தி கொண்டுவந்து சேர்த்துவிடுவார்களாம். சீனாவில் இருந்து குடியேறிய முதல் தலைமுறையினரில் மிக அதிக அளவில் முதியவர்கள் இருந்ததும், அவர்களை வைத்துப் பராமரிக்கும் வாழ்வியல் வசதிகள் இல்லாத கடும் ஏழ்மை நிலவிய சூழலும், அத்துடன் தாங்கள் வாழும் வீட்டில் மரணம் நேர்ந்தால் அது துர்லபம் என நம்பிய அன்றைய சீனர்களின் மூடநம்பிக்கையும், ஒரு மரணத்துக்குப் பிறகு வீடுகளைத் தூய்மைபடுத்துவதற்கான ஆவிகளை விரட்டும் சடங்குகளுக்குத் தேவையான பணம் செலவழிக்க முடியாத ஏழ்மையும்,
என இம்மரணவீடுகள் பெருகப் பல காரணங்கள். அவ்விதம் இருந்த ஒரு மரணவீட்டுக்கு அருகே வாழ்ந்த அனுபவத்தைச் சொல்லும் ஒரு சிங்கப்பூரர்(யிப் யூ சாங் - நன்றி: சேனல்நியூஸ்ஏசியா), எந்த விதமான சுகாதார முன்னெச்சரிக்கையுமின்றி பிணங்கள் தெருவிலேயே வைத்து நீராட்டப்படுவதையும், மூங்கில் தட்டிகளில் கிடத்தி வைக்கப்பட்டு மலிவான ஊதுபத்திகள் அந்த நாற்றத்தை மறைக்க முற்படுவதையும், அவ்விதம் சவப்பெட்டியுள் வைக்கப்பட்ட ஒரு உடலைக் காவலர்கள் ஏதோ வழக்கின் பொருட்டு திறக்க முற்பட்டதையும் அதனால் அந்தத் தெரு முழுக்கவே தாளவியலாத துர்நாற்றம் சூழ்ந்ததையும் குறிப்பிடுகிறார். அந்த இருண்ட வாழ்வு அரசாங்கத்தின் முயற்சியால் 1960களில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
சாகோ வீதி
மேலும் குழுச் சண்டைகளுக்குப் பெயர் போன இடமாகவும் சைனாடவுன் இருந்திருக்கிறது என 1960-70களில்அங்கு தங்கள் இளமைப் பருவத்தைக் கழித்த சீன நண்பர்கள் கதைகள் சொல்கிறார்கள். இன்று அதிநவீன உணவகங்களும் மது விடுதிகளும் நிறைந்த இடங்களில் அன்று இரண்டடுக்கு மூன்றடுக்குக் கடைவீடுகளின் மேல்தளத்தில் கழிவறை வசதிகளே இல்லாத வீடுகளில் குடியிருந்திருக்கிறார்கள்.
கியாங் சைக் வீதிகளின் பெயர்பெற்ற பாலியல் வீடுகளில் ஒன்றில் வளர்ந்து இன்று தனது இளமைப்பருவத்தை புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கும் சிங்கை எழுத்தாளர் சார்மெய்ன் லூங் (17A Keong Saik Road) தனது நினைவலைகளில் இப்பகுதிகளில் அன்றைய வாழ்க்கை குறித்து விவரிக்கிறார். குழந்தைப் பருவம் முதலே அச்சூழலில் வளர்ந்த அவரது தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தனது பள்ளி நண்பர்களுக்குத் தெரிந்து விடக்கூடாதே என்றும் தனது வீடு வெள்ளை சுவற்றில் சிவப்பு நிற ஒளிரும் எண் கொண்ட அடையாளத்தோடு இருப்பதை நண்பர்கள் அடையாளம் கண்டுவிடக்கூடாதே என்று இளமையில் கவலை கொண்டதையும் எழுதியிருக்கிறார்.
மிகுந்த சிரமங்களுக்கு இடையே முந்தைய தலைமுறைகள் வாழ்க்கையை வாழ்ந்து இன்றைய சுபிட்சத்தை நோக்கி சிங்கையை நகர்த்தியிருக்கிறார்கள். அன்றைய வாழ்க்கைச் சூழலை, வாழ்வுநிலையை வரலாற்றை அறிந்து கொள்ளவென, அந்தக் கடைவீடுகளின் இடுங்கிய சிற்றறைகளை, அதன் உட்புறச் சூழலோடு அமைத்து வைத்திருக்கிறது சைனாடவுன் பண்பாட்டு மையம்.
2021 ஏப்ரல் வரை இம்மையத்துள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 6 - சிங்கையின் பாரசீகம்
அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 8 - சைனாடவுன் 2.0
Phew... historic backdrop help us understand the magnitude of work done and the vision Mr. Lee Kuan Yew had for Singapore. Amazing transformation been done by him along with full support/contribution from people.
ReplyDeleteBig salute to all of them!
Thanks Subha for bringing these facts nicely in the blog. You are making us travel along, through your writing. Enables us to visualize nicely.
From poverty to prosperity. A great journey. Wonderful read.
ReplyDelete