எதன் பொருட்டு நாம் ஓரிடத்திற்கு அனுப்பப்படுகிறோமோ எங்கே நமது அனுதின வினைகள் ஆற்றப்படுகிறதோ அது நமது கர்மபூமி எனக்கொண்டால் சிங்கையில் இருக்கும் காலகட்டத்தைப் பொறுத்தவரை தயக்கமின்றி சாங்கி வர்த்தகப் பூங்காவை (Changi Business Park) எனது வினைக்களன் எனக்கொள்ளலாம்.

2006-ல் மில்லேனியா டவரிலிருந்து, 2008-2010-ல் அலுவலகத்தை சாங்கி விமான நிலையத்தருகே கட்டப்பட்டிருந்த புதிய வர்த்தக மையத்துக்கு இடம்மாற்றிவிட்டார்கள். 2012-ல் முதல் முறையாக எக்ஸ்போ (expo) ரயில் நிலையத்தில் வந்திறங்கி, முன்னரே அறிமுகமாயிருந்த தோழி ஒருவரோடு சாங்கி வர்த்தகப் பூங்கா அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்கியபோது சற்று ஏமாற்றமாகக் கூட இருந்தது. இதுவும் அதிநவீன வசதிகொண்ட அழகிய இடம்தான் என்றாலும், நமைச் சுற்றி விண்தொடும் பேருருவங்களாக கட்டிட நிரைகள் இருக்கும்போது ஒவ்வொரு தினமும் அது தரும் எழுச்சி ஒன்றுண்டு. மிகப் பெரிய கனவுகளோடு மானுடர் இங்கே கூடுகிறார்கள் என்பதை அவை மௌனமாக சொன்னபடியே இருக்கும். இங்கே நாம் எங்கும் காணக்கூடிய ஒரு சராசரி மென்பொருள் வளாகத்தின் உணர்வே வந்தது. நம்மைக் கேட்டா மாறுகிறது நாளும் கோளும் அலுவலகமும் என ஆறுதல்பட்டுக் கொண்டேன்.
முன்னர் நான் வசித்த ஜுராங் கிழக்கு பகுதியில் ஒரு சர்வதேச வர்த்தகப் பூங்கா(International Business Park) அமைந்திருந்தது. 1992-ல் துவக்கப்பட்ட சிங்கையின் முதல் வர்த்தகப் பூங்கா. இதன் தொடர்ச்சியாக விமான நிலையத்துக்கு அருகே ஒரு வர்த்தக மையம் அமைப்பதன் சாத்தியங்கள், அனுகூலங்களைக் கணக்கில் கொண்டு 1997-ல் சாங்கி வர்த்தகப் பூங்காவுக்கான திட்டம் துவங்கியது. தொடக்கத்தில், 2012 வரை கூட ஒரு பத்துப் - பதினைந்து கட்டிடங்கள் அடுத்தடுத்த வீதிகளில் இருக்க பெரும்பான்மையான நிலம், காற்று தலைதடவிச் செல்லும் மிகப்பரந்த புல்வெளிகளோடு ஏகாந்தமாக இருக்கும் இந்தப் பகுதி.

காடு திருத்தி அமைக்கப்பட்டது என்பதாலும் பூங்கா என்றே அழைக்கப்பட்டதாலும்(!!) (Changi Business Park) சிங்கையில் மிக அரிதாகவே காணக்கூடிய காட்டு நாய்களை இங்கு அப்போது காண முடிந்தது. அப்போது தங்கியிருந்த சீமெய்(Simei) பகுதி இரண்டரை கிமீ தொலைவுதான் என்பதால் அனேகமாக மாலையில் அலுவலகத்தில் இருந்து நடைதான். ஒரு புல்வெளியையும் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த குளத்தையும் கடந்து ஒரு வெள்ள வடிநீர் கால்வாய் ஓரமாகவே நடந்து சென்று வீடடைவது அலுவலின் சுமையை முற்றிலும் மனதிலிருந்து அகற்றிவிடும்.
ஆனால் சில மாதங்களிலேயே அந்தக் கால்வாயின் கரையில் ஒரு மாபெரும் கட்டுமானம் துவங்கியது. இரு வருடங்களிலேயே அங்கு சிங்கையின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகிய SUTD தொடங்கியது. அதன்பிறகு அந்த நீர்நிலையை ஒட்டி நடப்பது நின்று போனது.
இந்த வர்த்தகப் பூங்காவில் மென்பொருள் நிறுவனங்கள், மற்றும் வங்கித்துறை சார்ந்த நிறுவனங்கள் தவிர, ஒரு வணிக வளாகம், சிங்கப்பூரில் நூறு கிளைகள் கொண்ட ஃபேர்ப்ரைஸ் ( Fairprice) எனப்படும் கூட்டுறவு பல்பொருள் விற்பனை அங்காடிகளின் ஒரு மாபெரும் கிளை, உடற்பயிற்சி மையங்கள், உணவகங்கள் மற்றும் ஒரு சர்வதேசத் தரம் கொண்ட தங்கும் விடுதி ஆகியவை அமைந்திருக்கின்றன.
தொடக்கத்தில் இவற்றை நகரோடு இணைக்கும் ஒற்றைத் தொடர்பாக சாங்கி விமான நிலையம் செல்லும் தடத்தில் அமைந்த எக்ஸ்போ ரயில் நிலையம்(Expo) மட்டுமே இருந்தது. சிங்கையை இணைக்கும் வலைப்பின்னலான எம்.ஆர்.டி(MRT) எனப்படும் சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் பாதைகளில் 2000 வரை கிழக்கு-மேற்கு முனைகளை இணைக்கும் பச்சை வரிசை ரயில்நிலையங்கள், மற்றும் தெற்கு-வடக்கை இணைக்கும் சிவப்பு வரிசை நிலையங்கள் என இரண்டு பாதைகளே இருந்தன. 2001-ல் பச்சை இணைப்பிலிருந்து தானா மேரா( Tanah Merah - நம் எரேடியா வரைபடத்திலேயே இருந்த அதே தானா மேராதான்) நிலையத்திலிருந்து ஒரு கிளையை இழுத்து சாங்கி விமான நிலையம் வரை இணைத்தனர். அதில் இடையில் உள்ள ஒரே நிறுத்தம் இந்த எக்ஸ்ப்போ (Expo).
இந்த எக்ஸ்போ மாபெரும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையங்களுக்கென உள்ள வளாகம். தொடர்ச்சியாக அமைந்த பத்து மண்டபங்கள்; ஒவ்வொரு மண்டபமும் பத்தாயிரம் சதுர மீ தடையற்ற(தூண்களற்ற) பரப்பளவு கொண்டது. பகுதிகளாகப் பிரித்தும் இணைத்தும் கண்காட்சிகளும் மாநாடுகளும் நடக்கும். இதைத் தவிர நூறு பேர் அமரக்கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட சந்திப்பு அறைகளும் மாநாட்டு அறைகளும் இரண்டாம் தளத்தில் இருக்கின்றன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தக் கூடிய இதன் கார் நிறுத்தத்தில் கண்காட்சிகள் நடக்கும் போது போதிய இடமின்றி நெரிசல் நிகழும். தீபாவளியை ஒட்டி இந்தியாவிலிருந்து பல வணிகர்கள் வந்து நிகழ்த்தும் தீபாவளி கண்காட்சி இந்தியர்களிடையே பெரும் புகழ் பெற்றது. இது தவிர கணிப்பொறி மற்றும் மின்னணுப் பொருட்கள் கண்காட்சியும், மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியும் புகழ் பெற்றவை. இங்கு வந்த புதிதில் ஒரு கண்காட்சியில் வீட்டுத் தேவைக்கு கட்டில் முதலிய பொருட்கள் வாங்கிய போது குலுக்கல் முறை பரிசுத் திட்டம் ஒன்றிருந்தது. வழக்கமாக இது போன்ற அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஒரு குண்டூசி கூட கிடைத்தது இல்லை என்பதால் நம்பிக்கையே இன்றி பெயரையும் தொலைபேசி எண்ணையும் எழுதி பெட்டியில் போட்டுவிட்டு வந்தேன். ஒரு வாரம் கழித்து அறியா எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அறியா எண்களை எடுப்பதில்லை எனும் வழக்கப்படி அதை நான் எடுக்கவில்லை. மாற்று எண்ணாக வீட்டுத் தொலைபேசி எண் கொடுத்திருந்தமையால் தோழி மாதங்கிக்கு அழைப்பு வந்தது. ஐயாயிரம் பரிசுத் தொகை! இது போன்ற அற்புதங்கள் நிகழ்ந்த களம் என்பதால் சற்று வெளியே சென்று இக்கதையை சொல்லத் தோன்றியது.
இந்த ரயில் நிறுத்தம் மட்டுமே அருகில் இருந்தது. வேறு பொதுமக்கள் உள்ளே வரத்தேவையான எதுவும் இங்கே இல்லாதிருந்தது. இதன் காரணமாக வேறு எந்த வெளி உலகத் தொடர்பும் இல்லாது தபோவனத்து முனிவர்கள் போல இங்கு பணிபுரியும் மென்பொறியாளர்களும் பிற பணியாளர்களும் தனித்து விடப்பட்டிருந்தனர்.
நிறுத்தங்களில் இருந்து சில இணைப்புப் பேருந்துகள்(shuttle bus) இயங்கின. ஸீமெய், டாம்பனீஸ் இரண்டுமே சிங்கை கிழக்கெல்லையில் இரண்டு மாபெரும் குடியிருப்புப் பகுதிகள். இதைத்தவிர சிங்கையின் வடக்குப் புறநகர் குடியிருப்புப் பகுதிகளான செங்காங்(Senkang), புங்கோல்(Punggol) பகுதிகளில் இருந்தும் அதிகளவில் பயணிகள் தினசரி சாங்கி வர்த்தகப் பூங்கா வருவதைக் கணக்கில் கொண்டு மேலும் சில தனியார் பேருந்துகள் துவங்கின. அரசுப் பேருந்துகளை விட இவற்றில் கட்டணம் சற்று அதிகம், ஆனால் விரைவாக அப்பகுதிகளில் இருந்து சாங்கி வந்துவிடலாம் என்பதால் இப்பேருந்துகளில் நல்ல கூட்டம் இருக்கும். காலை ஏழு மணி துவங்கி பத்தரை மணி வரை குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சாங்கி வர்த்தகப்பூங்காவுக்கு வரும். மாலையில் அதே போல ஐந்து மணி முதல் பத்து மணிவரை இங்கிருந்து செங்காங், புங்கோல் செல்லும்.
தொடக்கத்தில் ஒரு உணவு அங்காடி நிலையமும் ஒரு சில உணவகங்களும் இங்கு இருந்தன. அதில் சரவண பவன் உணவகமும் ஒன்று. பிறகு மதிய வேளைகளில் பெடோக்(Bedok) மற்றும் விமான நிலைய உணவகங்களுக்கு செல்லும் வகையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
இதை முக்கியமாக எழுதக்காரணம், அனுதினம் வீட்டிலிருந்து உணவு எடுத்துக் கொண்டு செல்வோர் கூட வெள்ளிக் கிழமை மதிய உணவை வெளியில் உணவகங்களில் உண்பது வழக்கம். எங்கள் அலுவலகக் குழுவில் அதை ஒரு தனித் திட்டமாகவே போட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உணவகம் சென்று கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது (கொரோனா பெருமூச்சு...). இங்குள்ள சிங்கப்பூர், மலேசிய, சீன, தாய்லாந்து உணவு வகைகளுக்குப் பரிச்சயம் ஏற்பட்டதும் இதன் வாயிலாகத்தான். இவற்றிலெல்லாம் சைவ உணவும் கிடைக்கிறது என்பதே பெரிய அறிதலாக இருந்தது. அதேபோல உள்ளூர் சீன இந்தோனேசிய நண்பர்களும் நமது இந்திய உணவு வகைகளை ஹைதராபாதி பிரியாணி வரை பதம் பார்த்துக் கண்ணீர் மல்க நன்றி கூறியிருக்கிறார்கள்.
2000-2006 வரை கூட இந்திய உணவகங்கள் என்றால் லிட்டில் இந்தியா செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. 2010லிருந்து அனேகமாக எல்லாப் பகுதிகளிலும் இந்திய உணவகங்கள் வந்து விட்டன. மாம்பழக் காலத்தில் பங்கனபள்ளி மாம்பழங்களை தினுமும் நூற்றுக் கணக்கில் விற்பனை செய்யும் ஒரு ஆந்திர உணவகமும் இங்கே வந்துவிட்டது. சாங்கி வர்த்தகப் பூங்காவில் மட்டும் பத்துப் பன்னிரண்டு இந்திய உணவகங்கள் இருக்கின்றன. இது போதாதென்றே மேற்சொன்னபடி விமான நிலையத்துக்கு மதிய உணவுக்கு செல்வோம். அதிலும் மூன்றாவது முனையத்தில் ஒரு வட இந்திய மற்றும் ஒரு தென்னிந்திய உணவகங்களுக்கு வெள்ளிக்கிழமை மதியங்களில் சென்றால், அனேகமாக அனைத்துத் துறைகளில் இருந்தும் நண்பர்களைக் காண முடியும். இது ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு நிகழ்வென்பதால் எல்லா நாட்களிலும் இயலாது. வெள்ளி மட்டுமே இந்த சலுகை.
அன்றாட மதிய உணவுக்குப் பிறகு, அலுவலகத்துக்கு அருகிலேயே நீண்ட நடை செல்லும் வழக்கம் நண்பர்கள் பலருக்கு இருந்தது. ஐபிஎம், டிசிஎஸ், ஸ்டாண்ட் சார்டர்ட், பார்க்லேஸ் என அனைத்து நிறுவனங்களில் இருந்தும் நண்பர்கள் (பலரும் ஏதோ ஒரு கட்டத்தில் உடன் வேலைபார்த்திருப்பார்கள்) உலா சென்று கொண்டிருப்பார்கள்.
அலுவலகத்தில் பிழியப்பட்டது போக உடலில் திராணி மிச்சமிருப்போர் அந்த பூங்காவின் உடற்பயிற்சிக் களங்களில் உடற்பயிற்சிகள் செய்து கொண்டுமிருப்பார்கள்.
அலுவலகப் பகுதிகளுக்கு மத்தியில் ஒரு செயற்கையாக நீர்தேக்கப்பட்ட குளம். அதில் வழக்கமாக தினம் பார்வையில் படும் ஒரு ஆமைக் குடும்பம். வெயில் காய ஆங்காங்கே பாறைகளில் அமர்ந்திருந்து யாரேனும் புகைப்படமெடுத்தால் மிக மெதுவாக நீருள் குதித்து சிறிது நேரம் காணாமல் போய்விடும். அவை அதைத் தங்கள் வாழ்விடமென ஏற்றுக் கொண்டன போலும், வேறெங்கும் செல்வதில்லை. எத்தனை தலைமுறைகளைப் பார்க்கப் போகின்றனவோ.
ஒரு முறை பாம்பு போல நீரில் நெளிந்து செல்லும் மீனும் கண்ணில் பட்டிருக்கிறது.
மூன்று நான்கு கிலோமீட்டர் நடைபயணம் சென்று வரக்கூடிய பரப்பளவு கொண்ட பகுதியாதலால், மதிய வெயில் கபாலத்தைக் கிழிப்பதைப் பொருட்படுத்தாத எனைப் போன்றோர் இதன் எல்லையில் விரிந்திருக்கும் புல்வெளி வரை செல்வது வழக்கம். மாலை வேளைகளில் ஓட்டப் பயிற்சியிலும், வேகநடைப் பயிற்சியிலும் ஈடுபடுவோர் ஏராளம்.
உண்மையில் இந்தப் பசுமை, உண்டாக்கியதென்றாலும் ஒரு பெரிய ஆசுவாசம்.
அலுவலகத்தில் மொத்த சாறும் உறிஞ்சப்பட்டு ஆனைவாய்ப்பட்ட கரும்பு போல களைத்து வெளியேறும் முகங்களை தினமும் பார்க்க முடியும். அதற்கேற்றவாறு மளிகைக் கடை முதல், குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி, உடற்பயிற்சி நிலையங்கள் என எதற்காகவும் வெளியேறத் தேவையில்லாத கட்டமைப்பு. இந்தப் பணிச்சுமை குறித்து பல பக்கங்கள் எழுதலாம். எனது நண்பர் ஒருவர் ஒவ்வொரு நிமிடமும் அவரது காலில் யாரோ ஏறி நிற்பது போன்ற வேதனை கொண்ட முகத்தோடு இருப்பார், துறை சார்ந்த அறிவும், பணி நேர்த்தியும் கொண்டவர், நாளொன்றுக்கு பதினாறு-பதினெட்டு மணிநேரம் ஓய்வின்றி உழைப்பவர். ஒரு நாள் தேநீர் அருந்திவிட்டு அலுவலகத்துக்கு உள்ளே நுழையும் போது வரவேற்பரையில் அவரைப் பார்த்தோம். நின்று பேசத் தொடங்கியதும் பத்து நிமிடங்கள் புலம்பினார், பிறகு நான் விடை பெற்றுக் கொண்டதும், அவரும் திரும்பிச் செல்ல முற்பட்டு, புறா போல தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொண்டு என்னிடமே வந்து கேட்டார். "நீ என்னை சந்தித்த போது நான் வெளியே சென்றுகொண்டிருந்தேனா உள்ளே சென்று கொண்டிருந்தேனா?" எனக் கேட்டார், அவ்வளவு அதீத மனக்குழப்பம். அத்தகைய உயர் அழுத்த பணிச்சூழலில் இதுபோன்ற பசுமை நடை பெரிய ஆசுவாசம்.
காலையில் வீட்டருகே பேருந்து நிறுத்தத்துக்கும், அங்கே பேருந்து நிறுத்தத்திலிருந்து அலுவலகத்துக்குமான நடை, உணவு நேர நீள்நடைகள், தேநீர் வேளை குறுநடைகள், மீண்டும் மாலை நீள்நடை என அனுதினமும் தனி முயற்சி எடுத்து நடைபயிற்சிக்கு செல்லாவிட்டாலும் குறைந்தது எட்டு முதல் பத்து கிமீ நடை அமைந்துவிடும். அதை ஈடுகட்டத்தான் இப்போது வழியின்றி இருக்கிறது.
முன்னர் நடைகளால் ஆன என் காலையையும் மாலையையும் இப்போது அலுவலகமே கூடுதலாக எடுத்துக் கொள்கிறது. வேலை-வாழ்க்கை சமநிலை எல்லாம் பேசப்படுகிறது. என்றாலும் வேலையை வாழ்க்கையிலிருந்து பிரித்து வாழ்வு சாராத ஒன்றாகக் காண நேரும், வாழ்வை அழுத்தம்மிக்க ஒன்றாக ஆக்கும் பணிச்சூழலே இந்த சமநிலை குலைவை ஏற்படுத்துகிறது எனும் புரிதல் வரும்போது சில மாற்றங்களை செய்து கொள்ள முடிகிறது. நம் கைமீறிய புறக்காரணிகளை விட நம் அகக்காரணிகளுக்கும் பெரிய பங்கிருக்கிறது. இதில் நேரம் என்பது அலுவலக வேலையில ஈடுபடும் நேரம் மட்டுமல்ல, அது தொடர்பான மனநேரத்தையும் உள்ளடக்கியது. குறைவான வேலை என்பதல்ல, எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்ற முடிவு நமது கையில் இருப்பதே உண்மையான சமநிலையாக இருக்க முடியும். அந்த சமநிலையை அடைவதற்கே அனைத்து முயற்சிகளும் தேவையாகின்றன.